Friday, June 15, 2007

சென்னையில் இலக்கியக் கூடல்

தமிழ்க் கலை இலக்கிய பேரவை
தியாகராய நகர் கிளை
நடத்தும்
 
இலக்கியக் கூடல்
 
இடம்: தமிழர் கண்ணோட்டம் அலுவலகம், தியாகராய நகர்.
நாள்: ஞாயிறு, 17-06-2007, மாலை 5.00 மணிக்கு
 
வரவேற்புரை:
தோழர் வெங்கட்
 
தலைமை:
தோழர் உதயன்
தமிழக ஒருங்கிணைப்பாளர், த.க.இபே
 
சிறப்புரை:
"கல்வெட்டில்
வரலாற்றுக் கதைகள்"
 
புலவர் முத்து எத்திராசன்
கல்வெட்டு ஆய்வாளர்
 
நன்றியுரை:
தோழர் க.அருணபாரதி
 
தொடர்புக்கு:
தமிழர் கண்ணோட்டம்,
தமிழ்த் தேசிய மாத இதழ்,
20, 2வது தளம்,
முத்துரங்கம் சாலை,
தியாகராய நகர்,
சென்னை-17.
 
பேசி:
தோழர் கவிபாஸ்கர் 9841604017
தோழர் அருணபாரதி 9841949462

Thursday, June 14, 2007

இன்று சே குவாரா பிறந்தநாள்..

இன்று சே குவாரா பிறந்தநாள்..
சே குவேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

 
சே குவேரா
சே குவேரா

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) ( ஜுன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) ஆஜன்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

மார்க்சியத்தில் ஈடுபாடு

மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என சே நம்பினார். இது சே மார்க்சியம் கற்றுக்கொள்ளவும் குவாட்டமாலாவில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியில் ஈடுபடவும் வழிவகுத்தது.

கியூபாவில் புரட்சி

சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

பொலிவியாவில் சே குவேரா

பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் ஒக்டோபர் 9, 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)

அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார்.

கவனம் பெறும் நிகழ்வுகள்

  • 1955 ஜூலை - ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும் குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.
    • ஆகஸ்ட் 18 - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.
  • 1956 பெப்ரவரி 15 - சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.
    • ஜூன் 24 சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையில் இருக்கிறார்.
  • 1958 ஜூலை - புரட்சிப்படை பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.
    • டிசம்பர் 28 - லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீது சே போர் தொடுக்கிறர்.
  • 1959
    • ஜனவரி 1 - சாண்டா கிளாரா சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடித்தப்பிவிடுகிறார். சே ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.
    • ஜனவரி 2 - காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தினால் நாடே ஸ்தம்பிக்கிறது.
    • ஜனவரி 3 - சே ஹவானாவை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்
    • ஜனவரி 8 - காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.
    • மே 17 - உழவுத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.
    • ஜூன் 2 - சேவும் அலெய்டா மர்ச்சும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
    • ஜூன் 12 - வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே நீண்ட பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பா, ஆபிரிக்கா, மற்றும் ஆசிய நாடுகளுக்கு செல்கிறார்.
    • அக்டோபர் 7 - உழவுத்துறையின் மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் சே தொழிற்றுறைக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார்.
    • நவம்பர் 26 - சே, தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
  • 1961
    • ஜனவரி 3 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.
    • பெப்ரவரி 23 - சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.
    • ஆகஸ்ட் 8 - உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரங்கில் கியூபாவின் சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.
  • 1962
    • மே 20 - சேவுக்கும் அலெய்டாவுக்கும் கமீலா பிறக்கிறான்
    • ஆகஸ்ட் 27 - சே சோவியத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்
  • 1964
    • பெப்ரவரி 24 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.
    • மார்ச் 14 - சே கியூபா திரும்புகிறார்.
    • அக்டோபர் 31 - காங்கோவின் புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப படைக்குழுவினரோடு தாமும் காங்கோ புறப்படும் சே, விடை பெற்றுக்கொள்வதாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதுகிறார்.
    • டிசம்பர் - காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக கியூபாவுக்கு திரும்பி வருகிறார். பொலிவியா படையெடுப்புக்காக வீரர்களை திரட்டுகிறார்.
  • 1966
    • நவம்பர் - சே மாறு வேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்.
  • 1967
    • மார்ச் 23 - முதல் கரந்தடி தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடிகிறது.
    • ஏப்ரல் 16 - ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட முக்கண்டக் கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல வியட்நாம்களை படைக்கலாம் என்ற சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.
    • ஆகஸ்ட் 4 - ஒரு விட்டோடி, பொலிவிய படைக்கு தலைமை தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத தளத்தை நோக்கி முன்னேறுகிறான்.
    • செப்டெம்பர் 26 - கரந்தடி வீரர்களை பொலிவிய அரச படைகள் சுற்றிவளைக்கின்றன.
    • அக்டோபர் 8 - மிஞ்சியிருந்த சே உட்பட 17 வீரர்களும் பொறிக்குள் அகப்பட்டுக்கொள்கிறார்கள். போரில் காயமடையும் சே கைதுசெய்யப்படுகிறார்.
    • அக்டோபர் 9 - சே கொலைசெய்யப்படுகிறார்
  • 1968
  • 1995 - கொலை செய்து புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி தொடங்குகிறது.
  • 1997
    • ஜூன் 28 - பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.
    • ஜூலை 14 - சடல எச்சங்கள் கியூபாவை வந்தடைகின்றன.
    • அக்டோபர் 13 - ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.
    • அக்டோபர் 14 - சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்படுகின்றன.

வெளி இணைப்புகள்

 

Monday, June 11, 2007

செவ்வணக்கம் தோழர்களே......ஒரு வேண்டுகோள்...

செவ்வணக்கம் தோழர்களே......
 
ஈழத்தில் நம் தமிழ் மக்கள் பட்டினி கிடப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஈழத்தமிழ் மக்களுக்கு உதவ வேண்டியது நமது கடமையாகும். இதனை உணர்ந்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு கடந்த திசம்பர் மாதம் எடுத்த முடிவின் பேரில் கடந்த சனவரி முதல் தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக உதவ உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் சேகரிக்கும் பணி நடைபெற்றது. சேகரிக்கப்பட்ட அப்பொருட்களை செஞ்சிலுவை சங்கம் மூலம் ஈழத்திற்கு அனுப்ப தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்திருந்த சூழ்நிலையில் மத்திய அரசு ஏனோ அதற்கு அனுமதி மறுத்து வருகிறது. 
 
மனிதநேயற்ற முறையில் நடந்து கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், அப்பொருட்களை மனித நேய உணர்வுடன் ஈழத்தமிழ் மக்களுக்கு கொடுத்து உதவவும் வேண்டி சென்னையில் கடந்த 5ம் திகதி சூன் 2007 அன்று தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான பழ.நெடுமாறன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. பெரும் திரளான தமிழ்இன உணர்வாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
 
அந்நிகழ்வின் ஒரு பகுதியாக தமிழக முதல்வருக்கு இது குறித்து மடல் அனுப்ப முடிவுசெய்யப்பட்டது. அதற்கான மடலும் வெளியிடப்பட்டுள்ளது. 
 
கீழ்க்கண்ட கடிதத்திற்கு நகல்கள் எடுத்து பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் ஆகியோருக்கு வழங்கி அவற்றை உடனடியாக முதலமைச்சருக்கு அஞ்சல் அல்லது தொலைநகலி ஆகியவற்றின் மூலம் அனுப்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
 
முதலமைச்சருக்கு அனுப்ப வேண்டிய கடிதம்
 

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்
முதலமைச்சர், தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.
மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களுக்கு,
வணக்கம். இலங்கையில் யாழ்ப்பாணம் செல்லும் சாலையை மூடி யாழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் செல்லவிடாமல் சிங்கள அரசு தடுத்து வருவதன் விளைவாக சுமார் 5 இலட்சம் மக்கள் பட்டினியுடன் வாடுகிறார்கள் என்ற செய்தியை அறிந்து தமிழக மக்களிடம் உணவுப் பொருட்கள் மருந்துகள் ஆகியவற்றைத் திரட்டி அனுப்பி வைப்பது என முடிவுசெய்து கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி இதற்கான முயற்சிகளைத் தொடங்கினோம். தமிழகம் பூராவிலும் பல்வேறு அமைப்புகளும், தனிநபர்களும் மனித நேய உணர்வுடன் இம்முயற்சியில் ஈடுபட்டு உணவு மருந்துப் பொருட்களைத் திரட்டினர். அவற்றைக் கையளிக்கும் விழாக்களும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றன.
சுமார் 1 கோடி ரூபாய் பெறுமானமுள்ள அரிசி, மற்றும் மருந்துப் பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழக நிர்வாகிகளைச் சந்தித்து இப்பொருட்களைக் கையளிப்பது குறித்துப் பேசினோம். அவர்களும் இப்பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு இந்திய செஞ்சிலுவைச் சங்கத் தலைமைக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தினார்கள்.
கடந்த 14-02-07 அன்று இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் இப்பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைப்பதற்கு இந்திய அரசின் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்து பல நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஆனாலும் இதுவரை இப்பொருட்களை அனுப்புவதற்கான அனுமதி கிடைக்கவில்லை.
சேகரிக்கப்பட்ட அரிசி, பருப்பு போன்றவை பூச்சி, வண்டுகள், எலிகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் அபாயமும் சேகரிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் காலாவதியாகிவிடக்கூடிய அபாயமும் உள்ளன. உரியவேளையில் இவை யாழ் மக்களுக்குக் கிடைக்கும்படி செய்தால்தான் பயன் உண்டு. பட்டினியால் வாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கும், மருந்துகள் பற்றாக்குறையினால் பெரும் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் நோயாளிகளுக்கும் உதவவேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டு மக்கள் திரட்டித்தந்த இந்தப் பொருட்களை அனுப்பவிடாமல் இந்திய அரசு தாமதம் செய்வது சரியல்ல.
இந்திய செஞ்சிலுவைச் சங்கம் உலக ரீதியில் இயங்கக்கூடிய பொதுவான அமைப்பு. அதன் மூலம் இப்பொருட்களை அனுப்ப நாங்கள் முயற்சிசெய்கிறோமே தவிர வேறு சட்டவிரோதமான வழியில் அல்ல.
எனவே தாங்கள் உடனடியாகத் தலையிட்டு இந்திய அரசிடமிருந்து உரிய அனுமதியைப் பெற்றுத் தந்து இப்பொருட்களை பட்டினியால் வாடும் யாழ் மக்களுக்கு அனுப்ப உதவும்படி வேண்டிக்கொள்கிறோம்.
அன்புள்ள,

முதலமைச்சரின் தொலைநகலி எண்

044-28111133

 
தோழமையுடன்
க.அருணபாரதி
தலைவர்,
சத்தியம் மக்கள் சேவை மையம்

Monday, June 04, 2007

பட்டினிச்சாவின் விளிம்பில் யாழ். குடாநாட்டின் 5 லட்சம் மக்கள்

பட்டினிச்சாவின் விளிம்பில் யாழ். குடாநாட்டின் 5 லட்சம் மக்கள்
ஞாயிற்றுக்கிழமை, 3 யூன் 2007, 06:16 ஈழம் அ.அருணாசலம்
நன்றி: புதினம் 
 

யாழ். குடாநாட்டுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு குறைந்த அளவு கப்பல்களே உள்ளதனால் அங்கு வாழும் 5 லட்சம் மக்கள் பட்டினிச்சாவின் விளிம்பில் இருப்பதாக மனிதாபிமான அமைப்புக்கள் கடந்த வாரம் தெரிவித்துள்ளன.

இந்த அச்சறுத்தலினால் யாழ். குடாநாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 75 வீதங்களாக அதிகரித்துள்ளன. இது மக்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். குடாநாட்டில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்களில் 20 வீதமான உணவுப் பொருட்களையே கொண்டு செல்லக்கூடியதாக உள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உலக உணவுத் திட்டத்தின் பணிப்பாளர் ஜெப்ஃ ரப்ற் டிக் தெரிவித்துள்ளதாவது:

யாழ். குடாவில் உள்ள மக்களின் தேவைக்கு மாதத்திற்கு 1,000 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் தேவை. அரசினது கப்பல்களில் போதிய இடவசதிகள் இல்லாததால் உலக உணவுத் திட்டம் ஒரு மாதத்திற்கு 200 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களையே தற்போது தருவித்து வருகின்றது.

 


எனினும் கடந்த 3 மாதங்களாக இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு விநியோகம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 11 ஆம் நாளில் இருந்து இன்று வரை 200 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களையே உலக உணவுத் திட்ட அமைப்பு குடாநாட்டுக்கு தருவித்துள்ளது.

யாழ். குடாநாட்டில் தற்போது 250 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களே கையிருப்பில் உள்ளன. நிவாரண உணவுப் பொருட்களின் விநியோகம் கடந்த ஏப்பிரல் மாதம் முதல் வாரத்தில் வழங்கப்பட்ட பின்னர் உணவுப் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அது இடைநிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழ். குடாநாட்டில் மட்டுமல்லாது மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலும் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

மட்டக்களப்பில் உள்ள 138,597 இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர உணவு உதவிகள் தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு தேவைப்படும் உணவின் அளவில் 11 வீதமான உணவுப் பொருட்களே கடந்த மாதம் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

படப்பிடிப்பு: போராளி கஜானி
நன்றி: அப்பால் தமிழ்

------------------------------------------------------------------------------------------ 
நன்றி : புதினம் செய்திகள்
------------------------------------------------------------------------------------------ 
 
இதற்கிடையே
ஈழத்தமிழர்களுக்காக தமிழக மக்களிடம் திரட்டப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை
இந்திய செஞ்சிலுவை சங்கம் மூலம் ஈழத்திற்கு அனுப்புவதற்கு
அனுமதி மறுத்த மனிதநேயமற்ற மத்திய அரசை கண்டித்தும்
உணவுப் பொருட்களை உடனடியாக ஈழத்திற்கு அனுப்பக் கோரியும்
சென்னையில்
நாளை(05-06-07) செவ்வாய் அன்று
தமிழர் தேசிய இயக்கத் தலைவரும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு தலைவருமாக திரு.பழ.நெடுமாறன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது...
------------------------------------------------------------------------------------------ 
 

குறிப்பிடத்தக்க பதிவுகள்