Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Wednesday, February 29, 2012

ஈழம்: இந்தியத்தின் நரித்தனம் தொடர்கிறது - க.அருணபாரதி

ஈழம்: இந்தியத்தின் நரித்தனம் தொடர்கிறது

க.அருணபாரதி

இந்தியா எந்த நேரத்திலும் நம்பக்கம் சார்பாகவே செயற்படும்4 நாள் சுற்று(லா) பயணமாக இலங்கைக்கு சென்றிருந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசிய பின், மகிழ்ச்சி பொங்க இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீ.எல்.பெய்ரிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தது இது.

தமிழர்களுக்கு எங்கு இன்னல் ஏற்பட்டாலும், அந்த இன்னலை ஏற்படுத்துபவர்கள் யாராயினும் அவர்களுக்கு உதவி செய்து உபசரிப்பது தான் இந்தியாவின் தலையாயப் பணி. அதனால் தான் தனது சொந்த நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லும் நாடாக இருந்தாலும், பாதிக்கப்படுவது தமிழர்கள் என்ற காரணத்தால் சிங்கள அரசுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டுகிறது இந்திய அரசு. இலட்சக்கணக்கானத் தமிழர்களை இனவழிப்பு செய்திட சிங்கள இனவெறி அரசுக்கு நிதி, ஆயுதம் என பலவகைகளிலும் உதவி நின்றதோடு மட்டுமின்றி, இன்று வரை அவ்வரசுக்கு ஆபத்து வரும் போதெல்லாம் முட்டுக் கொடுத்தும் வருகின்றது இந்திய அரசு.

இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கை நன்கு உணர்ந்ததால் தான், இந்தியா எப்போதும் எங்கள் பக்கம் என இந்திய அமைச்சர் கிருஷ்ணாவை பக்கத்தில் நிறுத்திக் கொண்டே, இறுமாப்புடன் கொக்கரிக்கிறார் சிங்கள அமைச்சர். இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க உதவுகிறோம் என்று கூறிக் கொண்டு இந்திய அரசு அரங்கேற்றி வரும் அண்மைய நாடகத்தின் ஒர் காட்சி மட்டும் தான் இது.

முள்ளிவாய்க்கால் போர் முடிந்த பிறகு, சற்றொப்ப கடந்த 18 மாதங்களாக, 15க்கும் மேற்பட்ட சுற்றுகளில் நடத்தப்பட்ட, இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுகளில் இதுவரை எவ்வித குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படவில்லை.

சிங்கள இனவெறி அரசின் அரசியலமைப்புக் கட்டமைவிற்குள் தமிழர்களுக்கு ஓர் தீர்வு என்ற வகையில் நடைபெறுகின்ற இப்பேச்சுவார்த்தைகளால் உண்மையில் தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என நாம் உறுதியாக நம்பலாம். ஏனெனில், கடந்த அரை நூற்றாண்டுகளாக சிங்கள அரசு நடத்திய ஏராளமான பேச்சுவார்த்தை மோசடி நாடகங்களைக் கண்டு தமிழ் மக்கள் சலித்துவிட்டனர்.

சிங்கள அரசின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தி, புலம் பெயர்ந்த தமிழர்கள் நடத்திய தொடர் போராட்டங்கள் ஏற்படுத்திய அழுத்தங்கள் காரணமாக அனைத்துலக சமூகத்தின் முன் சிங்கள அரசு சந்தேகக் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

மேலும், சேனல்-4 தொலைக்காட்சி தொடர்ந்து வெளியிட்ட சிங்கள அரசின் போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்கள், டப்ளின் அனைத்துலக மக்கள் நீதிமன்றத்தில் சிங்கள அரசு போர்க் குற்றவாளி அரசு தான் என வழங்கப்பட்டத் தீர்ப்பு, ஐ.நா. நியமித்த மூவர் குழுவின் அறிக்கை என சிங்கள அரசுக்கு அனைத்துலக சமூகம் தொடர் நெருக்கடிகளை தந்தது.

உலகின் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், பத்திரிக்கையாளர்களும் சிங்கள அரசின் தமிழினப் படுகொலையை அம்பலப்படுத்தி குற்றப்பத்திரிக்கை வாசித்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ் போன்ற மேற்குலக நாடுகளில் உள்ள சனநாயக சக்திகளும், மனித உரிமை செயல்பாட்டாளர்களும் சிங்கள அரசைக் கேள்விகளால் துளைத்தெடுக்கின்றனர்.

தற்போது சிங்கள அரசு நடத்தி வரும் பேச்சுவார்த்தை கூட, இலட்சக்கணக்கான தமிழர்களையும், போராளிகளையும் கொன்றொழித்த சிங்கள இனவாத அரசின் போர்க்குற்றங்கள் அனைத்துலக சமூகத்தின் முன் ஏற்படுத்தியுள்ள களங்கத்தை துடைத்தெறிய நடத்தப்பட்டு வரும் ஒப்புக்கு சப்பான நாடகம் தான்.

இப்பேச்சுவார்த்தை, உண்மையில் சிங்கள அரசு அனைத்துலக சமூகத்தின் முன் நற்பெயர் வாங்கிக் கொள்ளத் தான் உதவுமே தவிர, தமிழர்களுக்கு எவ்வகையிலும் உதவப்போவதில்லை என்பதை அப்பேச்சுகளின் போது சிங்கள அரசு நடந்து கொள்ளும் விதத்திலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

அனைத்துலக சமூகத்தின் குற்றப் பார்வையிலிருந்து தப்புவதற்காக, போர்க்குற்றங்கள் குறித்த இலங்கை அரசு தானே விசாரித்து தாக்கல் செய்த ‘LLRC ஆணைக்குழு அறிக்கையும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கவில்லை. சிங்கள அரசின் போர்க் குற்றங்கள் குறித்து, ஐ.நா. நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல பகுதிகள் சிங்கள அரசின் LLRC அறிக்கையில் ஒரு பேச்சுக்குக் கூட கூறப்படவேயில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வறிக்கையை முற்றிலும் நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா இவ்வறிக்கை போதுமானதாக இல்லை என கருத்து வெளியிட்டது.

ஆனால், சிங்கள அரசோடு இணைந்து தமிழின அழிப்புப் போரை நடத்திய இந்திய அரசு மட்டும் தான் இவ்வறிக்கையை வரவேற்கத்தக்கது என்றும் ஆக்கப்பூர்வமானது என்றும் கருத்து கூறியது.இவ்வறிக்கைக்கு மேல் விசாரணையேத் தேவையில்லை என்றும் இந்தியா வாதிட்டது. LLRC அறிக்கையை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவையும் இலங்கைக்கு அனுப்பியது இந்திய அரசு.

கிருஷ்ணா கொழும்பு சென்று இறங்கியதும், பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா போன்ற பகுதிகளில் மீன்பிடிப்பதற்கு தமிழக மீனவர்களுக்கு இருக்கும் பாரம்பரிய உரிமையை கைவிட இந்திய அரசு ஒப்புக் கொண்டுவிட்டதாகவும், இது இலங்கைக்கு கிடைத்த வெற்றி என்றும் சிங்கள மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்ன பிபிசிக்கு பேட்டியளித்தார்.

இதன் விளைவு சிறிது நேரத்திலேயே தெரியத் தொடங்கியது. இராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை கற்களால் அடித்து விரட்டியது சிங்களக் கடற்படை. மறுநாள், தமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாயின.

தமிழர்களை மதியாமல் தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவை, இலங்கைக்கு பரிசாகக் கொடுத்த இந்திய அரசு, அப்போது இயற்றிய கச்சத்தீவு ஒப்பந்த்த்தில் கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமைகள் வழங்கியிருந்தது. ஆனால், அவ்வுரிமையை மறுத்து இந்திய மக்களவையிலேயே பேசியவர் தான் எஸ்.எம்.கிருஷ்ணா. தற்போது, அவ்வுரிமைகளை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக கைவிட்டு தமிழ் இனத்திற்கு மீண்டுமொரு முறை துரோகமிழைத்திருக்கிறது.

இந்திய அரசின் இத்துரோக நடவடிக்கையால், தமிழக மீனவர் மீதான தாக்குதல் இனி மேன்மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

போர்க்குற்றம் தொடர்பான உலகளாவிய நெருக்கடிகளில் திளைத்த சிங்கள அரசு, கொழும்பு வந்திறங்கிய கிருஷ்ணாவை கண்ட பிறகு தான் நிம்மதிப் பெருமூச்சுடன் இந்தியா எப்போதும் எங்கள் பக்கம் என அறிவித்தது.

வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடக்கவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 19ஆவது அமர்வுக் கூட்டத்தில், இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டுமென மேற்குலக நாடுகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது. ஒருவேளை அவ்வாறு விவாதம் வந்தால், அதில் இந்திய அரசு என்ன கருத்து கூறும், எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதற்கான நடைமுறை ஒத்திகை தான் இது.

கிருஷ்ணாவின் வருகைக்குப் பின் சிங்கள அமைச்சரும் மனித உரிமைகளுக்கான சிறப்புத் தூதுவருமான மகிந்த சமரசிங்கஜெனீவா கூட்டத்தில் எங்களால் எந்தவகையான அனைத்துலக அழுத்தங்களையும் எதிர்கொள்ள முடியும் என்று உறுதிபடத் தெரிவித்ததன் பின்னணியில் இந்திய அரசே ஒளிந்து நிற்கிறது.

தற்போது, எஸ்.எம்.கிருஷ்ணா சென்றது மட்டுமல்ல, இனப்படுகொலைக் குற்றவாளியாக நிற்கும் சிங்கள அரசின் இரத்தக்கரையைத் துடைக்கவும், கவலைப்படாதீர் நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் கூறவும் இந்திய அரசின் அதிகாரிகளும் அமைச்சர்களும் போர் முடிந்த பின்னர் அவ்வப்போது இலங்கைக்கு தொடர்ச்சியாக பயணம் மேற்கொண்டு வந்து கொண்டுதான் உள்ளனர்.

அனைத்துலக சமூகத்தை ஏமாற்றுவதற்காக, சிங்கள அரசு நடத்தும் அரைகுறை பேச்சுவார்த்தை கூட அங்கு வேண்டா வெறுப்பாகத் தான் நடத்தப்படுகின்றது என்பது இந்திய அரசுக்கும் நன்கு தெரியும்.

பேச்சுவார்த்தைகளின் வழியே தான் தமிழர்களுக்கு ஓர் அரசியல் தீர்வு கிடைக்கும்என்று எஸ்.எம்.கிருஷ்ணா கொழும்பில் சொல்லிக் கொண்டிருந்த வேளையில் தான், இலங்கை அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைக் கூட்டங்களை மூன்று முறை புறக்கணித்திருக்கிறது. திட்டமிட்டபடி தாம் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்த போதும் இலங்கை அரசுத் தரப்பில் இருந்து யாரும் வரவில்லை என்று தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

பேச்சுவார்த்தைக் கூட்டத்தை இலங்கை அரசு புறக்கணித்தது குறித்து வாய்த்திறக்காத இந்திய அரசு, தமிழர்களுக்குத் அரசியல் தீர்வு கிடைக்க நாங்கள் காலக்கெடு விதித்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க மாட்டோம் என்றும் அறிவித்து அதன் உண்மை முகத்தை பகிரங்கமாகவே அம்பலப்படுத்தியது. சிங்கள அரசின் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவரான அமைச்சர் ஸ்ரீபால டி சில்வாவும், இந்தியாவிடமிருந்து தமக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இது தான் பேச்சுவார்த்தைகளை முன்னகர்த்துவதில் இந்திய அரசுக்கு இருந்த அக்கறையின் இலட்சணம்!

உண்மையில் இந்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்தோ, தொடர்ந்து சிங்களக் கடற்படையால் தாக்கப்பட்டு வரும் தமிழக மீனவர்களின் நிலை குறித்தோ பேசுவதற்காக இலங்கை செல்லவில்லை. போர்க்குற்றவாளி அரசாக நிற்கும் இலங்கை அரசின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும், பாதாளத்திற்குச் சென்றுவிட்ட இலங்கையின் பொருளியலை சரிகட்ட திட்டங்கள் தீட்டுவதற்காகவும் தான் அவர் இலங்கை சென்றார்.

உலகமய சந்தைப் பொருளியலின் காரணமாக உலகளாவிய அளவில் பொருளியல் பெருமந்தம் ஏற்பட்டுள்ளது. இது இந்தியா, இலங்கை உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த வாரம் கூட இலங்கை அரசு அத்தியாவசியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்து மக்களின் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டது. மேலும், இராசபக்சே குடும்பத்தினரின் ஆதிக்கம், இராணுவத்தினரின் கட்டற்ற அதிகாரம், போர்ப் பொருளாதாரம் ஏற்படுத்தியுள்ள பொருளியல் பாதிப்புகள் என இலங்கை அரசு தனக்குள்ளும் நெருக்கடிகளால் முற்றுகையிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தான், இலங்கையின் பொருளியலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி கட்டவும், அவர்களுடன் வடநாட்டு பெருமுதலாளிய நிறுவனங்களுக்கு உள்ள பொருளியல் பிணைப்பை மேலும் உறுதிப்படுத்தி புதிய ஒப்பந்தங்கள் போடும் திட்டங்களுடன் தான் கிருஷ்ணா இலங்கை பயணமானார். இந்திய - இலங்கை நாடுகளுக்கிடையே சற்றொப்ப 443 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருளியல் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது இதற்குச் சான்று.

அதே வேளையில், தமிழர்களுக்கு அதிகாரமோ அரசியல் தீர்வோ கிடைக்கக் கூடாது என்பதில் சிங்கள அரசை விட அதிக உறுதியுடன் இந்தியா உள்ளது என்பதை மறைமுகமாக பறைசாற்றவும் கிருஷ்ணாவின் பயணம் பயன்பட்டது.

மூன்று இலட்சம் தமிழர்களை முள்வேலிக்கம்பி முகாம்களுக்குள் முடக்கி வைத்திருக்கும் இராசபக்சே, தமிழர் திருநாளான பொங்கல் விழாவை கிருஷ்ணாவை வைத்துக் கொண்டு, ஒப்புக்காக நடத்தினார். அந்நிகழ்வை தான் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சற்று நேரம் தள்ளி வைத்து உத்தரவிட்ட இராசபக்சே தன்னை நெகிழ வைத்துவிட்டார் என்றும், அவர் நல்ல பண்பாளர் என்றும் இராசபக்சேவுக்கு நற்சான்று வழங்கவும் கிருஷ்ணா தவறவில்லை.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கையின் ஒருமைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். இலங்கையின் 13ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் வகையிலான ஓர் தீர்வுத் திட்டத்தை தமிழர் பிரச்சினைக்கு இலங்கை அரசு முன் வைக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்திய அரசு வலியுறுத்துகிற, இலங்கையின் 13ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் ஏற்கெனவே இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகளாலும், தமிழீழ மக்களாலும் நிராகரிக்கப்பட்ட ஒன்று தான். இது இந்தியாவில் தற்போது நிலவுகின்ற குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட மாநிலக் கட்டமைப்புகளை விடவும், குறைவான அதிகாரங்களைக் கொண்ட மாகாண கட்டமைப்புகளை உருவாக்க துணை செய்கின்றது.

எனினும், இந்தக் குறைந்தபட்ச அதிகாரங்கள் கூட தமிழர் கைகளுக்கு சென்றுவிடக் கூடாது என சிங்கள இனவாத அரசு கவனமுடன் நடந்து வருகின்கிறது. 13ஆவது சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளவாறு காவல்துறை, காணி நிர்வாகம் உள்ளிட்டவற்றை மாகாணங்களுக்குக் கையளிக்க இலங்கை அரசு பல்லாண்டுகளாகவே தொடர்ந்து மறுத்து வருகின்றது. இது ஒருக்காலும் சாத்தியமற்றது என அதிபர் இராசபக்சே வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

மேலும், 2010ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட 18ஆவது சட்டத்திருத்தம் இலங்கை அதிபருக்கு மேலும் பல அதிகாரங்களை வழங்கியும், 13ஆவது சட்டத் திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் பலவற்றை விழுங்கியும் இலங்கை அரசின் இனவாதக் கட்டமைப்பை மேலும் இறுக்கியிருக்கிறது.

தமிழின விரோத இந்திய அரசு ஒரு பேச்சுக்காக வலியுறுத்துகிற 13ஆவது சட்டத் திருத்தத்தைக் கூட மறுப்பது தான் சிங்கள இனவாத அரசு மாறா நிலைப்பாடு. இந்நிலையில், 13+ என்ற பெயரில், 13ஆவது சட்டத் திருத்தத்தையும் தாண்டி தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுவோம் எனவும் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் இராசபக்சே வாக்குறுதி அள்ளி வீசிய போதும், அதனை இந்தியா சுட்டிக்காட்ட முற்படவில்லை. உண்மையில், இருதரப்பினரின் நோக்கமும் தமிழர்களை ஒடுக்குவது தான் என்ற வகையில், இந்தியா சிங்களத்தோடு எவ்வகையிலும் முரண்பட விரும்பவில்லை.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவைத் தொடர்ந்து, கூடங்குளம் அணுமின் நிலையச் சிக்கலில் இந்திய அரசின் முகவராக செயல்பட்ட முனைவர் அப்துல் கலாமையும் இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பியது. இலங்கை சென்ற கலாம், அங்கு இராசபக்சே அரசால் முன்மொழியப்பட்ட மும்மொழித் திட்டத்தை (சிங்களம்-தமிழ்-ஆங்கிலம்) தொடங்கி வைத்தார். 1958இல் தமிழர்கள் மீது சிங்கள மொழியைக் கட்டாயமாகத் திணித்த தனிச் சிங்கள சட்டத்தின் இன்றைய மறுவடிவம் இது.

அனைவரும் எதிர்பார்த்தது போலவே, கலாம் இராசபக்சேவுக்கு நற்சான்று வழங்கிவிட்டு, 1989இல் புலிகளுடனான போரில் இறந்துபோன இந்திய அமைதிப்படையினரின் நினைவுச் சின்னத்தில் அவர்களை வாழ்த்திப் போற்றி கையொப்பமிட்டார். கலாமின் கபடப் புன்னகையில் இந்திய அரசின் நரித்தனம் தான் தெரிந்தது.

மொத்தத்தில் தமிழர்களுக்கு எதிரான தனது நரித்தனமான வேலைகளை இந்திய அரசு தொடங்கி விட்டது. இதற்கெதிரான தமிழர்களின் போராட்ட முன்னெடுப்புகளை நாமும் தொடங்கியாக வேண்டும்.

இதோ, புலம் பெயர்ந்த தமிழர்கள் வரும் மார்ச் மாதத்தில் நடக்கவிருக்கும் ஐ.நா. மன்ற மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் சிங்கள அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தி நீதி கேட்டு நடைபயணம் என்ற பெயரில் ஜெனீவாவில் மாபெரும் மக்களி திரள் எழுச்சி ஒன்றுகூடலை நிகழ்த்த அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்திய அரசு இக்கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவாக நிற்கக் கூடாது என்றும், உலக நாடுகளின் முன்னிலையில் தமிழீழப் பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக மக்களாகிய நாம் இந்திய அரசை நெருக்கி முழக்கமிட வேண்டும். இதுவே இன்றைய வரலாற்றுத் தேவையும், கடமையும்.

(இக்கட்டுரை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் – மாதமிருமுறை பிப்ரவரி 1-15 இதழில் வெளியானது. கட்டுரையாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர்)

Tuesday, July 13, 2010

தலையிடக்கூடாதாம் – சிங்களத்தின் திமிர்வாதம் - க.அருணபாரதி


கடந்த ஆண்டு தமிழீழத்தின் மீது நடத்தப்பட்ட இனவெறிப் போரின் போது, சிங்கள இராணுவம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்கான பல புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. சேனல் 4 செய்தி நிறுவனம், சர்வதேச நெருக்கடிக் குழு, மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள் இதனை வெளிப்படுத்தியுள்ளன.

இவற்றை முன்வைத்து, உலக நாடுகள் பலவற்றிலும் வாழுகின்ற புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் தத்தமது நாடுகளை பணிய வைத்ததன் காரணமாக, சிங்கள அரசின் மீது ஐ.நா. போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது.

சேனல் 4 செய்தி நிறுவனம் வெளியிட்ட புதிய ஒளிப்படம்

நிர்வாணப்படுத்தப்பட்டு, கண்கள் மூடப்பட்ட நிலையில் போராளிகளை சிங்கள இராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் ஒளிப்படக் காட்சிகளை சேனல் 4 செய்தி நிறுவனம் வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். தொடக்கத்தில் இலங்கை அரசு அக்காணொளியை மறுத்த நிலையில், அக்காணொளி உண்மையானது தான் என்று ஐ.நா. சபை நியமித்த நிபுணர் குழுவும் சான்று வழங்கியிருந்தது. தற்போது புதியதொரு ஒளிப்படக் காட்சியையும் சேனல் 4 செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இக்காணொளியில், இராணுவத்திடம் சரணடைந்த போராளிகள் கைகள் கட்டப்பட்ட நிலையில் மண்டியிட வைக்கப்பட்டிருப்பதும், பெண் போராளிகள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்டுக் கிடப்பதும் பதிவாகியுள்ளது.

மேலும், இக்காணொளியை தமக்கு அனுப்பிய சிங்கள இராணுவ வீரர் ஒருவரின் பேட்டியையும் இச்செய்தி நிறுவனம் வெளியிட்டது. அதில், அவர் தமது உயரதிகாரிகளின் கட்டளைக்கு ஏற்பவே தாம் மக்களை படுகொலை செய்ததாக அந்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். சரணடைந்தவர்களை சித்திரவதை செய்து கொன்றதையும் அவர் கூறினார்.

இதே போல, கொல்லப்பட்ட ஆண் மற்றும் பெண் போராளிகளின் பிணங்களைக் கூட நிர்வாணப்படுத்தி விலங்குகளைப் போல அவர்களை இராணுவத்தினர் வீசியெறிவது போன்ற காட்சிகளைக் கொண்ட புதிய காணொளியை ‘அதிர்வு’ இணையதளம் வெளியிட்டுள்ளது. இராசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கு ஆதாரமாக உடல்கள் கருகிக் கிடப்பதையும் இக்காணொளியில் காண முடிகின்றது.

சர்வதேச நெருக்கடிக் குழு அறிக்கை

இலங்கை அரசு போர்க்குற்றங்களை இழைத்திருக்கிறது என்றும் அதன் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரஸல்ஸ் நகரைத் தலைமையகமாக கொண்டு இயங்கும் ‘சர்வதேச நெருக்கடிக் குழு’ (International Crisis Groups) என்ற மனித உரிமை அமைப்பு மே 17 அன்று தனது அறிக்கையில் கூறியது. இதற்கு வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச நெருக்கடிக் குழுவின் தலைவரும், ஐ.நா.வின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளருமான லூயிஸ் ஆர்பர் ஐ.நா. சபைக்கும் இப்போர்க் குற்றங்களில் பங்குண்டு என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

இலங்கை அரசு நியாயமான நீதி விசாரணையை மேற்கொள்ளாது என்றும், உள்நாட்டு முரண்பாடு களை தீர்த்துக் கொள்ள, இலங்கை அரசை முன்மாதிரியாக கொண்டு உலக நாடுகள் செயல்படக்கூடிய அபாயம் உள்ளது என்றும் அவ்வமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

• தமிழ் பொதுமக்கள் மீது வேண்டுமென்றே குண்டுகளை வீசியது,

• குறுகிய பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் மக்களை வற்புறுத்தி அழைத்து குண்டு வீசிக் கொன்றது,

• சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் அரசுக்குத் தகவல் தெரிவித்தும் கூட, காயம்பட்டவர்களும், நோயாளி களும் நிரம்பிய மருத்துவமனைகள் மீது குண்டு வீசியது,

• மனிதாபிமான பணியாற்றிக் கொண்டிருந்த அமைப்புகள் மற்றும் ஊழியர்களை அறிந்து அவர்கள் மீது குண்டு வீசித்தாக்கியது,

• பொதுமக்கள் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காக குறைத்துக் காட்டி, உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் விநியோகித்தலை தடுத்து நிறுத்தியது

மேற்கண்ட குற்றச்சாட்டு களுக்கு இலங்கை அரசு பதில் அளிக்க மறுத்துவிட்டதாகவும் தனது அறிக்கையில் அவ்வமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதே போல புலிகள் மீதும் அவ்வமைப்பு குற்றச்சாட்டு களை முன் வைத்துள்ளது. சர்வதேசச் சமூகம் இனப்படுகொலை நடந்த போது அதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததையும் அவ்வறிக்கை சுட்டுக்காட்டி சாடியுள்ளது. ஐ.நா.வின் நம்பகத்தன்மையும் குலைக்கப்பட்டு விட்டதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கை

இதனைத் தொடர்ந்து மனித உரிமை கண்காணிப்பகம் (Human Rights Watch) அமைப்பு, மே 25 அன்று இலங்கை மீதான போர்க் குற்றங்களை விசாரிக்கும் நிபுணர் குழு அமைக்கும் முடிவை எக்காரணம் கொண்டும் ஐ.நா. கைவிடக் கூடாது என்று கோரியது. அத்துடன், உயிருடன் இருந்த தமிழ்ப் போராளி ஒருவர் இரத்தம் கசிய அடித்துக் கொல்லப்படும் கோரக் காட்சிகளை கொண்ட புகைப்படங்களையும் மற்றொரு மொரு போர்க்குற்ற ஆவணமாக வெளியிட்டது.

கொல்லப்படுவதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு அவரை இராணுவத்தினர் கத்தியைக் காட்டி மிரட்டுவதும், இறந்த பின் அவர் மீது புலிக்கொடியை வீசுவதும் அதில் பதிவாகியுள்ளது. கோடரியால் தலை சிதைக்கப்பட்டு அவரது மூளை சிதறிக்கிடப்பதாகவும் மனித உரிமை கண்காணிப்பக அமைப்பு தன் அறிக்கையில் கூறியிருந்தது.

‘இலங்கை அரசு தானே நியமித்துள்ள விசாரணைக்குழு கண் துடைப்பு நடவடிக்கை தான். இதற்கு முன்பு இதே போல இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட 9 குழுக்கள் எவ்வித உருப்படியான பரிந்துரை களையும் வழங்கவில்லை. எனவே, இலங்கை அரசு நியமித்துள்ள குழுவை ஐ.நா. சபை நம்பக்கூடாது’ என்றும் இவ்வமைப்பின் அறிக்கைத் தெரிவித்தது.

சர்வதேச மன்னிப்புச் சபை

சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) அமைப்பு, போர் முடிந்து ஓராண்டாகிவிட்ட சூழலிலும் கூட இவை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்றும் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் சுதந்தி ரமாக நடமாட இலங்கை அரசு தடை விதித்திருந்து என்றும் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது.

கடந்த ஓராண்டு காலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளை காண அனுமதி மறுத்துள்ள இலங்கை அரசு, அவர்களின் நிலையை தெரியப் படுத்தவும் தவறிவிட்டது என மன்னிப்புச் சபை கூறியுள்ளது. ஐ.நா. செயலாளர் பான் கீ மூனை மன்னிப்புச் சபையின் செயலாளர் கிளொடியோ கோர்டான் நேரில் சந்தித்தும் இதனை வலியுறுத்தினார்.

இதனிடையே, அமெரிக்க காங்கிரசு உறுப்பினரும், நிதிச் சேவைகள் குழுவின் மூத்த உறுப்பினருமான ஸ்டிவ்டிரை கோஸ் என்பவர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரிக்கு இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கடிதம் ஒன்றையும் எழுதினார்.

ஏற்கெனவே, கடந்த சனவரி மாதம் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், இலங்கை மீதான போர்க்குற்றங்களை விசாரணை செய்த பின், இலங்கை அரசை போர்க் குற்றவாளி அரசு என அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். இத்தீர்ப்பாயத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 11 நீதிபதிகள் பங்கு பெற்றிருந்ததும் குறிப்பிடத் தக்கது.

விசாரிக்குமா ஐ.நா.?

டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகள் வெளிவந்த பின்னர், கடந்த மார்ச் மாதம் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கை மீது விசாரணை நடத்த ஓர் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அக்குழுவிற்கென ஒருவரும் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அடுத்தடுத்து வெளியிட்ட அறிக்கைகளையும், போர்க்குற்ற ஆவணங்களையும் தொடர்ந்து, பான் கீ மூன் மீண்டும் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை அவசியம் தான் என்று கூறினார்.

இதனைக் கண்டு பதறிய இலங்கை அரசு மே 23 அன்று அவசர அவசரமாக, இது குறித்து தாமே ஒரு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்கிறோம் என்று ஐ.நா.விற்கு வேண்டுகோள் விடுத்தது, இலங்கை அரசு. இந்த விசாரணைக் குழுவும் கூட 2002ஆம் ஆண்டு புலிகளும் இலங்கை அரசும் செய்து கொண்ட போர் நிறுத்த உடன்பாடு ஏன் சீர்குலைந்தது என்பதனை ஆராய்வதற்குத்தான் என்பதும் வேதனையான வேடிக்கை. இந்த இலட்சணத்தில் இந்த விசாரணைக் குழுவை அமெரிக்கா வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

இவ்வேளையில், அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாகச் சென்றிருந்த இலங்கையின் வெளி யுறவுத்துறை அமைச்சர் பெரிஸ் ‘இலங்கையின் உள்நாட்டு விவகாரங் களில் தலையிட வேண்டாம்’ என்று கூறினார். ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழிப்பதும், முகாம்களில் அவர்களை அடைத்து வைத்துத் துன்புறுத்துவதும் தான் ‘உள்நாட்டு’ உரிமை என்று, வெளிப்படையாக சொல்லாமல் சொல்லியிருக்கிறது, சிங்கள அரசு.

இதனிடையே, இலங்கை அமைச்சர் பெரிஸின் பதிலை நிராகரித்துப் பேசிய பான் கீ மூன் விசாரணைக் குழு திட்டவட்டமாக அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விசாரணைக் குழுவிற்கு ஒத்து ழைப்பு வழங்கப் போவதில்லை என திமிருடன் அறிவித்தார், ஐ.நா.வுக்கான இலங்கை தூதர் பாலித கொஹன்னா. உலக நாடுகளின் சபையான ஐ.நா.வையே எதிர்த்துப் பேசுகின்ற அளவிற்கு இலங்கை அரசிடம் வெளிப்படுகின்ற திமிர், அவர்களிடமிருந்து முளைத்தது அல்ல. இந்தியாவிடமிருந்தும், சீனாவிடமிருந்தும், இலங்கைக்கு ஆயுத வியாபாரம் செய்த ஏனைய நாடுகளிடமிருந்தும் கிடைத்த திமிர் அது.

ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையான ஐ.நா. அமைப்பு அமைக்கும் விசாரணைக் குழு இலங்கை அரசை எந்தளவு குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் என்பது கேள்விக் குறியே என்றாலும், அதற்குக் கூட ஒத்துழைக்க மாட்டோம் என்று கூறுகிறது இலங்கை.

போர்க் குற்றத்திலும், இன அழிப்பிலும் ஈடுபட்ட சிங்கள அரசை உலகின் முன் விசாரணைக் கூண்டில் நிறுத்த தமிழினமும், உலக மனித உரிமை அமைப்பினரும் தொடர்ந்து போராட வேண்டியிருப்பதையே இது காட்டுகிறது.

Wednesday, April 21, 2010

உலகமயம் உருவாக்கிய நவீன சாமியார்கள் - க.அருணபாரதி

(தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் ஏப்ரல் 2010 இதழில் வெளியான கட்டுரை)





  • பரமஹம்ச நித்தியானந்த சுவாமிகள் என்றறியப்பட்ட ஒரு சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொண்ட காட்சிகள் ஊடகங்களில் வெளியானது. அவரது ஆசிரமங்கள் தாக்கப்பட்டன.



  • கல்கி பகவான் என்றறியப்பட்ட சாமியாரின் மடத்தில். அவரது பக்தர்களுக்கு போதை மருந்து கொடுத்திருந்தது அம்பலமானது.



  • சங்கரமடத் தலைவர் காஞ்சி ஜெயந்திரர், கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுதலையானார்.



  • சிறுவர்களுடன் பாலியல் வல்லுறவு வைத்துக் கொண்ட கிறித்தவ ஆயர்களை போப் ஆண்டவர் அனுமதித்திருந்தது, அம்பலமானது.


சமயவாதிகள் என சமூகத்தில் அறியப்படும் மேற்படியானவர்கள் அவ்வப்போது குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், மாட்டிக் கொள்வதும் அன்றாடச் செய்திகளுள் ஒன்றாகி விட்ட இன்றைய சூழலில், மக்கள் இந்தச் சாமியார்களிடம் சென்று சிக்கிக் கொள்ளும் நிலை, அதிகரித்துள்ளதன் காரணத்தை ஆராய்வது நமக்கு அவசியம்.


நித்தியானந்தரின் மோசடி அம்பலமானவுடன், தமிழக முதல்வர் கருணாநிதி திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‘என்ன தான் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தாலும் இந்த மக்கள் திருந்தப்போவதில்லை’ என்றும் தெரிவித்திருந்தார். நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து தேர்தலில் போட்டியிடும், தன் ‘கழகக் கண்மணி’களைக் கூட பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து, திருத்த முடியாத கருணாநிதியின் அறிக்கை வேடிக்கையானது.

மோசடி சாமியார்களை அம்பலப்படுத்தும் விதமாக செய்திகள் வெளியிட்ட காரணத்தால், ஊடகங்களுக்கு, ஏதோ சமூகப் பொறுப்புணர்வு வந்துவிட்டதாக நாம் கருதிக் கொண்டால் அது பிழையே ஆகும்.

சாமியார்களின் புனிதப் பிம்பத்தை உடைத்தெறியும் முன்பு, கோடிகளில் திரைமறைவு பேரம் நடத்தப்பட்டு, அதில் உரிய விலை கிடைக்கப் பெறாத காரணத்தினாலேயே, இந்த மோசடிச் சம்பவங்கள் வெளியிடப்பட்டிருக்கக் கூடும். பரபரப்புக் காட்சிகளை வெளியிட்டுக் காசாக்குவதில் கைதேர்ந்த, ஊடகங்களுக்கு இதில் நிச்சயம் பங்கு இருந்திருக்கும்.

ஏனெனில், நித்தியானந்தரோ, கல்கியோ சாதாரணமானவர்கள் அல்லர். பல்வேறு நாடுகளில் தனது ஆசிரமங்களின் கிளைகளைப் பரப்பி, அதிகார வர்க்கத்தினருடன் கை குலுக்கி நின்றவர்கள். முற்றும் துறந்த துறவிகளான இவர்களின் சொத்துகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஈடானவை. உலகமய காலகட்டத்திற்கு முன்பிருந்த, குறிச்சொல்லும் காவிச் சாமியார்களல்ல இவர்கள். மாடமாளிகைகள் போல ஆசிரமங்கள் அமைத்துக் கொண்டு, கண்டம் விட்டு கண்டம் பறந்தோடி, கோடிகளில் விளையாடுகின்ற நவீன உலகமய சாமியார்கள் தான் இவர்கள்.

நித்தியானந்தர் போன்ற மோசடிச் சாமியார்கள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளும் விதமாக முன்னின்று உழைத்த ஊடகங்கள், இன்று அவர்களது மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும் முன்னிற் கின்றன. ‘கதவைத் திற காற்று வரட்டும்’ என்ற தொடர் மூலம் நித்தியானந்தாவிற்கு அடையாளம் கொடுத்த ‘குமுதம்”, அவரது காமலீலைகளை தம் இணையதளத்தில் வெளியிட்டு காசு சம்பாதிக்கவும் கூச்சப்படவில்லை. ‘நாங்களும் ஏமாந்து விட்டோம்’ என்று அப்பாவி பக்தர்களைப் போல் இதற்கு ஒரு சமாதானமும் கூறிக் கொண்டது. ஊடகங்களின் இந்த கூச்சமற்றத் தன்மை தன்னிலிருந்து பிறந்ததில்லை. தம்மை இயக்கும் முதலாளியத்திலிருந்து பிறந்தது அது.

கடவுள் நம்பிக்கையின் பெயரால், சோதிடப்பலன், எண் கணிதம், கைரேகை என பல்வேறு நம்பிக்கைகளை வீட்டிற்குள் திணிக்கும் தொலைக்காட்சிகளும், அவற்றையே பிரதானமாகக் கொண்ட பத்திரிக்கைகளும், உழைக்கும் மக்களிடையே அவர்களது எதிர்காலம் குறித்த அச்சத்தை கிளறிவிடுகின்றன. இதன் விளைவாக, மக்கள் இது குறித்த ஆழ்ந்த சிந்தனையிலேயே விழுந்து கிடக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தமது மொழி, இனம், கல்வி, வாழ்வாதாரம் என சராசரி மனிதர்களின் உரிமைகள் அனைத்தும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இன்றைய உலகமயச் சூழலில், ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் இந்த ‘எதிர்காலம் குறித்த அச்சம்’ என்ற காரணி, மதங்களின் இருப்புக்கு உதவுகிறது.

முதலாளியத்தின் உழைப்புச் சுரண்டலால் தம் வசந்தங்களை இழந்து, ஒடுக்கப்பட்டு நிற்கின்ற உழைக்கும் மக்கள், தம் அவலங்களுக்கு காரணம் முதலாளியமே என்று எளிதில் உணர்ந்து விடுவதும் இல்லை. அவ்வாறு அவர்கள் உணராததற்கு முக்கியக் காரணியாக மக்களிடையே நீடிக்கும் கடவுள் நம்பிக்கையும் விளங்குகிறது. தாம் அறிந்து கொள்ள முடியாத பலவற்றுக்கும் கடவுளின் பெயரால் நியாயம் கற்பித்துக் கொள்கிற ‘சமரச’ மனநிலையே இதனை தீர்மானிக்கிறது.

இதன் பின்னணியில் தான், ‘தம் பிறப்பையும், தம் வாழ்வையும், தம் துன்பங்களையும் தீர்மானிப்பது கடவுள் தான்’ என்று, தமக்குத் தாமே கற்பிதம் செய்து கொள்ளுமாறு உழைக்கும் மக்கள் பணிக்கப்படுகின்றனர். அதனை அவர்கள் பெருமளவில் ஏற்றுக் கொண்டும் உள்ளனர்.

கடவுள் நம்பிக்கையின் பெயராலும், விதியின் பெயராலும், உழைக்கும் மக்கள் மீதான உழைப்புச் சுரண்டல் நியாயப்படுத்தப்படுவதனால் தனியுடைமை யானது மக்களிடம் நிலவும் கடவுள் நம்பிக்கையை நிறுவனமயப்படுத்துகிறது. மதநிறுவனங்களை வளர்த்து விடுகிறது.

உழைக்கும் மக்கள் மீதான உழைப்புச் சுரண்டல் தீவிரப்படுத்தப்பட்டு வரும் இன்றைய உலகமய காலகட்டத்தில், உழைக்கும் மக்கள் கொடுந்துன்பம் அடைந்து வருகின்றனர். வேலை வாய்ப்பில் ஒரு நிச்சயமற்ற நிலை, சிறு தொழில் - வணிக நிறுவனங்கள் தொடர முடியுமா என்ற நிச்சயமற்ற நிலை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மன உளைச்சலிலேயே உழல்பவர்கள் அதிகம். மக்கள் தம் துன்பங்களுக்கு மருந்து தேடி மத நிறுவனங்களிடம் சிக்குவதும் அதிகரித்துள்ளது. ஏழை எளிய மக்கள் தம் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள சிறு சிறு சாமியார்களிடமும், படித்த - நடுத்தர வர்க்க மக்கள் நித்தியானந்தர் போன்ற நவீன சாமியர்களிடமும் சிக்குகின்றனர்.

இதே காலகட்டத்தில் தான், சுரண்டும் மேட்டுக் குடியினர் தம் சுரண்டலின் மூலமாக கிடைத்த பணத்தை பதுக்கிக் கொள்ளவும், அந்தச் சுரண்டலுக்கு துணை போன அரசியல்வாதிகள் தம் கருப்புப் பணத்தை பதுக்கிக் கொள்ளவும் ஓர் இடமும் தேவைப்பட்டது. அவ்விடத்தையும் இந்த நவீன சாமியார்களே நிறைவு செய்தனர்.

சுரண்டி சேர்த்துப் பதுக்கியப் பணம் குறித்த கவலையால் நிம்மதியிழக்கும் மேட்டுக்குடியினர் “எதையோ” இழந்து விட்டதாகப் புலம்பியபடி இந்த நவீன சாமியார்களிடம் தான் வருகிறார்கள். அண்மையில், தில்லியில் ‘ஜீவ் முராத் திவிவேதி என்ற சாமியார் பகலில் யோகம், தியானம், சொற்பொழிவு என்று நடித்து விட்டு, இரவில் விபச்சாரத் தரகு வேலை பார்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்டு கைதான பெண்கள் பலரும் படித்த, நடுத்தர மற்றும் மேட்டுக்குடிப் பெண்கள் தான் என்பதும் தெரியவந்தது.

இந்த நவீன சாமியார்கள் குறிவைத்து, இழுப்பதும் இது போன்ற பின்னணி கொண்டவர்களைத் தான். பணக்கார வெளிநாட்டு பக்தர்களின் மனநிலையும் கூட அது தான். இவ்வாறு தான் இந்த நவீன சாமியார்கள் உருவெடுக்கிறார்கள்.

நாம் அன்றாட வாழ்வில் மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் முறைகள், பொருளியல் ரீதியாக தமக்குக் கீழானவர்களிடமும் அன்பு செலுத்துதல், வேலைப்பளு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கு தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி, மனம் திறந்து பேச ஏற்பாடு செய்தல், தமது மன உளைச்சலை போக்கும் விதமாக அவர்களை நடனம் ஆட விடுதல், வாய்விட்டு கத்தக் கூறுதல், ’பேரானந்தம்’ - ‘மகிழ்ச்சி’ போன்ற பற்பலப் பெயர்களிட்டு அவர்களை மனம் விட்டு சிந்திக்கக் கூறுதல். இவை தான் இந்த நவீன சாமியார்கள் செய்பவை. இதற்காக ஆயிரக்கணக்கில் அவர்கள் கட்டணம் வசூலிப்பதும் உண்டு. சொற்பொழிவுகளுக்கு, சில மணிநேரங்கள் அவருடன் கழிக்க, அவர் ஆசிர்வாதம் செய்வதற்கு என இலட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதும் உண்டு.

மன உளைச்சலுக்கு ஆளான தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் பலரும் இந்த நவீன சாமியார்களின் பிடியில் விழுவது இன்று அதிகரித்துள்ளது. மன உளைச்சலைப் போக்க அந்த சாமியார்கள் கொடுக்கும் பயிற்சிகள் எதுவும் தேவையில்லை. சின்னஞ்சிறு குழுந்தைகளிடம் குடும்ப உறவுகளிடமும் மனம் விட்டுப் பேசினால் கூட மன உளைச்சலைப் போக்கி விடலாம் ஆனால், கணினி, கைப்பேசி என நீண்ட நேரம் இயந்திரங்களுடன் இயங்கியே பழகி விட்ட, இவர்களுக்கு மனிதர்களுடன் பழகுவது அபூர்வமானதல்லவா? உயிரற்ற இயந்திரங்களுடன் வாழ்ந்து, உயிருள்ள இயந்திரங்களாகவே மாறிப் போன தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு இதற்கென்று நேரம் வேண்டும் அல்லவா? எனவே, இதற்கென தனியாக நேரம் ஒதுக்கி அவர்கள் நவீன சாமியார்களை நாடுகிறார்கள்.

“மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!” என்று சுவாமி சுகபோதானந்தா ஆனந்த விகடனில் எழுதியத் தொடர், இந்த நோக்கிலேயே எழுதப்பட்டது. 2008ஆம் ஆண்டு உலகமயப் பொருளாதாரப் பின்னடைவுக்குப் பின், உழைப்புச் சுரண்டல் தீவிரப்படுத்தப்பட்டதால், உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை போக்கும் விதமாக வெளிவந்த சின்னத்திரை சிரிப்பு நிகழ்ச்சிகள் வெற்றி பெற்றதன் பின்னணியிலும், உலகமயமே நிற்கிறது. கிராமங்களை அழித்த உலகமயம், நகரங்களில் இளைஞர்களை இடம் பெயர்த்ததன் பின்னணியில் தான், கிராமத்துக் கதைப் பின்னணி கொண்ட தமிழ்த் திரைப்படங்கள் வெற்றி பெற்று ஓடியதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். கிராம வாழ்வை இழந்த இளைஞர்கள் இவ்வாறான படத்தில் ஆறுதல் அடைகிறார்கள்.

இவ்வாறு, உழைப்புச் சுரண்டலால் மன உளைச்சலில் சிக்கித் தவிக்கும் மக்கள், பிறரோடு அன்பாக தாம் பேசுவதற்கும், பழகுவதற்கும் கூட ஓரு சாமியாரின் வழிகாட்டுதலுக்காக நிற்க வேண்டிய அவல நிலையை, உலகமயம் நமக்கு உருவாக்கித் தந்திருக்கிறது.

இந்தச் சாமியார்கள் இதற்கென பல்வேறு பயிற்சிகள் அளிப்பதோடு மட்டுமல்லாமல், உலகமயம் வலியுறுத்துகின்ற நுகர்வியப் பண்பாட்டையும், தம் போதனைகள் வாயிலாக புதிய வகையில் மக்கள் மனதில் புகுத்தும் வேலையை செய்கிறார்கள். இதற்காகவே, இவா;களை மேலும் ஊக்கமளித்து வளர்க்கின்றன, ஊடகங்கள். இந்த போதனையைத் தான் உலகமயமும் அதனால் பயன்பெறுகின்ற ஆளும் வர்க்கங்களும் விரும்புகின்றன.

‘இன்றுள்ள சமூக அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு யோசிங்கள்’ என்கிறது உலகமயம். அதனையே இந்த நவீன சாமியார்களும் வழிமொழிகிறார்கள்.

“அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் நீயும் நானும் தோழர்களே! என்று கூறிய சேகுவேராவின் கருத்து மிகவும் மோசமான கருத்து. அவரை இளைஞர்கள் முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது’’ என ஒரு நூல் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாகவே பேசினார் ஜக்கி வாசுதேவ்.

‘புவி வெப்பமயமாதலிலிருந்து உலகைக் காக்க மரம் நடுங்கள்’ என்று, மரங்கள் நடுவதற்கான திட்டம் தீட்டிய ஜக்கி வாசுதேவ், முதலாளிகளின் இலாப வேட்டைக்காக உலகெங்கும் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டதன் விளைவு தான் புவி வெப்பமயமாதல் என்ற உண்மையை பேசுவதில்லை. அதற்கெதிராகப் போராடுவதும் அவரைப் பொறுத்தவரை “வன்முறை கருத்து”.

அதாவது, ‘போராட்டம் என்பதே கூடாது. ஒவ்வொரு தனிமனிதரும் அவரவர் வாழ்க்கையை ஒழுங்காய் நடத்தினால் போதும்” என்று கூறி, மனிதர்களை குழுவாக இயங்க விடாமல் செய்து, உதிரிகளாக்கிட விரும்புகின்ற முதலாளியத்தின் குரலைத் தான் இந்த நவீன சாமியார்கள், “உள்ளுணர்வு”, “தனிமனித ஒழுக்கம்’, “தன்னிலிருந்து யோசி” என்று பல்வேறு வடிவங்களில் கூறுகிறார்கள்.

இலாப வேட்டைக்காக காத்து நிற்கும் உலகமயம், ‘அனைத்துப் பொருட்களையும் நுகருங்கள்’ எனக் கூறுகின்றது. அதனையே, “அத்தனைக்கும் ஆசைப்படு” என்கிறார்கள், இந்த நவீன சாமியார்கள்.

‘பாலியல் சுதந்திரம்’ என்ற பெயரில் கட்டுப்பாடற்ற பாலியல் உறவுகளை வளர்க்கக் கோருகிறது உலகமயம். இதன் மூலம், குடும்ப உறவுகளை சிதைத்து, மனிதர்களை உதிரிகளாக்கி இலாபம் கொழுக்கவும் அது திட்டமிடுகிறது. இதனையே வழிமொழிந்து, ‘உன்னை மட்டும் யோசி, உன்னிலிருந்து தான் எல்லாம் பிறக்கிறது’’ என்று போதிக்கிறார்கள் நவீன சாமியார்கள். ”இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்; மாற்ற முயலாதே” என்பதும் சிறீ சிறீ ரவிசங்கரின் உபதேசம்.

பெருமளவில் நிதிக்குவிந்து நிறுவனமயமான காரணத்தால் இந்த நவீன சாமியார்களுக்கு எளிதில் அரசியல் செல்வாக்கும் வந்து சேர்கிறது. சந்திராசாமி, ஜெயேந்திரர் போன்ற மோசடி சாமியார்கள் ஒரு நாட்டிற்குள் உள்ள அரசியல்வாதிகளுக்கு இடையே தரகு வேலை பார்க்கும் நிலை மாறி, இன்று சிறீ சிறீ ரவிசங்கர் போல பல நாடுகளுக்கு இடையே தரகு வேலை பார்க்கும் நிலையாக இந்த நவீன சாமியார்களின் நிலை முன்னேறியுள்ளது.

மதங்களைக் கடந்த ஆன்மிகம் என இந்த நவீனச் சாமியார்கள் கூறினாலும், அவர்கள் மூழ்கிக் கிடப்பதென்னவோ இந்துத்துவ அரசியலில் தான். இதனை அவர்களது, இந்துமத சார்பு - வடமொழி சார்பு நிலையை மட்டும் வைத்து உணர்த்தவில்லை. நேரடியான அரசியல் நடவடிக்கையின் மூலமாகவே உணர்த்தியிருக்கின்றனர்.

சிறீ சிறீ ரவிசங்கர், ராமர் பாலத்தை முன்னிறுத்தி சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்துக் கொண்டுள்ளார். இட ஒதுக்கீட்டையும் ரவிசங்கர் எதிர்க்கிறார். நித்தியானந்தர் தலைமறைவானதும் இந்து மதவெறிக் கட்சியான சிவசேனாவின் தலைவர் தான் செய்தியாளர்களை சந்தித்தார்.

எனவே, இந்த நவீனச் சாமியார்களின் குற்றங்களை தனிநபர் குற்றங்களாக மட்டும் கருதாமல் அதனை சமூகப் பின்னணியுடன் தொடர்பு படுத்தி ஆராய்தலே நமக்கு உண்மைக் குற்றவாளியை அடையாளம் காட்டும்.

வரம்பற்ற வேலை நேரம், தலையை கொதிக்க வைக்கும் வேலைச்சுமை, எந்த நேரத்திலும் வெளியில் வீசப்படலாம் என்ற நிலை இவற்றுக்கிடையே உயர் ஊதியத்திற்காக பணியாற்றிக் கொண்டு, குடும்ப உறவை, மன அமைதியை, சமூக வாழ்க்கையை இழந்து தவிக்கும் உயர் நடுத்தர இளைஞர்களுக்கு உடனடி நிவாரணமாக பலவித போதைகள் வழங்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், இந்த உலகமய உயர்நுட்ப சாமியார்களின் உபதேசங்கள். காரணங்களைப் போக்காமல் விளைவுகள் மீது கவனத்தைத் திருப்பும் உலகமய உத்திகளில் ஒன்று தான் சாமியார்களின் வளர்ச்சி.

இதைப்புரிந்து, காரணங்களுக்கு எதிராகப் போராடுவதே மக்கள் விடுதலைக்கு வழி.

(தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் ஏப்ரல் 2010 இதழில் வெளியான கட்டுரை)

Wednesday, December 02, 2009

கலகத்தை எதிர்நோக்குகிறது உலகம்



“இங்கு உணவில்லை, மருந்தில்லை, கல்வியில்லை, வேலையில்லை, நம்பிக்கையும் இல்லை. மக்கள் இங்கு நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு மெல்லிய இனப்படுகொலை (It is a slow genocide). கடவுள் தான் எங்களுக்கு உதவ வேண்டும், ஏனெனில் இவ்வுலகம் எங்களுக்கு உதவாது...”


வறுமைக்கு பெயர் பெற்ற சோமாலியா நாட்டில் தற்பொழுது என்ன நிலைமை நிலவுகின்றது என்பதை, அங்கு பணியாற்றுகின்ற ‘எல்லைகள் கடந்த மருத்துவர்கள்’ - மெடிசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ் - Médecins sans Frontières (MSF) என்ற பன்னாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனம், மேலுள்ளவாறு அறிவித்திருக்கிறது. ஏறத்தாழ 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சோமாலியாவில் உச்சத்தில், தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது, பஞ்சப்பேய்.


கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம், சோமாலியாயில் குடும்பம் ஒன்றிற்கான உணவு மற்றும் குடிநீர்ச் செலவு மாதம் ஒன்றிற்கு 92 டாலர்களாக இருந்தது. அது இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 171 டாலர;களாக, சுமார் 85 விழுக்காடு உயர்ந்துள்ளது. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதையும், உடைகள் எடுப்பதையும் தவிர்த்து விட்ட, சோமாலியா மக்கள் அதிகமானோர் உள்ளனர். பலர் கிடைக்கிற உணவை சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர்.

மேலும், சத்தான உணவு கிடைக்காததால், ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் இங்கு நீடிக்கிறது. கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர். ஆப்பிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலை தான் நீடிக்கிறது. அதாவது ஆப்பிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்கு பலியாகிக் கொண்டிருக்கிறது.


வேலையின்மையாலும், வறுமையாலும் வாடி வதையுறுகின்ற, ஆப்ரிக்க நாடுகளுக்கு, இந்நிலை திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. கடந்த 1966-1970 ஆண்டுகளில், உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த ஆப்பிரிக்க நாடுகள், அப்பொழுதே சுமார் 1.3 மில்லியன் டன் உணவுப் பொருட்களை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளமான பகுதியாகத் தான் இருந்தது. ஆனால், இன்றோ பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் அவற்றின் 25 விழுக்காட்டிற்கும் மேலான உணவை முதலாளிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்ய வேண்டியளவிற்கு கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

முதலாளிய நாடுகளின் கண்ணை உறுத்திய ஆப்பிரிக்க நாடுகளின் இயற்கை வளம், பணக்கார நாடுகளால் சூறையாடப்பட்டது. தமது இராணுவ மேலாதிக்க நடடிவக்கைகள் மூலமும், ‘பொருளாதார ஒருங்கிணைப்பு’ என்ற பெயரிலான, உணவு உற்பத்தியை சீர்குலைக்கிற சந்தைப் பொருளாதாரச் சுரண்டல் திட்டங்களின் மூலமாகவும் ஆப்பிரிக்க நாடுகளை சிதைத்ததில், முழு பங்கும் ஏகாதிபத்திய நாடுகளையே சேரும்.

இவற்றின் விளைவாக, தம் வளங்களையும், உரிமைகளையும் இழந்து, பரிதவிக்கின்றனர், அந்நாட்டு மக்கள்.


உலகமய முதலாளியத்தின் சுரண்டல் தீவிரவாதத்தின் எதிர் விளைவாக, ஆப்பிரிக்கா மட்டுமின்றி உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இது தான் இன்றைய உலக நிலைமையாக உள்ளது.

முதலாளிய இலாப வெறியின் விளைவாக தோற்று விக்கப்பட்ட, தற்போதைய பொருளியல் நெருக்கடியை முன்னிட்டு, நிறுவனங்கள் மூடப்படுதல், வேலை யிழப்பு அதிகரித்தல், தொழிலாளர்கள் மேலும் அதிகமாக சரண்டப்படுதல், சுரண்டுகின்ற நிறுவனங்களுக்கு இன்னும் அதிகமான வரிச்சலுகை களை அள்ளி வீசுதல், இவ்வாறான தொடர் நடவடிக்கை களின் காரணமாக விலை வாசி உயர்தல் என பல்வேறு வடிவங்களில் உலக மக்கள் இன்று வாட்டப்பட்டு வருகின்றனர்.

பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (International Labor Organization- ILO), உலகில் ஒரு நாளுக்கு 2 டாலருக்குக் கீழ் வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனாக உயரும் என்று அறிவித்திருக்கிறது. உலகமய வேட்டைக்காரர்களின் நாடான அமெரிக்காவிலோ, வேலையின்மை யின் விகிதம் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத வகையில், 9.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இவ்வாண்டு மட்டும் சுமார் 106 அமெரிக்க வங்கிகள் திவாலாகியுள்ளன. (காண்க: பினான்சியல் எக்ஸ்பிரஸ், 26.10.09). ஒவ்வொரு 15 மாதத்திற்கும் 1 டிரில்லியன்(1000 கோடி) டாலர் கடனாளியாகிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.



“மனித குல வரலாற்றில் இவ்வாறான பஞ்சத்தை, முதன் முறையாக இவ்வுலகம் எதிர் கொள்கிறது” என்று ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய (UN’s Food and Agriculture Organisation FAO) அமைப்பின், வளர்ச்சித்துறை இயக்குநர் கோஸ்டஸ் ஸ்டமௌலிஸ் குறிப்பிடுகிறார். அவ்வமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, மிக அதிகபட்சமாக, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஆசிய - பசிபிக் பகுதிகளில் 642 மில்லியன் மக்களும், சகாரா ஆப்பிரிக்கப் பகுதிகளில் 265 மில்லியின் மக்களும், லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் பகுதிகளில் 53 மில்லியன் மக்களும் பட்டினியில் உழல்கின்றனர்.


முதலாளிய நாடுகளில் சுமார் 15 மில்லியன் மக்கள் பட்டினி கிடப்பதாகவும் அவ்வமைப்புத் தெரிவித்திருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம், வெளியிடப்பட்ட, ஐக்கிய நாடுகள் சபையின் உணவுத்துறை நிறுவனத்தின் ஆண்டறிக்கை (United Nations - Food Agency, Annual report 2009), உலகம் முழுவதும் சராசரியாக 100 கோடி மக்கள் பட்டினியில் உழன்று கொண்டிருப்பதாகவும் அறிவித் துள்ளது. உலக நாடுகள் விவசாயத் துக்கு முன்னுரிமை கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவ்வறிக்கை எச்சரிக்கிறது.


விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படாததும், சேவைத்துறை ஊட்டி வளர்க்கப்படுவதும், உற்பத்தியில் ஈடுபடுத்தப்படாத பெரும் நிதி மூலதனச் சூதாட்டங்களின் ஊக்குவிப்பும் தான் உலகமயத்தை உயிருடன் வைத்துள்ளன. வெளிப்படையாக இதனைக் குற்றம் சாட்டாமல், மறைமுகமாக அவ்வறிக்கை இதனை தெரிவித் திருப்பதன் மூலம், இவ்வறிக்கை, உலகமயத்திற்கு எதிரான குற்றப் பத்திரிக்கையாகவே விளங்குகின்றது.

மேலும் அவ்வறிக்கையில்,

· உலகின் 6இல் ஒரு மனிதர் பசியில் உழன்று கொண்டிருக்கிறார்,

· உணவு கிடைக்காமலும், போதிய சத்தின்மையாலும், ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது,
· சகாராப் பகுதி ஆப்பிரிக்க நாட்டு மக்கள் தம் வாழ்நாளில் இதுவரை சந்தித்திராக விலை வாசி உயர்வையும், வறுமையையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்,


என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


‘உணவு இல்லாமல் போனால், மக்கள் கலகம் செய்வார்கள், இடம் பெயர்வார்கள் அல்லது இறப்பார்கள். எனவே இது உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகவும் அமையலாம்’ என்கிறார் ஐ.நா. உணவுத்திட்டத்தின் இயக்குநர், ஜோசட் ஷரன். அவர் தெரிக்கும், ‘உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை’ என்ற சொற்றொடரை, உலகமய முதலாளி யத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


இடைவிடாத சுரண்டல்களின் மூலம், ஏழை நாடுகளை சீரழித்த முதலாளிய நாடுகள், ‘யானைப் பசிக்கு சோளப் பொரி’ என்பது போல, தம் சுரண்டலின் ஒரு மிகச்சிறிய பகுதியை ‘ஏழை நாடுகளின் வறுமையைப் போக்குவதற்காக’ என்ற பெயரில் எலும்புத் துண்டுகளென வீசுயெறிகின்றன. அதற்கான தரகராக செயல்படுவது தான், ஐ.நா. உணவுத்துறைத் திட்ட நிறுவனத்தின் வேலை.

தற்பொழுது முதலாளிய நாடுகள் பொருளாதார நெருக்கடியில், சிக்கியிருப்பதால், பல்வேறு காரணங்களைச் சொல்லி இந்த சிறு உதவித் தொகையையும் கூட நிறுத்தி வைத்துள்ளன.


சோமாலியாவில், உணவுக்காகவும், உரிமைக்காகவும் உழைக்கும் மக்கள் ஆயுதமேந்தி நடத்தி வருகின்ற ஒருங்கிணைக்கப்படாத கலகங்களை ‘தீவிரவாதம்’ என்று முத்திரைக் குத்தி, ‘தாம் வழங்கும் உதவிகள் தீவிரவாதிகளுக்குத் தான் போய்ச் சேரும்’ என்று சோமாலியாவிற்கான நிதி உதவிகளை ஒருமையில் நிறுத்தியுள்ளது அமெரிக்கா. உணவு கொடுத்தால் அது தீவிரவாதிகளுக்குப் போய்ச் சேரும் என்று வேடம் போடுகின்ற அமெரிக்கா, சோமாலியா கலகக்காரர்களை அடக்கும் பொருட்டு, வலிமையும், பயிற்சியும் இல்லாத அந்நாட்டின் சிறு இராணுவத்திற்கு 40 டன் அளவிற்கான ஆயுதங்களை மட்டும் அள்ளி வீசியிருக்கிறது.


இவ்வாயுதங்கள் அல்-கொய்தா போன்ற இசுலாமிய அடிப்படைவாத இயக்கங்களுக்கு வணிகம் செய்யப்படுகின்றன என்று சோமாலியா நாட்டின் அரசியல்வாதிகள் சிலரே வெளிப்படையாக எச்சரித்துள்ள போது கூட அமெரிக்காவிற்கு அது பற்றியெல்லாம் கவலையில்லை. உழைக்கும் மக்களின் கலகங்களை அடக்குவதில் மட்டுமே அமெரிக்கா அதீத கவனம் செலுத்துகிறது.


இவ்வாறு, ஏகாதிபத்திய நாடுகள் தாம் வீசும் எலும்புத் துண்டுத் தொகையைக் கூட, கொடுக்காத நிலையில், இவ்வாண்டு ஐ.நா.வின் உணவுத்துறை திட்ட அமைப்பிற்கான உதவி நிதி கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத வகையில், குறைந்து விட்டதாகவும் அவ்வமைப்பு கவலைத் தெரிவித்துள்ளது.

கடந்த சூலை மாதம் இத்தாலியில் நடந்த ஜி8 எனப்படுகின்ற பணக்கார நாடுகளின் மாநாட்டிற்கு முன்பாக, ஐ.நா. உணவுத்துறை அமைப்பு இது குறித்து வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை. கடந்த 2005 ஆம் ஆண்டு நடந்த ஜி8- பணக்கார நாடுகளின் மாநாட்டில், ஏழை நாடுகளுக்கான உதவித் தொகையை ஆண்டுக்கு 50 பில்லியன் டாலர்கள் அதிகரிப்போம் என்று கூட்டாக அறிவித்திருந்தன, பணக்கார நாடுகள். ஏழை நாடுகளை மேலும் சுரண்டுவதற்கும், அந்நாடு களில் நுழைந்து மேலாதிக்கம் செய்வதற்குமே இந்நிதி பயன்படுத்தப்படும் என்ற போதும் கூட, பணக்கார நாடுகள் இதற்கென ‘உதவ’ இப்பொழுது தயாரில்லை.


இவ்வாறான தொடர் நடவடிக்கைகளின் மூலம், ‘உலக அளவில் 2015ம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம்’ என்கிற முதலாளிய நாடுகளின் போலி முழக்கத்தை, அந்நாடுகளே காற்றில் பறக்க விட்டுள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளில் தான் இந்நிலைமை என்றால், வல்லரசுக் கனவில் மிதந்து கொண்டிருக்கும் இந்தியாவில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. இன்றைய இந்தியாவில், 5 வயதுக்கு கீழான எடை குறைவுள்ளக் குழந்தைகளின் விகிதம் மட்டும் 42.5 விழுக்காடு. போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை, உகாண்டா பாகிஸ்தான், வங்கதேச நாடுகளை விட பின்தங்கிய நிலையில் தான் இந்தியா உள்ளதென உலக நாடுகளுக்கிடையே கணக்கெடுக்கப்பட்ட பசி அளவுக் குறியீடு (Global Hunger Index 2008) குறிப்பிடுகிறது. இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள 88 விழுக்காட்டு பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப் பட்டவர்களும், 80 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்களும், 85 விழுக்காட்டு முஸ்லிம் மக்களும் ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் ரூ.20க்கும் கீழ் தான் வருமானம் பெறுகிறார்கள். இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலும், குடிசைகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை மட்டும் 150 மில்லியன். ஆசியாவின் மிகப்பெரும் குடிசைப் பகுதியான தாராவி இந்தியாவில் தான் இருக்கிறது. அதில் வாழுகின்ற பெரும்பான்மை மக்கள் தமிழர்கள் ஆவர். மகாராட்டிரத்தின் 15 மாவட்டங்களில் ஊட்டச்சத்துக் குறைவால், ஏப்ரல் 2003லிருந்து மே 2004க்குள் இறந்த 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 9,000.

இப்படிப்பட்ட இந்தியா தான் ‘வல்லரசாக’ப் போகிறதென்று நம்மை கனவுக் காணச் சொல்கிறது, இந்திய ஆளும் வர்க்கம். ஒரு சிலரின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமான வளர்ச்சி என்று திரிக்கும், இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் அதன் ஊதுகுழலான முதலாளிய ஊடகங்களுக்கும, இப்படிப்பட்ட ஏழ்மையில் உழலும் ‘இந்தியா’வின் கோர முகம் தெரிவதற்கான வாய்ப்பில்லை தான்.


அமெரிக்கா உள்ளிட்ட முதலாளிய நாடுகளுடனான உலகமயப் பிணைப்பு காரணமாக, இந்தியத் தொழிற்துறை ஆட்டம் கண்டுள்ளதை அரசே வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆலை மூடல்களும், வேலை இழப்புகளும் நுணுக்கமாக இங்கு நடந்து கொண்டிருக்கின்றன. தகவல் தொழில்நுட்பத் துறைத் தொழிலாளர்களை மேலும் சுரண்டிக் கொழுப்பதற்கு வசதியாக, ஏற்கெனவே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அரை குறையாக அமல்படுத்தி வருகின்ற தொழிலாளர் நலச் சட்டங்களை 2 ஆண்டுகளுக்கு அமல்படுத்தத் தேவையில்லை என்று இந்திய அரசு அறிவித்திருக்கிறது. (காண்க: தி எகனாமிக் டைம்ஸ், 1.09.09).


இவ்வறிவிப்பின் மூலம், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பணிநேரம், குறைந்தபட்சக் கூலி, விடுப்பு உள்ளிட்ட அனைத்திலும் தம் விருப்பம் போல் நிறுவனங்கள் நடந்து கொள்ளலாம் என்ற இந்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது. இவ்வாறு, வரிச்சலுகை என்ற பெயரில், பல்வேறு தனியார் நிறுவனங்களும் மக்களை சூறையாடிக் கொள்ள தங்குதடையின்றி அனுமதி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.


இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள முதலாளிய ஆளும் வர்க்கங்கள் அனைத்தும், சர்வாதிகாரத் திமிருடன் தொழிலாளர் களை தம் விருப்பம் போல் சுரண்டிக் கொள்வதற்கு முதலாளிகளுக்கு, போலிச் சட்டங்களையும் மீறி அனுமதியளித்துக் கொண்டிருக்கின்றன. முதலாளிகளின் விசுவாசப்படையான அரச அதிகார வர்க்கத்திற்கு எதிராக, அவ்வப்போது கோபத்துடன் குமுறி எழுகின்ற மக்களின் பதிலடிகள், கலகங்களாக பிறப்பெடுத்து, ஆளும் வர்க்கத்தை நடுநடுங்கச் செய்கின்றன.


இதனால் தான், சோமாலியா விலும் கென்யாவிலும் நடக்கிற உழைக்கும் மக்களின் கலகங்களை ‘தீவிரவாதம்’ என்று பெயரிட்டு, அமெரிக்கா அலறுகின்றது. கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில், நொய்டாவில் கிராசியாநோ என்ற தனியார் நிறுவனத்தில், பணியிலிருந்து தூக்கியெறியப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள், அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரியை அடித்துக் கொன்றதும், அண்மையில் கோவையில், 42 தொழிலாளர்களை வேலையிலிருந்து வீசியெறிந்த பிரிக்கால் ஆலையின் நிர்வாகத்திற்கு, எதிரான போராட்டத்தில், அந்நிறுவனத்தின் நிர்வாகிக் கொல்லப்பட்டதும், உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான உழைக்கும் மக்களின் பதிலடிகள் தான். தொழிலாளர்களின் இந்த பதிலடிகளை ‘வன்முறை’ என்று சாடுகின்றன, இந்திய ஆளும் வர்க்கங்கள்.


சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனத்தைச் (International Food Policy Research Institute- IFPRI) சேர் ந்த பொதுச் சுகாதார ஆய்வாளர், பூர்ணிமா மேனன் அவர்களிடம், மக்களின் வறுமை குறித்து கேட்ட போது, “ஒரு அமைப்பின் தோல்வியை தான் நாம் இன்று காண்கிறோம். அது ஏதோ செய்கிறதே தவிர, பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை” என்று கூறுகிறார். (“I see a system failing. It is doing something, but it is not solving the problem”) (காண்க : தி நியுயார்க் டைம்ஸ்,மார்ச் 12, 2009).


அவர் கூற முற்படும் அமைப்பு, தற்பொழுது நிலவுகின்ற முதலாளித்துவ சமூக அமைப்பு. அவ்வமைப்பின் தோல்வியைத் தான் இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது, ஆனால் மிகக் கொடூரமான முறையில்.

உலகமயம் ஏவுகின்ற வர்க்க ஒடுக்குமுறையை மட்டுமல்லாது, இந்தியம் ஏவுகின்ற இன ஒடுக்குமுறை யையும் தாங்கி நின்று கொண்டிருக் கிறது, நம் தமிழ்த்தேசம். இவற்றை எதிர் கொள்ளும் போர்வாளாக தமிழ்த்தேசியத்தை நாம் கைகளில் ஏந்த வேண்டியச் சூழலை, வரலாறு நமக்கு கொடுத்திருக்கிறது.



(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2009 இதழில் வெளியான எனது கட்டுரை)


Visit : www.tamizharkannotam.blogspot.com, www.keetru.com


Wednesday, October 21, 2009

பன்றிக் காய்ச்சலும் பன்னாட்டுக் கொள்ளையும் - க.அருணபாரதி


இனக்குழு சமூகத்தில் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து வந்த மனித இனம், முதலாளியத்தின் வளர்ச்சிப் போக்கால், இயற்கையின் மீதே படையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. வெப்பமயமாதல் முதல் இன்றைக்கு உலகை அச்சத்திற்குள்ளாக்கி இருக்கும் பன்றிக் காய்ச்சல் வரையான அனைத்து நிகழ்வுகளும் முதலாளியத்தின் வழிநடத்தலால் மறைமுகமாகப் பிறப்பெடுத்தவையே.

இராசாயன உணவுமுறையும், இயற்கைக்கு எதிரான வாழ்முறையும் ஏற்படுத்திய கோலங்களாகவே நோய்கள் மனித இனத்தை ஆட்டிப்படைக்கின்றன. எய்ட்ஸ், ஆந்த்ராக்ஸ், பிளேக், சார்ஸ், பறவைக் காய்ச்சல் என பலவிதமான தொற்று நோய்களும் மக்களுக்கு தான் பாதிப்பு. ஆனால், மருந்து முதலாளிகளுக்கு இவை சந்தையை உருவாக்கிய வரங்கள். அந்த வரிசையில் தற்பொழுது ‘பன்றிக் காய்ச்சல்’ நோயும் இடம் பிடித்துள்ளது.

வெறும் 25லிருந்து 60 ரூபாய் வரை மதிப்புள்ள ஒரு முகமூடியை, மக்களுக்கு அச்சமூட்டிய ஊடகங்களின் துணையால், ரூ. 300, ரூ.500 வரை விற்க முடிகின்ற நிலையை இது ஏற்படுத்தியுள்ளது. ‘பன்றிக்காய்ச்சல்’ எனப்படுகின்ற இந்நோய் அதன் பெயருக்கேற்ப பன்றிகளில் இருந்து பரவும் நோய் அல்ல. இந்நோய்க்குக் காரணமான ‘H1N1‘ என்ற கிருமி பன்றிகளில் இருந்து உருவானதன் காரணமாகவே இப்பெயர் ஏற்பட்டது. வழக்கமாக பன்றிகளுக்கு அவ்வப் போது ஏற்படும் தொற்று நோய்களை விட இது வேறுபட்டதாகவும் பன்றிகளுக்கு மட்டும் பரவாமல் மனிதர்களிடமும் பரவக் கூடியத் தன்மையுள்ளதாகவும் இக்கிருமி வெளிப்பட்டது.

இந்தக் கிருமி மனிதர்களுக்கு பரவியதன் பரிணாமத்தில் முதலாளியத்திற்கும் முக்கியப் பங்கிருக்கிறது. சுமித் ஃபுட்ஸ் (Smith Foods Inc.) எனப்படும் பெரு நிறுவனத்தின் பன்றிப் பண்ணையிலிருந்தே இந்நோய்க் கிருமி உருவானது. இலாபவெறியுடனும் அலட்சியத்துடனும், தொடர் பராமரிப்புகள் ஏதுமின்றி பெருமளவிலான பன்றிகளை இந்நிறுவனத்திற்குரிய பண்ணையில் இறைச்சிக்காக வளர்த்து வந்தனர். அகற்றப்படாத கழிவுகள் காரணமாக அங்கு ஏற்பட்ட சுகாதரமற்ற சூழ்நிலை அங்கிருந்த தட்பவெட்ப நிலைக்கேற்ப பன்றிகளுக்கிடையே ஒரு புதுவிதமான தொற்று நோய்க் கிருமி பிறப்பெடுப்பதற்கு காரணமாக அமைந்தன. இது அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு எளிதில் பரவியது. விரைவில், இந்நோய் எளிதில பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இந்தியாவில் இன்று(26.08.09) வரை 84 பேர் மரணமடைந்துள்ளனர். இப்பேர்ப்பட்ட சுகாதரமற்ற இந்நிறுவனம் தான், ‘சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உற்பத்தி முறை”யைக் கொண்டிருப்பதாகக் கூறி ISO 14001 எனப்படுகின்ற தரச்சான்றிதழ் 2005ஆம் ஆண்டில் முதன் முதலில் பெற்ற அமெரிக்க நிறுவனமாகும். முதலாளிகளின் தரநிர்ணய முறை பல்லிளிக்க வைக்கிறது.

செலவுகளை மிச்சம் பிடித்தும், இறைச்சியை அதிகளவு விற்றும் இலாபம் சம்பாதிக்க நினைத்த அந்நிறுவனத்தின் இலாபவெறி அலட்சியப் போக்கால் ஏற்பட்ட வினையாக இந்தக் கிருமி உருவாகியிருக்கிறது. தொடக்கத்தில், இந்நோயின் பெயர் ‘பன்றிக் காய்ச்சல்’ என்றிருந்ததால் பன்றிகளின் இறைச்சி விலை குறைந்தது. பின்னர், அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பன்றிப் பண்ணை நிறுவனங்கள் முறையிட்டதன் காரணமாக, அந்நோய்க் கிருமியின் பெயரான H1N1 என்ற பெயரை ஒபாமாவே முன்மொழிந்தார். உலக சுகாதார நிறுவனம் வழிமொழிந்தது.

அமெரிக்கா உள்ளிட்ட பல முதலாளிய நாடுகளிலும் மருத்துவம் முற்றிலும் தனியார் மயமாகிவிட்ட நிலையில், பல்வேறு பன்னாட்டு மருந்து நிறுவனங்களும், மருத்துவமனைகளும் இந்நோய்ப் பரவலை எண்ணி பெரு மகிழ்ச்சி கொண்டன. அந்நிறுவனங்களின் பங்குச் சந்தைக் குறியீடுகள் உயர்ந்தன. முதலாளிகளின் அலட்சிப் போக்கால் மட்டுமே இந்நோய் தோன்றியது ஒருபுறமாக இருந்தாலும். இந்நோயின் பிறப்புக் குறித்து இன்றும் மர்மங்கள் நிலவுகின்றன.

முதலாளியத்தின் தலைமைப் பீடமான அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள், பிற நாடுகளை மிரட்டிப் பணிய வைப்பதற்கும் அச்சுறுத்துவதற்கும் உயிரியல் போரில் இறங்கியிருப்பதாக இன்றும் நம்பப்படுகின்றது. ஆங்கிலப் படங்களிலும், ‘ஈ’ போன்ற தமிழ்ப் படங்களிலும் கூட இது சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

1960களில் இது போன்ற முயற்சிகள் தொடங்கி விட்டன. புற்றுநோய் ஆராய்ச்சியை முன்வைத்து இச்சோதனைகள் தொடங்கின. AIDS: A Biological Warfare என்ற ஆங்கில நூலில் தமிழக மருத்தவர் புகழேந்தி அவர்கள் எய்ட்ஸ் கிருமியை உருவாக்க அமொரிக்காவில் அமைக்கப்பட்ட MK-NAOMI (Negroes Are Only Momentary Individuals என்ற திட்டத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். 1965 இல் உருவாக்கப்பட்ட LEMSIP (The Laboratory for Experimental Medicine and Surgery) என்ற ஆய்வுக்கூடம் இதற்கெனவே இயங்கி வந்தது. உயிரியல் சோதனை மட்டுமல்லமால் தனது சொந்த மக்கள் மீதே கதிர்வீச்சு சோதனை நடத்திய “திருப் பணி”களையும் இவ்வாய்வுக்கூடம் மேற்கொண்டதன் காரணமாக இக்கூடத்திற்கு மக்கள் எதிர்ப்பு கிளம்பியது. அரசோ தொடர்ந்து ஆய்வுக்கூடங்களை இடம் மாற்றியதேத் தவிர ஆய்வுகளை நிறுத்தவில்லை.

அமெரிக்காவின் வழக்கறிஞர் பாய்ட் கிரேவ்ஸ் என்பவர் எழுதிய State Origin: The Evidence of the Laboratory Birth of AIDS என்ற புத்தகத்தில் அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை இயக்குநர் பசீரெல்லா(A.H.Passerella - Director, Department of Defence, USA) எழுதியக் கடிதம் ஒன்றின் மூலம் இதனை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். (பக்கம் 180)

இவ்வாறான நிகழ்வுகளின் மூலம், உயிரியல் சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வல்லாதிக்க நாடுகளின் சோதனைகளின் ஒரு பகுதியாகக் கூட இந்நோய்க் கிருமி உருவாக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் இந்நோய்க் கிருமியின் உள்ளடக்கம் வலுத்த ஐயத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ‘ரென்ஸ்.காம்’ (Rense.com) என்ற செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.

இக்கிருமியின் உட்கூறுகளாக பறவைக் காய்ச்சல் (Avian flu) மனிதக் காய்ச்சல்களுக்குக் காரணமான ‘ஏ’ ப்ளூ வகை(Human flu Type A) மற்றும் ‘பி’ ப்ளூ வகை(Human flu Type B), ஆசியாவில் வந்த பன்றிக் காய்ச்சலுக்கான கிருமி(Asian swine flu) மற்றும் ஐரோப்யிப் பன்றிக் காய்ச்சல் கிருமி (European swine flu) என பல்வேறு கிருமிகளின் கலப்பு வகையாக இக்கிருமி உள்ளது. பத்திற்கு ஒன்று (1/10%) விழுக்காட்டில் தான் இயல்பு நிலையில் இவ்வாறான வடிவத்தை இக்கிருமி பெற்றிருக்க வேண்டும்.

ஒரு குறுகிய காலகட்டத்திலேயே நான்கு கண்டங்களில் உருவான பல்வேறு கிருமிகளின் ஒருங்கிணைக்கப்பட்ட வடிவமாக இக்கிருமி இருப்பதால் இது சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என இவ்விணையம் ஐயம் எழுப்புகிறது.

தற்பொழுது இந்நோயை முழுமையாக கட்டுப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசிகளையும் வழங்கி வருகின்றன. உலக சுகாதார நிறுவனம் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்தை உட்கொள்ளுமாறு வலியுறுத்தி யிருக்கிறது. முதலாளிகள் தலைமையிலான நாடுகளின் வல்லாதிக்க நோக்கிலும், முதலாளிகளின் லாபவெறியிலும் உருவாக்கப்படும் புதுப்புது நோய்களாலும், மருந்துகளாலும் பாதிப்புக் குள்ளாக்கப்படுவது உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களே ஆவர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாழ்முறைத் தற்காப்பு என்பதை விட காய்ச்சலுக்கு மருந்துகளை முன் வைப்பதிலேயே இவர்கள் முனைப்புக் காட்டுகிறார்கள். இன்றைய உலகமயச் சூழலை எதிர்கொள்ள மண்ணின் மரபுக்கேற்ற வாழ்முறையும், உணவு முறையுமே நமக்குக் கேடயமாக வீற்றிருப்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆகஸ்ட் 2009 இதழிலிருந்து...)

குறிப்பிடத்தக்க பதிவுகள்