Thursday, March 04, 2010

நளினி விடுதலை: குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியான எனது பேட்டி!

செவ்வணக்கம் தோழர்களே...

நளினி விடுதலை தொடர்பாக கோமாளித்தனமாக பேசிக் கொண்டிருக்கும் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களுக்கு பதில் கொடு்க்கும் விதமாக, இளந்தமிழர் இயக்கம் சார்பில் புதிய ஆதாரம் ஒன்றை வெளியிட்டிருந்தோம். இது குறித்து “குமுதம் ரிப்போர்ட்டர்” இதழில் வெளியான எனது பேட்டியை இப்பதிவில் இடுகின்றேன்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் எனக்கும் தனிப்பட்ட ரீதியில் எவ்வித சண்டையும் இல்லை. ஆனால், பலர் என்னிடம் இளங்கோவனை ஏன் திட்டமிட்டுத் தாக்குகிறீர்கள் என்று கேட்கின்றனர். அதற்கான பதில் மிகவும் எளிதானது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எதிரி முகாமின் கோமாளி என்பதே அது.

பேட்டியை தொடர்ந்து படியுங்கள். உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள்...

தோழமையுடன்,
க.அருணபாரதி
பேச: 9841949462
சீக்கியருக்கு ஒரு நீதி; தமிழருக்கு ஒரு நீதியா?

‘‘இந்திராகாந்தியைக் கொன்ற சீக்கியரை பஞ்சாபில் தியாகியாகக் கொண்டாடுகிறார்கள். அதை எதிர்க்கத் துப்பில்லாத தமிழக காங்கிரஸார், ராஜிவ் கொலை வழக்கில் கு ற்றம்சாட்டப்பட்டு, 19 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினி போன்றோரை விடுதலை செய்யக் கூடாது என்று சொல்கிறார்கள்.இப்படிச் சொல்ல அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை’ என்று புதிய சூட்டைக் கிளப்பியிருக்கிறார்கள் இளந்தமிழர் இயக்கத்தினர்.

இதுகுறித்து இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருணபாரதியிடம் பேசினோம். முதலில் நளினி விவகாரம் பற்றிப் பேசினார் அவர்.

‘‘ஆயுள் தண்டனை என்பதை 14 ஆண்டுகள் என்று கிரிமினல் நடைமுறைச் சட்டம் வரையறை செய்துள்ளது. இந்த வரையறையை மீறி, தமிழக அரசு பத்தாண்டுக் காலம் தண்டனை அனுபவித்த எத்தனையோ ஆயுள் தண்டனைக் கைதிகளை தலைவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்துள்ளது. ஆனால், 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தும் கூட, ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி உள்ளிட்டோருக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. இதற்கு அரசியலைத் தவிர வேறு முறையான சட்டக் காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

நளினியின் மனமாற்றம், தாயின்றி வளரும் அவரது குழந்தை உள்ளிட்ட மனிதநேயக் காரணிகளை முன்வைத்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்.அவரை மட்டு மின்றி பத்தாண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். சிறை, மனிதர்களை மன மாற்றத்திற்கு உள்ளாக்கி திருத்த வே ண்டுமே தவிர, தண்டிப்பதற்கான சித்திரவதைக் கூடமாகிவிடக் கூடாது என்பதே எங்கள் இயக்கம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளின் வேண்டுகோள்.

நளினியை விடுதலை செய்யக் கூடாது என்று சொல்ல தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாருக்குமே அருகதை கிடையாது. சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று சொல்ல இவர்கள் என்ன நீதிபதிகளா? நளினி விடுதலை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், நளினியை விடு விக்கக்கூடாது என்று
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றவர்கள் கூறுவது, நீதிமன்ற அவமதிப்பாகும்.

‘ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நளினிக்கு, அந்தக் கொலை நிகழ்த்தப்பட இருப்பது குறித்து பின்புதான் தெரியும்; தெரிந்த நிலையிலும் கூட அவரால் அதிலிருந்து விடுபட முடியாத சூழ்நிலை இருந்தது’ என்று நீதிபதி தாமஸ் அவ்வழக்கின் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் புத்திசாலிகள் யாராவது ஒருமுறையாவது படித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், நீதிபதியின் தீர்ப்பை அப்படியே புறம்தள்ளிவிட்டு, அந்தத் தீர்ப்பை அவமதிக்கும் விதமாக, நளினிதான் ராஜிவ் காந்தியைக் கொலை செய்தார் என்பதுபோல் ஈ.வி.கே.எஸ். இள ங்கோவன் போன்ற தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சித்திரிக்கிறார்கள்.

நளினியை ‘தீவிரவாதி’ என்று, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து பேசி வருகிறார். நளினியா தீவிரவாதி? இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டபோது சீக்கியர்களைப் படுகொலை செய்து, சீக்கியப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த காங்கிரஸ்காரர்கள்தான் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்! அந்தச் சம்பவத்தை ஒருமுறை முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நியாயப்படுத்திக் கூட பேசியிருக்கிறார். கட்சிக்குள்ளேயே ஒற்றுமையைக் கடைப்பிடிக்கத் தெரியாமல் பதவி, பணத்திற்காக கோஷ்டிகள் அமைத்துச் சண்டையிடும் காங்கிரஸ்காரர்கள், தேச ஒற்றுமையைப் பற்றிப் பேசுவது கேலிக்கூத்து!

பல்கலை மாணவிகள் மூவரை உயிருடன் எரித்துக் கொன்றவர்கள், ரிமோட் குண்டு மூலம் சிவகங்கை தி.மு.க. நகராட்சித் தலைவர் முருகனைக் கொன்றவர்கள், முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, தா.கிருட்டிணன் போன்றவர்களைப் படுகொலை செய்தவர்கள், மதுரை தினகரன் அலுவலகத்தை எரித்து அங்கிருந்த மூன்று ஊழியர்களைக் கொன்றவர்கள் எல்லாம் இன்று கட்சி மற்றும் அரசுப் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள். சிலர் சமூக அந்தஸ்துடன் உலா வருகிறார்கள். அப்படியிருக்க யாரைப் பார்த்து தீவிரவாதி என்கிறார், இளங்கோவன்?

காங்கிரஸ்காரர்கள் ‘அன்னை’ என்று தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை, அவரது பாதுகாவலர் பியாந்த் சிங் சுட்டுக் கொன்றார். அந்த பியாந்த் சிங்கை ‘வீரத்தியாகி’ என்று போற்றி எழுதி, பஞ்சாப்பில் உள்ள சீக்கிய மதப்பீடமான பொற்கோயிலில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு ள்ளது. ‘1984-ம் ஆண்டு பொற்கோயில் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் விதமாக, இந்திராகாந்தியைக் கொல்லும்போது உயிரிழந்த சீக்கிய வீரத்தியாகி, பியாந்த் சிங்’ என்று அந்தப் புகைப்படத்தின் கீழ் எழுதி வைத்திருக்கிறார்கள். பியாந்த் சிங் புகைப்படம் இந்த வாசகங்களுடன் பொற்கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் தகவல் எங்களுக்குக் கிடைத்ததும், எங்கள் இயக்கத் தோழர் ஒருவர் நேரில் சென்று பல தடைகளைத் தாண்டி அதைப் புகைப்படம் எடுத்து வந்திருக்கிறார். (அந்தப் புகைப்படத்தைக் காட்டுகிறார்)

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில் தொடர்புடையவர் என்கிற குற்றச்சாட்டுக்காக நளினியை வாழ்நாள் முழுவதும் சிறையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் துணிவிருந்தால், சீக்கிய மதப் பீடத்தின் இந்தச் செயலைக் கண்டித்து பியாந்த் சிங்கின் புகைப்படத்தை நீக்கக் கோரி ஓர் அறிக்கையாவது விட முடியுமா? அதற்கான துணிச்சல் அவர்களுக்கு இருக்கிறதா? சீக்கியர்களிடம் ஷூவால் அடிவாங்கியும் கூட, அவர்களுக்கு எதிராகப் பொங்காத இவர்கள், தமிழர்களுக்கு எதிராக மட்டும் குமுறுவது ஏன்? தமிழர்கள் என்றால் இளிச்சவாயர்களா? தமிழர்களின் தந்தை பெரியாரையே அவமதித்துப் பேசிவிட்டு இவர்கள் தமிழகத்தில் நடமாட முடியும் என்கிற நிலை இருக்கும் போது வேறு என்ன சொல்ல?

பொற்கோயிலில் வைக்கப்பட்டுள்ள பியாந்த் சிங்கின் புகைப்படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வாசகத்தையும் தமிழகம் முழுக்க எங்கள் இளந்தமிழர் இயக்கம் பரப்புரை செய்ய உள்ளது. நளினி விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ்காரர்கள் முடிந்தால், அதைத் தடுத்துப் பார்க்கட்டும்!’’ என்று முடித்துக் கொண்டார் அருணபாரதி.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசினோம். ‘‘நளினி ஒன்றும் சின்னப் பிள்ளை இல்லை. முருகன் உடனிருந்த தொடர்பில் பயங்கரவாத அமைப்புடன் ஐக்கியமாகி இளந்தலைவர் ராஜிவ்காந்தியை அவர் கொன்றிருக்கிறார். பஞ்சாப் பொற்கோயிலில் என்ன வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது.

தமிழக காங்கிரஸ்காரர்கள் தமிழகப் பிரச்னையில் மட்டும்தான் தலையிட முடியும். உலகில்(!) நடக்கும் பிரச்னைகளில் எங்களால் தலையிட முடியாது. இவர்கள் கேட்பது நளினியை எதிர்க்கும் நீங்கள், பின்லேடனை எதிர்ப்பீர்களா என்பது போல உள்ளது. பங்களாதேஷில் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் தூக்கிலிடப்பட்டனர். அதனடிப்படையிலேயே நளினி விடுதலையை நாங்கள் எதிர்க்கிறோம்’’ என்றார் இளங்கோவன்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

குறிப்பிடத்தக்க பதிவுகள்