Wednesday, February 20, 2008

சென்னையில் உண்ணாப் போராட்டம் - பெ.மணியரசன் அறிக்கை

தமிழ்காக்கப் போராடிய தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி
தோழர்களைத் தாக்கிக் காயப்படுத்தி, எலும்பு முறிவை ஏற்படுத்திய
ஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் காவல்துறையினரை
இடைநீக்கம் செய்யக் கோரி
சென்னையில் உண்ணாப் போராட்டம்
 
பெ.மணியரசன் அறிக்கை
 
     கடந்த 25-1-2008 மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் அன்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்தி, ஆங்கில ஆதிக்கங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது.
 
     தமிழக அரசு தனக்குள்ள அரசiமைப்புச் சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி தமிழை முழு அளவில் ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் செயல்படுத்தாமல் ஆங்கிலத்திற்கு முன்னுரிமையும் மேலாதிக்கமும் தருகிறது.
 
     தமிழக அரசின் ஆங்கில ஆதரவு-தமிழ்ப் புறக்கணிப்பு போக்கை; கண்டிக்கும் வகையில் 25-01-2008 அன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த 'அல்ட்ரா டீலக்ஸ்', 'பாயின்ட் டு பாயி;ன்ட்', 'எஸ்.இ.டி.சி' போன்ற ஆங்கில எழுத்துகளை த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.பத்மநாபன் தலைமையில் கருப்புமை பூசி தோழர்கள் அழித்தனர். அவர்கள் பேருந்துகளுக்கு வேறு சேதமோ பயணிகளுக்கு இடையூறோ செய்யவில்லை. அப்போது, கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் தேன் தமிழ்வளவனும் மற்ற காவலர்களும், அவர்களைத் தடியால் கொடூரமாகத் தாக்கிப் படுகாயப்படுத்தினர். கோவைத் தோழர் பா.தனசேகர் என்பவருக்கு இடதுகை எலும்பு முறிந்தது. க.பாலகுமரன், ச.பிந்துசாரன், கோ.மாரிமுத்து, பா.சங்கர் உள்ளிட்டோர் படுகாயமுற்றனர்.
 
     சட்டவிரோதமாக வன்முறை ஏவிய காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நடவடிக்கை இல்லை.
 
     ஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் தொடர்புடைய காவல்துறையினரை இடைநீக்கம் செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசைக் கோரி சென்னை, சேப்பாக்கம், அரசினர் விருந்தினர் மாளிகை அருகே 22-02-2008 வெள்ளி காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் திரளானோர் கலந்து கொள்ளும் உண்ணாப் போராட்டம் (உண்ணாவிரதம்) நடை பெறுகிறது.
 
        விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த.வெள்ளையன், ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்தியா, தோழர் தியாகு(பொதுச் செயலர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் இரா.பாவணன் (தலைவர், தமிழர் கழகம்), தோழர் நிலவன் (பொதுச் செயலர், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்), கவிஞர் தமிழேந்தி (மார்க்சியப் பெரியாரியப் பொதுசுடைமைக் கட்சி) ஆகியோர் கண்டன உடையாற்றுகின்றனர். புலவர் கி.த.பச்சையப்பனார் உண்ணாப் போராட்டத்தை முடித்து வைக்கிறார்.
 
தஞ்சையில் போராட்ட வழக்கைத் திரும்பப் பெறக் கோருதல்

     இந்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து அதே நாளில் தஞ்சையில் தலைமை அஞ்சலகத்தில் இந்தி எழுத்துகளை த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன் தலைமையில் அழித்த 23 பேர் கைது செய்யபட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல், ஊழியர்களைக் கடமையாற்ற விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிணை மறுப்புப் பிரிவுகளில் வழக்குப் போடப்பட்டுள்ளது. அவ்வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெறுமாறு இவ்வுண்ணாப் போராட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 
       தமிழ் உணர்வாளர்கள் இவ்வுண்ணாப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 

Monday, February 04, 2008

தில்லியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்



 



 
பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வரும் 06-02-2008 புதனன்று, காலை 11 மணியளவில், புதுதில்லியில் பாராளுமன்றம் முன்பு 'இந்திய அரசே! தமிழர்களைக் கொல்லும் இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே' என வலியுறுத்தி மாபெரும் கண்டனப் பேரணி – ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் இருந்து மக்களிடமிருந்து பெறப்பட்ட 10 லட்சம் பேர் கையெழுத்திட்ட கோரிக்கை அடங்கிய மனுவை மத்திய அரசிடம் கையளிக்கின்றனர்.

இதில், கலந்துக் கொள்வதற்காக புதுச்சேரிலிருந்து பெரியார் தி.க. தோழர்கள் அவ்வமைப்பின் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் 60 பேர், 03-02-2008 ஞாயிறன்று மதியம் 3.00 மணியளைவில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டனர். சென்னையிலிருந்து தொடர்வண்டி மூலம் தில்லி செல்கின்றனர்.

புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் அவர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொறுப்பாளர்கள் சு.பாவாணன், ப.அமுதவன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்கத் தலைவர் நா.மு.தமிழ்மணி, செம்படுகை நன்னீரகம் அமைப்புத் தலைவர் கு.இராம்மூர்த்தி, செயலாளர் வீ.பார்த்திபன், மக்கள் சிவில் உரிமைக் கழகப் பொறுப்பாளர் மு.முத்துக்கண்ணு, சமூக நீதிப் போராட்டக் குழு பாகூர் அ.மஞ்சினி, இரா.சுகுமாரன், தனித் தமிழ்க் கழகச் செயலாளர் சீனு.அரிமாப்பாண்டியன், அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட்., தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் சூ.சின்னப்பா உட்பட பல்வேறு கட்சி, அமைப்புத் தலைவர்கள் கலந்துக் கொண்டு வழியனுப்பி வைத்தனர்.

தமிழகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் இப்போரட்டத்தில் கலந்துக் கொள்ள உள்ளதாக அவ்வமைப்பின் புதுச்சேரி செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ கூறினார்.

வழியனுப்பு விழாவின் முடிவில் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


Friday, February 01, 2008

நினைவுப்பூக்கள்(கவிதை) - க.அருணபாரதி


நினைவுப்பூக்கள்
க.அருணபாரதி
 
வானத்தில் சிறகடிக்கும்
நட்சத்திர பூக்களாக
வாழ்வில் பூக்கின்றன
நினைவுப்பூக்கள்...
 
வாசம் மட்டுமல்ல
அதில் தேனும்
கண்ணீராய் இருக்கும்..
 
பாசக்கரங்கள் தொட்டால்
மெல்ல அத்தேனை
சுரக்கும்...
 
வாசம் உணரும்
போதெல்லாம்
மனம் இறந்து
பிறக்கும்..
 
மாசங்கள் கடந்தும்கூட
மனசெல்லாம்
வாடாமல் சிரிக்கும்..
 
பூக்களின் புன்னகை
பார்த்து நம் மனதும்
அதனுடன் போகும்...
 
தீக்கிரை ஆக்கினாலும்
அதன் நினைவுகள்
சருகாய் சாகும்..
 
நீருற்றி வளர்க்காமல்
விட்டாலும் - அது
தான்தோன்றித் தனமாக
வளரும்..
 
வேறினை பிடுங்க
நினைத்தால் - அது
முள்ளாய் கைகளில்
மிளிரும்..

-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

குறிப்பிடத்தக்க பதிவுகள்