Wednesday, February 25, 2009

”காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்“ - கையெழுத்து இயக்கம் - படிவம்

"இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்"
கையெழுத்து இயக்கப் படிவம்
இளந்தமிழர் இயக்கம் வெளியீடு
தஞ்சை, 24-02-2009.
"மாற்று அரசியலைக் கட்டியெழுப்புவோம்" என்ற மாவீரன் முத்துக்குமாரின் கட்டளையை நிறைவேற்றும் முகமாக மாணவர்கள். இளைஞர்கள். வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து உருவாக்கியிருக்கும் "இளந்தமிழர் இயக்கம்", தமிழ் உணர்வுள்ள நல் நெஞ்சங்களின் ஆதரவோடு இன்று(25-2-09) தமது முதல் செயல் திட்டமான "தமிழீழ அதரவு பரப்புரைப் பயணத்தை" தொடங்கவிருக்கிறது.
அத்துடன் "இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" என்று 1 இலட்சம் கையெழுத்துகள் பெற்றிடும் கையெழுத்து இயக்கமும் தொடங்கப்படுகின்றது. (அதற்கான படிவம் மடலுடன் இணைக்கப்பட்டுள்ளது.) பயணத்திற்கும் இக் கையெழுத்து இயக்கத்திற்கும் ஆதரவு தெரிவித்து நாடுகள் கடந்து வாழ்த்து தெரிவித்த உள்ளங்களுக்கெல்லாம் நன்றி தெரிவிக்கும் வேளையில் எமது கடமைகளையும் பொறுப்புகளையும் நாம் உணர்ந்திருக்கிறோம். அதனை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றும் உறுதி கூறுகிறொம்.
"தமிழீழ ஆதரவு பரப்பரைப் பயண"த்திற்க்கு உதவிட விரும்பும் ஆர்வலர்களும், ஆங்காங்கே வரவேற்புகள் கொடுக்க விரும்பும் ஆதரவாளர்கள் கைபேசியிலும், தனி மடலிலும் தொடர்பு கொள்ளவும்.
மேலும் இவ்வியக்கத்தில் இணைந்திட விரும்பும் நேசமிகு உறவுகளையும் அன்புடன் வரவேற்கிறோம். தமிழீழ ஆதரவு, தமிழர் உரிமைப் பாதுகாப்பு என்ற இரு நோக்கங்களை மட்டும் முதன்மை படுத்தி தேர்தல் அரசியலை புறந்தள்ளிவிட்ட தன்னலம் கருதாது இனநலம் மட்டுமே கருத்தில் கொள்ளும் மாணவர்கள், இளைஞர்கள். வழக்கறிஞர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், மருத்தவர்கள் என அனைவரும் இவ்வியக்கத்தில் சேர்ந்து இவ்வியக்கத்தை மக்கள் இயக்கமாக கட்டமைக்கும் அரும்பணியைச் செய்யலாம்.
குறிப்பு : இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் அவரவர் தமது சக்திக்கேற்ப நகலெடுத்து (முதல் பக்கம் மட்டும் நகலெடுத்துவிட்டு அடுத்த பக்கங்கள் எண்களை வரிசையாக போட்டுக் கொள்ளவும்) பரப்புரை மேற்கொண்டு எத்தனை கையெழுத்துகள் சேகரித்த "இன எழுச்சி மாநாடு" நடைபெறும் நாளுக்கு முந்தைய தினமான 5-மார்ச்- 2009 அன்று மாலைக்குள் எம்மை வந்தடையமாறு செய்யுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்
பேச : 9841949462
கே.ராஜாராம்
நிர்வாகக் குழு
பேச : 9894310997
கையெழுத்து படிவங்கள் வந்து சேர வேண்டிய முகவரி :
இளந்தமிழர் இயக்கம்,
44-1, பஜனைக் கோவில் தெரு,
முத்துரங்கன் சாலை,
தியாகராயர் நகர்,
சென்னை-17.

Monday, February 23, 2009

தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம் - இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு

தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்
இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு
 
             ஈழத்தமிழர்களை கொன்று குவித்து வரும் சிங்கள அரசைக் கண்டித்தும், சிங்கள அரசிற்கு தொடர்ந்து உதவி புரிந்து வரும் இந்திய அரசைக் கண்டித்தும், ஈழத்தில் உடனடியாக போர் நிறுத்தம் அமலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் தமிழகம் முழுக்க பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
 
             பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழினம் இன்று நாதியற்ற நிலையில் உள்ளது. ஈழத்தில் தமிழர்களை மலைமலையாகக் கொன்று குவித்து வரும் சிங்கள அரசுக்க எதிராக 10 கோடி தமிழர்கள் உலகெங்கும் இருந்து போராடியும் கூட நமக்கு சர்வதேசம் செவிசாய்க்கவில்லை. அதற்குக் காரணம் இந்தியாவின் சிங்களச் சார்பு நிலைபாடே.  தமிழகத்தில் உள்ள இந்தியத் தமிழர்களை சிறிதளவும் இந்திய அரசு மதிக்கவில்லை என்பதும் புலனாகிறது.
 
             ஈழத்தமிழர்களின் உயிர் பிரச்சினையில் மட்டுமல்ல தமிழகத் தமிழர்களின் உரிமைப் பிரச்சினையான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் தமிழின விரோதியாகவே இந்திய அரசு செயல்பட்டு வருகின்றது. தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் தமிழினத்தின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பது கூட தடை செய்யப்படுகின்றது.
 
இளந்தமிழர் இயக்கம்
             இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழினத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் செயல்களுக்கு முன்னுரிமை கொடுத்து போராட வேண்டுமென்ற நோக்கில் மாணவர்கள், வழக்கறிஞர்கள், இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள், மருத்துவர்கள், திரைத் துறையினர், உழவர்கள் என பல்வேறு தரப்பினர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு நீண்ட விவாதத்திற்கு பின் அக்குழு ஒரு இயக்கமாக செயல்பட ஒருமனதாக முடிவெடுத்தது. அவ்வியக்கத்திற்கு "இளந்தமிழர் இயக்கம்" என பெயரிடப்பட்டுள்ளது.
 
தமிழீழ ஆதரபு பரப்புரைப் பயணம்
             இவ்வியக்கத்தின் சார்பில் தமிழீழ மக்கள் மீது சி்ங்கள - இந்தியக் கூட்டுப் படைகள் நடத்தி வரும் இன அழிப்புப் போர் குறித்து மக்களிடையே பரப்புரை மேற்கொள்ள "தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்" நடத்தப்படுகிறது. இப்பயணத்தின் போது தமிழீழ மக்களின் இன்னல்களை விளக்கும் புகைப்படக் கண்காட்சி, வீதி நாடகங்கள், குறும்படங்கள் திரையிடல் என பல்வேறு வழிகளில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது.
 
பயணத்தின் தொடக்க விழா
             பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி தஞ்சையில் 25-02-09(புதன்) அன்று நடக்கிறது. தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் மணிவண்ணன்,  ஆர்.கே.செல்வமணி, எழுத்தாளர் தூரன் நம்பி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்திப் பேசி பயணத்தை தொடக்கி வைக்கின்றனர்.
 
"காங்கிரசுக்கு வாக்களிக்கமாட்டேன்" - கையெழுத்து இயக்கம்
             பயணத்தின் போது "இன விரோத காங்கிரசுக்கு வாக்களிக்கமாட்டேன்" என்று 1 இலட்சம் கையெழுத்துகள் சேகரிக்கும் கையெழுத்து இயக்கமும் நடக்கிறது. பயணத்தின் முடிவில் 6-3-09(வெள்ளி) அன்று சேலத்தில் "இன எழுச்சி மாநாடு" நடக்கிறது. அதில் இக்கையெழுத்துகள் மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்படும்.

க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்,
பேச - 9841949462
 
தொடர்புக்கு :
 
கோ.ராஜாராம்,
நிர்வாகக் குழு,
பேச - 9894310997
 

Monday, February 16, 2009

காங்கிரசின் தமிழினத் துரோகச்செயல்களுக்கான ஆவணங்கள் புதுச்சேரியில் வெளியீடு‏!

காங்கிரசின் தமிழினத் துரோகச்செயல்களுக்கான ஆவணங்கள் புதுச்சேரியில் வெளியீடு‏!






ஈழத்தமிழர்களை தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவி வரும் தமிழின துரோக காங்கிரசைக் கண்டித்து புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பில் நேற்று(15-02-2009) நடந்தது.ஈழத்தில் சிங்கள அரசு நடத்தி வரும் தமிழின அழிப்புப் போரை இந்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டியும், சிங்கள அரசுக்கு இந்திய அரசு வழங்கிய ஆள், ஆயத, பண உதவிகளை திரும்பப் பெற வேண்டுமென்றும்,

 தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கிற மூன்று கோரிக்கைகளை முதன்மைப் படுத்தி புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பில் புதுச்சேரி சாரம் பகுதியில் உண்ணாப்போராட்டம் நடந்தது.


 
இப்போராட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் இதழான "தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்" இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர் க.அருணபாரதி தலைமை தாங்கினார். சத்தியம் மக்கள் சேவை மையத்தின் அவைத்தலைவர் தே.சரவணன் உண்ணாப்போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். சத்தியம் மக்கள் சேவை மையத்தின் தலைவர் தே.சத்தியமூர்த்தி, பொருளாளர் தே.சந்தோஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மையத்தின் துணைச் செயலாளர் க.ஆனந்த் 'இந்திய அரசின் தமிழினத் துரோகம்' என்ற தலைப்பில் கண்டன உரையாற்றினார்.


 
ராஜபட்சேவின் அரக்கத்தனத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அவரது படத்தின் முன் செருப்புகளை விட்டு "மரியாதை" செய்யப்பட்டது. ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து மாண்ட தூத்துக்குடி இளைஞர் முத்துக்குமாரின் மரண சாசனத்தை சென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் படித்தார். ஈழத்தமிழர்களுக்காக உயிர் நீத்த தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


 
இப்போராட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத்தின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்கத்தின் அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, புரட்சிகர இளைஞர் முன்னணி இரா.சுகுமாரன், புதுச்சேரி மாநில மிதிவண்டி வியாபாரிகள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் டாக்டர். மகான், விடுதலைச் சிறுத்தைகள் புதுச்சேரி மாநில அமைப்பாளர் இரா.பாவாணன், இந்திய கம்யுனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.இளையபெருமாள், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் முத்து, புதுச்சேரி தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் புதுவை தமிழ்நெஞ்சன், பெரியார் திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் சார்லஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.


 
உண்ணாப்போராட்டத்தின் இறுதியில் காங்கிரசின் துரோகத்தனங்களை வெளிப்படுத்தும் ஆவணங்கள் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்டு அதன் அரசியல் ஏட்டின் ஆசிரியர் குழு உறுப்பினது க.அருணபாரதி பேசினார். மேலும் அந்த ஆவணங்களை பரவலாக்குவதன் மூலம் காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரங்களை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.



உண்ணாப்போராட்டத்தை மையத்தின் செயலாளர் சசிகலா ஆறுமுகம் முடித்து வைத்துப் பேசினார்.

வெளியிடப்பட்ட ஆவணங்கள்:








நன்றி  www.tamilseythi.com தமிழ்ச் செய்தி இணையதளம்

-----------------------------------------------------------
தோழமையுடன்
      க.அருணபாரதி
  www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Wednesday, February 04, 2009

பற்றி எரிகிறது ஈழம் - மகிழ்ச்சி கொள்ளும் ‘இந்தி’யம் - க.அருணபாரதி

பற்றி எரிகிறது ஈழம் - மகிழ்ச்சி கொள்ளும் 'இந்தி'யம்
க.அருணபாரதி

பற்றி எரிந்து கொண்டிருக்கிறது ஈழம். நாளுக்கு நாள் அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள இனவெறி இராணுவத்தின் குண்டுவீச்சிலும் பீரங்கித் தாக்குதல்களிலும் படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ் மக்கள் 'தஞ்சமடைவதற்காக' என்று சிங்கள இராணுவம் அறிவித்த பாதுகாப்பு வலையப் பகுதிகளில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது சிங்கள இனவெறிப் படை பீரங்கித் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றது. தொகை தொகையாக குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் உதவிப் பொருட்களை வாங்குவதற்காக பாதுகாப்பு வலையப் பகுதிக்குள் குவிந்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது சிங்களப்படை நடத்திய உக்கிரத் தாக்குதலில் 300க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஐ.நா. உட்பட பல நாடுகள் இந்த அரச பயங்கரவாதச் செயலைக் கண்டித்தன.

வன்னியில் பலநூறு பேர் காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர். அவர்களுக்கு உயிர் காக்கும் மருந்துகளும் மருத்துவர்களும் தடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் மாபெரும் மனிதப் பேரவலத்தை சந்தித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா.அமைப்பே தெரிவித்துள்ளது. இந்த நிலையிலும் கூட தொடர்ந்து வரும் பாதுகாப்பு வலையங்கள் மீதான தாக்குதல்களால், சிங்கள இராணுவம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலையப் பகுதிகள், உயிரைக் காப்பதற்காக ஓடி வரும் தமிழ் மக்களை ஒரே இடத்தில் குவியச் செய்து குண்டு போட்டு கொன்றழிப்பதற்கான பொறி தானோ என்ற ஐயம் பலமாக எழுந்துள்ளது.

Erode tanks 1995களில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய சிங்கள இராணுவம், அப்பொழுது யாழ் மாவட்ட இராணுவத் தளபதியாக செயல்பட்டுக் கொண்டிருந்த தற்போதைய சிங்கள இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தலைமையலில் அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்தும் தமிழ்ப் பெண்களைக் கற்பழித்தும் நடத்திய வெறியாட்டமும் செம்மணியில் குவியல் குவியலாக தமிழர் உடல்கள் புதைக்கப்பட்டதையும் மனித நேயம் கொண்ட யாராலும் மறந்திருக்க முடியாது. தற்பொழுது உயிர் பிழைக்க வவுனியா வந்து தஞ்சம் புகுந்திருக்கும் தமிழ் மக்கள் மீது சிங்கள இராணுவம் அதே போன்தொரு வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுராதபுரம், பொலநறுவ உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள காட்டுப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் மற்றும் பெண்களின் உடல்கள் எரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படிப்பட்ட சிங்கள அரசின் தொடர்ச்சியான தமிழின அழிப்பு நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் உலகில் இனப்படுகொலைகள் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையை ஏற்கெனவே சேர்த்து பட்டியலிட்டுள்ளது ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு. அதன் பொதுச் செயலாளர் பான் கீ மூன், "மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள்" என சிங்கள அரசை வெளிப்படையாக தற்பொழுது கண்டித்துள்ளார். சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சே, கோத்பாய ராஜபக்சே மற்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது ஐ.நா.மன்றத்தில் இனப்படுகொலைக் குற்றம் இழைத்தற்கான வழக்கு தொடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றது. மேலும், ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புகளை சார்ந்தவர்களும், ஊடகவியல் அமைப்புகளும் சிங்கள அரசின் பாசிசப் போக்கைக் கண்டித்து வருவதால் அவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டும் சுட்டுக் கொல்லப்பட்டும் வருகின்றனர்.

இந்த நிலையிலும் கூட, சிங்கள அரசுடன் 'நல்லுறவு' பேணுகிறதாம் 'இந்தி'யா. சொந்த மக்களை குண்டு போட்டு அழித்து, கொலைகாரன் என்று உலகமே அடையாளம் காட்டும் ஒருவனுடன் 'நல்லுறவு' பேணத் துடிப்பவனுக்கு என்ன பெயர் கொடுக்கலாம்?

ஈழத்தில் போரை நிறுத்த வேண்டுமென தமிழக மக்கள் கொதித்தெழுந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். தமிழக சட்டமன்றம் இருமுறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று இந்தியப் பிரதமரிடம் வலிறுத்தி வந்தனர். இத்தனைக்குப் பிறகும், போர் நிறுத்தம் பற்றி கவலையே கொள்ளாததற்குக் காரணம், 'இது இலங்கை நடத்தும் போர் அல்ல. இந்திய அரசு தானே தலைமை தாங்கி சிங்களவனை வைத்து நடத்தும் போர்' என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழக மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களைக் கண்டு கலக்கமுற்ற தி.மு.க. அரசு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி இலங்கைக்கு செல்லுமாறு வேண்டிக் கேட்டது.

அவருக்குப் பதிலாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். தமிழர்களின் கோரிக்கையான போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தத்தான் அவர் இலங்கை சென்றார் என்று நம்பிய 'இந்தி'ய தமிழர்களின் முகத்தில் கரியை அள்ளிப் பூசினார், சிவசங்கர மேனன். போர் நிறுத்தம் பற்றி வாயே திறக்காமல் 'நல்லுறவு' பேணுவதற்காகத் தான் சென்றேன் என்று கொழும்பில் கொழுப்புடன் தெரிவித்திருந்தார்.

இறந்து போன ஒரு பெண் பேராளியின் உடலைக் கூட இனவெறி பிடித்த சிங்கள இராணுவ மிருகங்கள் சின்னாபின்னாமாக்கிய செய்தி மனிதநேயம் கொண்ட அனைவரது நெஞ்சத்தையும் கலங்கச் செய்தது என்றாலும் ஒருவேளை 'இந்தி'ய அரசுக்கு இச்செயல் நிறைந்த மகிழ்ச்சியளித்திருக்ககூடும். அதனால் தான், இறந்து போன ஒரு தமிழ்ப் பெண்ணின் உடலுக்கே இது தான் கதி என்ற நிலைமையை ஏற்படுத்தி 'சனநாயகத்தை' நிலைநாட்டியிருக்கிற சிங்கள இராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகாவை 'உலகின் தலைச்சிறந்த இராணுவத் தளபதி' என்று நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் சிவசங்கர மேனன். அப்பொழுது தான் அவரது கொழும்பு வருகையின் உள் அர்த்தம் புரிந்தது. தில்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்களை சந்திக்கக் கூட பயந்து ஓடிய இந்த பார்ப்பான் தான் 'இந்தி'ய நாட்டின் வெளியுறவுத்துறைச் செயலாளராம்.

தமிழினம் மீது தீராத பகை கொண்ட ஆரிய பார்ப்பனிய இனவெறி 'இந்தி'ய அரசு, சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போருக்கு தொடர்ந்து செய்து வரும் ஆயுத, ஆள், நிதி உதவிகள் அவ்வப்போது அம்பலப்படும் பொழுதெல்லாம் தமிழக காங்கிரசார் தொடர்ந்து மறுத்து வந்தனர். பின்னர் கலைஞரை முன்னிலையில் வைத்துக் கொண்டே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, 'தெற்காசியாவில் இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்த இலங்கைக்கு வழங்கப்பட்ட தற்காப்பு உதவிகள் தாம் அவை' என்று செய்தியாளர்கள் முன் அறிவித்தார். தில்லிக்கு தமிழகத்தைக் காட்டிக் கொடுக்கும் கங்காணிச் செயல்களில் 'முதல்வரான' முதல்வர் கருணாநிதி இதனை ஆமோதித்தபடி அமர்ந்திருந்தார். தமிழனைக் கொல்வது தான் ஆரிய 'இந்தி'யத்திற்கு பாதுகாப்பா? என்று கேட்டால், 'நாம் ஆயதம் தராவிட்டால் சீனா தந்துவிடுமாம்' கூச்சமின்றி சொல்கின்றன துரோக காங்கிரசின் வெக்கங்கெட்ட 'தலைகள்'.

இந்தியா இப்பொழுது ஆயுத உதவி செய்துவிட்டதால் சீனாவோ பாகிஸ்தானோ தான் செய்த உதவிகளை நிறுத்திக் கொள்ளவில்லை. மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளன. இறுதிப் போர் என்று சீனாவிடம் அண்மையில் கூட 120 பீரங்கிகளை பெற்றுள்ளது சிங்கள அரசு. இவை போதாதென்று ஈரோட்டில் மக்கள் பார்க்கும் விதமாக தைரியமாகவே கொச்சின் துறைமுகத்திற்கு பீரங்கிகள் அனுப்பி அங்கிருந்து இலங்கைக்கு வழங்கியிருக்கிறது 'இந்தி'யா. மேலும் தஞ்சை விமானப்படைத் தளத்திலிருந்து பெருமளவு ஆயுதங்கள் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரியவந்ததையடுத்து அத்தளத்தை இழுத்து மூடக் கோரி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் முற்றுகைப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருக்கின்றன.

எனவே, காங்கிரஸ்காரர்களுக்குத் தேவை, தமிழனைக் கொல்ல ஆயுதம் வழங்குவதை நியாயப்படுத்த ஒரு காரணம் தானே தவிர இந்தியாவின் பாதுகாப்பு மண்ணாங்கட்டியெல்லாம் அல்ல என்பதை உணர முடிகின்றது. இந்தியா பீரங்கிகள் வழங்கிய தினத்துக்கு மறுநாள் தான் 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் பீரங்கித் தாக்குதலால் மரணமடைந்தனர் என்ற செய்தி நம்மையடைந்தது. அதனால் தானோ என்னவோ, 'நம்ம பீரங்கி நல்லாத்தான் வேலை செய்கிறது போல..' என்றெண்ணி பிரணாப் முகர்ஜி உடனே ஓடோடி சென்று ராஜபட்சே பிரதர்ஸ்ஸூடன் மகிழ்ச்சியைக் கொண்டாடவும் 'நல்லுறவு' பேணவும் கொழும்பு சென்றார். 'போரை நிறுத்துங்கள்' என்று தமிழகமே உரக்கக் கத்தினாலும் அடிமைகள் குரல் எடுபடாது என்று செவிமடுக்காமல் சிங்கள அரசைத் தட்டிக் கொடுக்கும் காரியங்களில் தொடர்ந்து 'இந்தி'யா ஈடுபட்டிருக்கின்றபோது இனியும் இங்கு எவனாவது 'இந்தி'யன் என்று சொல்லிக் கொண்டு திரிவானா?

மேலும், தற்பொழுது போரில் ஈடுபட்டுள்ள சிங்கள இராணுவத்தினரின் படங்களை சிங்ள இராணுவத்தின் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் உள்ள சில படங்கள் 'இந்தி'யப் படைகள் இப்போரில் நேரடியாக ஈடுபட்டுள்ளதா என்று பலமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இலங்கையில் சார்க் மாநாட்டின்போது இந்தியப் பிரதமரின் பாதுகாப்பிற்கு என்ற பெயரில் பெருந்தொகையான இராணுவம் கொழும்பு சென்றது. மாநாடு முடிந்து இந்தியப் பிரதமர் திரும்பிய பின்னரும் கூட பாதுகாப்பிற்கு சென்றவர்கள் திரும்பவில்லை. ஏன்? இவர்கள் எங்கே சென்றார்கள்? ஒருவேளை கொழும்பில் தொலைந்து விட்டார்களோ..!?

மகாராட்டிராவின் மும்பை நகரில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அந்நாடு மீது இந்திய அரசு போர் தொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உலகளவில் இதனை பெரும் பிரச்சனையாக்குகின்றது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு விளையாடக் கூட செல்லக் கூடாது என அறிவுறுத்துகிறது. சரி அது இருக்கட்டும், தமிழக மீனவர்களை தொடர்ந்து சுட்டுக் கொன்றழிக்கும் சி்ங்கள கடற்படைக்கு 'இந்தி'ய அரசு ஒரு சிறிய கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? சுட்டுக்கொல்லப்பட்டு செத்து மடியும் தமிழக மீனவன் 'இந்தியன்' இல்லையா? 'இந்தி'ய அரசுக்கு ஏனிந்த இரட்டை வேடம்?

Indian army officers in Srilanka தற்பொழுது ஈழத்தில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், 24 தமிழக மீனவர்களை கடத்திச் சென்றுள்ளது சி்ங்களக் கடற்படை. இதனைக் கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்து நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையிலும் கூட இந்திய கிரிக்கெட் அணியை இலங்கையுடன் விளையாட அனுப்பி வைக்கிறது 'இந்தி'ய அரசு. நமது நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லும் சிங்கள நாட்டுடன் விளையாடச் செல்கிறோமே என்ற குற்றவுணர்வு இந்திய கிரிக்கெட் அணியில் யாருக்கும் ஏற்படவில்லை; ஏற்படாது. ஏனெனில் தமிழர்களை 'இந்தி'யர்களாக அவர்கள் பார்ப்பதே கிடையாது. நாம் தான் வெக்கமின்றி 'ஜனகணமண' பாடிக் கொண்டு 'இந்தி'ய அடிமைகளாகவே வாழ்ந்து தொலைக்கிறோம்.

மும்பை தாக்குதலை நடத்த கடல்வழி ஆயதங்களுடன் வந்தவர்களை தடுக்கத் துப்பில்லாத இந்திய கடற்படை, விடுதலைப்புலிகளுக்கு காய்கறி செல்கிறதா, கம்பிகள் செல்கிறதா என தமிழக மீனவர்களை பிராண்டி எடுத்து, தனது வலிமையைக் காட்டி வருகின்றது. இதுவரை ஒரு தமிழக மீனவனைக் கூட சிங்களவனின் துப்பாக்கிக் குண்டுகளிடமிருந்து காக்க வக்கில்லாத 'இந்தி'யக் கடற்படை 'வீரர்'கள், தமிழக மீனவப் பகுதிகளில் புலிகள் ஊடுருவல் குறித்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கிறார்களாம்.

காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நிமிடமும் தமிழர்களின் பிணங்கள் விழுந்து கொண்டுள்ளன என்று நன்றாக அறிந்து வைத்து கவிதை படிக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி, பொறுமையாக மூன்று வாரங்கள் கழித்து பிப்ரவரி 15ஆம் தேதி கூடி அடுத்ததென்ன என ஆராய்வோம் என்று அறிக்கை விடுகிறார். காலம் தாழ்த்தித் தரப்படும் நீதி அநீதிக்கு ஒப்பானது என்பதனை அறியாதவரல்ல கலைஞர். ஈழத்தமிழர்களின் உயிரை விட பதவிக்காக காத்திருக்கும் தனது குடும்பத்தினரின் எதிர்காலம் முக்கியமானதல்லவா அவருக்கு? அந்த பிப்ரவரி 15, இந்த ஆண்டு பிப்ரவரி அல்ல என்று அறிவிக்கக்கூடிய வார்த்தை ஜாலம் கலைஞரிடம் நிறையவே உண்டு என்பதனையும் நாம் மறந்து விடக்கூடாது.

விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் எல்லோரும் 'தேசத் துரோகிகள்' என்று அறிவிக்கிறார், அ.திமு.க. தலைவி செயலலிதா. அவரது சொற்படியே பார்த்தால், விடுதலைப் புலிகளை உறுதியுடன் ஆதரிக்கும் ம.தி.மு.க. என்ற 'தேசத் துரோகிக்' கட்சியுடன் கூட்டு சேர்நது செயல்படும் அ.தி.மு.க. ஒரு தேசத் துரோக் கட்சியே! இஸ்ரேலின் குண்டு வீச்சில் பலியான அப்பாவி மக்களுக்கு ஆதரவாக அறிக்கை விடத் தெரியும் அ.தி.மு.க.வின் ஆரிய இன அருந்தவப் புதல்வியிடம், ஈழத்தமிழர்களின் உயிர் போவது குறித்துக் கேட்டால் 'அப்பாவிகள் மரணமடைவது தவிர்க்கமுடியாதது' என சிங்களவர்கள் கூட சொல்லாத சொற்களை வாய்கூசாமல் சொல்லத் தெரிகிறது.

இவற்றுக்கெல்லாம் நடுவே, பாட்டாளி மக்கள் கட்சி ராமதாசோ போர் நிறுத்தம் வலியுறுத்தி தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டம் நடத்துவோம் என அறிவிக்கிறார். அவரது முகத்திரையை அவரது கூட்டணிக் கட்சியான காங்கிரசே கிழிக்கிறது. "நீங்கள் தான் தில்லி அரசில் இருக்கிறீர்களே அங்கே போய் சொல்றது இதெல்லாம்" என்கின்றனர் காங்கிரசார். பாவம், 'இந்தி'யப் பிரதமரே கதி என்று தில்லி மருத்துவமனையில் முடங்கிக் கிடக்கும் சுகாதரத்துறை அமைச்சரான அவரது அருமைப் புதல்வர் அன்புமணி ராமதாஸ் என்ன செய்வார் இதற்கு..!

இந்தக் கட்சிகள் மட்டுமல்ல தமிழனத்திற்கு விடிவு வேண்டுகிற எந்தக் ஓட்டுக் கட்சியானாலும் சரி, 'இந்தி'யத் தேசியத்தை ஆதரிப்பதன் மூலம் ஈழத்தமிழனுக்கு மட்டுமல்ல தமிழகத் தமிழனுக்கும் சேர்த்து கல்லறை கட்ட தில்லிக்கு கல் எடுத்துக் கொடுக்கிறோம் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழக ஓட்டுக் கட்சிகளின் இந்தக் கூத்தாட்டங்களுக்கு நடுவே, மக்கள் நடமாட்டமே இல்லாத சில நகரங்களைக் கைப்பற்றிக் கொண்டு 'வெற்றி! வெற்றி!' என சிங்கள அரசு போடும் வெறிக்கூச்சலை வாந்தி எடுக்கும் செயலை இந்திய உளவுத்துறை ஆசியுடன் ஊடகங்கள் செய்து கொண்டுள்ளன. 'தினமலர்' போன்ற பார்ப்பனிய சக்திகள் வழக்கம் போல தனது சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டிருப்பதை, புதுச்சேரியில் தனது நிருபரை வைத்தே ராசீவ் காந்தி சிலைக்கு செருப்பு மாலை போட்டு விட்டு விடுதலை சிறுத்தைகள் தாம் செய்தனர் என்று பக்கம் பக்கமாக எழுதியதும், பின்னர், கையும் களவுமாக பிடிபட்டதும் உணர்த்துகின்றன.

தமிழர்களின் இந்த இழிநிலையையும் தமிழின விடுதலையையும் உரிமையையும் வலியுறுத்திப் பேசிய பெ.மணியரசன், கொளத்தூர் மணி, சீமான் போன்ற தலைவர்களை அடையாளம் காட்டும் இனத்துரோகச் செயலை தமிழகக் காங்கிரஸ் செய்கிறது. அந்த துரோகத்திற்கு துணைபோகும் வகையில் அதன் கைக்கூலிகள் அவர்களை சிறையிலடைக்கின்றனர்.

ஓட்டு அரசியல்கட்சிகளின் இச்செயல்களை எல்லாம் தாண்டி போர் நிறுத்தம் வலியுறுத்தி தன்னெழுச்சியான மாணவர் போராட்டங்கள் தமிழகத்தில் வெடித்துள்ளது நம்பிக்கை தருகின்றது. செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் 6 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நடத்தி வரும் சாகும் வரை உண்ணாப்போராட்டத்தை நசுக்குகின்ற கொடிய நொக்குடன் தமிழக அரசு அம்மாணவர்களை கைது செய்கிறது. உடல்நிலை மோசமாகி 4 மாணவர்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். சட்டமன்றத்தை முற்றுகையிடச் சென்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தித் திணிப்பில் ஈடுபட்ட தில்லியைக் கண்டித்து 1965களில் மாணவர்கள் முன்னெடுத்துச் சென்ற தமிழ்த் தேசிய எழுச்சியைப் போல இப்பொழுதும் ஏற்பட்டு விடுமோ என தமிழக அரசு அஞ்சுகிறது. பல கல்லூரிகளுக்கு அதன் முதல்வர்கள் விடுமுறை அளித்திருப்பதன் மூலம் மாணவர்கள் போராட்டத்திற்காக ஒன்று கூட விடாமல் தடுத்து விடலாம் என்றும் அரசு எண்ணுகிறது.

தமிழினத்தின் விடியலுக்காக தானே எழுச்சி கொள்ளும் போராட்டங்கள் நடக்கும் பொழுதெல்லாம் அலறியடித்து ஓடும் தமிழின எதிரிகளுக்கு தக்க பாடம் புகட்ட அணி திரள்வோம். தமிழ்த் தேசிய எழுச்சியின் மூலம் பாசிச சக்திகளை அடையாளம் காண்பதோடு அல்லாமல் அவர்களுக்குப் பாடை கட்டுவோம்! வருகிற நாடாளுமன்றத் தேர்தலின் போது, ஈழத்தமிழனின் ரத்தத்தின் மேல் கம்பளம் விரித்துவிட்டு, வீட்டுக்கு ஓட்டுக் கேட்டு வரும் ஓட்டுப் பொறுக்கிகளுக்கு வரலாறு காணாத பாடம் புகட்டுவோம்! ஓட்டுக் கட்சிகளை அனைத்தையும் தூக்கி எறிந்து, 49-ஓ பிரிவைக் கையிலெடுப்போம்!

Monday, February 02, 2009

அவசரச் செய்தி : உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு அகதிகள் மீது காவல்துறையினர் தாக்குதல்

அவசரச் செய்தி :
உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு அகதிகள் மீது
காவல்துறையினர் தாக்குதல்

சென்னை, 2-2-09.


ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடாத்தி வரும் போரை நிறுத்தக் கோரி செங்கல்பட்டு அகதிகள் முகாமைச் சேர்ந்த அகதிகள் இன்று காலை 2-2-2009 தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தில் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களை அடித்து உதைத்தனர்.
 
செங்கல்பட்டு அகதிகள் முகாமை சேர்ந்த அகதிகள் மேற்கொண்ட  உண்ணா போராட்ட்தின் போது, "நீங்கள் விடுதலைப் புலிகளா?" என்று கேள்விகளைக் கேட்டபடி அகதிகள் பலரை அடித்து உதைத்துள்ளனர்.
 
இது குறித்து அங்கிருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கலைஞர் கருணநிதி அரசின்   காவல்தறையினர் மேற்கொள்ளும் இது போன்ற காட்டுமிராண்டித்தன செயல்களை அனைவரும் கண்டிக்க வேண்டும்.
 
அரசுக்கும் அதன் மேலதிகாரிகளுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் இது குறித்த கண்டனங்களை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமால் இச்செய்திகளை கைபேசி, மின்னஞ்சல் மூலமாக அனுப்பி செங்கல்பட்டு களத்திற்கு சென்று நேரில் உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.
 

குறிப்பிடத்தக்க பதிவுகள்