Thursday, November 27, 2008

தமிழீழ மாவீரர் தின உரை நவம்பர் 27 2008

தமிழீழ தேசியத் தலைவர் உரை




தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2008.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!


இன்று மாவீரர் நாள்.

தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது
இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து
கௌரவிக்கும் புனித நாள்.

ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது
தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட
எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.

எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன்
வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது
நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத்
தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள்
புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.

எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான
அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள்
புரிந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள்.
இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது
மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம்
காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து
வருகிறது.

சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும்

எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த
மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள்
படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான
மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள
சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.

மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே
பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம்
கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின்
சுமையிலிருந்தும் விடுபட முடியாது.

மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே
இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ
வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள்
நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது
திண்ணம்.




எனது அன்பான மக்களே!

என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு
நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து
வருகிறது.

சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர்
நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய
வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ
இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான
நோக்கம்.

தனித்து நின்று போராடுகிறோம்

இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை
முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத
பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து,
சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது.

சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை
எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து
நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று,
எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.

நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணம்

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு
வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல
திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே
எதிர்கொண்டிருக்கிறோம்.

எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம்
எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு
நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின்
ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.

பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு
எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து
நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும்
மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப்
புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின்
ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.


இந்த மண் எங்களின் சொந்த மண்

சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு
என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர்
நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட
காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.

இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும்
அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம்
நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது
வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.

ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த
நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத
வழியிலும் போராடி வருகிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது
ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில்,
வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம்
வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி
வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள்.
அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச்
சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது.

அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத
கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக
எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.

சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப்
பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை
நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக்
கையளித்தது.

சமாதானத்துக்கு எப்போதும் நாம் தயார்

தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை
வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை
நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது
விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு
என்றுமே எதிரானவர்கள் அல்லர்.

அதேநேரம், நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை.
சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க,
திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில்
பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம்.

எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம்
முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம்
தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும்,
நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே
இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.


அனைத்துலகத்தை ஏமாற்றவே பேச்சுவார்த்தை நாடகம்

பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின்
முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத்
திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற்
கலந்துகொண்டோம்.

போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில்
நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின்
அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும்
பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம்.

இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான
கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினால் அன்று. சிங்கள
அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள
பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களில்
கலந்துகொண்டோம்.

உலக அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த
அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப்
பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக
அமையவில்லை.

புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் அனைத்துலக
சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறிலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப்
பயன்படுத்தியது.

பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும்
படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச்
சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது
சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.

பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து,
படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம்
சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்கள தேசம் போர்த் தயாரிப்பு
வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.

சமாதான முயற்சிகளுக்கு ஊறுவிளைவித்த உலக நாடுகளின் தடை

இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய
உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில்
இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது.

எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச்
சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில்
பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி
ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை
விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு
ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள்
போட்டன.

தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது
எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள
அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற
தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப்
பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின்
பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே
அடைத்து, அவமதித்தன.

இந்நாடுகளின் ஒரு பக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்; பேச்சுக்களில் நாம்
வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன.
இது சிங்கள தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத
சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள
தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.


அனைத்துலக நாடுகளின் பாராமுகம்

சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின்
மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர்
நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது
சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை;
கவலை கூடத் தெரிவிக்கவில்லை.

மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை
அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக
வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன
அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து
வருகிறது.

இன்று சிங்கள தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ
அணுகுமுறையிலும் இராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு
செயற்படுகிறது.

தமிழினத்துக்கு எதிரான போர்

தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின்
கீழ் தமிழர்களை ஆட்சிபுரிய வேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது.
இதனால் போர் தீவிரம் பெற்று, விரிவுபெற்று நிற்கிறது.

இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர்
அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்;
தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப்
போர்.

இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின்
கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத்
துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத்
திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.

பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான
இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டு
வீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது.

சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக
அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து
இறப்பு வரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள்
ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும்
சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது.

வரலாறு காணாத கொடூர அடக்குமுறை

எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு
எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப்
புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.

உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது
தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின்
பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச்
சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.

சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில்
மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர்.
சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான
நிகழ்ச்சியாகி விட்டது.

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன
அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும்
இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள்
நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.

கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும்
கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு
நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது.

எமது மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியாது

இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம்
கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும்
செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது
விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது.

எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும்
இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய
உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும்
வீச்சாகியிருக்கிறது.

பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை
தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான,
கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று.

எமது விடுதலைப் போராட்டம் எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதல்ல

உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை
நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும்
தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ
குறுக்காக நிற்கவில்லை.

எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும்
தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட
வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும்
நடந்துகொண்டதுமில்லை.

உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம்

எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும்
எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே
விரும்புகிறோம்.

இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே
சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான
உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள
நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும்
புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை
அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

இந்தியாவுடனான உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறோம்

இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு
அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி
ஒலிக்கின்றன.

எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து
வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன
எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.

அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும்
ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.

இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும்
முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது.

இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக
வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச்
சந்திக்க நேர்ந்தது.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது
இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது.

எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை.
இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள்.
எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான
நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழக உறவுகளுக்கு நன்றி

காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது
மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக
எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை
இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும்
ஏற்படுத்தியிருக்கிறது.

எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக
மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச்
சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேநேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக்
குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான
நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை
நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு
வேண்டிக்கொள்கிறேன்.

எனது அன்பான மக்களே!

சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்து
விடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது.

போருக்கு குரல் கொடுக்கும் சிங்கள தேசம்

அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத்
தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு
போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது.

போரை கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும்
குரல் கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள்
வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமர மக்கள் வரை போருக்கே குரல்
கொடுக்கிறார்கள்.

தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை
வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான்
போரைத் திணித்திருக்கிறது.

எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே
கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த
பகைமைத் தவிர்ப்பையும் ஏற்க மறுத்து, அதனை ஏளனம் செய்து போரைத் தொடர்ந்து
நிற்பதும் சிங்கள தேசம்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும்
நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்கள தேசம்தான்.

சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்தி
வருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள
அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.

வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்து கட்சிக் கூட்டம் என இந்த
ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

கடந்து சென்ற இந்த நீண்ட கால ஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை
ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு
தீர்வினையும் முன்வைக்கவில்லை.

மாறாக, சிங்கள தேசம் தனது படைக்கல சக்தியால் தமிழர் நிலங்களைப்
பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது
நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலைய
வைத்திருக்கிறது.

சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப் போகிறது?

தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப்
பிளந்து, அங்கு தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி,
இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது.

புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம்
எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக்
கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது?
தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம் பேசும் சக்தியை
அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின்
வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்க மறுக்கும் சிங்களம், எப்படி எமது
மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?

தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே
பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக்
கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய
நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது.

சிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம்
இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி
ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.

ஆக்கிரமிப்புக்கு என்றுமே இடமளிக்கப்போவதில்லை

பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம்
பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான
இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட
ஒரு பெருமைமிக்க இனம்.

இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே
தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது
இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற
வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள
ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.

தொடர்ந்து போராடுவோம்

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை
எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின்
சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில்,
காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம்
தொடர்ந்து போராடுவோம்.

புலம்பெயர் இளைய சமுதாயத்துக்கு பாராட்டு

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும்
எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக்
குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு
அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும்
உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப்
பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய
சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும்
தெரிவித்துக்கொள்கிறேன்.

சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது
மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென
உறுதியெடுத்துக்கொள்வோமாக.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

(வே. பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

Saturday, October 25, 2008

கைதுகளால் மட்டும் நிலைநிறுத்தப்படும் “இந்தி”யத் தேசிய ஒருமைப்பாடு

கைதுகளால் மட்டும் நிலைநிறுத்தப்படும்
"இந்தி"யத் தேசிய ஒருமைப்பாடு
க.அருணபாரதி

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து வரும் இந்த சமயத்தில் தேவையில்லாமல் சில கைது நடவடிக்கைகளில் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு ஈடுபட்டிருப்பதற்குத் துண்டுதலாக செயல்பட்டக் கும்பல் யார் என்பதனை நாடறியும். அந்தக் கும்பலை அம்பலப்படுத்தி எழுதினால் அது சாதீயவாதமாக சிலருக்குத் தென்படுகிறது. என்ன செய்ய? "குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்."

"இந்தி"ய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசியதாக ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, அதன் அவைத் தலைவர் எம்.கண்ணப்பன் ஆகியோர் முதலில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர், இராமேசுவரத்தில சிங்கள இனவெறி அரசிற்கு ஆயதங்கள் வழங்கும் "இந்தி"ய அரசைக் கண்டித்து திரைக் கலைஞர்கள் நடத்தியப் பொதுக் கூட்டத்தில், பிரிவினையைத் தூண்டிப் பேசியதாக இயக்குநர்கள் சீமான, அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தமிழகக் காவல்துறை இவர்கள் மீது ("இந்தி"ய) தேசத் துரோகக் குற்றத்தின் மிகப்பிரபலமான 123(பி) பிரிவின்படி வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த பிரிவில் இவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற திட்டத்துடன் சட்டவிரோ செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities Act -1967) சிலப் பிரிவுகளின் படியும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இவர்கள் செய்த குற்றம் தான் என்ன? எவ்வகையில் இவர்கள் பிரிவினைக்குத் தூண்டினார்கள்? இவர்களைப் பிரிவினைக்குத் தூண்டியது எது? கைது செய்யப்பட்டவர்கள் தனிநபர்கள் அல்ல. தமிழ்த் தேசிய இன மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் தலைவர்கள், கலைஞர்கள். குற்றங்களை செய்தவர்களை விட அதனைச் செய்யத் தூண்டுபவர்களுக்குத் தான் அதிக தண்டனையாம். சட்டம் கூறுகிறது. அப்படியெனில் இவர்களை "இக்குற்றச் செயலுக்கு" தூண்டியது எது என்று ஆராய்வோம்.

இந்தியா ஒரு தேசமல்ல. தனக்கென தனிப்பண்பாடு, மொழி, பொருளியல் என பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கின்ற ஒரு துணைக் கண்டமே ஆகும். இப்படி வாழ்ந்த பல்வேறு நாடுகள் அடக்குமுறையாலும் மக்களின் அனுமதியின்றும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தியா என்ற ஒற்றைத் தேசமாகக் கட்டமைக்கப்பட்டது. இப்படிப்பட்ட துணைக்கண்டங்களில் ஒற்றையாட்சி (Unitary) எனப்படும் அரசியலமைப்பு, தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் ஒன்றன் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்தி சில தேசிய இனங்கள் கொழுக்கவும் சில தேசிய இனங்கள் மிகவும் பின்தங்கிய நிலைக்குச் செல்லவும் வழிவகுக்கும்.

இதற்கு மாற்றாக கூட்டாட்சியையும் சிலர் முன்மொழிவர். அந்த கூட்டாட்சியும் ஒவ்வொரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரிப்பதாக அமைய வேண்டுமே தவிர ஒரு தேசிய இனத்தின் ஒற்றைச் சார்பு தலைமையில் அமையக்கூடாது. இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் கட்டமைக்கப்பட்டது தான் "இந்தி"ய அரசியலமைப்புச் சட்டம்.

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், பல்வேறு தேசிய இனங்களின் மீதும் "இந்தி" மொழி ஆதிக்கம் செலுத்தவும், "இந்தி" பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் மற்ற அயல் தேசிய இனங்கள் மீது அவர்கள் அரசியல் ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தவும் வழிவகுத்திருக்கிறது. அப்படி தான் செயல்படுத்தப்பட்டும் வருகின்றது.

1965-ல் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயன்ற "இந்தி"ய அரசை எதிர்த்துப் போராடி மறத்தமிழர்கள் 300க்கும் மேற்பட்டவர்களை "இந்தி"ய தேசிய இராணுவம் சுட்டுக் கொன்றதை எந்தத் தமிழனால் மறக்க இயலும்?

இப்படிப்பட்ட இந்திய அரசக் கட்டமைப்பில் சிக்குண்ட பல தேசிய இனங்கள் ஒன்றோடு ஒன்றோடு மோதும் போது அவற்றிற்கு நடுவராக இருந்து தீர்க்க வேண்டிய இந்திய அரசு இதுவரை என்ன செய்திருக்கிறது? வேடிக்கைப் பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டதைத் தவிர? இதற்குக் காரணம் அதன் ஒற்றைச் சார்புத் தன்மை தான் என்பதை எவரால் மறுக்க இயலும்?

காவிரிச் சிக்கலில் கர்நாடகம் தமிழக நீர் உரிமையை மறுத்து இந்திய அரசின் உச்சநீதிமன்றத்தையும் மதிக்கத் தவறியது. தமிழர்கள் கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டார்கள். இந்திய அரசு என்ன செய்திருக்க வேண்டும்? உடனடியாக பிரச்சினையைத் தீர்க்க ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.ஆனால் அது நடக்கவில்லை. வேடிக்கைப் பார்த்தது "இந்தி"யா. இதே நிலை தான் மற்றப் பிரச்சினைகளிலும் தொடாகின்றது.

இந்தியா என்ற கட்டமைப்பை மறுத்து கர்நாடகம் செய்த அராஜகங்களை இந்திய அரசு வேடிக்கைப் பார்க்கும். ஆனால் தமிழன் செய்தால் அவன் மீது தேச விரோத முத்திரைக் குத்தும். ஒவ்வொருத்தருக்கும் ஒருவகைப்பட்ட நீதி. இது தானே பார்ப்பனியம். இப்படித் தானே இந்திய அரசு செயல்பட்டது. செயல்பட்டுக் கொண்டு்ம் இருக்கிறது.

மலையாளிகள் முல்லைப் பெரியாறுப் பிரச்சினையிலும் கன்னடாகள் காவிரி நீர் சிக்கலிலும் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை மறுத்தும் இந்திய அரசின் உச்சபட்டச நீதிமன்றமான உச்சநீதிமன்றத்தை எதிர்த்தும் பேசலாம். செயல்படலாம். என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். இந்திய தேசியம் கட்சிகளும், இந்தியத் தேசிய வாதிகளுக்கும் அதைத் தடுக்க வக்கில்லை. பேசுவதற்குத் துப்பில்லை. ஆனால் தமிழகம் தனது நீண்ட காலக் கனவான சேது சமுத்திரத் திட்டம் தடுக்கப்படுவதைக் கண்டித்து பந்த் நடத்தினால் மட்டு்ம் இந்திய அரசின் உச்சிகுடுமி மன்றம் ஞாயிற்றுக் கிழமை விடுப்பு என்றாலும் அவசர அவசரமாகக் கூடிக் கண்டிக்கும். இது தான் இந்திய தேசியமா..?

இவற்றிக்கு எல்லாம் மேலாக "இந்தி"ய அரசு ஈழப்பிரச்சினைத் தொடர்பில் என்ன செய்து கொண்டிருக்கிறது? "இந்தி"ய அரசு தனது ஆரிய இனவெறித் தன்மையுடன் சிங்கள அரசிற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் இராணுவ உதவிகளையும் இன்ன பிற உதவிகளையும் திட்டமிட்டு பல வருடங்களாக செய்து வருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இதனைப் பல்வேறு சமயங்களில் தமிழகத்தில் உள்ள பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் வெளிப்படுத்தியும் அதனை தமிழக அரசோ "இந்தி"ய அரசோக் கண்டுகொள்ளாமல் இருந்தன. அண்மையில் தான் இவ்வுதவிகள் அம்பலப்படுத்தப்பட்டதோடு அதனை இந்த நிமிடம் வரை "இந்தி"ய அரசு மறுக்கவில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

"இந்தி"ய அரசு சிங்களனுக்கு உதவ வேண்டிய அவசியம் என்ன? அவனுக்கு உதவினால் இந்தியாவிற்கு கிடைக்கும் லாபம் தான் என்ன? பாகிஸ்தான், சீனம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிங்களனுக்கு ஆயுதங்களை வெளிப்படையாகக் கொடுப்பது உலகில் அனைவருக்கும் தெரியும். இது இந்திய அரசுக்கும் அதன் பாதுகாப்புத் துறைக்கும் தெரியாதா? தெரியும். இருந்த போதும் அவாகள் அமைதி காத்தார்கள். தம் இன எதிரிகளான தமிழர்கள் தானே அழிகிறார்கள் என்பதால் அமைதி காத்தார்கள். ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது சில புன்முறுவல்களையும் தமிழக மீனவர்கள் கொல்ப்பட்ட போது வாய்விட்டு சிரித்து மகிழ்ந்திருப்பார்கள், இந்த "இந்தி"யத் தேசிய வாதிகள்.

அண்டை நாடு ஆயதங்கள் வாங்கிக் குவிப்பதால் நம் நாட்டிற்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என்ற எண்ணம் "இந்தி"ய பாதுகாப்புத் துறைக்கு ஏன் ஏற்படவில்லை? ஏன் தமது அடிமையான தமிழக மீனவனை சிங்களப் படைகள் சுட்டுக் கொன்ற போது கூட அவன் மீதும் "இந்தி"யன் என்ற முத்திரைக் குத்தியுள்ளோமே என்ற எண்ணம் கூட அவர்களுக்கில்லை. உயிரைப் பணயம் வைத்து தமிழக மீனவாகள் பிடித்து வரும் மீன்களுக்கு அந்நிய செலாவணி வரி கேட்டு பிச்சை எடுக்க மட்டும் வந்துவிடுவார்கள் இந்த "இந்தி"ய வரிப் பொறுக்கிகள். இதுவே பாகிஸ்தான் தனது படைகளை எல்லையில் குவித்தாலோ சீனா படைகளை குவித்தாலோ இந்தியத அமைதியாக இருந்திருக்குமா? அப்படியெனில் சிங்களன் ஆயதங்கள் குவித்த போது இந்திய அரசு அமைதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் தானும் ஆயுதங்களை வழங்கியது எதற்காக?

ஏற்கெனவே நீர்சிக்கல்களால் அயல் தேசிய இன மாநிலங்கள் "இந்தி"ய கட்டமைப்பை மதிக்காமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது என்னடா "இந்தி"யத் தேசியம் என்று பல முணுமுணுப்புகள் தமிழகத்தில் எழந்திருந்ததை எவராலும் மறுக்க முடியாது. மின்வெட்டால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் பொழுதுகூட நம் தமிழ் மண்ணில் உள்ள நெய்வேலி மண்ணிலிருந்து மின்சாரத்தைப் பிடுங்கி இந்த நீர்தரமாட்டோம் என்று அடம்பிடிக்கும் அடாவடி அயல் தேசிய இனத்தவருக்கு பகிர்ந்தளிக்கிறது "இந்தி"ய அரசு. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நமது நாடு என்று நாம் "இந்தி"யாவை நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் தலைமையோ நம் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவிக்க ஆய்தங்கள் வழங்கி உதவிப்புரிகிறதே என்ற வலி தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது உண்மையா இல்லையா? இந்த உண்மையை எவ்வளவு நாள் நாம் பொத்திப் பொதத்தி வைக்க இயலும்?

பிரிவினைக்குத் தூண்டியது கைது செய்யப்பட்டவர்கள் அல்ல. அவர்களை அவ்வாறு பேச வைத்த அயல் தேசிய இனங்களும் அதைக் கண்டு கொள்ளாமல் கள்ள மவுனம் சாதிக்கும் "இந்தி"ய அரசுமே ஆகும். இதனை முதலில் "இந்தி"யத் தேசிய வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல, விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று பார்ப்பன இந்தியத் தேசியக் கும்பல் வெறிக்கூச்சல் போடுகின்றது. அப்படியெனில் முதலில் ஆனந்த விகடன் கருத்துக் கணிப்பிலும் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்துக் கணிப்பிலும் விடுதலைப் புலிகளை ஆதரித்த பெரும்பான்மை தமிழக மக்களை சிறையில் தள்ளுவார்களா இந்த "இந்தி"யத் தேசியவாதிகள்? இப்படிச் செய்தால் தமிழ் மக்களின் கோப நெருப்பே உங்களைப் சுட்டுப் பொசுக்கிவிடும். கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும். ஈழத்தமிழர்களுக்காக போராடுவதை திசைத்திருப்பும் விதமாக செயல்படும் இப்போக்கைக் கண்டித்து மக்கள் அணி திரள வேண்டும். ஏனெனில், கைது செய்யப்படுவது மனிதர்கள் தானேத் தவிர மக்கள் மனிதில் உள்ள கருத்துக்கள் அல்ல!




--
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
http://www.arunabharathi.blogspot.com/
-----------------------------------------------------------

Friday, October 17, 2008

ஈரோட்டில் இந்து நாளேடு தீ வைத்து எரிப்பு

ஈரோட்டில் இந்து நாளேடு தீ வைத்து எரிப்பு

ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்கள் தமிழகத்தில் வலுப்பெற்ற நிலையில் அப்போராட்டங்களை 'குறுகிய இனவெறி' என்று சிறுமைப்படுத்தி, தமிழின வெறுப்பைக் கக்கி 'இந்து' ஏடு 14-10-2008 அன்று விசமத்தனமானக் கட்டுரை ஒன்றைத் தீட்டியது. இதைக் கண்டு கொந்தளித்த தமிழ் இன உணர்வாளர்கள் கோவையில் அக்கட்டுரை வந்த அன்றே "இந்து" அலுவலகத்தின் வாயிலை முற்றுகையிட்டு அப்பத்திரிக்கையின் பார்ப்பனிய திரிபுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி கைதானார்கள். பெரியார் திராடவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் அப்போராட்டத்தில் பங்கேற்றன.

இந்நிலையில் நேற்று ஈரோட்டில், சுமார் 2400 'இந்து' பத்திரிக்கைகள் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புத் தோழர்களால் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. காவல்துறை இருவரை கைது செய்ததுடன் வழக்கும் பதிவு செய்துள்ளது.


Copies of The Hindu set ablaze

Staff Reporter



Protests in Erode: Copies of The Hindu and Business Line were set on fire at the Erode bus stand on Thursday morning. At right, a pro-LTTE handbill found at the site warned The Hindu against publishing 'anti-Tamil' reports and accused it of 'betraying' Tamils' interests .— Photo: M. Govarthan

ERODE: A group of five persons led by the district organiser of the Periyar Dravidar Kazhagam (PDK) set fire to 2,400 copies of The Hindu and 390 copies of the Business Line at the bus stand here on Thursday morning.

They were protesting against the paper's criticism of the pro-LTTE campaign in the State. As a result, several parts of the town did not get their regular copies.

According to newspaper agents and hawkers, the group arrived at the paper-sorting point around 5 a.m., shouting pro-LTTE slogans.

It also distributed handbills in support of the banned organisation.

The group, led by Kumaragurubaran, district organiser of the PDK, and M. Jayakumar, of the Tamil Desiya Podhu Udaimai Katchi, attempted to snatch newspaper bundles from distributor V. Balasubramaniam. When he resisted this, he was overpowered.

He was also abused and threatened with dire consequences.

The group then set ablaze copies of the two dailies, said agent R. Mohan Kumar.

Another agent O. Sivanesan said the group had come ready with bottles of petrol. Then, it fled the scene.

The Erode Town Police visited the spot and registered a case against Kumaragurubaran, Jayakumar and a few others under sections 506 (i) (criminal intimidation), 147 (rioting), 323 (voluntarily causing hurt), 294 (b) (destroying, damaging or defiling objects) and 427 (mischief, and thereby causing damage to property) of the IPC.

Site : http://www.thehindu.com/2008/10/17/stories/2008101755601400.htm

Thursday, October 16, 2008

தமிழின எழுச்சியை பொறுக்க முடியாத பார்ப்பனிய சக்திகள் - க.அருணபாரதி

தமிழின எழுச்சியை பொறுக்க முடியாத பார்ப்பனிய சக்திகள்
க.அருணபாரதி

சிங்கள இனவெறி அரசின் கோரப்பற்களில் சிக்கி ஏற்கெனவே சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் நிலை மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாயகத் தமிழகத்தில் எழுச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களை அழித்திட ஆரிய இனவெறியுடன் செயல்பட்டு வரும் இந்தியத் தேசிய அரசிற்கு இந்த எழுச்சி அச்சமூட்டுகின்றது. ஆரிய இந்தியத் தேசியத்தின் நிழலில் நடனமாடும் 'இந்து' உள்ளிட்ட ஆரியப் பார்ப்பனிய சக்திகளும் இந்த அச்சத்தால் கலக்கமடைந்துள்ளனர் என்பதை அண்மை நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

சிங்கள அரசிற்கு மகிந்த ராஜபக்ச தலைமையேற்றதிலிருந்து, ஈழத்தமிழினத்தை முழுமையாக அழித்தொழிக்க உறுதிபூண்டு செயல்பட்டுவருகின்றது. சிங்கள இனவெறி அரசு தமிழ் மக்கள் மீது தொடுத்துள்ள இப்போரால் சிறிலங்காவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதை உலகமே நன்கு அறியும். சிங்கள இனவெறி அரசு பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்படும் சிங்கள மக்கள் மீது கூட கவலை கொள்ளாமல், ராஜபக்ச அரசு தனக்கே உரியஇனவெறியுடன் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் இராணுவத்திற்கே அதிக நிதியை செலவிட்டு வந்தது. (காண்க : லைவ் மிண்ட், வால் ஸ்ட்ரீல் பத்திரிக்கை இணையம், http://www.livemint.com/2008/10/10000123/Sri-Lanka-earmarks-record-amou.html?d=1).

கடந்த 2006 ஆம் வருடம் சிறீலங்கா அரசு தனது இராணுவ செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையான 96 பில்லியன் ரூபாய், 2007 ஆம் வருடம் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 139.6 பில்லியன் ரூபாயாக உயர்ந்தது. (காண்க: http://www.wsws.org/articles/2007/may2007/sri-m16.shtml). இவையெல்லாம் நன்கு தெரிந்திருந்தும் இந்திய அரசு சுமார் 100 மில்லியன் டாலர் நிதியை வெறும் 2 சதவீத வட்டிக்கு சிங்கள அரசின் இராணுவத்துறைக்கு கடனாக வழங்கி தமிழ் மக்கள் மீதான போருக்கு ஆரிய இனப்பகையுடன் உதவி புரிநத்தது. (செய்தி ஆதாரம் : http://economictimes.indiatimes.com/Features/The_Sunday_ET/Dateline_India/India_works_on_100_mn_soft_loan_package_for_Lanka/rssarticleshow/2986652.cms).
இதன் உச்சமாக, அண்மையில் உலக வங்கி இனி தன்னிடம் கடன் பெறவே முடியாத நிலைக்கு பொருளாதாரம் வீழ்ந்துவிட்டதாக வெளியிட்ட 28 நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவும் இடம்பெற்றிருந்தது. (பார்க்க : ராய்டர்ஸ் செய்தி இணையம், http://www.alertnet.org/thenews/newsdesk/N09664381.htm).

இந்திய அரசு சிங்கள அரசிற்கு வெறும் நிதிஉதவி மட்டும் செய்யவதோடு
நின்றுவிடவில்லை. மாறாக ஆய்த உதவியையும் தொடர்ந்து செய்து தன் ஆரியச் சார்பை வெளிப்படுத்தி வருகி்ன்றது.
கடந்த 9.10.08 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான்படை தாக்குதலில் வவுனியாவிலுள்ள சிங்கள இராணுவ தலைமையகத்தில் 10 சிங்களப் படையாட்கள் கொல்லப்பட்டதுடன் இரண்டு இந்திய இராணுவ பொறியாளர்கள் காயம்பட்டனர். இவர்கள் இந்தியா ஏற்கெனவே கையளித்த இராடார்களை கையாள இந்திய இராணுவம் அனுப்பிய பொறியாளர்கள் என்றும் தெரியவந்தது. இலங்கை இனச்சிக்கலுக்கு இராணுவத் தீர்வு கூடாது. அரசியல் தீர்வு தான் காண வேண்டும் என்று பேசிப் பேசி மழுப்பியே நாட்கள் கடத்தி வந்த இந்திய அரசின் பார்ப்பனிய சூழ்ச்சி அத்தாக்குதல் மூலம் வெளி உலகிற்கு அப்பட்டமாய் அம்பலமானது.

இராணுவத் தீர்வுக் கூடாது என்று வெளியில் அறிக்கை வெளியிட்டு விட்டு இராணுவத் தளவாடங்களை இலங்கைக்கு அனுப்பி ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்தி வரும் இனப்படுகொலைகளுக்கு நேரடித் துணை புரிவதன் மூலம் தனது ஆரிய பார்ப்பனிய இனவெறியை தமிழினத்தின் மீது இந்திய அரசுக் கட்டவிழ்த்துள்ளது என்பதை அறுதியிட்டுக் கூறலாம். ஏனெனில், இந்திய அரசு சிங்கள அரசிற்கு இராணுவ உதவிகளையும் பயிற்சிகளையும் வழங்குவது ஒன்றும் புதிதான நடவடிக்கை அல்ல. கடந்த 2005ஆம் ஆண்டு இலங்கைக்கு அரசுக்கு 3 போர்க் கப்பல்களை அனுப்பி சிங்கள இராணுவத்தின் கடற்ப்படை பிரிவுக்கு பயிற்சி நேரடிப் பயிற்சியே அளித்தது இந்திய அரசு. (செய்தி ஆதாரம் : http://www.lankanewspapers.com/news/2005/3/1019.html)

அப்பாவி ஈழத்தமிழர்கள் மீது கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்களை நடத்தி இனப்படுகொலையை தீவிரப்படுத்தியிருந்த காலகட்டத்தில் சிங்கள இனவெறி அரசிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதன் முதலாக விடுதலைப் புலிகள் வான்படை விமானங்களைக் கொண்டு சிங்கள படைகளை தாக்கினர். செஞ்சோலை ஆதரவற்றோர் இல்லத்தில் ஆதரவற்ற தமிழ் குழந்தைகள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போது உலகமே அந்த அரச பயங்கரவாத செயலைக் கண்டித்த போதும் கண்களை மூடிக் கொண்டு வாய்மூடி மவுனியாய் இருந்த இந்திய அரசு, புலிகளின் வான்படைத் தாக்குதல் தமக்கு மிகவும் கவலைப் படுவதாக தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக புலிகளின் விமானப் படையை எதிர்கொள்ள சிங்கள அரசிற்கு உதவும் வகையில் ராடார்கள் உள்ளிட்ட படைக் கருவிகளை வழங்க 5 - சூன் -2005 அன்று முடிவெடுத்தது. (செய்தி ஆதாரம் : http://www.indiadaily.com/editorial/3027.asp)

இம்முடிவை எதிர்த்து தமிழக அரசியல் கட்சியான ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ சிங்கள இனவெறி அரசுக்கு இந்தியா உதவக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு 12-சூன்-2005 அன்று கடிதம் எழுதினார். இதனை அவர் நேரிலும் வலியுறுத்திப் பேசிய போது பிரதமர் அவ்வாறு உதவிகள் எதுவும் செய்யப்போவதில்லை என்றும் வாய்க்கூசாமல் தெரிவித்தார். (பார்க்க : http://www.hindu.com/2005/06/12/stories/2005061204681000.htm)

"குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு" என்ற இந்திய அரசின் இலங்கைத் தொடர்பான வெளியுறவுக் கொள்கையின்படி பிரதமர் மன்மோகன் சிங் கொடுத்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. இரண்டு நவீன ரக ராடார்களை இந்தியா கையளித்தது. அதில் ஒன்று தான் கடந்த மாத வான்தாக்குதலில் புலிகள் அழித்த 'INDRA-II' என்ற ராடார் கருவி.

இது போன்ற இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கு நடவடிக்கைகள் தொடர்ந்து வந்துள்ளதை அவ்வப்போது ஆதாரங்களுடன் தமிழ்த் தேசிய அமைப்புகளும் சில தேர்தல் அரசியல் கட்சிகளும் அம்பலப்படுத்தி பல போராட்டங்களையும் நடத்தி வந்த போதும் அதனை இங்குள்ள பார்ப்பனிய ஊடகங்கள் வெளியிடாமல் கள்ள மவுனம் சாதித்தன.
ஆனால் சிங்கள அரசு தமிழர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை திட்டமிட்டு மறைத்துவிட்டு அதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக எங்காவது புலிகள் தாக்கினால் அதனை பெரிதாகக் காட்டுவதும், "புலிகள் 100 பேர் பலி - 200 பேர் பலி" என்று சிங்கள அரசுச் சொல்லும் செய்திகளை கிளிப்பிள்ளைகளாக வாந்தி எடுப்பதும் இப்பார்ப்பனிய ஊடகங்கள் தலையாய பணியாக செய்தன.
தமிழர்களின் தாயகப்பகுதிகளுக்குச் சென்று செய்திகள் சேகரிக்க எந்த ஊடகங்களும் சிங்கள அரசால் அனுமதிக்கப்படுவதில்லை என்ற உண்மை எத்தனைப் பேருக்குத் தெரியும்? போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய பணிகளை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பையும், தொண்டு நிறுவனங்களையும் கூட தமிழர் பகுதிக்குள் அனுமதிக்காத சிங்கள இனவெறி அரசு ஊடகவியலாளர்களை மட்டும் அனுப்புமா? என்ன என்பது நடுநிலையாளர்களுக்கே வெளிச்சம்.
ஆனால், தமிழகத்தில் தற்பொழுது எழுந்துள்ள எழுச்சியால் பல செய்திகளை வெளியிட வேண்டியக் கட்டாய நிலைக்கு பார்ப்பனிய ஊடகங்களும் தள்ளப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை. அதன் ஒரு பகுதிதான், 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேடு புலிகளுக்கு தமிழகத்தில் பெரும்பான்மையானோர் ஆதரவாக இருக்கிறார்கள் என்ற கருத்துக் கணிப்பை வெளியிட நேர்ந்தது. அக்கிரகாரத்து "ஆனந்த விகடன்"கூட புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை அட்டையில் போட்டுத் தான் பல லட்சம் பிரதிகள் அதிகமாக விற்பனையானது.

இருந்த போதும், இந்த எழுச்சியை கண்டு பொறுக்க முடியாத ஆரியப் பார்ப்பனிய சக்திகள் வழக்கம் போல இப்பொழுதும் தன் ஓலவாயால் ஒப்பாரி வைக்கின்றன. ஈழத் தமிழர்களின் இன்னல்களை கவனத்திற்குக் கொண்டு வர இந்திய பொதுவுடைமைக் கட்சி உண்ணாநிலைப் போராட்டம் ஒன்றை நடத்தியது. தன் கட்சியும் அதில் பங்கு பெறும் என அறிவிப்பு வெளியிட்டார் அ.தி.மு.க. தலைவி செயலலிதா. ஈழத்தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரனை சிறையில் அடைக்க வேண்டும் என்று சர்வாதிகாரக் குரலில்
சட்டமன்றத்திலேயே பேசிய செயலலிதாவின் அ.தி.மு.க. உண்ணாவிரதத்தில் பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு ஓங்கிய நிலையில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து தனது பார்ப்பனியச் சார்பை உறுதி செய்தார் அம்மையார்.
ஈழத்தமிழர்களின் "சுயநிர்ணய உரிமையை ஆதரிப்போம் ஆனால் அதற்காக போராடும் விடுதலைப் புலிகளை எதிர்ப்போம்" என்று அறிக்கையும் விடுத்தார் அம்மையார். தமிழகத்தின் 40 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் துறக்க "நேரிடும்" என்று ஒருவழியாக இந்திய அரசுக்கு தமிழக அரசு மிரட்டல் விடுத்த போதும் அதனை சிங்களர்களின் குரலில் நாடகம் என்கிறார்.

ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக் குரலை உலகிற்கு உரைப்பவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கமே என்கிற எளிய உண்மையைக் கூட அறிந்து கொள்ள முடியாத நிலையில் செயலலிதா நிச்சயம் இல்லை. ஆனால் அம்மையாரை ஏதோ ஒன்று தடுப்பதாக தெரிகிறதே அது என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் அதன் பின்னால், 'துக்ளக்' சோ, சுப்பிரமணிய சுவாமி, 'இந்து' நாளேடு என்.ராம் உள்ளிட்ட ஆரிய பார்ப்பனியக் கூட்டாளிகளின் சதிவலைச் சங்கிலித் தொடர் தான் தெரியும்.

இதனை அம்பலப்படுத்துவது போல் இந்து நாளேடு 14-10-2008 அன்று தன் ஆசிரியர் குழுசில் இருக்கும் பார்ப்பன பெண் ஒருவரை வைத்துக் கட்டுரை ஒன்றைத் தீட்டியது. சிங்கள சந்திரிகாவிடம் "சிங்கள ரத்னா" விருது பெற்ற இந்து ஆசிரியர் என்.இராமின் விசுவாசம் அக்கட்டுரையை படிப்பவர்களால் நன்கு உணர முடியும். சம்பந்தமில்லாத விசயங்களுக்கு ஒரு பிரச்சினையை எப்படி திசைத் திருப்ப வேண்டும் என்று பயிற்சியே எடுத்துக் கொள்ளலாம் என்ற அளவிற்கு அக்கட்டுரையில் பார்ப்பனிய திரிபும் தமிழின வெறுப்பும் வெளிப்பட்டது.

ஓர் அரசு தன் மக்கள் என்று சொல்லக் கொண்டே அவர்கள் மீது கண்மூடித்தனமாக விமானங்களில் குண்டு வீசிக் கொண்டிருப்பதைக் கண்டிக்க வக்கற்ற, துப்பற்ற "இந்து" ஏடு, அதனை எதிர்த்துப் போராடும் மறத்தமிழர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்துக் கட்டுரை வெளியிடுகின்றது.
இக்கட்டுரை வெளிவந்த அதே தினத்தில் கோவையில் பெரியார் தி.க., ஆதித் தமிழர் பெரவை உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்த வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழ் இன உணர்வாளர்கள் அணியணியாய் சென்று அப்பத்திரிக்கையை எரித்து அதன் அலுவலக்தின் வாயிலிலேயே முற்றுகையிட்டு கைதாகி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். தமிழ் இனத்தையேக் கொல்லத் துடிக்கும் ஆரியப் பார்ப்பனியப் சக்திகளை சுதந்திரமாக உலவ விட்டுவிட்டு, போராடியத் தோழர்கள் மீது வழக்கம் போல வழக்குப்பதிவு செய்தது, தமிழக அரசு. மறுநாள் (16-10-2008) அன்று ஈரோட்டில் 'இந்து' ஏடு தமிழ் இன உணர்வாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டு பல தோழர்கள் கைதாகி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தில், பெயரிலேயே பார்ப்பனர்களாக வெளிப்படும் பார்ப்பனர்கள் சிலர் அக்கட்டுரையைப் பாராட்டி கடிதம் வேறு எழுதியிருந்தனர். அதனை வெளியிட்டு தானே மகிழ்ந்து கொண்டது, 'இந்து'.

இவை அடங்குவதற்குள் 15-10-2008 அன்று 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு' பார்ப்பனிய முகாமின் கோமாளித் தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் கட்டுரை ஒன்றை மிகுந்த அக்கரையுடன் பிரசுரித்தது. "புலிகள் பயங்கரவாதிகள்" என்ற பழைய பல்லவியை அதில் மீண்டும் மீண்டும் பாடியிருந்தார் சுவாமி. மேலும் அதில் ஈழத்தில் இனப்படுகொலை என்பதேக் கிடையாது என்று அதில் தெரிவித்திருந்தார் ("We can say there is no genocide of Tamils in Sri Lanka" - Swamy ). அவருக்கு பதிலளிக்கும் விதமாக அதற்கு மறுநாள் வெளிவந்த நக்கீரன் வார இதழின் அட்டைப் படத்தில் சிங்கள இனவெறியர்களால் காயமுற்ற பிஞ்சுக் குழந்தைகளின் பட ஆதாரங்களைக் வெளியிட்டது. சு.சுவாமியின் தரம் தாழ்ந்த அந்தக் கட்டுரையைப் படிக்கும் பொழுது, இந்திய அரசுக்கெதிராக அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில தமிழ் இன உணர்வாளரும் திரை இயக்குனரான சீமானும் பேசிய வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. "நாம் இன்னும் சனநாயகவாதிகளாக, மானமற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு சாட்சியே
சுப்பிரமணியம் சுவாமி போன்றோரை சுதந்திரமாகத் திரியவிட்டு வேடிக்கைப்
பார்ப்பது தான்". அவரது வரிகளில் எவ்வளவு உண்மைகள் புதைந்து கிடக்கின்றன!

இவை மட்டுமல்லாமல், 'டைம்ஸ் நவ்' என்கிற ஆங்கில தொலைக்காட்சி ஊடகம் ஈழப்பிரச்சினையொட்டி தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவை பற்றி செய்தி வெளியிட்டது. அதில் ஈழப்பிரச்சினையை பற்றி கருத்துக் கேட்கப்பட்ட "அறிவுஜீவிகள்" யார் யார் தெரியுமா? 'துக்ளக்' சோவும், சுப்பிரமணியம் சுவாமியும் தான்.
இந்த ஊடகம் மட்டுமல்ல மற்ற ஊடகங்களும் கூட தமிழர் எழுச்சி்யைக் கொச்சைப்படுத்துவதிலும் தமிழீழ மக்களின் போராட்டத்தை தீவிரவாதமாக சித்தரிப்பதையுமே வழக்கமாகக் கொண்டிருப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில் இந்திய ஊடகங்களில் பெரும்பான்மை ஆதிக்கம் செலுத்துவது ஆரியப் பார்ப்பனர்களே என்பது தான் இதற்குக் காரணம். இதனை, கடந்த 2006 ஆம் ஆண்டு "வளரும் கல்வியைப் பற்றிய கல்வி மையம்" (Centre for the Study of Developing Societies) என்கிற அமைப்பு நடத்திய ஆய்வில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினர். (செய்தி ஆதாரம் : http://www.thesouthasian.org/archives/2006/social_profile_of_indian_media.html).
மக்கள் தொகையில் வெறும் 8 சதவிகிதமே உள்ள பார்ப்பனர்கள் இந்திய ஊடகங்களில் 71 சதவிகிதம் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று அந்த ஆய்வின் முடிவு தெரிவித்தது.
சிங்கள அரசின் இனவெறியால் வன்னிக் காடுகளில் விலங்குகள் போல உலகமே எதிர்கொள்ளாத மனித உரிமை மீறல்களை எதிர் கொண்டுள்ள ஈழத்தமிழனம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த ஆதரவு அலையால் சிறிதாவது ஆறுதல் பெறும் என்ற நம்பிக்கையே நம்மை மேலும் எழுச்சி பெற வைக்கிறது. இச்சமயத்தில் இவ்வெழுச்சியை பொறுக்க முடியாத ஆரிய பார்ப்பனிய சக்திகளை புறக்கணிப்பது மட்டும் நமது கடமையல்ல எதிர்காலத்தில் அவை பயங்கொள்ளுமாறு எழாத வண்ணம் அடக்கி வைப்பதும் நமது கடமையாகும். அதற்கான வழிவகைகளில் ஈடுபடுவோம். ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாய் தாயகத் தமிழகத்தில் வெறும் அலையாக அல்லாமல் ஆழிப்பேரலையாய் எழுவோம்!


-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
http://www.arunabharathi.blogspot.com/
-----------------------------------------------------------

Monday, October 13, 2008

பிரபாகரனின் இராசத்தந்திரம் - பெ.மணியரசன்

பிரபாகரனின் இராசத்தந்திரம்
பெ.மணியரசன்
 
"துப்பாக்கியின் மீது அரசியல் ஆணை செலுத்த வேண்டுமே தவிர, அரசியல் மீது துப்பாக்க ஆணை செலுத்தக்கூடாது" என்றார் மாசேதுங். பிரபாகரனின் அண்மைக்கால அரசியல் நகர்வுகளும் எதிர்த்தாக்குதல் சமரும் மாவோவின் புரட்சி உத்தியை நினைவு படுத்துகின்றன.
 
சுருக்கமாகச் சொன்னால், அரசியல் களத்தில் தாக்குதல் தந்திரத்தையும் படைநகர்வில் எதிர்த்தாக்குதல் தந்திரத்தையும் அவா கடைபிடிக்கிறார். அரசியல் களத்தில் எதிரியை முன்னேறித் தாக்குகிறார். போர் களத்தில் எதிரியின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கிறார்.
 
அண்மையில் நடந்த சார்க் மாநாட்டின் பாதுகாப்பு கருதி, தாமாக முன்வந்து பத்து நாள் போர் நிறுத்தத்தை விடுதலைப்புலிகள் அறிவித்தனர். ஆனால் சிங்களக் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபட்ச இந்தப் போர் நிறுத்தத்தை ஏற்கவில்லை. சார்க் மாநாடு நடந்த போதே வன்னிப் பகுதிக்குள் விமானக்குண்டு வீச்சுகள் நடத்தினார்.
 
இந்தப் போர் நிறுத்தம் ஓர் அரசியல் தாக்கதலாகவே அமைந்தது. அதன்மூலம் சார்க் நாடுகளுக்கும் பன்னாட்டுச் சமூகத்திற்கும் பிரபாகரன் முகாமையான சில செய்திகளை விடுத்தார்.
 
1. விடுதலைப் புலிகள் ஆய்த வெறியர்கள் அல்லர். அரசியல் தீர்வையே அலாவி நிற்கின்றனர்.
 
2. சார்க் நாடுகளையம் பன்னாட்டு சமூகத்தையும் புலிகள் மதிக்கிறார்கள்: அவர்களுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறார்கள்.
 
2. தமிழீழம் அமைந்தால் தெற்காசிய ஒற்றுமைக்கும் அமைதிக்கும் முன்னுரிமை கொடுத்து, சார்க் அமைப்பில் அது இணைந்து கொள்ளும்.
 
இராஜபட்சவுக்கு இரண்டு குணங்கள் இருக்கின்றன. ஒன்று பயங்கரவாத முரட்டுத்தனம், மற்றொன்று கோமாளித்தனம்.
 
அண்மையில் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளை வன்னிப்பகுதியிலிருந்து வெளியேற ஆணையிட்டது அவரது முரட்டுத்தனத்திற்கு எடுத்துக்காட்டு. ஐ.நா.மனித உரிமை அமைப்பு, பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் போன்றவை ராஜபட்சயின் இந்த நடவடிக்கையை மனித உரிமைக்கெதிரானது என்று கண்டித்தன.
 
அவரது கோமாளித்தனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு வேண்டுமென்றால், பிரபாகரனைச் சிறைப்பிடித்துத் தில்லிக்கு அனுப்பி வைப்பேன் என்று சில நாட்களுக்கு முன் அவர் கூறியதைச் சுட்டலாம். இந்திய அரசு அவ்வாறான ஒரு கோரிக்கையை ஏற்கெனவே எழுப்பி வைத்துள்ளது. ஆனால் அதை அண்மைக் காலங்களில் வலியுறுத்தியதாகத் தெரியவில்லை. சிங்களத்திற்கு ஆய்தங்கள் வழங்கினாலும் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தும்படிதான் அரசியல் அரங்கில் இந்தியா வலியுறுத்திவருகிறது.
 
இவ்வாறான காலச்சூழலில் பிரபாகரனைப் பிடித்து ஒப்படைப்பது பற்றி பேசுவது பிதற்றலாக அன்றி வேறென்னவாக இருக்க முடியும்?
 
முரட்டுத்தனமும் கோமாளித்தனமும் இணைந்த கலவை மனிதராக ராஜபட்ச இருப்பதால், புலிகளுடன் செய்து கொண்ட அமைதி உடன்படிக்கையை ஒருதலைச் சார்பாக முறித்துக் கொண்டார்.
 
ஆனால், விடுதலைப் புலிகளோ பேச்சுவார்த்தை மேசையிலிருந்து தான் வெளிநடப்பு செய்தோம்; உடன்படிக்கையை இன்றுவரை நாங்கள் முறிக்கவில்லை. அந்த உடன்படிக்கைக்கு உயிர் கொடுக்கவே விரும்பகின்றோம் என்றனர்.
 
இந்த அரசியல் உத்தி, விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்ற சிங்கள அரசின் பன்னாட்டுப் பரப்பரையை முனைமழுங்கச் செய்துள்ளது. வட அமெரிக்கத் தலைவர்களில் ஒருவரான ஹிலாரி கிளிண்டன், புலிகள் பயங்கரவாத அமைப்பினர் அல்லர் என்று கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும். அமெரிக்க வல்லரசு, புலிகள் அமைப்பைத் தடை செய்திருந்தாலும் புலிகளுடன் பேசும்படி ராஜபட்சயை வலியுறுத்துகிறது.
 
உடன்படிக்கையை ஒருதலைச் சார்பாக முறித்துக் கொண்டதுடன் புலிகளுடன் பேச முடியாது என்று ராஜபட்ச கூறுகிறார். அத்துடன் அவா நின்றாரா? இருதரப்பையும் இணைக்கப்படுத்தி,  உடன்படிக்கைக்கு வழி செய்த நார்வேயையும் குற்றம் சாட்டி, அந்நாட்டுத் தலைவர்கள் வெளியேறும்படிச் செய்தார்.
 
இன்றைக்கு ஐரோப்பிய நாடுகளும் ஐ.நா.மன்றமும் பல நேரங்களில் இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் சம தட்டில் வைத்துப் பேசுகின்றன. இருதரப்பும் அமைதிப் பேச்சுக்குத் திரும்ப வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றன. ஓர் அரசையும் அதை எதிர்க்கும் விடுலை அமைப்பையும் சம தட்டில் வைத்து, பேச்சு நடத்த உலகநாடுகள் வலியுறுத்தும் போக்கு அவ்வளவு எளிதாக வந்துவிட்டதா?
 
இந்த நிலை வர, பன்னாட்டு ஏற்பிசைவு வர விடுதலைப்புலிகள் தலைமை என்ன பாடுபட்டிருக்கும்? எவ்வளவு மூளை உழைப்பும் பொறுமையும் விட்டுக்கொடுப்பும் இழப்பும், தொலைநோக்கும் தேவைப்பட்டிருக்கும். இவ்வாறான அரசியல் உத்தி எதுவும் ராஜபட்சவுக்குக் கிடையாது. போர் நடவடிக்கைகளில் ஊதாரித் தனமாக செலவிட்டு நாட்டைத் திவாலாகிவட்டார். சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளிடமிருந்து மேலும் மேலும் ஆய்தங்கள் வாங்கிப் போர் நடத்தி, சிங்கள மக்களுக்கும் வறுமை மற்றும் வேலை இன்மையைப் பரிசாகத் தந்துள்ளார். ஈழத்தமிழர்களின் உயிர்களைப் பறிக்கிறார்.
 
மூன்று லட்சம் ஈழத்தமிழர்களைக் காட்டு மரங்களின் கீழும் புதர்களின் மறைவிலும்வசிக்கும்படி விரட்டியுள்ளார். ராஜபட்ச வகுத்த அரசியல் உத்தி, இந்தியவை விடுதலைப்புலிகளுக்கு எதிராக நேரடிப் போரில் இறக்கி விடுவதுதான். அதுபலிக்கவில்லை. ஆய்தங்களும் பயிற்சியும் கொடுப்பதடன் இந்தியா நிற்கிறது.
 
இந்தியா, விடுதலைப் புலிகள் தோற்பதையே விரும்புகிறது. இருந்தும் நேரடிப் போரில் ஏன் இறங்கவில்லை?
 
ஒன்று தமிழ்நாட்டுத் தமிழர்களின் எதிர்ப்பு; தமிழ்நாட்டு கட்சிகள் சிலவற்றின் எதிர்ப்பு. இன்னொன்று, விடுதலைப் புலிகள் இந்தியா குறித்துக் கையாண்டு வரும் அரசியல் உத்தி. பன்னாட்டுச் சட்டங்களுக்கு முரணாக இந்தியா, பன்னாட்டுக் கடல்பரப்பில் விடுதலைப் புலிகளின் படகுகளையும் கப்பல்களையும் வழி மறித்தாலும், பல வகையான ஆத்திர மூட்டல்களை விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செய்தாலும், படைக்கருவிகளையும் படையாட்கள் சிலரையும் சிங்களப்படைக்கு ஆதரவாக அனுப்பி வைத்தாலும், இந்தியாவை ஆத்திர மூட்டும் எந்த நடவடிக்கையிலும் விடுதலைப் புலிகள் இறங்கவில்லை.
 
இந்தியாவை நோக்கி நீட்டிய நேசக்கரத்தை பிரபாகரன் இன்னும் மடக்கவில்லை. பொறுமையும், சகிப்புத்தன்மையும் மிக்க இந்த அணுகுமுறை சிறந்த அரசியல் உத்தியாக உள்ளது. இந்தியாவிற்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. விடுதலைப்புலிகள் மீது விரல் நீட்டிக் குற்றம் சுமத்த முடியாத நெருக்கடி இந்திய உளவுத்துறைக்கு உள்ளது.
 
இவ்வளவு கனபரிமானம் கொண்ட விடுதலைப் புலிகளின் இராசத்தந்திரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ராஜபட்ச திணறுகிறார். அவருக்கே உரிய கோமாளித்தனத்துடன் செப்டம்பர் 25-இல் சிறிது நேரம் தமிழில் பேசி, தமிழர்களைச் சமமாக நடத்துவது போல் நாடகம் நடத்தியிருக்கிறார். இது ஒரு கோமாளித்தனம் தவிர, இராசத்தந்திரம் அல்ல.
 
விடுதலைப்புலிகள் ஆய்தங்களை ஒப்படைத்துச் சரணடைய வேண்டும் என்று வலியுறுத்தி ஐ.நா.வில் அவர் தமிழி்ல் பேசினால் என்ன? சிங்களத்தில் பேசினால் என்ன? விடுதலைப் புலிகளுக்கு ஏற்பிசைவு வழங்குகிறேன், சமநிலையில் பிரபாகரனுடன் பேசத் தயார் என்று அவர் சிங்களத்தில் பேசியிருந்தால் தமிழர் நெஞ்சமெல்லாம் குளிர்ந்திருக்கும். உலக அரங்கிலும் அவர்க்கொரு மதிப்பு ஏற்பட்டிருக்கும். சின்னத்தனம் தவிர வேறு சிந்தியாத ராஜபட்சயால் அவ்வாறு அரசியல் காய் நகர்த்த முடியாது.
 
பிரபாகரன் ஏன் முழுப்போர் நடத்தாமல், எதிர்த்தாக்குதல் மட்டும் நடத்துகிறார்? அவரது இந்த அணுகுமுறையில் பலவகையான, அரசியல் மற்றும் படைத்துறை உத்திகள் பொதிந்து கிடக்கின்றன.
 
முதலில் பன்னாட்டு அரசியல் குறித்த ஒரு தொலை நோக்கு இதில் அடங்கியுள்ளது. பன்னாட்டு அரசியலில் நிலையற்ற தன்மை அதிகரித்துப் பரவி வருகிறது. இது இன்னும் அதிகரிப்பது விடுதலை இயக்கங்களுக்கு வாய்ப்பானது.
 
அமெரிக்க வல்லரசின் ஒரு கால் ஈராக்கில் மாட்டியிருக்கும்போதே இன்னொரு காலை அது ஈரானில் விடப்பார்க்கிறது. ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்புப் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. அடுத்துள்ள பாகிஸ்தான் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கி, அதன் எல்லைக்குள் புகுந்து, அல்கொய்தாவினரையும் தலிபான்களையும் எதிர்த்துக் குண்டு வீசுகிறது; சுடுகிறது. தேடுதல் வேட்டை நடத்துகிறது.
 
இந்த அத்துமீறல்கள் அமெரிக்க பாகிஸ்தான் உறவில் விரிசல் உண்டாக்கியுள்ளது. இந்த விரிசலை இந்தியா பயன்படுத்த விரும்புகிறது.
 
பாகிஸ்தான் மற்றும் காசுமீர் சிக்கல்களில் இந்தியாவுக்கு உதவிட வேண்டுமெனில், ஆப்கான் ஆக்கிரமிப்புப் போரிலும், பின்னர் நடத்தக் கருதியுள்ள ஈரான் போரிலும் அமெரிக்காவுக்கு இந்தியா உதவிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படும்.
 
ஜார்ஜியாவில் அமெரிக்கப் படைத்தளம் இருப்பதை ரசியா எதிர்க்கிறது. அமெரிக்க வல்லரசுடன் காகசஸ் மலைப்பகுதியில் போர் மூண்டாலும் சங்திக்கத் தயார் என்று ரசியக் குடியரசுத் தலைவர் மெத்வதேவ் அறைகூவல் விட்டுள்ளார்.
 
ஆக, ஈராக், ஈரான், ஜார்ஜியா, ஆப்கான், பாகிஸ்தான் வரை அமெரிக்க வல்லரசு 2009இல் போர் நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வாய்ப்புண்டு. குடியரசுக் கட்சி வேட்பாளர் மெக்கைன் வெற்றி பெற்றாலும், அல்லது சனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபாமா வெற்றி பெற்றாலும் நெருக்கடி இவ்வாறுதான் இருக்கும். ஆப்கான் பொரைத் தீவிரப் படுத்துவதிலும் ஈரான் மீது போர் தொடுப்பதிலும் ஒபாமா ஆர்வமாக உள்ளார்.
 
அமெரிக்க - இந்திய அணு ஆற்றல் ஒப்பந்தம், அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களுக்க இந்தியா துணை புரிய வேண்டும் என்ற விதிகளைக் கொண்டுள்ளது.
 
எனவே ஈராக்கிலிருந்து - பாகிஸ்தான் வரை பரவி நடைபெறவுள்ள ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்காவும், அதற்குத் துணையாக இந்தியாவும் ஈடுபட்டிருக்கும் பொது இலங்கை அரசுக்குப் படைவகை ஆதரவு தருவது கடினம். மெலும் இக்காலத்தில் காசுமீர் விடுதலைப் போர் தீவிரமடையும். வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் விடுதலைப் போர்களும தீவிரப்படும் சூழல்கள் உருவாகியுள்ளன.
 
எனவே ஈழ விடுதலைப் போருக்கு எதிரான இந்திய நடவடிக்கைகளில் ஒருவகை பலவீனம் ஏற்படலாம்.
மேற்கண்ட வாய்ப்பு பற்றி ஊகிக்கும் போதே, ஒரு வேளை இதற்கு மாறாக நிகழ்வுகள் நடக்கவும் வாய்ப்புண்டு. தெந்காசிய மண்டலத்தில் இந்திய அரசு ஆதிக்கம் செய்துகொள்ள அமெரிக்க வல்லரசு துணைபுரியவும் கூடும். அவ்வாறான சூழலில் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் புலிகளுக்க உண்டு.
 
ஆக்கிரமிப்புப் போர்களுக்கப்பால் உலகமயத்தால் அமெரிக்க வல்லரசின் பொருளியல் வேகமாக சரிந்து வருவதைக் கவனிக்க வேண்டும். உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளியல் சரிவைச் சரி செய்ய அமெரிக்கா படாதபாடு படவேண்டி வரும். தொற்று நோயாளித் தோளில் கைப்போட்டு அந்நோய் தொற்ற வாய்ப்பளித்தவரைப் போல், அமெரிக்கப் பொருளியலுடன் இணைக்கப்பட்டுள்ள இந்தியப் பொருளியலும் சரிவைச் சந்தித்து வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது. மிகவும் தொளதொளப்பான ஏறுக்கு மாறான கூட்டணி ஆட்சி தான் ஆட்சி நடத்தும்.
 
இவ்வாறு அரசியல் நிலையற்ற தன்மை பன்னாட்டரசில் ஏற்படும்போது, இலங்கைப் பொருளியலும் அரசியலும் எப்படி இருக்கும்! ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது இலவம் பஞ்சு என்னவாகும்!
 
இலங்கைப் பொருளியல் ஏற்கெனவே திவாலாகிவிட்டது. அது மேலும் சீரழியும். அரசுக்கெதிரான சிங்கள மக்கள் கடுமையாகப் போராடும் அளவிற்கு நெருக்கடி முற்றும் வாய்ப்புண்டு.
 
இது ஒருபுறம் இருக்க, ராஜபட்சவின் குடும்ப ஆட்சி, ஆளும் இலங்கை சுதந்திரக்கட்சிக்குள்ளேயே புழுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மகிந்த ராஜபட்சவின் தம்பி கோத்த பாய ராஜபட்ச இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர்; அவரின் இன்னொரு தம்பி, பசில் ராஜபட்ச அமைச்சர் பொறுப்பில்!
 
இந்தப் புழுக்கத்தை எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பயன்படுத்திக் கொள்ளும். சிங்கள அரசியல் மேலும் உறுதியற்ற நிலை தோன்றும்.
 
முழுப்போரில் இறங்காமல் தக்க நேரத்திற்காகப் பிரபாகரன் காத்திருப்பதற்கான முகாமையான காரணங்களில் இவையும் அடங்கும். அதே வேளை எதிர்த்தாக்குதல் கடுமையாக நடக்கிறது.
 
2007 ஏப்ரல் 6 ஆம் பக்கல்(தேதி) சிங்கள அரசின் பலாலி கூட்டுப்படைத்தளத்தின் மீது புலிகள் நடத்திய விமானத் தாக்குதல் ஒரு பதிலடிச் சமர்தான். அடுத்து அக்டோபர் மாதம் அனுராதபுரம் வான்படைத்தளத்தின் மீது புலிகளின் விமானப் படையும் தரைப்படையின் சிறப்பு அணிகளும் பெருந்தாக்குதல் நடத்தின. அது மிகப்பெரிய இழப்புகளை சிங்களப் படைக்கு உண்டாக்கியது. கிட்டத்தட்ட 22 போர் விமானங்கள் தகர்ந்தன. பெருமளவு ஆய்தங்களைப் புலிகள் கைப்பற்றி மீண்டனர். புலிகளின் விமானங்கள் தாக்குதலை நடத்தி விட்டு பாதுகாப்பாகத் திரும்பின.
 
2008 செப்டம்பர் 1 மற்றும் 2ஆம் பககல்களில், நாச்சிகுடா, வன்னேரிக்குளம் மற்றும் அக்கராயன் குளம் பகுதிகளில் சிஙகளப் படையினரின் முன்னேற்றத்தை மறித்துப் புலிகள் தாக்கியதில் 75 சிங்களப் படையாட்கள் கொல்லப்பட்டனர். 20 உடல்களை கிளிநொச்சியில் வைத்துப் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்திடம் புலிகள் ஒப்படைத்தனர்.
 
நாச்சிகுடா, வன்னேரிக்குளம் சமரில் சிங்கள அரசு சீனத்திடமிருந்து வாங்கிய இலேசுரக டாங்கு எதிர்ப்பு ஏவுகணையைக் களமிறக்கி இருந்தது. சிங்களப் படையினரால் முதல் தடவையாகப் பயன்படுத்தப்பட்ட இந்த சீன ஏவுகணை அவர்கள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. புலிகளின் எதிர்த்தாக்கதலில் அவர்கள் பின் வாங்கும்படி ஆனது. அந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் 20 படையாட்கள் கொல்லப்பபட்டனர். பத்து சடலங்களைப் புலிகள் கைப்பற்றினர்.
 
இந்தத் தோல்வி சிங்களப் படையின் மனஉறுதியைத் தகர்த்திருக்கும். ஏனெனில் நவீன ஏவுகணையின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து அவர்கள் களமிறங்கினர். அந்நம்பிக்கை தகர்ந்தது.
 
வன்னிமண்டலத்தில் மன்னார்-பூநகரி நெடுஞ்சாலை ஏ32-ஐக் கைப்பற்றும் நோக்குடன் சிங்களப்படை போர் புரிகிறது. அத்திசையிலான முன்நகர்வைத் தடுத்து வருகிறார்கள் புலிகள். பெருமெடுப்பில், ஆள் இழப்புகளையம் ஆய்த இழப்புகளையம் சிங்களப்படை சந்திக்கிறது. ஏ32 நெடுஞ்சாலையை கைப்பற்றியபின் ஏ9, நெடுஞ்சாலையை முழு அளவில் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது தான் சிங்களப் படைநகர்வின் திட்டம்.
 
கடந்த செப்டம்பர் 9 -ஆம் பக்கல் அதிகாலை, சிங்கள அரசின் வவுனியா படைத்தலைமையகத்தின் மீது புலிகளின் வான்படை, தரைப்படையின் சிறப்பு அணிகள், கர்னல் கிட்டு பீரங்கிப் படை அணிகள், துணைத்தளபதி மதியழகி தலைமையிலான கரும்புலிப்படை ஆகிய இவை அனைத்தும் ஒருங்கிணைந்து தாக்கின. இது கூட பதிலடித் தாக்குதல் தான். அப்பகுதியை விடுவிக்கும் போர் அல்ல.
 
சிங்கள அரசின் வவுனியா ஜோசப் படைத்தளம், வன்னிப்படை நடவடிக்கையின் ஒருங்கிணைப்பு நடுவமாகவும், வான்புலிகளைக் கண்காணிக்கும் ராடார் மையமாகவும் செயல்படுகிறது. இந்திய அரசு கொடுத்த ராடார்கள் இந்திரா ஐ.ஐ. இங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியா வழங்கியுள்ள எல் 70 விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் இங்கு நிறுவப்பட்டிருந்தன.
 
இவை எல்லாவற்றையும் தாக்கித் தகர்த்தனர் புலிகள். கரும்புலிகள் பத்து பேர் வீரச்சாவெய்தினர். புலிகளின் 11 சடலங்களைக் கைப்பற்றியதாக சிங்களப்படை கூறியது. புலிகளின் இரு போர் விமானங்கள் பாதுகாப்பாக நிலைக்குத் திரும்பின.
 
அன்று அதிகாலை 3.05 மணியளவில் புலிகளின் இருவிமானங்களும் 25 கிலோ எடையுள்ள நான்கு குண்டுகளை வீசின. ஒரு குண்டு இந்திரா ராடாரை முற்றிலும் சேதப்படுத்தியது புலிகளின் விமானமொன்றைச் சுட்டு வீழ்த்தியதாக சிங்களப்படை கூறிக்கொண்டது. ஆனால் அது உண்மைச் செய்தி அல்ல என்று பின்னர் தெரியவந்தது.
 
சிங்களப் படைக்குக் கமுக்கமாக படைக்கருவிகள் வழங்கி வரும் இந்திய அரசு 40 மி.மீ. எல் 70 தன்னியிக்க எதிர்ப்புத் துப்பாக்கிகள், நிசாந் வகை ஆளில்லாத உளவு விமானங்கள், ஒளிக்கதிர்(லேசர்) மூலம் வழி நடத்தப்படும் குறிதவறாத குண்டு வழி நடத்திகள்(Laser Designators for PGMs) போன்ற ஆய்தங்களை வழங்கியுள்ளது. அவை மட்டுமின்றி படைத்துறை ஆட்களையும் இந்தியா அனுப்பியுள்ள கமுக்கம், புலிகளின் வவுனியாத் தளத்தாக்குதலில் அம்பலமானது. அங்கு பணியிலிருந்த இந்தியப் பாதுகாப்புத் துறையைச் சார்ந்த ராடார் பொறியாளர்களான ஏ.கே.தாக்குர், சிந்தாமணி ரவுத் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
 
புலிகளின் இவ்வகை எதிர்த்தாக்குதல்கள் எதைக் காட்டுகின்றன? அவர்களின் போர்த்திறன் கூடியுள்ளதே தவிர குறையவில்லை என்பதையே காட்டுகின்றன.
 
சந்திரிகா குமாரதுங்கா 'வெற்றி உறுதி' (ஜெயசிக்குறு) என்ற பெயரில் வன்னிக்குள் புகுந்து போர் நடத்தியபோதுதான் அவரது தோல்வி உறுதியானது. வன்னிப்பகுதி விடுதலைப்புலிகளின் இதயம் போன்றது. போர் நடத்த புலிகளுக்கு வாய்ப்பான பகுதி. அதிலும் வன்னியின் மேற்குப் பகுதியைவிடக் கிழக்குப் பகுதி அடர்ந்த காடுகளைக் கொண்டது. மணலாற்றுக் காடு, நெடுங்கேணிக்காடு, இரணைமடுக்காடு என கதிரொளி நுழைய முடியாக்காடுகள் இருக்கின்றன. இங்கதான் கிளிநொச்சி உள்ளது.
 
இப்பொழுது பிரபாகரன் இருவகையான சமர் உத்திகளைக் கடைபிடிக்கிறார் என நாம் ஊகிக்கலாம். ஒன்று போரை நீடித்து, சிங்களப்படையினரைக் களைப்படையச் செய்வது, இரண்டு, வன்னிக்காட்டுக்குள் எதிரியை இழுத்து, சுற்றி வளைத்துத் தாக்குவது.
 
எனவே, இப்பொழுது முழுப்படைவலிவையும், போர்க் கருவிகளையும் சமரில் இறக்கிவிட அவர் விரும்பவில்லை.
 
கடற்புலிகள் இன்னும் சமரில் இறக்கப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். பன்னாட்டு அரசியலில் விரைவாகப் பரவிவரும் நிலையற்ற தன்மை, 1929இல் ஏற்பட்டது போன்ற முதலாளிய பொருளியல் மந்தநிலை, அமெரிக்க வல்லரசின் ஈராக்-ஈரான்-காகஸ்-ஆப்கன்-பாகிஸ்தான் வரையிலான போர் நடவடிக்கைகள் - இதில் இந்தியாவும் துணைச் சக்தி ஆதல் - இந்தியாவில் காசுமீர் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் தீவிரமடையும் விடுதலைப் போர்கள், இலங்கையின் பொருளியல் சீரழிவு, இராஜபட்சயின் குடும்ப அரசியல் - பதிவ ஆசை இவை எல்லாம் வருங்காலத்தில் புலிகளுக்கு அரசியல் கதவை அகலமாகத் திறந்து விடும்.
 
நீண்டு கொண்டே போகும் போர் சிங்களப் படைகளைக் களைப்படையச் செய்யும். அவர்களுடைய படைத் தொகையில் 40 ஆயிரம் பேர் யாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு எண்ணிக்கையுள்ள ஒரு பெரும் படை ஆற்றல், செயல்படாமல் அங்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது. பிரபாகரன் இப்பொழுது யாழ்ப்பாணத்தை நோக்கப்போவதில்லை.அதற்குரிய காலம் வரும்.
 
கிழக்கு மாநிலத்தைக் கைப்பற்றி விட்டதாக இராசபட்ச தம்பட்டம் அடிக்கிறார். ஆனால் அம்மாநிலம் முழுமையாக அவர் கையில் இல்லை. அதன் பல்வேறு பகுதிகள் புலிகள் வசம் இருக்கின்றன.
 
விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் பிரிவு 10.08.2008 அன்று விடுத்துள்ள அறிக்கை இணையதளத்தில் வந்துள்ளது.
 
"அரச பயங்கரவாதத்தின் உச்சமாகத் திகழும் மகிந்த ராஜபட்ச அரசாங்கம் கிழக்கு மாகாணத்தை மீட்டுவிட்டதாக வெற்றிவிழா நடத்திய நாள்தொட்டு இன்றுவரை சிறிலங்கா படையினருக்கு எதிராகத் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் அதிகாரிகள் உட்பட 92 படையாட்கள் கொல்லப்பட்டார்கள். 208 பேர் படுகாயமடைந்தார்கள். யால படைமுகாம் தீயிட்டு எரிக்கப்பட்டது. உலங்கு வானூர்தி உட்பட மூன்று பவல் கவச வாகனங்கள், இரண்டு ஜீப்புகள், எட்டுக்கும் மேற்பட்ட இதர வாகனங்கள் அழிக்கப்பட்டன."
 
அம்பாறை மாவட்டம், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கும் தெற்கே சிங்களப் பகுதியை ஒட்டி உள்ளது. அங்கேயே சிங்களப்படைக்கு இவ்வளவு சேதங்களைப் புலிகள் ஏற்படுத்துகிறார்கள் எனில் மற்ற பகுதிகளில் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.
 
சிங்களப் படை வெற்றிமேல் வெற்றி குவிப்பது போலவும், புலிப்படை பின்வாங்கிச் செல்வது போலவும், ஒரு போலித் தோற்றம் ஏடுகளால், இதர ஊடகங்களால் இங்கு பரப்பப்பட்டு வருகிறது. சிங்களப் படை தரும் செய்தியை சிந்தாமல் சிதறாமல் அப்படியே தரும் செய்தி ஊடகங்கள், விடுதலைப்புலிகள் தரும் செய்திகளை விடுதல்கள் பல செய்தே வெளியிடுகின்றன. சில செய்திகளை வெளியிடவே மறுக்கின்றன.
 
தமிழ் இன உணர்வாளர்கள் சரியான செய்திகள் தெரியாமல் கவலுறுகின்றனர். கவலைப்படத் தேவை இல்லை. களநிலைமைகள் வலுவாக இருக்கின்றன.
 
அதே வேளை தமிழ்நாட்டில் நாம் செய்ய வேண்டிய சனநாயகக் கடமைகளை, மனித உரிமைக் கடமைகளைச் செய்ய வேண்டும்.
 
இந்திய அரசு, ஈழத்தமிழர்களைக் கொல்ல, சிங்கள அரசுக்குப் படைக்கருவிகளை வழங்குவதுடன் பயிற்சியும் தருகிறது. படையாட்களையும் அனுப்பி வைக்கிறது. ஈழத்தமிழர்களைக் கொல்ல மட்டுமல்ல, தமிழக மீனவர்களைக் கொல்லவும் துணை புரிகிறது.
 
தமிழ் உணர்வாளர்கள், சனநாயகர்கள், மனச்சான்ற பிளவுபடாத மனித உரிமையாளர்கள் உள்ளிட்ட முற்போக்காளர்களைத் திரட்டி இந்திய அரசின் தமிழ் இன எதிர்ப்பு நடவடிக்கைகளை எதிர்ப்போம்.
 
இந்திய அரசே,
 
இலங்கை அரசுக்குப் படைக்கருவிகள் தராதே
 
சிங்களப் படையினர்க்குப் பயிற்சி தராதே
 
இந்தியப் படையாட்களை இலங்கைக்கு அனுப்பாதே
 
தமிழக மீனவர்களைச் சுடும் சிங்களப் படையினரைச் சுட்டு வீழ்த்து
 
என முழங்குவோம் !
 
குறிப்பு : தரவுகள், புதினம், பதிவு இணையத்தளங்கள்
 

Saturday, October 11, 2008

சிங்களர்க்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிங்களன் பங்காளி; தமிழன் பகையாளியா?
இந்திய அரசைக் கண்டித்து

ஆர்ப்பாட்டம்

இடம் : மெமோரியல் அரங்கு, சென்னை.
காலம் : 13-10-2008, திங்கள், மாலை 4 மணி

இந்திய அரசே...

சிங்கள அரசுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளாய்! இத்தொகையை சிங்கள அரசு ஆயுதம் வாங்கவதற்குத்தான் பயன்படுத்தும் என்று தெரிந்தே, நிதி கொடுத்தாய்!

ஆனால், பொருளாதார முற்றுகையில் சிக்கித் தவிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு வழங்கத் திரட்டப்பட்ட உணவு, உடை, மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக அனுப்பத்தடை போட்டாய்!

இந்திய அரசே.
சிங்களப் படைக்;குப் போர்க்கப்பல், நவீனப்படைக்கருவிகள், ரேடார் கருவிகள், வெடிமருந்துகள் வழங்கியதுடன் பயிற்சி அளிக்கவும் 256 படைத்துறையினரை அனுப்பி உள்ளாய்!

ஈழத்தமிழர்களைக் கொல்வதற்குத் தானே இவை அனைத்தையும் கொடுத்தாய்!

சிங்களன் உனக்குப் பங்காளி; தமிழன் உனக்குப் பகையாளியா?

இப்பொழுது, வன்னிப்பகுதியில் சிங்கள அரசு விமானக்குண்டு வீச்சு நடத்தி அன்றாடம் தமிழர்களை இனப்படுகொலை செய்கிறது. மூன்று லட்சம் தமிழர்கள் - ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும்; உயிர்காக்க வீடுகளை விட்டு வெளியேறி காடுகளில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவுக்குள் 6 1/2, கோடி தமிழர்கள் இருந்தும், ஈழத்தில் உள்ள 35 லட்சம் தமிழர்களைப் பாதுகாக்க முடியவில்லை.
கேட்க நாதியற்ற இனமாகத் தமிழ் இனம் தவிக்கிறது.
இளைஞர்களே, இனியும் ஏமாற வேண்டாம்,
வீறுகொண்டு எழுங்கள்; வீதிக்கு வாருங்கள்;
-------------------------------------------------------------------------------
கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள்
இந்திய அரசே
  • 1. சிங்கள அரசுக்குக் கொடுத்த படைக்கருவிகள் அனைத்தையும் திரும்பப் பெறு

    • 2. சிங்களபடைக்குத் துணையாக அனுப்பிய இந்தியப் படைத்துறையினர் அனைவரையும் திரும்ப அழை.
    • 3. இந்தியாவில் எவ்விடத்திலும் சிங்களப்படையினர்க்கும காவல்துறையினர்க்கும் பயிற்சி கொடுக்காதே.
    • 4. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிங்கள அரசுக்கு அரசியல், பொருளியல், படைவகை உதவி எதுவம் செய்யாதே!
    -------------------------------------------------------------------------------
    தலைமை:
    தோழர் பெ.மணியரசன்,
    பொதுச் செயலாளர்,
    தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
    -------------------------------------------------------------------------------
    முன்னிலை
    தோழர் தியாகு,
    பொதுச் செயலாளர்,
    தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
    -------------------------------------------------------------------------------
    தோழர் விடுதலை இராசேந்திரன்,
    பொதுச் செயலாளர்,
    பெரியார் திராவிடர் கழகம்.
    -------------------------------------------------------------------------------
    வாழ்த்துரை
    தோழர் சி.மகேந்திரன்,
    இணைச் செயலாளர்,
    இந்தியப் பொதுவுடைமைக் கட்சி.
    -------------------------------------------------------------------------------
    இவண்
    தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி,
    தொடர்புக்கு: 20/7, முத்துரங்கம் சாலை, தியாகராயர் நகர், சென்னை -17.
    பேச : 044 - 24348911

    Wednesday, September 24, 2008

    இந்து முன்னணிக்கு த.க.இ.பே. கண்டனம்

    இந்து முன்னணிக்கு த.க.இ.பே. கண்டனம்

    தமிழகத்தில் சமீபகாலமாக பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்கள் முற்போக்கு இயக்கங்கள் நடத்தும் கூட்டங்களில் வன்முறைகளை நிகழ்த்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்து முன்னணி போன்ற பார்ப்பனிய இந்துத்துவ அமைப்புகள் இதனை முன்னின்று நடத்துகின்றன.

    கடந்த மாதம் 23ஆம் தேதி கோவையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட இயக்குனர் சீமானுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி, கற்கள், சோடாபாட்டில்களை வீசி வன்முறையில் பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்கள இறங்கினர். இதில் பெரியார் தி.க.வை சேர்ந்த தோழர்களுக்கு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் புகாரின் பேரில் இந்து முன்னணியினர் மீது கொலைமிரட்டல், தாக்குதல், கல்வீச்சு உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    23-09-2008 அன்று இரவு போரூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணியினர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் பலர் தாக்கப்பட்டனர். இதில் காவல்துறையினரும் தாக்குதலுக்கு உள்ளனார்கள். இது தொடர்பாக காவல்துறை இந்து முன்னணியினர் இருவரைக் கைது செய்துள்ளது.

    இது மட்டுமல்லாது தமிழகமெங்கும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற
    பார்ப்பனிய இந்துத்துவ வெறி அமைப்புகள் வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. சிறுபான்மை முஸ்லிம், கிருத்துவர்கள் மீது மட்டுமல்லாது பெரும்பான்மையாக உள்ள இந்துமதத்தில் பிறந்த தமிழர்கள் மீதும் இவ்வமைப்புகள் தாக்குதல் நடத்திவருகின்றன. இந்த போக்கை இனியும் அனுமதிக்காமல் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் இத்தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். முற்போக்கு இயக்கங்கள், தமிழ்த் தேசிய அமைப்புகள்
    இணைந்து பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்களின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து போராட முன் வரவேண்டும்.


    தோழமையுடன்,
    கவிபாஸ்கர்,
    செயலாளர்,
    தமமிழ்க் கலை இலக்கியப் பேரவை

    Friday, September 12, 2008

    இந்திய அரசின் படை உதவிக்கு த.தே.பொ.க. கண்டனம்

    புலிகள் தாக்குதலில் இலங்கையில் இந்திய அதிகாரிகள் காயம்
    இந்திய அரசின் படை உதவிக்கு
    தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்

    தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை தாக்குதலில் கடந்த 09.09.08 அன்று இரவு வவுனியாவிலுள்ள இலங்கை இராணுவ தலைமையகத்தில் 10 சிங்களப் படையாட்கள் கொல்லப்பட்டதுடன் இரண்டு இந்திய இராணுவ பொறியாளர்கள் காயம்பட்டுள்ளதாக அதிகாரப் பூர்வ தகவல் கூறுகிறது. சிந்தாமணி ரவுத், ஏ.கே. தாக்கூர் ஆகிய அவ்விருவரும் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த ரேடார் பொறியாளர்கள் ஆவர்.

    இந்திய அரசு தரும் படைவகை உதவியோடு, நேரடியான படையாட்கள் துணைக் கொண்;டு தான் சிறீலங்கா அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்துகிறது என்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லிக் கொண்டாலும் உண்மையில் சிறீலங்கா அரசு நடத்துவது ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனக்கொலைப் போராகும். சிங்களப் படை தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் உள்நாட்டு அகதிகளாக புலம் பெயர்ந்து உணவும், மருந்தும் இன்றி மரத்தடி வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.

    இலங்கையில் நடக்கும் அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை ஐ.நா. மனித உரிமை அமைப்பு உள்ளிட்ட மனித நேய அமைப்புகள் பலவும் கண்டித்து வருகின்றன.

    இந்த உள்நாட்டு போரில் தாம் தலையிடவில்லை என்று சொல்லிக்கொண்டே இந்திய அரசு இலங்கைக்குப் போர்ப் படகுகளையும், ரேடார், எக்ஸ்ரே பைனாகுலர் உள்ளிட்ட கருவிகளையும் அளித்து வருகிறது. ஆயினும் நேரடி இராணுவத் தலையீடு செய்யவில்லை என்பதாகவே இந்திய பிரதமரும் உயர்மட்ட அதிகாரிகளும் கூறி வந்தனர்.

    ஆனால் இது உண்மைக்கு மாறான தகவல் என்பதை வவுனியா இராணுவத் தலைமையகத்தில் இந்திய இராணுவப் பொறியாளர்கள் காயம்பட்டுள்ள செய்தி தெளிவாக்குகிறது.

    இந்தியாவின் இவ்வாறான படை வகை உதவிகளைக் கொண்டு தான் ஈழத் தமிழர்கள் மீது மட்டுமின்றி, தமிழ்நாட்டு மீனவர்கள் மீதும் அன்றாடம் சிங்களப் படை கொலை வெறித் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்திய அரசு தமது இராணுவத் துறை வல்லுநர்களையும் ஆட்களையும் அனுப்பி, ஆயுத உதவிகள் வழங்கி தமிழினப் படுகொலைக்குத் துணை போவதைத் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியப் படையாட்களைத் திரும்ப அழைத்து கொள்ளுமாறும், கருவி உதவிகளை நிறுத்துமாறும் வலியுறுத்துகிறேன்

    இப்படிக்கு.
    கி.வெங்கட்ராமன்
    தலைமைச் செயற்குழு உறுப்பினர்

    நாள் : 10.9.08
    இடம் : சிதம்பரம்

    Monday, July 07, 2008

    கச்சா எண்ணெய் உயர்வும் தமிழினத்தை விற்கும் கங்காணிக் கட்சிகளும் - க.அருணபாரதி

    கச்சா எண்ணெய் உயர்வும்
    தமிழினத்தை விற்கும் கங்காணிக் கட்சிகளும்

    க.அருணபாரதி

    'கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து, விலைவாசி உயர்வு. அதனைத் தொடர்ந்து பணவீக்கம் அதிகரிப்பு' என இந்தியாவின் பொருளாதாரம் தகிடுதத்தோம் ஆகிவருகிறது. ஒன்றுமே நடக்காத மாதிரி நிதியமைச்சர் ப.சிதம்பரம் "இதெல்லாம் சரியாகிவிடும் மக்களுக்கு இது கசப்பு மருந்து தான்" என அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். மறுபுறம் பணக்கார முதலாளிக்கு "இனிப்பு" வழங்கிக் கொண்டிருக்கிறார்.

    அமெரிக்க சார்பு உலகமயப் பொருளாதாரக் கொள்கையால் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரத் தேக்கத்திற்கு நன்றிக் கடனாக அமெரிக்க நாட்டிற்கு "அணுசக்தி" ஒப்பந்தத்தின் பெயரால் அடிமை சாசனத்தை வேறு, இந்த அரசும் அமெரிக்க அடிவருடிகளும் இணைந்து தயாரித்துவிட்டு தற்பொழுது அதனை கையெழுத்திடவும் போனாவைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அச்சிடப்பட்ட காகிதத்தில் கையெழுத்திட தான் பேனாவை எடுத்துள்ளனரே தவிர அதில் புதிதாக எதனையும் எழுதுவதற்ககோ திருத்துவதற்கோ அல்ல. இது தெரிந்தும் பேனாவை புடுங்கிக் கொண்டு எதிர்க்கிறோம் என சவடால் விட்டுக் கொண்டு "மார்க்சிஸ்ட்" மாவீரர்கள் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.

    கச்சா எண்ணெயின் விலையை பெருமுதலாளிகள் தலைமயிலான நாடுகள் திட்டமிட்டு ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு உயர்த்தியுள்ளன. இதனால் அதனைத் தயாரிக்கும் நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்தது. இந்த விலைஉயர்வு மட்டுமின்றி "இந்தி"ய அரசு விதிக்கும் வரிகளின் சுமையால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. இதற்கிடையே இந்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தரம் உயர்த்தப்பட்ட டீசல் என்ற பெயரில் லாபம் சம்பாதிக்க டீசல் மற்றும் பெட்ரோல் விலையை செயற்கையாக உயர்த்தியுள்ளன. இதனைக் கண்டித்து லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் அனைத்திந்திய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இவ்வேலை நிறுத்தத்தினால் உணவுப் போக்குவரத்து பாதிக்கப்படும். ஏற்கெனவே பலமடங்கு அளவிற்கு உயர்ந்துள்ள விலைவாசி இன்னும் அதிகரிக்கும். இதற்கிடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் பணவீக்கத்தைப் பற்றி சிந்திப்பதா அல்லது விலைவாசி உயர்வைப் பற்றி சிந்திப்பதா எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது இந்திய அரசு.

    மக்கள் தொகையில் வெறும் 1 விழுக்காட்டிற்கும் குறைவான "ஏழைகள்" ஈடுபட்டிருக்கும் பங்குச்சந்தை சூதாட்டத்தில் யாருக்கும் நஷ்டம் வந்துவிடக்கூடாது என அவர்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கவும் அதற்குத் பணத்தை திட்டமிடவும் நேரமிருக்கிறது இந்திய அரசுக்கு. ஆனால் விவசாயிகள் தற்கொலைக்கு நிவாரணம் ஒதுக்கக் கூட காசில்லை என் கபட நாடகமும் ஆடுகிறது.

    "மிகச்சிறந்த பொருளாதார நிபுண" "ராம்" மன்மோகன் சிங், "புள்ளிவிவரப் புலி"யாம் ஏழைகளின் பசி அறியாத ப.சி(சிதம்பரம்), "சிறந்த நிர்வாகி"யாம் மான்டேக் சிங் அலுவாலியா... இவர்கள் தாம் இந்நாட்டை முன்னேற்றப் போகின்றனர் என ஊடகங்களால் ஊளையிடப்பட்டு அறிவிக்கப்பட்ட "அமெரிக்க" அறிவு ஜீவிகள். இப்பொழுது அதே ஊடகங்களுக்கு பயந்து நெளிந்து கொண்டு அங்குமிங்கும் இவர்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஆட்டுவிக்கும் அமெரிக்காவே ஆடிப்போயிருப்பதால் இவர்கள் என்ன செய்வார்கள் பாவம்.

    அமெரிக்கா சொன்னதை தான் அப்படியேச் செய்தார்கள். சட்டம் போட்டார்கள். சலுகைக் கொடுக்கப்பட வேண்டிய ரிலையன்ஸ் அம்பானி, விஜய் மல்லையா, ரத்தன் டாட்டா உள்ளிட்ட "மாபெரும்" "ஏழைகளுக்கு" சலுகைகள் அளித்தார்கள். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் சுமையை சுமக்கத் தான் "மக்கள்" இருக்கிறார்களே என்ற தைரியத்தில் அச்சுமையை "மக்கள்" தலையில் இறக்கி வைத்துவிட்டு, அதே எண்ணெயை அதிகவிலைக்கு சுத்திகரித்து வெளிநாடுகளுக்கு தாராளமாக ஏற்றுமதி செய்து கொழுத்து சம்பாதிக்க ரிலைன்ஸ் - எஸ்ஸார் போன்ற "ஏழை" நிறுவனங்களுக்கு சலுகை வழங்கி அவர்கள் லாபம் சம்பாதிக்க அரசை நடத்தினார்கள்.

    'நாங்கள் தான் "புரட்சிகரப் போராளிகள்", அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் பாருங்கள்" என "மார்க்சிஸ்ட்" நடிகர்கள் ஒருபுறம் நடித்துக் கொண்டே மேற்கு வங்கத்தில், "தொழிலில் மிகவும் பின்தங்கிய எழையான" ரத்தன் டாட்டாவிற்கு "சோஷலிச" சமுதயாம் மலர்ந்திட தொழிற்பரட்சியில் ஈடுபடவேண்டுமெனக் கூறி ரூ 300 கோடியை கடன் உதவி செய்தார்கள். பாவம் ரத்தன் டாட்டா. எவ்வளவு "மிகச்சிறிய எழை"? எப்படி அவரால் இந்தத் தொகையை கொடுக்க இயலும்? பரவாயில்லை. கடந்த ஆண்டில் 800க்கும் குறைந்த "பணக்கார ஏழைகள்" வாங்கிய சுமார் 44,000 கோடி ரூபாயை வாராக் கடனாக அறிவித்து அந்த "பணக்கார கடங்கார ஏழை"களை சுதந்திரமாக திரியவிட்டதை போல ரத்தன் டாட்டாவையும் விட்டுவிடலாம். இந்த கடனையெல்லாம் சுமக்கத் தான் எப்பொழுதும் "விவசாயிகள் + நடுத்தரவர்க்கத்தினர் + வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள்" என்ற கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறதே... அவர்கள் தலைமையில் இறக்கி வைப்போம் என இறக்கி வைத்தார்கள். இறக்கி வைத்துக் கொண்டிரும் இருக்கிறார்கள்.

    "இவற்றையெல்லாம் நாங்கள் எதிர்க்கிறோம்" என்று சொல்லிக் கொண்டே காவிக் கூட்டம் இரத்த வெறியுடன் சத்தமிட்டுக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறது. இவற்றுக் கெல்லாம் ஆரம்பப் புள்ளி வைத்த அவர்களே இவ்வாறு சொல்கிறார்கள் என்றால் "விரைவில் தேர்தல்" வருகிறது என்று அர்த்தம். அவர்கள் அலைவதைப் பார்த்தால் விரைவில் அயோத்திக்குச் சென்று இராமரையும் தேர்தலுக்காக அழைத்துக் கொண்டு வந்து விடுவார்கள் போலிருக்கிறது. இவர்களுக்கு பிரச்சனை "பெட்ரோல் விலை உயர்வைத் தடுப்பதோ" - "பணக்கார ஏழைகளுக்கு சலுகை அளிக்கக் கூடாது" என்பதோ அல்ல. தனக்கு தரவேண்டிய தேர்தல் நிதியை அந்த "பணக்கார ஏழை"களிடமிருந்து மற்றவர்களை விட அதிகம் பெற்றிடவே இந்த காவி கோஷ்டியினர் அங்கலாய்கின்றனர்.

    அமெரிக்க ஆண்டை சொல்வதைத் தான் இந்த "இந்தி"யத் தேசிய அடிமை அரசியல்வாதிகள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. அதனை வெட்கமற்று நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    அசாமில் பெட்ரோல் எடுக்க அந்த அரசிற்கு உரிமைத் தொகை கொடுத்து வரும் "இந்தி"ய அரசு, தமிழகத்தின் காவிரிப்படுகையிலிருந்தும், நரிமணித்திலிருந்தும் திருடிச் செல்லும் பெட்ரோலுக்கு நம்மிடையேயே "இறக்குமதி" வரியை விதித்துக் கொள்ளையடிக்கும். இதனைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழகத்து "தேர்தல்" அரசியல் கட்சிகள் "கச்சா" எண்ணெயை பற்றி கதையளந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் அரசியல்கட்சிகள் ஆளாளுக்கு ஆர்ப்பாட்டம் வைத்துக் கொண்டு கண்ணேதிரேக் கொள்ளையடிக்கும் தில்லி அரசைத் தட்டிக் கேட்க நாதியற்று "கச்சா" எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை கண்டித்து உள்ளுர் "கேபிள்"டீவியில் அறிக்கை விடுகிறார்கள்.

    தில்லி ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமின்றி பன்னாட்டு முதலாளிகளுக்கும் தமிழ்நிலத்தை விற்கும் "முத்தமிழ் விற்றவர்" முதல்வர் கலைஞர் கருணாநிதி ஒருபுறம். பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஊதாரி்த்தனமாக 100 கார்களில் பெட்ரோல் போட்டுக் கொண்டு போக்குவரத்தை அடைத்துக் கொண்டு விளம்பரம் தேடிச செல்லும் நடிகர் (கம்) அரசியல் பிழைப்புவாதி விசயகாந்த் ஒருபுறம். வெப்பமயமாதலால் மக்கள் வெயிலில் வெந்து சாவதைப் பற்றி "மிகவும் கவலையுற்று" ஊட்டியில் குலுகுலுவென ஏசி அறையில் மக்களின் கஷ்டத்தை பற்றி சிந்தித்துக் கொண்டு, ஒரே அறையில் இருந்து கொண்டு நாட்டுநடப்புகளைப் பற்றியெல்லாம் துள்ளியமாகக் கண்டிறிந்து "அறிக்கை" மட்டுமெ விடும் அரசியல்வாதியாக செயலலிதா ஒருபுறம். "நாங்களும் இருக்கோம்ல" என்றபடி பதவி தந்த "இந்தி"ய அரசைப் பற்றி வாய்கூட திறக்காமல் தமிழக அரசை மட்டுமே கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கட்சி வளர்க்கும் இராமதாஸ் ஒருபுறம். இவர்கள் மட்டுமா? தமிழகத்தின் தலைச்சிறந்த "அரசியல் நகைச்சுவையாளர்" வைகோ, "அடங்க மறு" என்று அறிமுகமாகி ""சீட்" கொடுத்தால் அடங்கிப் போ" என்று புதியத் தத்துவம் படைத்த திருமா, "அகில இந்திய" சமத்துவக் கட்சி" என்கிற தனியார் பொது நிறுவனத்தின் உரிமையாளர் "நாட்டாண்மை" சரத்குமார், "2011-ல் தமிழக முதல்வராகப்போகும்" "லட்சிய" தி.மு.க. டி.ஆர்.இராசேந்தர், தீடீர் கட்சியான "அகில இந்திய" நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றைத் தான் சொல்ல வருகிறார்கள்.

    அமெரிக்க அடிவருடியாகவும், உலகமயத்தின் ஊதுகுழலாகவும் "இந்தி"யா தொடர்ந்து இப்படித்தான் செயல்படும். அந்த "இந்தி"யாவிற்கு தமிழ் இனத்தை அதிக விலைக்கு விற்பதில் தான் இவர்களுக்குள் போட்டி, அறிக்கை சண்டை, அதிகாரச் சண்டை எல்லாம். மற்றபடி இவர்கள் கொள்கைகளற்ற கொள்ளைக் கூட்டணி என்ற வகையில் தெளிவாக அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.

    பெட்ரோல் விலை உயர்வும் விலைவாசி உயர்வும் தற்பொழுதுள்ள அரசியல்கட்சியினர் யாருக்கானவர்கள் என்பதை நமக்கு சொல்லித் தருகின்றன. பணக்காரர்களுக்கான அரசை பாதுகாக்கவும் அதில் பங்குபெறவுமே இங்குள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சியனரும் செயல்படுகின்றனர். தமிழ் இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் தமிழகத்தின் அனைத்துத் தேர்தல் அரசியல் கட்சிகளும் உலகமயத்தின் பாதந்தாங்கிகள் தான் எனவும், தில்லி ஏகாதிபத்தியத்தின் கூட்டுக் கொள்ளையர்கள் தான் எனவும் தற்போதைய சமூக நிகழ்வுகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. என்ன தான் இதற்குத் தீர்வு?

    கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணமான பெரு முதலாளிகளின் லாபவெறிக்கு முதலில் முடிவு கட்ட வேண்டும். ஆன்லைன் பங்குச்சந்தை வாத்தகச் சூதாட்டத்தை தடைவிதிக்க வேண்டும். முதலாளிகளின் லாபவெறிக்கு எதிராக தடைவிதிக்க இங்குள்ள இந்திய அரசோ தமிழக அரசோ நிச்சயம் முன்வராது. ஏனெனில் அரசு இங்குள்ள அரசுகளே அவர்களை பாதுகாப்பதற்கான கட்டமைப்போடு இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். இந்தியா முழுமைக்கும் புரட்சி நடத்தி இவ்வரசை மாற்ற முடியுமா என்றால் முடியாது.
    இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள பல்வேறு தனித்த தேசிய இனங்களும் உலகமயத்திடமிருந்து தற்காத்துக் கொள்ள தனது சொந்த தேசிய இனத்தின் அடையாளத்தை மீட்டுக் கொள்ள போராட்டம் நடத்தத் தொடங்கி அந்த போராட்டம் ஒருவேளை ஒருங்கிணைக்கப்பட்டால் தான் இந்தியப் புரட்சி என்பது சாத்தியமாகும். இது நடக்கும் செயலா? ஒரே இந்தியா என்று பேச்சில் இருக்கிறதே தவிர செயலில் எங்காவது இருக்கிறதா.? கர்நாடகம், கேரளா, ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வேறு நாடாகத் தானே பார்க்கின்றன? தமிழகத்துக்குரிய உரிமைகளை மறுக்கின்றன. இப்படி இருக்கையில் அவர்களை இணைத்துக் கொண்டு புரட்சி நடத்துவது சாத்தியமா..? அண்டை தேசிய இனங்கள் நம்மிடம் சண்டையிட்டு வந்த போது அதனை தடுக்க வேண்டிய இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது தானே வாடிக்கை. இந்நிலையில் இந்தியா என்பது வேறு எங்கு இருக்கிறது? நிஜத்தில் செய்லபடுவது "இந்தி" யா தானே..?
    இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..? தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையை பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை உலகமயப் பணக்காரனுக்கு மட்டுமின்றி தில்லிக்காரனுக்கும் விற்கும் "இந்தி"யனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும். மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் பெரு வணிகங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். பீகாரிகள் ரயில்வே வேலை, ரோடு வேலை என தமிழகத்திற்குள் நுழைந்து விட்டனர். தமிழத்திலேயே ததிழன் அகதியாக அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது. அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி உலகமய முதலாளிகள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் "இந்தி"யத் தேசியத்தை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் தான் என உணர வேண்டும். உலகமயத்தை எதிர்க்க நாம் முன்னிறுத்த வேண்டியது தமிழ்த் தேசியத்தைத் தானேத் தவிர பெரு முதலாளிகள் தலைமையிலான "இந்தி"யத் தேசியத்தை அல்ல. தமிழ்த் தேசிய அமைப்புகள் முன்னெடுக்கும் தமிழ்த் தேசியப் புரட்சி பற்றிய விழிப்புணர்வே இவர்களை மிரள வைக்கும் சக்தியாகும். அந்த புரட்சிகான முன்னேற்பாடுகளை வரலாறு நமக்கு செய்து தரும். அதனை வேகப்படுத்த வேண்டியதே நமது கடமை என செயல்பட வேண்டும்.


    நன்றி : கீற்று இணையம்


    -----------------------------------------------------------
    தோழமையுடன்
    க.அருணபாரதி
    www.arunabharathi.blogspot.com
    -----------------------------------------------------------

    குறிப்பிடத்தக்க பதிவுகள்