Wednesday, October 21, 2009

பன்றிக் காய்ச்சலும் பன்னாட்டுக் கொள்ளையும் - க.அருணபாரதி


இனக்குழு சமூகத்தில் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து வந்த மனித இனம், முதலாளியத்தின் வளர்ச்சிப் போக்கால், இயற்கையின் மீதே படையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. வெப்பமயமாதல் முதல் இன்றைக்கு உலகை அச்சத்திற்குள்ளாக்கி இருக்கும் பன்றிக் காய்ச்சல் வரையான அனைத்து நிகழ்வுகளும் முதலாளியத்தின் வழிநடத்தலால் மறைமுகமாகப் பிறப்பெடுத்தவையே.

இராசாயன உணவுமுறையும், இயற்கைக்கு எதிரான வாழ்முறையும் ஏற்படுத்திய கோலங்களாகவே நோய்கள் மனித இனத்தை ஆட்டிப்படைக்கின்றன. எய்ட்ஸ், ஆந்த்ராக்ஸ், பிளேக், சார்ஸ், பறவைக் காய்ச்சல் என பலவிதமான தொற்று நோய்களும் மக்களுக்கு தான் பாதிப்பு. ஆனால், மருந்து முதலாளிகளுக்கு இவை சந்தையை உருவாக்கிய வரங்கள். அந்த வரிசையில் தற்பொழுது ‘பன்றிக் காய்ச்சல்’ நோயும் இடம் பிடித்துள்ளது.

வெறும் 25லிருந்து 60 ரூபாய் வரை மதிப்புள்ள ஒரு முகமூடியை, மக்களுக்கு அச்சமூட்டிய ஊடகங்களின் துணையால், ரூ. 300, ரூ.500 வரை விற்க முடிகின்ற நிலையை இது ஏற்படுத்தியுள்ளது. ‘பன்றிக்காய்ச்சல்’ எனப்படுகின்ற இந்நோய் அதன் பெயருக்கேற்ப பன்றிகளில் இருந்து பரவும் நோய் அல்ல. இந்நோய்க்குக் காரணமான ‘H1N1‘ என்ற கிருமி பன்றிகளில் இருந்து உருவானதன் காரணமாகவே இப்பெயர் ஏற்பட்டது. வழக்கமாக பன்றிகளுக்கு அவ்வப் போது ஏற்படும் தொற்று நோய்களை விட இது வேறுபட்டதாகவும் பன்றிகளுக்கு மட்டும் பரவாமல் மனிதர்களிடமும் பரவக் கூடியத் தன்மையுள்ளதாகவும் இக்கிருமி வெளிப்பட்டது.

இந்தக் கிருமி மனிதர்களுக்கு பரவியதன் பரிணாமத்தில் முதலாளியத்திற்கும் முக்கியப் பங்கிருக்கிறது. சுமித் ஃபுட்ஸ் (Smith Foods Inc.) எனப்படும் பெரு நிறுவனத்தின் பன்றிப் பண்ணையிலிருந்தே இந்நோய்க் கிருமி உருவானது. இலாபவெறியுடனும் அலட்சியத்துடனும், தொடர் பராமரிப்புகள் ஏதுமின்றி பெருமளவிலான பன்றிகளை இந்நிறுவனத்திற்குரிய பண்ணையில் இறைச்சிக்காக வளர்த்து வந்தனர். அகற்றப்படாத கழிவுகள் காரணமாக அங்கு ஏற்பட்ட சுகாதரமற்ற சூழ்நிலை அங்கிருந்த தட்பவெட்ப நிலைக்கேற்ப பன்றிகளுக்கிடையே ஒரு புதுவிதமான தொற்று நோய்க் கிருமி பிறப்பெடுப்பதற்கு காரணமாக அமைந்தன. இது அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு எளிதில் பரவியது. விரைவில், இந்நோய் எளிதில பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இந்தியாவில் இன்று(26.08.09) வரை 84 பேர் மரணமடைந்துள்ளனர். இப்பேர்ப்பட்ட சுகாதரமற்ற இந்நிறுவனம் தான், ‘சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உற்பத்தி முறை”யைக் கொண்டிருப்பதாகக் கூறி ISO 14001 எனப்படுகின்ற தரச்சான்றிதழ் 2005ஆம் ஆண்டில் முதன் முதலில் பெற்ற அமெரிக்க நிறுவனமாகும். முதலாளிகளின் தரநிர்ணய முறை பல்லிளிக்க வைக்கிறது.

செலவுகளை மிச்சம் பிடித்தும், இறைச்சியை அதிகளவு விற்றும் இலாபம் சம்பாதிக்க நினைத்த அந்நிறுவனத்தின் இலாபவெறி அலட்சியப் போக்கால் ஏற்பட்ட வினையாக இந்தக் கிருமி உருவாகியிருக்கிறது. தொடக்கத்தில், இந்நோயின் பெயர் ‘பன்றிக் காய்ச்சல்’ என்றிருந்ததால் பன்றிகளின் இறைச்சி விலை குறைந்தது. பின்னர், அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பன்றிப் பண்ணை நிறுவனங்கள் முறையிட்டதன் காரணமாக, அந்நோய்க் கிருமியின் பெயரான H1N1 என்ற பெயரை ஒபாமாவே முன்மொழிந்தார். உலக சுகாதார நிறுவனம் வழிமொழிந்தது.

அமெரிக்கா உள்ளிட்ட பல முதலாளிய நாடுகளிலும் மருத்துவம் முற்றிலும் தனியார் மயமாகிவிட்ட நிலையில், பல்வேறு பன்னாட்டு மருந்து நிறுவனங்களும், மருத்துவமனைகளும் இந்நோய்ப் பரவலை எண்ணி பெரு மகிழ்ச்சி கொண்டன. அந்நிறுவனங்களின் பங்குச் சந்தைக் குறியீடுகள் உயர்ந்தன. முதலாளிகளின் அலட்சிப் போக்கால் மட்டுமே இந்நோய் தோன்றியது ஒருபுறமாக இருந்தாலும். இந்நோயின் பிறப்புக் குறித்து இன்றும் மர்மங்கள் நிலவுகின்றன.

முதலாளியத்தின் தலைமைப் பீடமான அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள், பிற நாடுகளை மிரட்டிப் பணிய வைப்பதற்கும் அச்சுறுத்துவதற்கும் உயிரியல் போரில் இறங்கியிருப்பதாக இன்றும் நம்பப்படுகின்றது. ஆங்கிலப் படங்களிலும், ‘ஈ’ போன்ற தமிழ்ப் படங்களிலும் கூட இது சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

1960களில் இது போன்ற முயற்சிகள் தொடங்கி விட்டன. புற்றுநோய் ஆராய்ச்சியை முன்வைத்து இச்சோதனைகள் தொடங்கின. AIDS: A Biological Warfare என்ற ஆங்கில நூலில் தமிழக மருத்தவர் புகழேந்தி அவர்கள் எய்ட்ஸ் கிருமியை உருவாக்க அமொரிக்காவில் அமைக்கப்பட்ட MK-NAOMI (Negroes Are Only Momentary Individuals என்ற திட்டத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். 1965 இல் உருவாக்கப்பட்ட LEMSIP (The Laboratory for Experimental Medicine and Surgery) என்ற ஆய்வுக்கூடம் இதற்கெனவே இயங்கி வந்தது. உயிரியல் சோதனை மட்டுமல்லமால் தனது சொந்த மக்கள் மீதே கதிர்வீச்சு சோதனை நடத்திய “திருப் பணி”களையும் இவ்வாய்வுக்கூடம் மேற்கொண்டதன் காரணமாக இக்கூடத்திற்கு மக்கள் எதிர்ப்பு கிளம்பியது. அரசோ தொடர்ந்து ஆய்வுக்கூடங்களை இடம் மாற்றியதேத் தவிர ஆய்வுகளை நிறுத்தவில்லை.

அமெரிக்காவின் வழக்கறிஞர் பாய்ட் கிரேவ்ஸ் என்பவர் எழுதிய State Origin: The Evidence of the Laboratory Birth of AIDS என்ற புத்தகத்தில் அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை இயக்குநர் பசீரெல்லா(A.H.Passerella - Director, Department of Defence, USA) எழுதியக் கடிதம் ஒன்றின் மூலம் இதனை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். (பக்கம் 180)

இவ்வாறான நிகழ்வுகளின் மூலம், உயிரியல் சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வல்லாதிக்க நாடுகளின் சோதனைகளின் ஒரு பகுதியாகக் கூட இந்நோய்க் கிருமி உருவாக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் இந்நோய்க் கிருமியின் உள்ளடக்கம் வலுத்த ஐயத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ‘ரென்ஸ்.காம்’ (Rense.com) என்ற செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.

இக்கிருமியின் உட்கூறுகளாக பறவைக் காய்ச்சல் (Avian flu) மனிதக் காய்ச்சல்களுக்குக் காரணமான ‘ஏ’ ப்ளூ வகை(Human flu Type A) மற்றும் ‘பி’ ப்ளூ வகை(Human flu Type B), ஆசியாவில் வந்த பன்றிக் காய்ச்சலுக்கான கிருமி(Asian swine flu) மற்றும் ஐரோப்யிப் பன்றிக் காய்ச்சல் கிருமி (European swine flu) என பல்வேறு கிருமிகளின் கலப்பு வகையாக இக்கிருமி உள்ளது. பத்திற்கு ஒன்று (1/10%) விழுக்காட்டில் தான் இயல்பு நிலையில் இவ்வாறான வடிவத்தை இக்கிருமி பெற்றிருக்க வேண்டும்.

ஒரு குறுகிய காலகட்டத்திலேயே நான்கு கண்டங்களில் உருவான பல்வேறு கிருமிகளின் ஒருங்கிணைக்கப்பட்ட வடிவமாக இக்கிருமி இருப்பதால் இது சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என இவ்விணையம் ஐயம் எழுப்புகிறது.

தற்பொழுது இந்நோயை முழுமையாக கட்டுப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசிகளையும் வழங்கி வருகின்றன. உலக சுகாதார நிறுவனம் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்தை உட்கொள்ளுமாறு வலியுறுத்தி யிருக்கிறது. முதலாளிகள் தலைமையிலான நாடுகளின் வல்லாதிக்க நோக்கிலும், முதலாளிகளின் லாபவெறியிலும் உருவாக்கப்படும் புதுப்புது நோய்களாலும், மருந்துகளாலும் பாதிப்புக் குள்ளாக்கப்படுவது உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களே ஆவர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாழ்முறைத் தற்காப்பு என்பதை விட காய்ச்சலுக்கு மருந்துகளை முன் வைப்பதிலேயே இவர்கள் முனைப்புக் காட்டுகிறார்கள். இன்றைய உலகமயச் சூழலை எதிர்கொள்ள மண்ணின் மரபுக்கேற்ற வாழ்முறையும், உணவு முறையுமே நமக்குக் கேடயமாக வீற்றிருப்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆகஸ்ட் 2009 இதழிலிருந்து...)

Saturday, August 08, 2009

பத்தாம் வகுப்புத் தேர்வு நீக்கமும் பள்ளிக் கல்வியை விழுங்கும் திட்டமும்

பத்தாம் வகுப்புத் தேர்வு நீக்கமும்
பள்ளிக் கல்வியை விழுங்கும் திட்டமும்
க.அருணபாரதி


ஜி-20 மாநாடு

உலகமயத்தின் பேயாட்டத்தால் சீரழிக்கப்பட்ட இயற்கை, வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் என மனித குலத்தை ஆபத்தில் தள்ளயிருக்கின்றது. முதலாளிய நாடுகள், இதனை பற்றி சிறிதும் கவலை கொள்ளாது தற்பொழுது ஏற்பட்டிருக்கும் முதலாளியப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரவும், தோய்ந்து போயிருக்கும் பொருளாதாரச் சுரண்டலை விரைவுபடுத்தி விரிவுபடுத்தவும் திட்டம் தீட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாகத் தான் அரங்கேறியிருக்கிறது, அண்மையில் இலண்டனில் நிகழ்ந்த பெரும் - 20 நாடுகளின் ‘ஜி-20’ கூட்டம்.

இம்மாநாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களுக்கு எதிராக காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியது, இங்கிலாந்து அரசு. வளர்ந்த முதலாளிய நாடுகளில், ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்த நிலையை தகர்த்தெறிய ‘வளரும்’ நாடுகளின் பொருளாதார வளங்களைக் கொள்ளையடிப்பதைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற ‘அதிமேதாவி’த் திட்டத்தை மறைமுகமாக செயல்படுத்த தீர்மானித்திருக்கிறது தற்பொழுது ஏற்பட்டிருக்கும் மந்தநிலையின் மீட்சிக்காக, சுமார் 1.1. ட்ரில்லியன் டாலர், அதாவது 55 இலட்சம் கோடிகள் தேவை என இம்மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தொகை ஏற்கெனவே முற்றுகையில் தவிக்கும் முதலாளிய நாடுகளிடமிருந்து வெளிப்படப் போவதில்லை. மாறாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் மூலம் வளரும் நாடுகளிடமிருந்து பெறப்பட்டு வங்கி முதலாளிகளின் மூலம் முதலாளிய நாடுகளுக்குப் போய்ச் சேரும். முதலாளிய நாடுகளும் சர்வதேச அமைப்புகளுக்கு நிதி அளிப்பதுப் போல பாசாங்கு செய்து விட்டு, இவற்றை கபளீகரம் செய்து கொள்ளும். உலகமயத்தால் கொழுத்துத் திரிந்த போது ‘ஜி-8’ என்று சுருங்கிக் கிடந்த முதலாளிய நாடுகள், தன்னிலை ஆட்டம் கண்டுள்ளதால் தற்பொழுது ‘ஜி-20’ என ‘வளரும்’ நாடுகளையும் சுரண்டல் நோக்கோடு வலிந்து சேர்த்துக் கொண்டன. இந்த ‘பெருந்தன்மை’யை வியந்தபடி முதலாளிய நாடுகளுக்கு புகழாரம் சூட்டுகிறார், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.

மேலும், இம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டதை ‘வளர்ந்த’ நாடுகள் ‘வளரும்’ நாடுகளுக்குக் கொடுத்த அங்கீகாரம் என்கிறார். ஆம், அங்கீகாரம் தான். ‘வளரும்’ நாடுகளை சுரண்டி அடிமைப்படுத்துவதற்கு, அந்நாடுகள் தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட ‘அங்கீகாரம்’ இது. இக்கூட்டம் நிகழ்ந்த அடுத்த மாதத்தில், சீனா ஆதிக்கம் செலுத்தும் ‘hங்காய் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டத்தில் பேசிய மன்மோகன் சிங், இந்த சுரண்டல் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்தும்படி கோரிக்கையும் விடுத்தார். முதலாளிய நாடுகளின் விருப்பம் போல் உலகப் பொருளாதாரத்தில் ‘டாலர்’ ஆதிக்கம் செலுத்தவதை முறியடிக்க சீனா, ஜி-20 மாநாட்டில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியுற்றதைப் பற்றி கடைசிவரை மன்மோகன் சிங் எதுவும் சொல்லாமல் தவிhத்து, அமெரிக்க விசுவாசம் பேணிணார்.

காங்கிரசு அரசின், இது போன்ற அமெரிக்க விசுவாச நடவடிக்கைகளுக்கும், தீவிர உலகமய ஆதரவுப் போக்கிற்கும் மக்கள் கொடுத்த அங்கீகாரம் தான் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தேர்தல் வெற்றி என்று யாரேனும் கருதுவார்களானால், அது உண்மை அல்ல. அதிகரித்துக் கொண்டிருக்கும் விலைவாசி, வேலையிழப்புகள், எதிர்காலம் குறித்த உத்திரவாதமின்மை என மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக விளங்கும் உலகமயத்தை, தீவிரமாக அமல்படுத்தும் இது போன்றக் கட்சிகளை மக்கள் மன்றத்தில் சரியான முறையில் அம்பலப்படுத்தி தோலுரிக்காமல் விட்டதே, இக்கட்சிகளின் இருப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

யஷ்பால் பள்ளிக்கல்விச் சீர்த்திருத்தப் பரிந்துரைகள்

மனித வாழ்வின் அடிப்படை உரிமைகளை விலைபேசி விற்று வருகின்றது உலகமயம். கல்வியும் இதற்கு விதிவிலக்கல்ல. உலகமயத்தின் வரவால் கல்வி ஏற்கெனவே முழுமையாக வணிகமயமாகிவிட்ட நிலையில், தற்பொழுது ‘சீர்திருத்தங்கள்’ என்ற பெயரில் அக்கல்வி மேலும் சீரழிகின்றது.

பள்ளிக் கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பேராசிரியர் யஷ்பால் தலைமையிலானக் குழுவினரின் அறிக்கை 24.6.09 அன்று இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபிலிடம் வழங்கப்பட்டது. கல்வி வணிகமயமாவதையும், நிகர்நிலைக் பல்கலைக்கழகங்கள் கல்வியை விலை பேசுவதையும் இவ்வறிக்கை சில இடங்களில் சாடுகின்றது. இது போக, அவ்வறிக்கையில் மத்திய அரசிற்கு சில பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்புத் தேர்வுகள் இரத்து செய்யப்பட வேண்டும், பல்கலைக்கழக மானியக் குழு, ஏ.ஐ.சி.டி.இ. உள்ளிட்ட அமைப்புகள் கலைக்கப்பட்டு அகில இந்தியாவிற்குமான ஒரு புதிய கல்வி ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்டவை தான் இப்பரிந்துரைகளில் முதன்மையானவை.

இவ்வறிக்கையை பெற்ற பின்னர், 25.06.09 அன்று புதுதில்லியில் அமைச்சர் கபில் சிபில் செய்தியாளர்களை சந்தித்தார். தேர்வுகளால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும், சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் இது போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டே பத்தாம் வகுப்பு தேர்வுகளை இரத்து செய்ய மத்திய அரசு விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அகில இந்தியா முழுவதுக்குமான ஒரே பள்ளிக் கல்வி வாரியத்தை ஏற்படுத்தவும், வெளிநாட்டுக்குச் சென்று பயிலும் இந்திய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவிற்கே அழைத்து வரவும் நடுவண் அரசு விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 23.06.09 அன்று ‘தி டெலிகிராப்’ ஏட்டிற்கு அளித்த பேட்டி ஒன்றில், நடுவண் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் ஆசிரியர் பணிநியமனத்தின் போது இட ஒதுக்கீடு பின்பற்றப்படத் தேவையில்லை என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் மிகவும் நகைப்புக்குரியதாகும். ஆசிரியர் பணி நியமனத்திக்கு போதிய அளவிற்கு தகுதியான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் கிடைக்க வில்லை என்பதாகும். ‘சமூகநீதி’ வேடமிட்டு மறைந்திருக்கும் காங்கிரஸ் கபடதாரிகள் இப்படித்தான் அவ்வப்போது அம்பலப் படுகின்றனர்.

நடுவண் அரசிற்கு சொந்தமான உயர்கல்வி நிலையங்களின் ஆசிரியர் பணி நியமனங்களில் மட்டுமல்லாது, தனியார் கல்லூரிகளிலும் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த நடுவண் அரசு நடவடிக்கை எடுக்குமா என்று அவரைக் கேட்டால், இது குறித்து ‘தேசிய’ அளவில் பொதுக் கருத்து வளர்த்தெடுக்க வேண்டும் என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்.

மாணவர்களின் நலன் கருதியே பத்தாம் வகுப்புத் தேர்வு இரத்து செய்யப்படுகின்றது என்று தோன்றினாலும், இதற்குள் பல்வேறு சூட்சமங்கள் ஒளிந்து கொண்டுள்ளன.

இந்தியாவில், பள்ளிக் கல்வியுடன் கல்வியை முடித்துக் கொள்வோரின் எண்ணிக்கை கடந்த 1990- 1991 ஆம் கல்வியாண்டில், 42.6% விழுக்காடாக இருந்தது. இவ்வெண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, கடந்த பத்தாண்டுகளாக பல்வேறு அரசுகளாலும் பல்லாயிரம் கோடிகள் செலவழிக்கப்பட்ட நிலையிலும் கூட 2004 ஆம் ஆண்டு வெறும் 40.67% விழுக்காடாகவே குறைந்தது. (பார்கக்க் : தி டைமஸ் ஆப் இந்தியா, 19, சனவரி 2004). இது தற்பொழுது சுமார் 39% விழுக்காடாக உள்ளது. மேலும், பள்ளிக்கல்வி பெறும் மாணவர்களில் வெறும் 11% விழுக்காட்டினரே கல்லூரி வரை சென்று படிக்கின்றனர் என்பதும் கூடுதல் தகவலாகும் (பார்க்க : டெக்கான் க்ரானிக்கல், சூன் 27, 2009.) இவர்களில் பெரும்பாலானவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரே என்பதை இன்றைய சூழ்நிலையில் சொல்லி விளங்க வைக்கத் தேவையில்லை.

இந்நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வு இரத்து என்பது இவர்களை பள்ளிக் கல்வியை விட்டே ஓரங்கட்டும் நடவடிக்கையாகவும் அமையும். மேலும், பொதுத் தேர்வு இரத்து செய்யப்பட்டு ஆசிரியர்களிடம் மாணவர்கள் மதீப்பீட்டிற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அது ஆசிரியரின் விருப்பு வெறுப்பு மதீப்பீடாக அமையவே வாய்ப்புள்ளன. மேலும், ஆசிரியர் மாணவர் உறவில் இது விரிசலையும் உண்டாக்கும். எனவே, மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பிடுதலும், ஆசிரியர்கள் மாணவர்களை தொடர்ச்சியான முறையில் மதிப்பீடுதலும் கூடிய மாற்றுத் தேர்வு முறை அவசியமாகின்றது. எனவே, பொதுத் தேர்வு இரத்து என்பது எதற்கும் தீர்வல்ல.

இன்றைய சூழ்நிலையில் மனஅழுத்தங்களுக்கு மிக முக்கியக் காரணிகளாக விளங்கும் பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தலைமை தாங்கும் உலகமயத்தை விரட்டுவதை விட்டுவிட்டு, மாணவர்களின் கல்வியில் கைவைப்பது முரணாக உள்ளது.

மாநிலக் கல்வி வாரியங்களைக் கலைத்து விட்டு, அகில இந்தியாவிற்குமான பொது பள்ளிக் கல்வி வாரியம் ஏற்படுத்துவதென்பது, இந்தியாவில் தேசிய இனங்களுக்கு எஞ்சியிருக்கும் சில அதிகாரங்களையும் பறிக்கும் ஒடுக்குமுறைத் திட்டமாகும். மேலும், இந்தித் திணிப்பிற்கும் இது வழிவகுக்கும். இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள், அதன் மாநிலக் கல்வி வாரியங்களைக் கொண்டு அந்தந்த இனத்து மக்களின், பண்பாடு, வரலாறு உள்ளிட்டவற்றை ஓரளவாவது தெரிந்து கொள்வதற்கான ஏற்பாட்டையும் இது சிதைத்து விடும். இதைத் தான் இந்தியத் தேசியக் காங்கிரஸ் விரும்புகிறது. எதிர்க்கட்சி என்பதால் தான் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது போல பாசாங்கு செய்கிறது, பாhப்பனீய பா.ச.க. ஒரு வேளை, பா.ச.க. ஆட்சியிலிருந்தால், இதே போன்ற திட்டத்தை அமல்படுத்தி ‘அகண்ட பாரத’க் கனவுகளை மாணவர்களுக்கு அள்ளி விட்டிருப்பார்கள்.

சொந்தநாட்டு மக்களின் உழைப்பையும் உடைமைகளையும் அயலானுக்குத் திறந்து விட்ட காங்கிரஸ் கட்சி, தற்பொழுது கல்வியிலும் அதனை செய்யத் துடிக்கின்றனர். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் புகுந்து வணிகம் செய்திட அவற்றை அனுமதிக்கக் கோரும் ‘வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஒழுங்குமுறை மசோதா’வை நிறைவேற்ற வேண்டுமென கோருகிறார், கபில் சிபில்.

ஆஸ்திரேலியாவில் வடநாட்டு மாணவர்கள் மீது நடைபெற்ற இனவெறித் தாக்குதல்களைத் தவிர்க்கவே இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை அனுமதிக்கத் தேவை எழுந்துள்ளது என்றும் வாதிடுகின்றார், கபில் சிபில். அமெரிக்கா உள்ளிட்ட ‘வளர்ந்த’ நாடுகள் பெரும்பாலானவற்றில் உயர் கல்வி அரசின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றவை என்பதும் தனியார் பல்கலைக்கழகங்கள் அங்கு குறைவு என்பதும் மத்திய அமைச்சர் கபில் சிபில் அறியாததல்ல. இருந்த போதும், அது குறித்து அலட்டிக் கொள்ளாத கபில் சிபில், கல்வியில் தனியார் நிறுவனங்கள் போடும் ஆட்டங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

தமிழகத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தனியார் பொறியியல் கல்லூரிகளும் ‘நன்கொடை’ என்ற பெயரில் நடத்தி வரும் வசூல் வேட்டையை, பல்வேறு ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ள நிலையிலும், கண்துடைப்புக்காக சில கல்லூரிகளில் சோதனை நடத்திவிட்டு பிரச்சினை, தீர்ந்ததென்று செயல்படுகின்றது தமிழக அரசு. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக்கல்வித் துறையை கூறுபோடுவதற்கு தில்லி ஏகாதிபத்தியம் திட்டமிட்டுக் கொண்டிருக்க, ‘மாநில சுயாட்சி’ பேசும் தமிழக அரசோ, கண்மூடிக் கொண்டிருக்கிறது.

Wednesday, June 24, 2009

இந்தியத்தின் அடிமைகளே! இனியாவது விழித்தெழுங்கள்!

இந்தியத்தின் அடிமைகளே!
இனியாவது விழித்தெழுங்கள்!

க.அருணபாரதி


நாகரீகம் வளர்ந்து விட்டதாகச் சொல்லப்படும் இன்றைய உலகில், வேறு எந்த இனத்திற்கும் நிகழாத அவலம் வன்னியில் நம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை இருபதாயிரமா நாற்பதாயிரமா என்று உலக நாடுகளுக்குள் பட்டிமன்றம் நடக்கிறதே தவிர, இந்த இறப்பிற்கு காரணமான சிங்கள பேரினவாத அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த எந்த நாடும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, சிங்கள இனவெறி அரசுக்கு உடனிருந்து உதவுகின்றன. ஈழத்தமிழர்களின் இரத்தம் குடித்த இந்திய அரசோ, படுகொலைகளை கச்சிதமாக நடத்தி முடித்த திருப்தியில் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றது.

Eelam tamils குண்டுகளால் செத்தவர்கள் போக உயிரை மட்டும் கையில் பிடித்த படி எஞ்சியிருக்கும், மிதம் உள்ள ஈழத்தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து வைத்தள்ளது, சிங்கள இராணுவம். உணவின்றி பசியால் துடித்து இறந்தவர்கள், மருத்துவம் கிடைக்காமல் இறந்தவர்கள் என முகாம்களில் உள்ள மக்களும் பிணமாகவே வெளியே வீசப்படுகின்றனர். தமிழ்ப் பெண்களை பாலியல் இச்சைக்காக இழுத்துச் செல்லும் சிங்கள இனவெறி நாய்களைக் கண்டிக்கவோ தடுக்கவோ அங்கு ஆளில்லை. தனது குடும்ப உறவுகளை விசாரணை என்ற பெயரில், தரதரவென இழுத்துச் செல்லும் சிங்கள இனவெறியனை தடுத்தி நிறுத்தினால் ”புலி”யென்று அவனையும் விசாரணைக்கு இழுத்துச் செல்லும் நிலைமை தான் அங்குள்ள எதார்த்தம். அடையாளம் காண முடியாத பிணங்களாக புதர்களிலும், கடற்கரைகளிலும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறார்கள். ஒட்டு மொத்த இலங்கைத் தீவிற்கே உணவு வழங்கிய வன்னி மண்டலத்தில், ஒரு கைப்பிடி உணவிற்காக முகாமில், சுட்டெரிக்கும் வெயிலில் குடும்பத்துடன் தட்டேந்தி நிற்கிறான் தமிழன்.

வன்னியில் நடந்த தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கில் இறந்து கிடக்கும் தமிழர்களின் பிணங்களை, தடயங்கள் ஏதுமின்றி அழிக்கும் பணியில் அதிவேகமாக ஈடுபட்டுள்ளது சிங்கள இனவெறி இராணுவம். இதனைக் கருத்தில் கொண்டு தான், ஐ.நா. மன்றத்தினர், செஞ்சிலுவை சங்கத்தினர், மருத்துவர்கள், தொண்டு நிறுவனத்தினர், பத்திரிக்கையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாருமே அப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படுகின்றனர். கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பு விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். உண்மைகளை ஓரளவு எழுதும் சிங்கள பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டு மரண பயத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளனர். இவை அனைத்தும், நம்மை விட நன்கு தெரிந்த சர்வதேச சமூகமோ, இவற்றை வெட்கமின்றி வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.

தனது சொந்தங்கள் கொத்துக் கொத்தாக செத்து விழுகின்ற நிலையிலும், அவர்களுக்காக எதையுமே செய்ய இயலாத நிலையில் தமிழகத் தமிழர்களின் கைகள் இந்தியத் தேசிய அடிமை விலங்குகளால், கட்டி வைக்கப்பட்டுள்ளன. அதனை கட்டி வைத்தது யார்? வெடிகுண்டுகளால் பிணங்களாகவும், வெளியேறினால் அகதிகளாகவும் மாற்றப்பட்டுள்ள ஈழத்தமிழினத்தின் இந்த அவல நிலைக்கு இட்டுச் சென்றது யார்? ”எமக்காக பேசுங்களேன்” என்று நம்மை நோக்கி கேட்டார்கள். நாமும் பேசினோம். போராடினோம். தீக்குளித்துச் செத்தோம். என்ன நடந்தது? நமது தீக்குளிப்புகளையும் போராட்டங்களையும் மதித்தது யார்?

உலகிற்கே நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்த இனம், அரசு நிர்வாகம் ஏற்படுத்தி கடல் கடந்து வணிகத் தொடர்புகள் கொண்டிருந்த இனம், அணை கட்டி பாசனம் செய்து உலகிற்கே நீர் பயன்பாடு பற்றி போதித்த இனம் என்று பல்வேறு பெருமதிங்களைக் கொண்டிருக்கும் நமது தமிழினம், இன்று நாதியற்ற இனமாக தலை கவிழ்ந்து நிற்கிறது. உலகில் நமக்கு உதவுவதற்கு யாருமில்லை. ஒட்டு மொத்த தமிழர்களையும் குண்டு வீசி அழித்தாலும் கூட நமக்காக கண்ணீர் சிந்த ஆளில்லை. இன்றைய சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

”இந்தியா எனது தாய் நாடு. இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தோர்” என்று நெஞ்சில் வைத்து நாம் பள்ளியிலிருந்து உறுதியேற்றோமே அந்தத் தாய் நாடு தான் எம் தொப்புள் கொடி உறவுகளை எம் கண்முன்னேயே கொத்துக் கொத்தாகக் கொன்றது என்பதை நாம் இன்னுமா உணரவில்லை? எமது ”உடன் பிறந்தோர்”தாம் இந்தப் படுகொலைகளுக்கு மவுன சாட்சியாக இருந்து அங்கீகாரம் அளித்தார்கள் என்பதை இன்னுமா நாம் தெரிந்து கொள்ளவில்லை?

”கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எம் தமிழ்க்குடி” என்று தமிழினத்தின் பல்லாயிர வருட வரலாற்றை மறைத்து விட்டு வெறும் 60 வருட ”இந்திய” அடையாளத்தை சுமந்து திரிந்ததற்காக நமக்கு அளிக்கப்பட்ட பரிசு ஈழத்தமிழர்களின் இரத்தமும் பிணங்களும் தான். ”நான் இந்தியன்” என்று பெருமிதம் கொண்டதெல்லாம், இந்த படுகொலைகளை நிகழ்த்துவதற்காகத் தானா..?

வங்க தேசத்து மக்கள் மேற்கு வங்கத்திற்கு அகதியாக வந்த போது, அவர்களுக்காக திரட்டப்பட்ட நிதித்தொகையில், இந்தியாவிலேயே அதிகமாக அள்ளி வழங்கியது தமிழ்நாட்டு மக்களாகிய நாம் தான். ஆனால் இன்றைக்கு, பல்லாயிரக்கணக்கில் நம் மக்கள் ஈழத்தில் செத்து மடிந்த போதும், “அவர்களை காப்பாற்றுங்கள்“ என தமிழகத்தில் நாம் தீக்குளித்துச் செத்துப் போராடிய போதும், நமக்கு ஆறுதல் வார்த்தைச் சொல்ல இந்தியாவில் யாரும் இல்லை. செத்தவர்கள் தமிழர்கள் என வேண்டாம், செத்தவர்கள் மனிதர்கள் என்ற பார்வையிலாவது இப்படுகொலைகளைக் கண்டித்து ஒரு சிறு அறிக்கையையாவது, வேற்று மாநிலத்தவரிடமிருந்து வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், இறுதி வரை வரவில்லை. இனியும் வராது. ”இந்தியர்கள்” என்று தமிழர்களாகிய நாம், நம்மை நினைத்துக் கொண்டாலும், ”தமிழர்கள்” இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அநாதைகள் தான் என்பதை இவை தெளிவுபடுத்தி விட்டன.

தமிழின படுகொலைகளை தலைமையேற்று நிகழ்த்தி இரத்தக் கறையுடன் நிற்கும் ”இந்தியா”, கிரிக்கெட் போட்டியில் தோற்று விட்டதாக கவலை கொள்ளும், இரக்கமே இல்லாத வெட்கம் கெட்ட ஜென்மங்களும் இந்த தமிழ்நாட்டில் இருக்கின்றனர். தமிழர்கள் மீதான இந்திய அரசின் பகைமையை அவர்களுக்கெல்லாம் என்றைக்கு நாம் புரிய வைக்கப் போகின்றோம்? ஈழத்தமிழர்கள் மீது இந்தியா நடத்திய இரத்த வெறியாட்டத்தை கண்டும் கூட, இன்னும் இரக்கப்படாமல், ”இந்தியன்” என்று பேசித் திரிபவர்களுக்கு இவற்றை என்று நாம் உணர வைப்பது?

காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர், சேலம் ரயில்வே கோட்டம் என அண்டை தேசிய இனங்கள் நமது உரிமையை மறுதலித்த போதெல்லாம், அவர்களுடன் ஒன்று கூடி கூத்தடித்த இந்திய அரசுக்கு இதுவரை நாம் என்ன எதிர்வினை ஆற்றியிருக்கிறோம்? நமது தாயகப் பகுதியிலிருந்த கச்சத்தீவை நம்மைக் கேட்காமலேயே சிங்களனுக்கு வாரி வழங்கினானே தில்லிக்காரன், அவனுக்கு நாம் இதுவரை என்ன உணர்த்தியிருக்கிறோம்? நமக்கான உரிமை அளிக்கப்பட்டிருந்தும் கூட, இதுவரை காவிரி நீர் நமக்கு வந்ததில்லை. நாமே நமக்காக கட்டியது தான் என்றாலும், முல்லைப் பெரியாறு அணையை பார்வையிடக் கூட நமக்கு அனுமதியில்லை. நம் பகுதி மக்களுக்காக நாம் நடத்தவுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களை குருவிகள் போல வேற்று நாட்டவன் சுட்டுக் கொல்வதை பற்றி இந்தியனுக்கு எந்த கவலையுமில்லை. நம் கண்முன்னேயே நமது இரத்த உறவுகள், குண்டு வீசிக் கொல்லப்படுகிறதே என வாய்விட்டு கண்ணீர் விடக் கூட நமக்கு உரிமையில்லை! ஈழத்தமிழர் விடுதலைக்கு மட்டுமல்ல உலகில் வேறு எந்த விடுதலைப் போராட்டத்திற்கும் உதவ முடியாத நிலையில் தான் தமிழகத் தமிழர்களாகிய நாம் இன்றும் இருக்கிறோம் என்றால் நாம் உண்மையில் யார்?

அடிமைகள். ஆம். இந்தியத்தின் அடிமைகள். காலம் இதனை நமக்கு நன்கு உணர்த்தியிருக்கிறது. ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழிக்கிறோம் என்ற இறுமாப்பில், தமிழகத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உந்து விசை கொடுத்திருக்கிறது இந்திய அரசு. இந்தியத்தின் அடிமைகளாக போலி சுதந்திரம் பேசிக் கொண்டிருக்கும் நாம் நமக்கான விடுதலைப் போராட்டத்தை தொடங்குவதற்கான கட்டளையை பிறப்பித்திருக்கிறது வரலாறு. நிறைவேற்ற வேண்டிய இடத்திலிருக்கும் நாம், இனி என்ன செய்யப் போகிறோம்..?

குறிப்பிடத்தக்க பதிவுகள்