Tuesday, December 11, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி !

- புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு -
 வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி !
 
ஓலைச்சுவடிகளில் ஆரம்பித்த தமிழ் எழுத்துக்களின் ஊர்வலம் தற்பொழுது கணினியிலும் உலாப்பேசி என விஞ்ஞான வளர்ச்சிகளுக்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. தாய் மீது இயற்கையிலேயே பற்று கொள்ளும் குழந்தைகள் போல தமிழ் மீது பற்று கொண்டடி தமிழர்கள் தம்மை இதற்காக அர்ப்பணித்துக் கொண்டதுவே இச்சாதனைகளுக்கெல்லாம் காரணமாகும்.
 
இணையத்தீன் வளர்ச்சியால் உருவான கருத்துப் பரிமாற்ற ஊடகமான வலைப்பதிவுகளின் வளர்ச்சியும் இதில் அடக்கம். அதனை மேலும் வளர்க்க, முன்னெடுத்து செல்ல ஒன்றுபடும் தமிழர்களின் ஆர்வத்தை பாராட்டுவதோடு நின்றுவிடாமல் அவர்களோடு நாமும் துணை நிற்க வேண்டும்.
 
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் நடத்திய தமிழ்க் கணினி பயிற்சி பயிலரங்கு அப்படிப்பட்ட முயற்சிகளுள் முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன். முதன் முதலாக சென்னையிலும் பின் கோவையிலும் வலைப்பதிவர் பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டிருந்தாலும், முழுதாகத் திட்டமிடப்பட்டு நிறைவோடு பதிவு செய்யப்பட்ட ஒரு நிகழ்வாக தான் இதனை பார்க்கிறோம்.
 
இப் பயிலரங்கிற்கான முன் முயற்சிகளை எடுத்த இரா.சுகுமாரன் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். இணையத்தில் சிதறிக் கிடந்த புதுச்சேரி வலைப்பதிவர்களை ஒன்றிணைத்து ஒருங்கிணைப்பாளராக திறம்பட செயல்பட்ட அவருக்கு முதலில் என் வாழ்த்துக்கள்...! நிகழ்விற்கான துண்டறிக்கை அச்சடிக்கப்பட்டதிலிருந்து நிகழ்வு முடிந்த பின்னும் அடுத்த என்ன செய்யலாம் என சிந்தித்த வண்ணம் இருக்கும் அவருடன் நானும் இருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.
 
அடுத்து, கோ.சுகுமாரன் அவர்கள். முன்னெடுத்த முயற்சிக்கு திட்டமிட்டு செயல்பட வேண்டும் என துரிதமாக செயல்பட்டவர். நிகழ்ச்சி நடக்கும் நாளுக்கு முன்னிரவு குறுந்தகடு அவரது வீட்டில் தான் தயாரானத. நானும் அவரும் சுமார் 4.30 மணி வரை சோர்வு கொள்ளாமல் பணிகளை கவனித்தோம். ஏற்கெனவே மனித உரிமை பேராளியாக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவருக்கு, இவ்வேளைகள் ஒன்றும் சுமையல்ல என்பதை நன்றாக உணர்ந்தோம். நகரின் மையப் பகுதியில் இருந்ததால் அவரது வீடே வலைப்பதிவர் சிறகத்தின் விருட்சமாக இருந்தது. பத்திரிக்கையாளர்கள் கவனிப்பு, விருந்தினர்கள் உபசரிப்பு, அரங்க வேலைகள் என எப்பொழுதும் வலைப்பதிவர் சிறகத்தின் பின்னணியில் சுழன்று நின்று வேலை பார்த்த அவருக்கு நன்றியும் பாராட்டுக்களும் ....!
 
அடுத்து நிகழ்ச்சியின் வழங்கப்பட்ட கோப்புகள், தாள்கள், பேனர்கள், பேனர் கட்டுவது, துண்டறிக்கை ஒட்டுவது என உண்மையான செயல் வீரர்களாக செயல்பட்டவர்கள் ம.இளங்கோ , வீரமோகன் ஆகியோர் ஆவர். நிகழ்ச்சி நடக்கும் முன்னிரவு சுமார் 1 மணி வரை உடனிருந்து கோப்புறை, பேனர் என அலைந்து திரிந்தவர்கள் இவர்கள். நிகழ்வகளின் முன் நிற்காமல் பின்னணியில் இருந்து உணர்வுப்பூர்வமாக உழைத்த இவர்களது உழைப்பு போற்றத்தக்கது.  அமைப்புக் குழுவில் இருந்தாலும் எந்த புகைப்படத்திற்கும் புகழுரைக்கும் மயங்காத இவர்களை போன்றவர்களின் உழைப்பில் தான் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் இப்படியொரு நிகழ்வை நடத்த சாத்தியப்பட்டிருக்கிறது. அவர்களது உழைப்புக்கும் உணர்வுக்கும் தலைவணங்குகிறேன்...
 
இவர்கள் மட்டுமல்லாமல் இணையதளத்தில் பட்டறைக்குரிய பங்கேற்பாளர்களை பதிவு செய்யும்படி வலைதளம் செய்து அதனை எளிதாக்கிய தூரிகா வெங்கடேஷ்,
 
பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் செவிமடுத்து பேராசியர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் பேசியும் பயிற்றுவித்தும் சிறப்பித்த முனைவர் நா.இளங்கோ மற்றும் முனைவர் மு.இளங்கோவன், எ-கலப்பை வடிவமைத்து கணினியில் தமிழைத் தட்டச்சு செய்வதை எளிதாக்கிய பெங்களுர் தமிழ் ஆர்வலர் "தமிழா" முகுந்த், சென்னையிலிருந்து வந்து பட்டறைக்கு வலுசேர்த்த மா.சிவக்குமார், நந்தக்குமார், இலவச இயங்குதளமான உபுண்டுவை அறிமுகம் செய்த கலக்கிய இராமதாஸ், விறுவிறுப்பாக நிகழ்வை இணையத்தில் நிமிடத்திற்கு நிமிடம் பதிவு செய்து சிறப்பித்த வினையூக்கி, மற்றும்  ஒசைச்செல்லா என பலருக்கும் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
   
இவர்களோடு, புகைப்படங்களை எடுத்து இந்நிகழ்வை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் தன் கைவண்ணத்தாலும் கலை எண்ணத்தாலும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் லோகோவிற்கு வடிவம் தந்து அதற்கு உயிரூட்டிய ஓவியர் இராசராசன், மற்றும் திரு இராமமூர்த்தி, வேலை பளுவுக்கி்டையே குறுந்தகடு வடிவமைப்புக்காக நேரம் ஒதுக்கி உழைத்து அதனை செழுமை படுத்திய கணினி மென்பொறியாளர் கல்பீஷ், இரவோடிரவாக குறுந்தகடுகள் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்ட சீத்தா பிரபாகரன், மற்றும் அன்றைய தினம் நிகழ்வில் பங்கேற்று உழைத்த அமைப்புக் குழுவைச் சேர்ந்த பிரேம்குமார், மற்றும் அமைப்புக் குழுவை சேர்ந்த அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்...........
 
மேலும் இந்நிகழ்வை பற்றிய செய்திகளை மக்களுக்கு கொண்டு சென்ற செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் ஆகியவற்றுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த முயற்சியாக கிராமங்களில் தமிழ் கணினி பற்றிய செய்திகளை பயிற்சி பயிலரங்கு வழியாகவும் பரப்புரையாகவும் செய்து அடித்தட்டு மக்களும் தங்கள் கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்திடும் வண்ணம் இச்சிறகம் சிறகடிக்கும் என நம்புகிறோம். அதற்கு இதுவரை உழைத்த தோழர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் இணைந்து உழைத்து அந்த வெற்றியையும் தமிழ் சமூகத்திற்கு வழங்கிட செயல்படுவோமாக...
 
 வெல்க தமிழ் !

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்