Thursday, December 01, 2011

பாலை திரைப்படத்தை ஆயுதமாக்குவோம்!
உரைவீச்சுகளின் வழியே நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை விட மிக வலிமையான பரப்புரை ஊடகம் தான் திரையுலகம். இத்திரையுலகின் வழியே, தமது வரலாற்றைத் தாமே அறியாத தமிழ் இனத்திற்கு, தம் கடந்தகால வாழ்வியல் பெருமிதங்களையும், வரலாற்றையும் எடுத்துரைக்க வந்திருக்கிறது ‘பாலை’ திரைப்படம்.


படத்தின் இயக்குநர் தோழர் ம.செந்தமிழன் தமிழ் உலகிற்கு நன்கு அறிமுகமானவர். துடிப்பான ஓர் செய்தியாளராகவும், சின்னத்திரை நாடகங்களில் எழுத்தாளராகவும் வெற்றிகரமாக சென்னை நகரில் வலம் வந்த தோழர் ம.செந்தமிழன், இலட்சங்களை உதறிவிட்டு தனது சொந்த ஊரான ஆச்சாம்பட்டியில் உழவுப் பணியை மேற்கொண்ட போது எல்லோரும் அவரை ஆச்சர்யமாகப் பார்த்தனர். இயற்கை வேளாண்மை முறையில் தமது வேளாண் பண்ணையை வெற்றிகரமாக இயக்கி, ‘பசுமை விகடன்’ நாளிதழின் அட்டைப்படத்திலும் ஓர்முறை அவர் இடம் பிடித்தார். தமது கல்லூரிப் படிப்பின் காலகட்டங்களிலிருந்தே தமிழ்நாட்டு உரிமைப் போராட்டம், ஈழ விடுதலைப் போராட்டம் என பல போராட்டங்களிலும் பங்கெடுத்து சிறைகளுக்கும் சென்றவர்.


கடந்த 2009ஆம் ஆண்டு, ஈழப்போர் நடந்து கொண்டிருந்த போது, ‘முத்துக்குமார் யார்?’ என திமிருடனும், பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரை அவமதித்தும் பேசிய, தமிழினப் பகைவன் – காங்கிரஸ் ஓட்டுப் பொறுக்கி ஈ.வி.கேஸ்.இளங்கோவன் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை இளந்தமிழர் இயக்கம் நடத்திய போது, அதில் முன்னணியாக கைதாகி சிறை சென்றவர் செந்தமிழன். அவருடன், நான் உட்பட பல்வேறு அமைப்புத் தோழர்களும் சிறையில் இருந்ததை இந்நாளில் நினைவு கூர்கிறேன். அப்போது சிறைக்கு எங்களுடன் வந்த புதிய தோழர்கள் பலரும், தற்போது ‘பாலை’ படத்தில் முக்கியப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தி.


மக்கள் தம் துன்பங்களை மறந்துவிட்டு, ஆடிப்பாடி மகிழ்வதற்கு மட்டுமே பயன்படுவதாக ‘இலக்கிய’த்தை யாரேனும் கைகாட்டினால், அதனை தயக்கின்றி நான் ‘போதை வஸ்து’ என்பேன். ‘இலக்கியம்’ என்ற சொல்லை, மக்களை ஓர் இலக்கு நோக்கி திரட்டப் பயன்படும் ஓர் போராட்ட வடிவமாகத் தான் நான் காண்கிறேன். அவ்வகையில், ‘பாலை’ ஓர் போராட்ட இலக்கியமே! தமிழ்நாட்டு உரிமைப் போர், ஈழ விடுதலைப் போர் என பல போராட்டங்களிலும் முன்நின்ற தோழர் ம.செந்தமிழன் உள்ளிட்ட அவரது படக் குழுவினரிடம் இப்படிப்பட்ட போராட்ட இலக்கியம் வரவில்லை என்றால் தான் நாம் அதிர்ச்சி அடைந்திருக்க முடியும்!


புலி முத்திரை தாங்கிய முல்லைக் குடியினருக்கும், சிங்க முத்திரை தாங்கிய ஆயக்குடி வந்தேறிகளுக்கும் இடையேயான போர் தான் பாலை படத்தின் கரு. ஈழப்போரை நினைவுபடுத்தும் இக்கதைக்கருவை, சங்க இலக்கியங்களிலிருந்து ஆய்வு செய்து எடுத்தக் குறிப்புகளைக் கொண்டு, அம்மக்களின் அப்போதைய வாழ்வியல் பண்புகளோடு படமாக்கியிருக்கின்றனர்.


“வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்கள் வரலாற்றைப் படைக்க முடியாது” என்று சொன்னவர் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். தமிழீழ மக்களின் வரலாற்றையும், அம்மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றையும் தம் ஆட்சிப்பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்தது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. இதனால் தான், எத்தகைய இழப்புகளையும், பின்னடைவுகளையும் சந்தித்த போதும், தமிழீழ மக்கள் தமது இலட்சியமான ஈழவிடுதலையை சமரசமின்றி விட்டுக்கொடுக்காமல் போராடுகின்றனர்.


ஆனால், இன்றைய தமிழ்நாட்டு மக்களின் நிலையோ அப்படியல்ல. இந்திய அரசின் அரைகுறை சனநாயக கங்காணி ஆட்சியும், அதன் ஊதுகுழல் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களை மயக்கத்திலேயே ஆழ்த்தி வைத்துள்ளன. உரிமைகள் பறிக்கப்பட்ட போது குமுறி எழும் தமிழ்நாட்டுத் தமிழர்களை ஒரு சில நாடாளுமன்ற சீட்டுகளாலும், பதவிகளாலும் வீழ்த்திவிட முடியும் என்ற துணிவு ஆரிய இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எப்போதும் உண்டு. ஆனால், இதெல்லாம் கடந்த காலம் தான்.


இந்திய அரசின் திமிர்த்தனத்தை உடைத்தெறியக் கிளம்பியுள்ள புதிய தலைமுறை இளந்தமிழர்களின் காலமிது. மூவர் தூக்கை நீக்கவும், கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்பிலும் மக்கள் காட்டுகின்ற வீரியம், இந்திய அரசிற்கு எதிரான போராட்டமாக வளர்ந்து வருகின்ற காலமிது. இன்றைய போராட்டத் தமிழகத்தின் மக்கள், தம் வரலாற்றைத் தேடும் பயணத்தை வேகப்படுத்தியிருக்கிற கால கட்டமும் இதுதான்.


இந்நேரத்தில், தம் வரலாற்று மரபையும் பெருமிதங்களையும் தமிழ் மக்களுக்கு உணர்த்தும் இலக்கிய வடிவங்கள் காலத்தின் தேவைகள். இத்தேவையை உணர்ந்ததால் தானோ என்னவோ, ஊரைக் கொள்ளையடித்து ‘உழைத்து’ சம்பாதித்த பணத்தில், பொழுதுபோக்காக படமெடுத்து, வரலாற்றைத் திரித்துக் கூறி போலித் தமிழ்ப் பெருமிதத்தை உருவாக்கும் படங்களும் வருகின்றன. நல்லவேளை ‘பாலை’ அப்படிப்பட்ட படமாக வரவில்லை!


ஆண்களுக்கு நிகராக போருக்கு தயாராகும் வீரத்தமிழ்ப் பெண்களையும், தம் இனக்குழுவிற்கு ஆபத்து நேரும் போது வில்லெடுத்து களத்திற்கு வந்து நிற்கும் சங்ககால சிறுவர் கூட்டத்தையும் ‘பாலை’ அடையாளம் காட்டியிருக்கிறது. பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைத்திருக்கும் மரபை தமிழினம் கொண்டிருக்கவில்லை என்ற உண்மையும் இதில் நிலைநாட்டப்பட்டுள்ளது. திரைத்துறையில் இதுவரையில் எவ்வகையிலும் இடம்பெறாத, பார்ப்பனியத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட பழந்தமிழ்க்குடியான இருளர் சமூகப் பெண்கள் பலரும் இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களை ஏற்று நடித்திருப்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.


‘போர் என்றால் எதிரியைத் தாக்குவதல்ல எதிரியை வீழ்த்துவது’ என முல்லைக்குடி முதுவன் கூறும் போதும், ‘தலைவர் எங்கே தலைவர் எங்கே என தேடாதீர்... எதிரியை எங்கே எதிரி எங்கே என அவனைத் தேடுங்கள்’ என்று பொருள் படும்படி முல்லைக்குடித் தலைவர் விருத்திரன் தனது வீரர்களுக்கு போர்க்களத்தில் கூறும் போதும், இவ்வார்த்தைகள் இன்றைய உலகத் தமிழ் மக்களுக்கும் தேவைப்படுகின்ற வரிகளாக முன்னிற்கின்றன.


அவ்வப்போது பாலை முதுவன் உதிர்க்கும் வசனங்கள் அனைத்தும் மனதில் நிற்பவையாக உள்ளன. அவர் தனது மகன் இறந்த கதையை யதார்த்தமாகக் கூறும் போது நெஞ்சில் ‘பாலை’யின் கொடூரத்தை உணர வைக்கிறார். கதைப்படி அவர் கூறுகின்ற ‘பாலை’ என்ற வாழ்விடப்பரப்பு, தற்போது சோமாலியாவில் நிகழ்ந்து வரும் வரலாறு காணாத பெரும் பஞ்சத்தைப் போன்றது என உணர முடிகின்றது. உடன்போக்கு, ஆநிரைக் கவர்தல், திருமண முறை, யானைகளை விரட்ட கவன்கல் எரிதல், புகை மூலம் பேசும் முறை என சங்ககால வாழ்வியல் பதிவுகள் படமெங்கும் சிதறிக் கிடக்கின்றன.


நான்கடி தூரத்தில் யார் வருகிறார்கள் எனத் தெரிந்து கொள்வதற்கே நாம் படாதுபாடு படுகின்ற இதே இனத்தில் தான், நாற்பதடி தூரத்தில் எத்தனை வண்டிகள் வருகின்றன, எத்தனை பேர் வருகின்றனர் என்று கணக்கிட்டுச் சொல்லும் அளவிற்கு மக்கள் தமது அறிவை வளர்த்து வைத்திருந்தனர் என நினைக்கும் போது பெருமையும், ஏக்கப் பெரு மூச்சும் இயல்பாக எழுகின்றன.
கதை, வசனம், பாடல் வரிகள் உள்ளிட்ட எழுத்துப் பணிகளும், இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகளும் செம்மையுற செய்யப்பட்டிருக்கின்றன. திரைத்துறையை முற்றிலும் சாராத புதிய இளைஞர்களை நடிக்க வைத்து, பாலை படம் தனிமுத்திரையும் பதித்திருக்கிறது.


படத்தின் இறுதியில், ‘நாம் வாழும் இந்த மண் நம் முன்னோர்களால் எதிரிகளிடமிருந்து மீட்கப்பட்ட மண்’ என்று கதைநாயகி காயாம்பூ கூறும் போது, இப்படம் இன்றைய இளைஞர்களுக்கு நம் போராட்ட வரலாற்றை உணர்த்துவதற்காக கிடைத்த ஓர் நல்வாய்ப்பு என்றே தோன்றுகிறது.


இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த விதம், அங்கு பலமுறை நான் நேரில் சென்றதால் எனக்கு நன்றாகவேத் தெரியும். சென்னை திருவல்லிக்கேணி மேன்சன் அறைகளில் பேச்சலர் இளைஞர்கள் குழுவாக குழுமியிருப்பதைப் போல, தஞ்சாவூர் ஆச்சாம்பட்டியில் அமைந்திருந்த வேளாண் பண்ணைக்கு நடுவில் அமைந்திருந்த ஒரே அறை கொண்ட ஓர் குடிசை வீட்டில், படக்குழுவினர் இரத்திரி பகலாக அங்கேயே உண்டு, உறங்கி, ஒன்றாகக் கலந்து பேசி ‘படப்பிடிப்பு’ என்பதை ஓர் தொழிலாகவோ, வேலையாகவோ கருதாமல், அதை ஓர் ‘வாழ்முறை’யாக மாற்றியிருந்தனர். இனஉணர்வுடனும், அர்ப்பணிப்புடனும் கூடிய உழைப்பு தான் இப்படவெற்றியின் ஆணிவேர்!


நம் தமிழ்ச் சமூகத்தின் பெருமிதங்களைளும், மரபுகளையும் கூறி, தமிழ் மக்களை அடிமை மனநிலையிலிருந்து விடுவித்து, போர்க்குணமிக்கப் படையாக மக்களை மாற்றுவதற்குக் கிடைத்த ஓர் ஆயுதம் தான் ‘பாலை’ திரைப்படம். ‘பாலை’ படத்தை ஓர் பொழுது போக்குத் திரைப்படமாக பார்க்காமல், நம் இன்றைய தலைமுறையினருக்கு தமிழ் இனத்தின் கடந்த கால வரலாற்றைக் கூறும் பாடமாக நாம் பார்க்க வேண்டும். இப்படம் வணிக ரீதியாகத் தோல்வியைத் தழுவினால், தமிழ் இனம் குறித்தும் வரலாறு குறித்தும் பிற்காலத்தில் எந்தவொரு படங்களும் திரையில் வராமல் தடுக்கும்
டேம்-999 போன்ற தமிழ் இனத்திற்கு எதிரான படங்களுக்குக் கிடைத்த திரையரங்குகளில் 25 விழுக்காடு கூட, சங்ககால தமிழ் இனத்தின் பெருமைகளைப் பேசும் இப்படத்திற்கு கிடைக்கவில்லை என இயக்குநர் ம.செந்தமிழன் ஊடகங்களுக்குக் கடிதம் எழுதிய போது இன்றைய தமிழ் இனத்தின் அவலநிலையை இன்னுமொருமுறை நம்மால் உணரமுடிந்தது.


இப்படத்தை திரையிடுவதற்குக் கிடைத்துள்ள சொற்பத் திரையரங்குகளுக்குக் கூட இது போன்ற பணமுதலைகள் நெருக்கடிகளும், மிரட்டல்களும் விடுத்து இப்படத்தை ஓட விடாமல் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கினர். தன் காலில் விழாத சிறு தயாரிப்பாளர்கள் எவருமே இத்துறையில் பிழைக்கவோ, காலூன்றவோ முடியாது என்ற ஆதிக்க நிலையை மட்டுமே விரும்புகின்ற பணமுதலைகளை மீது நாம் தாக்குதல் தொடுப்பதற்கு, “பாலை” போன்ற நல்லத் திரைப்படங்கள் தான் சரியான ஆயுதங்கள்!


பணமுதலைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் ஆக்கிமித்துள்ள தமிழ்த் திரையுலகில் தனியொருக் குழுவாக ‘பாலை’ படக்குழுவினர் முத்திரைப் பதிக்க நிற்பது கூட ஓர் வகையிலான அரசியல் போராட்டம் தான்! ‘பாலை’ படக்குழுவினரின் இப்போராட்டத்தில் நாமும் பங்கெடுப்போம். தமிழ் இனத்தின் போராட்ட மரபை உணர்த்தும் ‘பாலை’ போன்ற படங்களின் வெற்றி தான், நாம் அடுத்த தலைமுறைக்கு நம் போராட்டத்தை கையளிப்பதில் நமக்குக் கிடைக்கும் வெற்றி! நம் குடும்பங்களையும், சொந்தங்களையும் இப்படத்திற்கு கூட்டம் கூட்டமாக அழைத்துச் செல்வோம். நம் குடும்பங்களை அரசியல்படுத்துவோம்! ‘பாலை’ திரைப்படத்தை பணமுதலைகளுக்கு எதிரான ஆயுதமாக்குவோம்!


இக்கட்டுரை கீற்று இணையதளத்தில் வெளிவந்தது, சுட்டி: http://keetru.com/index.php?option=com_content&view=article&id=17585%3A2011-11-29-08-56-58&catid=11%3Acinema-review&Itemid=129

Friday, November 25, 2011

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் - ”பாலை” பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்!
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்
பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்!

முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்...

‘பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.

‘பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது.

‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே.

‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது… இப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’

சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் ’இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’” என்று கடிதம் எழுதிக் கொடுத்தார்.

சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள்.

முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.

இவர்கள் அனைவரின் வேண்டுகோளும் மக்களை நோக்கி இருக்கிறது. ‘அவசியம் பாலை படத்தைப் பாருங்கள்’ என்கிறார்கள் இவர்கள்.

எனக்கும் என் குழுவினருக்குமான வேண்டுகோள் மக்களை நோக்கி இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை. எங்கள் வேண்டுகோள் திரையுலகை நோக்கி இருக்கிறது.

தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் நிறைய. அவற்றை நான் அடுக்க விரும்பவும் இல்லை; இப்போது அதற்கான அவகாசமும் இல்லை.

ஓர் உண்மையை உரத்துச் சொல்ல விரும்புகிறேன்.

‘அதிகாரமும் பெரும் பணமும் இருந்தால் குப்பைகளுக்கும் திரையரங்குகள் திறக்கும். இல்லையென்றால், இயக்குனர், தயாரிப்பாளர் முகங்களில் குப்பை வீசப்படும்’

இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இவை ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். மக்கள் கூட்டம் அலைமோதுகிறதா அல்லது இவை வெறுமனே பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவா என்பதை நீங்களே உணரலாம்.

ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன.

திரைப்படங்களால் நிரம்ப வேண்டிய அவ்வரங்குகள் மிகச் சில முதலைகளின் கழிவுகளால் நாற்றமெடுத்துக் கிடக்கின்றன.

தமிழகத்தில் DAM-999 என்ற படத்துக்குக் கிடைத்த திரையரங்குகளில் 25% கூட பாலைக்குக் கிடைக்கவில்லை! முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மலையாளிகளுக்குப் பிடுங்கித் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லை; தமிழரின் வரலாற்றைப் பதிவு செய்யும் படத்துக்கு அரங்கு இல்லை. அழுவதைத் தவிர வேறு என்ன வழி?

இப்போது DAM-999 படம் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்தத் திரை அரங்குகளில் மிகச் சில கூட பாலைக்குக் கிடைக்கவில்லை. அவ்வரங்கங்கள், வேறு ஒரு Warner Brothers தயாரிப்புப் படத்துக்காகக் காத்திருக்கின்றன. ஜாக்கிசானின் 1911 படத்துக்குக் கிடைத்த அரங்குகளின் எச்சில் துளி கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை.

கிடைத்த அரங்குகளில் பாலை இன்று (25/11/11) வெளியாகிறது. எமக்கு அரங்கு கொடுத்த அரங்க உரிமையாளர்கள், மேலாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இப்பணியில் தம்மை அளவுக்கு மீறி ஈடுபடுத்திக் கொண்டதால் மிக மோசமான உடல் உபாதையில் சிக்கித் தவிக்கும் என் இனிய நண்பர் ‘செங்கோட்டை’ திரைப்பட இயக்குனர் சசிகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது மனமுருகிய நன்றிகள்!

இக்கடிதத்தை எழுதுவதால் என்ன பலன் என எனக்குப் புரியவில்லை.

ஆனால், நான் ஒரு போதும் நம்பிக்கையை விடுவதில்லை. இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன். அப்பேராற்றலின் அங்கங்களாகவும் படைப்புகளாகவும் விளங்கும் மக்களை நம்புகிறேன்.

நாங்கள் பந்தயத்தில் பரிசு கேட்கவில்லை
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்!

பாலை குழுவுக்காக,
ம.செந்தமிழன்

Saturday, March 26, 2011

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கரம் நம்மூரில் நடக்காதா? குமுதம் இதழில் வெளியான பேட்டி!

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கரம் நம்மூரில் நடக்காதா? அருணபாரதி கேள்வி!

புவிவெப்பமயமாதல் மற்றும் கடல் அரிப்பு காரணமாக தமிழகத்தின் பல்வேறு கிராமங்கள் கடலுக்குள் மூழ்கி வருகின்றன. இது குறித்து விளக்கும் 'வெப்பம்" என்று பெயரிடப்பட்ட ஆவணப்படத்தை இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் க.அருணபாரதி இயக்கி வருகின்றார். இளந்தமிழர் இயக்கமும் பன்மைவெளி வெளியீட்டகமும் இணைந்து இந்த ஆவணப்படத்தை தமிழகமெங்கும் கொண்டு செல்ல உள்ளது.

ஆவணப்படத்தின் தயாரிப்புப் பணிகள் நிறைவுற்று விரைவில் இந்த ஆவணப்படம் வெளிவரவுள்ளது. இது குறித்த தோழர் அருணபாரதியின் செவ்வி இவ்வார 'குமுதம்" எட்டில் வெளி வந்துள்ளது.
 
"குமுதம்" இதழில் வெளியான அப்பேட்டி:
 
சுனாமியில் ஜப்பான் நகரங்கள் அழிந்தது போல், சத்தமில்லாமல் நம்ம ஊர் கிராமங்களும் கடலுக்கு இரையாகிக் கொண்டிருக்கும் செய்தி கேட்டு விரைந்தோம்.அவை பாண்டிச்சேரி அருகில் இருந்தாலும் விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் வருகின்றன.
 
முதலில் சின்னமுதலியார்சாவடி, திருவொற்றியு+ர், சீனிவாசபுரம், தேவனாம்பட்டினம், உவரி என கடல் அரிப்பால் கரைந்து கொண்டிருக்கிற ஊர்களின் பட்டியலில் இப்போது சின்ன முதலியார்சாவடி. கிராமத்தைத் தொட்டவுடன் நம் கண்களில் படுவது, ஊரையெ மூழ்கடித்துவிடும் ஆசேவத்தில் மிக அருகில் ஆர்ப்பரிக்கிற கடல்தான்.ஊரின் கடைக்கோடியில் இருந்த வீடுகள் அனைத்தும் சிதிலமாகிக் கிடக்கின்றன.
 
பாதி நிர்மூலமாகிவிட்ட வீட்டுக்குள் உட்கார்ந்து ஒரு பெரியவர் சகஜமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார். "உங்க வீடு எங்கே?" என சிலரிடம் கேட்டால், கடலை நோக்கி கைகாட்டுகிறார்கள். கடந்த மூன்று வருடங்களுக்குள் இவர்களின் வீடுகள் கடலுக்குள் போய்விட்டன. காரணம் கடல் அரிப்பு! கடல் அலைகள் இங்கே 160 வீடுகளைக் கலைத்துப்போட்டுவிட்டதாம். மொத்தத்தில் இந்த ஊர் வேகமாக கடலுக்குள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.
 
ராஜேந்திரன் என்ற மீனவரிடம் பேசினோம். "ரெண்டு வரு'த்துக்கு முன்னால் எங்க ஊர்லருந்து கடல் 100 மீட்டர் தொலைவில் இருந்துச்சு. இப்போ உள்ளே வந்து, வீடுகளை அடிச்சு, இன்னும் வேகமா நெருங்கிட்டிருக்கு. அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கிற மழைக்காலங்கள்லதான் கடல் வீடுகளை அடிச்சுட்டுப் போயிடுற சேதாரம் அதிகம் நடக்குது" என்று சோகத்துடன் சொல்கிறார்.
 
கடலின் அடுத்தகட்ட தாக்குதலுக்கு வசதியான பாக்கியத்தின் வீடு இருக்கிறது. "போன வரு'ம் கடல் தண்ணி எதிர்வீட்டுல புகுந்ததுல வீடு திடீர்னு இடிஞ்சு விழுந்துடுச்சு கீழே விழுந்த கவர்களுக்கு நடுவுல என் பையன் சிக்கிக்கிட்டான். பையன் காலை அறுத்துதான் எடுக்கணுமோங்கிற அளவுக்குப் பயந்துட்டோம். காயம் ஆறி அவன் வேலைக்குப் போக ரெண்டு மாசம் ஆச்சு" என்கிறார் பாககியம்.
 
அருகிலுள்ள தந்திராயன்குப்பம், பொம்மையார்பாளையம் ஆகிய கடலோரக் கிராமங்களையும் கடல் வேகவேகமாக விழுங்கி வருகிறது. இவற்றில் தந்திராயன்குப்பத்தில் கடலோரத்தில் இரு பக்கமும் கற்சுவர் எழுப்பி, தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளதால் கடல் அரிப்பு கொஞ்சம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பக்கத்தில் உள்ள கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டால், அண்மைக் கிராமங்களை நோக்கி கடல் நீரோட்டம் திரும்பி, அங்கே கடல் அரிப்பு அதிகமாகும் என்பது இன்னொரு வேதனை.
 
கடல் அரிப்பால் காணாமல் போகும் இந்தக் கிராமங்களைப் பற்றி ஐ.டி. ஊழியரும் சமூகச் செயல்பாட்டாளருமான அருணபாரதி "வெப்பம்" என்ற ஆவணப்படம் எடுத்து வருகிறார்.
 
அவர் சொல்லும் தகவல்கள் உணர்த்தும் ஒரே செய்தி, "நிலைமை கைமீறிப் போகிறது!".
 
"கடல் அரிப்பை மீனவர்களின் பிரச்சினையாவே பலர் பார்க்குறாங்க. அது மொத்த தமிழகத்துக்கான பிரச்னை. மீனவ கிராமங்களை விழுங்கிட்டு, கடல் ஊருக்குள்ள தானே வந்தாகணும்?
 
1989-இல் புதுச்சேரியில் கடலின் இயற்கை நீரோட்டத்தை மறிச்சு கட்டப்பட்ட மீன்பிடித் துறைமுகம் இந்தக் கடல் அரிப்புக்கு முதல் காரணம். இது போன்ற உள்ளுர் பிரச்சினைகளை விட முக்கியக் காரணம் புவிவெப்பமயமாதல்.
 
பு+மியின் வெப்பம் கூடிட்டே போறதால், உலகம் முழுக்க பல பனிமலைகள் உருகிட்டிருக்கு. அதனால் கடல்களின் நீர்மட்டம் அதிகரிச்சுட்டே இருக்கு. இந்தியாவின் நீண்ட கடலோர மாவட்டங்களைக் கொண்ட மூன்றாவது பெரிய மாநிலம் தமிழகம் தான். அதனால் கடல்மட்ட உயர்வால் தமிழகத்தில் பாதிப்புகள் அதிகமாவே இருக்கும்.
 
கடலோரத்தில் கட்டப்பட்டிருக்குற கல்பாக்கம் அணுஉலை, கூடங்குளம் அணுமின் நிலையம் போன்றவை கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்பட்டால், இப்போ ஜப்பானுக்கு ஏற்பட்ட பயங்கரம் நம்மூரில் நடக்காதுன்னு அரசால் உறுதியாகச் சொல்ல முடியுமா?" என்று கேட்கிறார் பாரதி.
 
கேள்வி சரிதான். பதில் யார் தருவார்?
 
நன்றி: குமுதம்

விரைவில் வெளிவரவுள்ள இந்த ஆவணப்படத்தில் தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் தோழர் கி.வெங்கட்ராமன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் தோழர் கோ.சுகுமாரன், இளந்தமிழர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினரும் இயற்கை வேளாண் உழவருமான தோழர் ம.செந்தமிழன் ஆகியோரது செவ்விகள் இடம்பெற்றுள்ளன.

கல்லூரி மாணவர் பிரகாஷ் இந்த ஆவணப்படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கிறார். வெப்பமயமாதல் குறித்து, இந்த ஆவணப்படத்திற்காக கவிஞர் கவிபாஸ்கர் எழுதியப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க பதிவுகள்