Friday, November 25, 2011

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் - ”பாலை” பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்!
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்
பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்!

முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்...

‘பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.

‘பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது.

‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே.

‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது… இப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’

சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் ’இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’” என்று கடிதம் எழுதிக் கொடுத்தார்.

சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள்.

முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.

இவர்கள் அனைவரின் வேண்டுகோளும் மக்களை நோக்கி இருக்கிறது. ‘அவசியம் பாலை படத்தைப் பாருங்கள்’ என்கிறார்கள் இவர்கள்.

எனக்கும் என் குழுவினருக்குமான வேண்டுகோள் மக்களை நோக்கி இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை. எங்கள் வேண்டுகோள் திரையுலகை நோக்கி இருக்கிறது.

தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் நிறைய. அவற்றை நான் அடுக்க விரும்பவும் இல்லை; இப்போது அதற்கான அவகாசமும் இல்லை.

ஓர் உண்மையை உரத்துச் சொல்ல விரும்புகிறேன்.

‘அதிகாரமும் பெரும் பணமும் இருந்தால் குப்பைகளுக்கும் திரையரங்குகள் திறக்கும். இல்லையென்றால், இயக்குனர், தயாரிப்பாளர் முகங்களில் குப்பை வீசப்படும்’

இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இவை ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். மக்கள் கூட்டம் அலைமோதுகிறதா அல்லது இவை வெறுமனே பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவா என்பதை நீங்களே உணரலாம்.

ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன.

திரைப்படங்களால் நிரம்ப வேண்டிய அவ்வரங்குகள் மிகச் சில முதலைகளின் கழிவுகளால் நாற்றமெடுத்துக் கிடக்கின்றன.

தமிழகத்தில் DAM-999 என்ற படத்துக்குக் கிடைத்த திரையரங்குகளில் 25% கூட பாலைக்குக் கிடைக்கவில்லை! முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மலையாளிகளுக்குப் பிடுங்கித் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லை; தமிழரின் வரலாற்றைப் பதிவு செய்யும் படத்துக்கு அரங்கு இல்லை. அழுவதைத் தவிர வேறு என்ன வழி?

இப்போது DAM-999 படம் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்தத் திரை அரங்குகளில் மிகச் சில கூட பாலைக்குக் கிடைக்கவில்லை. அவ்வரங்கங்கள், வேறு ஒரு Warner Brothers தயாரிப்புப் படத்துக்காகக் காத்திருக்கின்றன. ஜாக்கிசானின் 1911 படத்துக்குக் கிடைத்த அரங்குகளின் எச்சில் துளி கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை.

கிடைத்த அரங்குகளில் பாலை இன்று (25/11/11) வெளியாகிறது. எமக்கு அரங்கு கொடுத்த அரங்க உரிமையாளர்கள், மேலாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இப்பணியில் தம்மை அளவுக்கு மீறி ஈடுபடுத்திக் கொண்டதால் மிக மோசமான உடல் உபாதையில் சிக்கித் தவிக்கும் என் இனிய நண்பர் ‘செங்கோட்டை’ திரைப்பட இயக்குனர் சசிகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது மனமுருகிய நன்றிகள்!

இக்கடிதத்தை எழுதுவதால் என்ன பலன் என எனக்குப் புரியவில்லை.

ஆனால், நான் ஒரு போதும் நம்பிக்கையை விடுவதில்லை. இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன். அப்பேராற்றலின் அங்கங்களாகவும் படைப்புகளாகவும் விளங்கும் மக்களை நம்புகிறேன்.

நாங்கள் பந்தயத்தில் பரிசு கேட்கவில்லை
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்!

பாலை குழுவுக்காக,
ம.செந்தமிழன்

16 கருத்துகள்:

a .v. Samikkannu said...

"முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மலையாளிகளுக்குப் பிடுங்கித் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லை...." ஏனிந்த வெறி தெறிக்கும் வார்த்தைகள் ? இத்தகைய பிரதேச வெறியைக்-- மலையாளியும் 'திராவிடன்' என்பதால் 'இன வெறி'எனக் குறிப்பிடவில்லை--கிளறிவிட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிற குடும்பத்தின் உடும்புப் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள தமிழ்த் திரையுலகில் அதே பாணியைக் கடைபிடிக்கிற உங்களைப் போன்றோர் நுழைந்து என்ன நல்லது நடக்கப் போகிறது ?

sivram said...

உங்கள் தமிழ்ப்பற்றுக்கு தலைவணங்குகின்றேன்.
வெற்று பொருளுக்கும் புகழுக்கும்
அலையும் உலகில் தமிழ்ப்பற்றுக்கு மதிப்பில்லை
என எண்ணும் போது தலை
குனிகின்றேன்.

க.அருணபாரதி said...

அய்யா சாமிக்கண்ணு,

"முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மலையாளிகளுக்குப் பிடுங்கித் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லை...." - இது வெறித் தெறிக்கும் வார்த்தைகளா?

முல்லைப் பெரியாறு அணை மீது தமிழர்களுக்கு உள்ள நியாயமான சட்டப்பூர்வமான உரிமையை உடைத்தெறியத் துடிக்கும் மலையாளி வெறியனா? நியாமான உரிமைக்குப் போராடும் தமிழன் வெறியனா?

உங்கள் வார்த்தைகளை கேரளத்தில் கூறுங்கள். தமிழகத்தில் வேண்டாம்!

a .v. Samikkannu said...

*திராவிடன்>தனித் தமிழன் >தமிழன்>சாதியன்> கிளைச் சாதியன்>தன் வீட்டான் > இறுதியில் தான் எனத் தமிழ்த் தேசியத்தைக் கீழ்மைப் படுத்திக் கொண்டிருக்கிற வீரதீரர்கள் நடுவில், **உழைப்பாளியாகவும்,ஒட்டுண்ணியாகவும் மட்டுமே இருக்கிற சமூகத்தில் அதையொட்டியே மனிதரை அடையாளம் காண்கிற தோழன் அந்த மனிதரின் உண்மையான மொழி, இனப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை எப்போதும் முன்மொழியத் தயங்காதவன்;
***முல்லைத் தீவு முதல் முல்லைப் பெரியாறு வரை அவனின் நிலைபாடுகளில் நெருடல் என்பதே நேர்ந்ததில்லை;
****சிங்கள இன வெறியன் தமிழச்சியின் மானத்தைப் பறித்த போது சீறிப் பாய்வதுபோல் பாசாங்கு செய்த ஓட்டுப் பொறுக்கித் தமிழனைப் போலன்றி அச் சமயத்தில் அதற்கெதிராகக் கண்டனக் குரலை எழுப்பியதுடன் நிற்காமல் இலங்கைத் தமிழரின் இனப் பிரச்சனைக்குச் சரியான அரசியல் தீர்வை வாக்கு வங்கிக்கு வளைந்து கொடுக்காமல் அச்சமின்றி முன்மொழிந்தவன் அவன்;
***** தாய் மண்ணில் சிதம்பரத்திலும், சின்னாம்பதியிலும்,வாச்சாத்தியிலும்,உத்தப்புரத்திலும் தங்கத் தமிழன் தன்னினப் பெண்களையே சின்னாபின்னம் செய்தபோது-- உங்களைப் போன்ற சிங்கத் தமிழர்கள் வசதியாக ஒதுங்கிக் கொண்டபோது-- மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் சளைக்காமல் சமர் புரிந்தவன்;
******விடுதலைப் போராட்ட காலந்தொட்டு மொழிவாரி மாநிலம், தாய்மொழிக் கல்வி,மாநில மக்களின் மொழியில் நீதிமன்ற, நிர்வாக நடவடிக்கை என்கிற முழக்கங்களை முன்னுக்குப் பின் முரணின்றி அறிவியல் பூர்வமாக முன்வைத்துப் போராடியவன்;
*******அண்மைக் காலத்தில் தமிழில் தந்தி, தமிழுக்குச் செம்மொழித் தகுதி, பாட்டாளி வீட்டுப் பிள்ளைக்காக சமச் சீர்க் கல்வி ,தீண்டாமை ஒழிப்பு என அப்பாவித் தமிழனின் அடிப்படையான பண்பாட்டுப் பிரச்சனைகளுக்காக எண்ணற்ற இயக்கங்களை இடையறாது நடத்தி வருபவன்;
********அவனின் தமிழ்ப் பற்றுக்கு இதற்கு மேலும் சான்றுகளை அடுக்க வேண்டிய அவசியமில்லை என நினைப்பதால் இப்போதைக்கு இத்துடன் முடிக்கிறேன்; நன்றி;வணக்கம் நண்பரே!

a .v. Samikkannu said...

ஐயா, அருணபாரதியாரே! ஆற்று நீர்ப் பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேடுகிறவனிடம் உங்கள் அம்பை எறியுங்கள்; அன்று முல்லைப் பெரியாற்று நீரைத் தமிழகத்துத் திருப்பியவர்கள் உங்களின் வாசகத்தில் சொல்வதெனில் ஆரியப் பார்ப்பனர்களான ராமமூர்த்தியும், இ.எம்.எஸ்ஸூம்; அதன் உயரத்தைக் கூட்டுவதில் உள்ள பிரச்சனையை அரசியல் ஆதாயத்துக்காக சிக்கலாக்கியவர்கள் அங்கும் இங்குமுள்ள காங்கிரஸ், திராவிடக் கட்சிகளும்,இங்குள்ள உங்களைப் போன்ற சில இனமானச் சிங்கங்களுமே ! அங்கே ஏன் போகிறீர்கள் ? இங்குள்ள எந்தவோர் அணைப் பாசனப் பகுதியை வேண்டுமானாலும் சென்று பாருங்கள்! ஒரே இனத்தை--ஏன்- ஒரே சாதியை அல்லது சுற்றத்தைச் சேர்ந்த முதல் மடையனுக்கும், கடை மடையனுக்கும் இடையில் நடக்கிற சண்டையை ! அதை நளினமாகக் கையாள்பவனே நல்லவன் ; அதை வைத்து ஆதாயம் தேடிட அவர்களை எதிரெதிராய் நிறுத்துகிறவன் அயோக்கியன்; அந்தப் பட்டியலில் என்றும் சேர்க்கப்பட முடியாத தூரத்தில் நிற்பவன் கம்யூனிஸ்ட்; அதனால்தான் அவன் இத்தகைய பிரச்சனைகளில் இரண்டு பக்கமும் விரோதியாகிறான்!
பின் குறிப்பு :(1)இந்து மத வெறியரான சு.சாமியும் , இனமானச் சிங்கங்களும் இப்பிரச்சினையில் காட்டுகிற அக்கறை ஒரே மாதிரி இருக்கிறதே ஏன்? கண்மூடித் தனமான கம்யூனிஸ்ட் எதிர்ப்புதான் காரணமா?
(2)இப்பிரச்சனைக்கும், காவிரி நீர்ப் பிரச்சனைக்கும் தீர்வு காண்பதில் முட்டுக்கட்டை போடுகிற காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கைகோர்த்துக் கொண்டு மத்தியில் ஆட்சிபுரிந்த/புரிகிற இனமானச் சிங்கங்களைச் சாடுவதற்குப் பதிலாக மலையாளிகளுக்கெதிராக இங்குள்ள மக்களை உசுப்புவதற்கொரு படம் எடுத்தது ஏன்? உலகத்தையே நாசமாக்கிக் கொண்டிருக்கிற--ஈழத் தமிழனின், இந்திய முஸ்லிம்களின் படுகொலைக்குக் காராணமானவர்களுக்குப் பக்கத் துணையாக நிற்கிற-- அமெரிக்க மாமனை மகிழ்விக்க எடுக்கப்பட்டுள்ள-- அண்டை வீட்டு நண்பனாம் சீனனைச் சிறுமைப் படுத்துகிற-- 'ஏழாம் அறிவு'க்கும் ,அண்னன் தம்பியாய்ப் பார்க்க வேண்டிய அண்டை மாநிலத்தவரைப் பகைவராய்ச் சித்தரிக்கிற 'பாலைக்கு'ம் என்ன வித்தியாசம்?
(3)உழைப்பாளிகளின் போரட்டத்தை, மக்கள் ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்கிற எழுத்திலும் பாட்டிலும் பிரசார நெடியை(?) நுகர்கிற சுத்த கலை, இலக்கிய வாதிகளுக்கு மக்களைப் பிளவு படுத்துகிறவை மட்டும் மகத்தான படைப்புகளாவது எப்படி ?

a .v. Samikkannu said...

ஐயா அருண பாரதிக்கு நேற்றிரவு எழுதப்பட்ட என் மறுமொழி என்னாயிற்று?

க.அருணபாரதி said...

/////////////
**உழைப்பாளியாகவும்,ஒட்டுண்ணியாகவும் மட்டுமே இருக்கிற சமூகத்தில் அதையொட்டியே மனிதரை அடையாளம் காண்கிற தோழன் அந்த மனிதரின் உண்மையான மொழி, இனப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை எப்போதும் முன்மொழியத் தயங்காதவன்;
***முல்லைத் தீவு முதல் முல்லைப் பெரியாறு வரை அவனின் நிலைபாடுகளில் நெருடல் என்பதே நேர்ந்ததில்லை;
****சிங்கள இன வெறியன் தமிழச்சியின் மானத்தைப் பறித்த போது சீறிப் பாய்வதுபோல் பாசாங்கு செய்த ஓட்டுப் பொறுக்கித் தமிழனைப் போலன்றி அச் சமயத்தில் அதற்கெதிராகக் கண்டனக் குரலை எழுப்பியதுடன் நிற்காமல் இலங்கைத் தமிழரின் இனப் பிரச்சனைக்குச் சரியான அரசியல் தீர்வை வாக்கு வங்கிக்கு வளைந்து கொடுக்காமல் அச்சமின்றி முன்மொழிந்தவன் அவன்;
***** தாய் மண்ணில் சிதம்பரத்திலும், சின்னாம்பதியிலும்,வாச்சாத்தியிலும்,உத்தப்புரத்திலும் தங்கத் தமிழன் தன்னினப் பெண்களையே சின்னாபின்னம் செய்தபோது-- உங்களைப் போன்ற சிங்கத் தமிழர்கள் வசதியாக ஒதுங்கிக் கொண்டபோது-- மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் சளைக்காமல் சமர் புரிந்தவன்;
******விடுதலைப் போராட்ட காலந்தொட்டு மொழிவாரி மாநிலம், தாய்மொழிக் கல்வி,மாநில மக்களின் மொழியில் நீதிமன்ற, நிர்வாக நடவடிக்கை என்கிற முழக்கங்களை முன்னுக்குப் பின் முரணின்றி அறிவியல் பூர்வமாக முன்வைத்துப் போராடியவன்;
*******அண்மைக் காலத்தில் தமிழில் தந்தி, தமிழுக்குச் செம்மொழித் தகுதி, பாட்டாளி வீட்டுப் பிள்ளைக்காக சமச் சீர்க் கல்வி ,தீண்டாமை ஒழிப்பு என அப்பாவித் தமிழனின் அடிப்படையான பண்பாட்டுப் பிரச்சனைகளுக்காக எண்ணற்ற இயக்கங்களை இடையறாது நடத்தி வருபவன்;
///////////////////

ஐயா சாமிக்கண்ணு, இப்படியெல்லாம் எழுதியிருக்கீங்களே.. இவிங்க யாரு?

அதுக்கும் மேல,
//////////////
********அவனின் தமிழ்ப் பற்றுக்கு இதற்கு மேலும் சான்றுகளை அடுக்க வேண்டிய அவசியமில்லை என நினைப்பதால் இப்போதைக்கு இத்துடன் முடிக்கிறேன்;
////////////////

இப்போதைக்கு முடிக்கிறேன்னு வேற சொல்லி பயமுறுத்துறீங்களே...

தயவு செய்து சொல்லுங்க... இந்த கொள்கைகளெல்லாம் இன்றைக்கு வச்சிருக்கிறது யாருங்க சாமி?

க.அருணபாரதி said...

ஐயா சாமிக்கண்ணு,

//////////////////
ஆற்று நீர்ப் பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேடுகிறவனிடம் உங்கள் அம்பை எறியுங்கள்; அன்று முல்லைப் பெரியாற்று நீரைத் தமிழகத்துத் திருப்பியவர்கள் உங்களின் வாசகத்தில் சொல்வதெனில் ஆரியப் பார்ப்பனர்களான ராமமூர்த்தியும், இ.எம்.எஸ்ஸூம்; அதன் உயரத்தைக் கூட்டுவதில் உள்ள பிரச்சனையை அரசியல் ஆதாயத்துக்காக சிக்கலாக்கியவர்கள் அங்கும் இங்குமுள்ள காங்கிரஸ், திராவிடக் கட்சிகளும்,இங்குள்ள உங்களைப் போன்ற சில இனமானச் சிங்கங்களுமே ! அங்கே ஏன் போகிறீர்கள் ? இங்குள்ள எந்தவோர் அணைப் பாசனப் பகுதியை வேண்டுமானாலும் சென்று பாருங்கள்! ஒரே இனத்தை--ஏன்- ஒரே சாதியை அல்லது சுற்றத்தைச் சேர்ந்த முதல் மடையனுக்கும், கடை மடையனுக்கும் இடையில் நடக்கிற சண்டையை !
//////////////////

என்ன சொல்ல வர்றீங்க..!

முல்லைப் பெரியாறு அணை நீரால்,
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இரண்டரை இலட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறுகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்று எண்ணுகிற மலையாளிகளை நாங்கள் சகப்பாட்டாளியாக கருத வேண்டுமா?

தமிழ்நாட்டு மக்கள் வயிற்றிலடிக்க கிளம்பியிருக்கும் அவர்களை, தமிழர்கள் சகப்பாட்டாளிகளாக கருத வேண்டும் என்று மலையாளிகளின் சார்பாக பேசுகின்ற நீங்கள் வேண்டுமானால் அவ்வாறு கருதிக் கொள்ளுங்கள்.

//////////////////////
அதை நளினமாகக் கையாள்பவனே நல்லவன் ; அதை வைத்து ஆதாயம் தேடிட அவர்களை எதிரெதிராய் நிறுத்துகிறவன் அயோக்கியன்; அந்தப் பட்டியலில் என்றும் சேர்க்கப்பட முடியாத தூரத்தில் நிற்பவன் கம்யூனிஸ்ட்; அதனால்தான் அவன் இத்தகைய பிரச்சனைகளில் இரண்டு பக்கமும் விரோதியாகிறான்!
//////////////////

பிரச்சினைக்கு தீர்வு சொல்ல முடியல அப்புறம் என்ன விரோதியாகிறான்னு வீரவசனம்?

///////////////////
பின் குறிப்பு :(1)இந்து மத வெறியரான சு.சாமியும் , இனமானச் சிங்கங்களும் இப்பிரச்சினையில் காட்டுகிற அக்கறை ஒரே மாதிரி இருக்கிறதே ஏன்? கண்மூடித் தனமான கம்யூனிஸ்ட் எதிர்ப்புதான் காரணமா?
/////////////////////////

சு.சாமி எங்களை 'தேசத்துரோகி'னு சொல்றார்.. நீங்களும் எங்களை குறுந்தேசிய இனவாதினு சொல்றீங்க.. உங்களுக்கும் சு.சாமிக்கும் அப்படி என்னங்க கருத்து நெருக்கம்..?

//////////////////////
(2)இப்பிரச்சனைக்கும், காவிரி நீர்ப் பிரச்சனைக்கும் தீர்வு காண்பதில் முட்டுக்கட்டை போடுகிற காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கைகோர்த்துக் கொண்டு மத்தியில் ஆட்சிபுரிந்த/புரிகிற இனமானச் சிங்கங்களைச் சாடுவதற்குப் பதிலாக மலையாளிகளுக்கெதிராக இங்குள்ள மக்களை உசுப்புவதற்கொரு படம் எடுத்தது ஏன்?
//////////////////////
யாருங்க இவிங்களுக்கு ஜால்ரா அடிச்சது... நீங்க அட்ராஸ் மாறி வந்துட்டீங்கனனு நினைக்கிறேன் பாஸ்...

க.அருணபாரதி said...

/////////////////////
மலையாளிகளுக்கெதிராக இங்குள்ள மக்களை உசுப்புவதற்கொரு படம் எடுத்தது ஏன்?
//////////////////////
தமிழ்நாட்டு மக்களை கேவலப்படுத்தும் விதமாக பல கோடி செலவில் டேம்-999 படம் எடுத்தது மலையாளிங்க.. அவிங்கள கேள்வி கேட்க துப்பில்ல.. வக்கில்ல.. இங்க வந்து பெருசா பேசறீங்க நீங்க... எல்லா நேரம் தான்...

////////////////////
உலகத்தையே நாசமாக்கிக் கொண்டிருக்கிற--ஈழத் தமிழனின், இந்திய முஸ்லிம்களின் படுகொலைக்குக் காராணமானவர்களுக்குப் பக்கத் துணையாக நிற்கிற-- அமெரிக்க மாமனை மகிழ்விக்க எடுக்கப்பட்டுள்ள-- அண்டை வீட்டு நண்பனாம் சீனனைச் சிறுமைப் படுத்துகிற-- 'ஏழாம் அறிவு'க்கும் ,அண்னன் தம்பியாய்ப் பார்க்க வேண்டிய அண்டை மாநிலத்தவரைப் பகைவராய்ச் சித்தரிக்கிற 'பாலைக்கு'ம் என்ன வித்தியாசம்?
////////////////////
வித்தியாசம் தெரியலைனா படத்தை பார்த்து தெரிஞ்சுக்கோங்க பாஸ்..

பாலை படத்துல மலையாளிங்கள பகைவரா சித்தரித்திருக்கிறோம்னு சொல்றீங்க.. படம் பார்த்தீட்டீங்களானு தெரியல.. பார்த்துட்டு எழுதுங்க..

///////////////////////////
(3)உழைப்பாளிகளின் போரட்டத்தை, மக்கள் ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்கிற எழுத்திலும் பாட்டிலும் பிரசார நெடியை(?) நுகர்கிற சுத்த கலை, இலக்கிய வாதிகளுக்கு மக்களைப் பிளவு படுத்துகிறவை மட்டும் மகத்தான படைப்புகளாவது எப்படி ?
/////////////////////////
தமிழ் இன வெறுப்பை சுமந்து திரியும் மலையாளிகளிடம் இதை கூற தங்களுக்குத் துணிவிருக்கிறதா? தமிழின அழிப்பை தன் தொழிலாகக் கொண்டிருக்கும் வடநாட்டுக் காரர்களிடம் அதைச் சொல்ல துணிவிருக்கிறதா? இரண்டும் கிடையாது... இளச்சவாப் பசங்க தமிழனுங்க தான்.. அதனால் இங்கேயே உங்க பாடத்தையெல்லாம் நடத்துங்க..

முதல்ல மத்த இனங்களுக்குப் போய் சக இனமான தமிழ் இனத்தின் உரிமைகளை மதிக்கக் கத்துக் கொடுங்க.. அதுக்கு வக்கில்லாம, உரிமை பறிபோகுதேனு வருத்தப்படும் தமிழ் இனத்தை பார்த்து வகுப்பெடுக்காதீங்க...

ஒரு மலையாள பேஸ்புக் லிங்குக்குள் போய் தமிழர்களின் உரிமைகளை கொஞ்சமாவது மதிங்கனு வேண்டுகோள் விடுத்துப் பாருங்க தெரியும்.. இனவெறியன் தமிழனா, மலையாளியானு...

a .v. Samikkannu said...

தங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி ; அதனையொட்டிய பின்வரும் ஐயவினாக்களைச் சற்று கவனியுங்கள் :
அறிவுரை(1)க்கான வினா :அந்தப் படத்தை மலையாளிகளோ இந்தப் படத்தைத் தமிழர்களோ எடுக்கவில்லை; மலையாளிகளில் உங்களைப் போல் ஒருவரும் தமிழில் அவரைப் போல் ஒருவரும் அவற்றை எடுத்துள்ளனார்; எனவே அவற்றின் மையக் கருத்துக்கு மலையாளிகளோ, தமிழர்களோ பொறுப்பில்லை; முஸ்லிம் வெறியர்களும் காவி பயங்கரவாதிகளும் செய்கிற அட்டூழியங்களுக்கு எப்படி அந்தந்த மதத்தவர் அனைவரும் பொறுப்பாக முடியாதோ அப்படி...
ஐயா , அருணபாரதியாரே ! பெரியாரை நினைவிருக்கும் என நினைக்கிறேன்; அவரை இந்து வெறியர்கள் இந்த மதத்தை மட்டும் சாடுகிறீர்களே இஸ்லாத்தையோ, கிருஸ்துவத்தையோ இப்படி விமர்சிக்கும் தைரியமுண்டா என்றொரு கேள்வி கேட்டனர்; அவர் திருப்பிக் கேட்டார் ; " இந்த மதம்தான் என்னைச் சூத்திரன் என்கிறது, ஏராளமான மூடப் பழக்க வழக்கங்களைப் போதிக்கும் புராணங்களை எம்மீது திணித்திருக்கிறது; எனவே நான் எனக்குச் சம்பந்தமற்ற மதங்களை ப் பற்றி ஏன் பேச வேண்டும் என்றார் ; அது போன்றுதான் எம் மண்ணில் எம்மில் ஒருவர் --அவர் வெறும் ஒருவரல்லர், ஒரு வலுமிக்க ஊடகமாம் திரைத் துறையின் கலைஞர்-- எம் மனதில் நச்சு விதையை நடுகிறார் எனில் அவரை மட்டுமே நான் கேள்விக்குள்ளாக்குகிறேன் ;அந்தப் படத்தையோ இந்தப் படத்தையோ நான் பார்க்க வாய்ப்பு கிட்டமில்லை; என் எதிர்வினை முற்றிலும் தங்களின் பட அறிமுகத்திலிருந்த ஆதங்க வாசகத்தை முன்வைத்தே; படம்பற்றியதன்று;நான் தருமபுரிக்கும் , சேலத்துக்கும் இடைப்பட்ட ஊரில் உள்ளவன்; எனக்கு அப்படங்கள் ஓடும் மிக அண்மையத் திரையரங்கை அருள்கூர்ந்து தெரிவியுங்கள்.
அறிவுரை (2)க்கு: மேற்கண்ட விடையிலுள்ள என் வேண்டுகோளை நிறைவேற்றுங்கள்.
அறிவுரை(3)க்கு :இப்படிக் கதையளந்து தமிழர்களை ஏமாற்றிய காலம் முடிந்து போனது; எந்த மலையாளி என அடையாளம் காட்டுங்கள் ; வடநாடு எனில் அது எங்கு தொடங்கி எங்கு முடிகிறது ? தமிழகத்துக்கு வடக்கேயுள்ள எல்லா மாநிலங்களுமா? கிழக்கும் , மேற்கும் என்னாயின ? தமிழினம் எங்கே? எனக்குத் தெரிந்த வரையில் இங்கு சாதி அடையாள அரசியலை வளர்க்கிற இன்மானத் தலைவர்களின் பின்னால் திரண்டுள்ள கூட்டமே அதிகம்; நிற்க.
உங்களுக்கு நிற்க ஓரடி மண்ணை மறுப்பது யார் ? இப்படி இனம், மொழி, வடக்கு, தெற்கு, ஆரியம், திராவிடம் எனப் பேசிப் பேசியே இங்கு வளர்ந்து இன்று இந்தியா முழுவதும் ஊடகத் துறையில் கொடி கட்டிப் பறக்கிற, ஆசியாவிலேயே பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான நம் உடன்பிறப்புகளின் குடும்பமும் அவர்களின் 'வடநாட்டு' , வெளி நாட்டுச் சோதரருமா அல்லது வயிற்றுப் பிழைப்புக்காக இங்கே வந்து குவிகிற மலையாள, 'வடநாட்டு' உழைப்பாளிகளா ? உங்களின் கோபம் யார் மீது ?
" சக இனமான தமிழ் இனத்தின் உரிமைகளை " அருள்கூர்ந்து பட்டியலிடுங்களேன்?அவற்றின் நிறைவேற்றத்துக்குக் குறுக்கே நிற்கிற 'வடவர்கள்' யார்? நம் 'இனமானத் தலைவர்களான முத்தமிழ் வித்தகர் கலைஞர் ஐயா, மருத்துவர் ஐயா , பெரியாரின் சுயமரியாதை நிறுவனத்தைக் கபளீகரம் செய்துவிட்ட ஐயா வீரமணியார் , புரட்சிப் புயல் , விடுதலைச் சிறுத்தை தொல். திருமா ஆகியோர் கடந்த பத்துப் பனைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசில் கூடிக் குலாவிக் கொண்டிருக்கிறார்களே அந்த ' வடவர்'களா? அல்லது அடுத்த புவிக் கோளத்தவரா?
'தமிழன்' எனும் இலக்கணத்துக்குள் வரும் உண்மையான தகுதியுடையோர் யார் ?
* "டாடி, மம்மி' சொல்லாவிட்டால் தடியால் அடிக்கிற அரைகுறை ஆங்கிலப் பள்ளிகளுக்குக் குழந்தைகளை அனுப்புகிறவர்களா ?
**வீட்டில் அரைகுறைத் தமிழும் வெளியில் அரைகுறை ஆங்கிலமும் பேசுவதில் அலாதி ஆர்வம் காட்டுவோரா ?
*** செம்மொழித் தமிழை நீதி , சட்டம், கல்வி மற்றும் ஆட்சி மன்றங்களில் அமரவிடாமல் தங்களின் எஜமான மொழியை இன்னமும் திணித்துக் கொண்டிருக்கிற 'இனமானத் தலைவர்களா?
**** 'வடவராதிக்கம்' , 'இந்தி எதிர்ப்பு ' , 'பகுத்தறிவு' என வசனம் பேசிவிட்டு வாய்ப்பு கிடைத்ததும் கடைந்தெடுத்த இந்தி வெறியும்,இந்து மத வெறியும் தலைக்கேறிய ஆர்.எஸ்.எஸ். உடன் ஆட்சியில் பங்கேற்று இன்று பட்டிதொட்டிகளிலெல்லாம் அந்த நச்சரவம் நாக்கை நீட்ட அதற்குப் பாலூட்டியவரா ?
பொத்தாம் பொதுவாகப் புலம்புவதை விடுத்துத் தருக்க முறைக்கு ஏற்ற வகையில் குறிப்பிட்டுப் பேச முயலுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

--
samy
pappireddippatti, tamilnadu,india

a .v. Samikkannu said...

"ஐயா சாமிக்கண்ணு, இப்படியெல்லாம் எழுதியிருக்கீங்களே.. இவிங்க யாரு?
தயவு செய்து சொல்லுங்க... இந்த கொள்கைகளெல்லாம் இன்றைக்கு வச்சிருக்கிறது யாருங்க சாமி?" -----
அவர்கள் யார் என்ற உண்மையை அந்த எதிர்வினையே தெளிவாகப் பேசுகிறதே!அதில் விவரிக்கப்பட்டுள்ள பெருமைமிகு வரலாற்றுக்குச் சொந்தக்காரன் மார்க்சிஸ்ட்தான் என்பதை மூடிமறைக்க முயல்வதும், அதை அறியாததைப்போல் பாசாங்கு செய்வதும் விவாதத்துக்கு அழகன்று நண்பரே! அது போகட்டும் ! அந்த எதிர்வினையில் விவரிக்கப்பட்டுள்ள அத்தனை விசயங்களிலும் மார்க்சிஸ்ட்டுகளைத் தவிர வேறெந்த செந்தமிழர் அல்லது கொடுந்தமிழர் என்ன நிலை எடுத்தார் என்பதை இந்த எளியனுக்குச் சற்று சிரமம் பாராமல் எடுத்துரைப்பீரா நண்பரே?

க.அருணபாரதி said...

ஐயா சாமிக்கண்ணு அவர்களே...

'பெருமைமிகு வரலாற்றுக்குச் சொந்தக்காரன்' எனத் தாங்கள் விளிக்கும் ”மார்க்சிஸ்ட்” கட்சி” சார்ந்தவரா நீங்கள்... இது எனக்கு முன்பேத் தெரியாமல் போய் விட்டது...

புரட்சி செய்யப் போகிறோம் என்று ஊரை ஏமாத்திக் கொண்டு, கோயம்பேட்டில் 'புரட்சிக்கலைஞ'ரிடம் பம்மிய, சி.பி.எம்.கட்சியினரா நீங்கள்..?

க.அருணபாரதி said...

ஐயா சாமிக்கண்ணு...

----------------------------
**உழைப்பாளியாகவும்,ஒட்டுண்ணியாகவும் மட்டுமே இருக்கிற சமூகத்தில் அதையொட்டியே மனிதரை அடையாளம் காண்கிற தோழன் அந்த மனிதரின் உண்மையான மொழி, இனப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை எப்போதும் முன்மொழியத் தயங்காதவன்;
------------------------------
நீங்க அப்படியென்ன மொழி, இனப்பிரச்சினைக்குத் தீர்வு சொன்னீங்கனு தெரியல.. கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன்...!

------------------------------
***முல்லைத் தீவு முதல் முல்லைப் பெரியாறு வரை அவனின் நிலைபாடுகளில் நெருடல் என்பதே நேர்ந்ததில்லை;
------------------------------
முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டுமென மலையாள வெறியனாகக் கூக்குரலிட்டுக் கொண்டுள்ளது கேரள சி.பி.எம். கட்சி.. முதல்ல உங்க கட்சி காரனிடம் உண்மையைப் பேசுங்கள்.. அப்புறம் தமிழ்நாட்டில் வந்து ஓட்டுப் பொறுக்கிப் பிழைப்பு நடத்துங்கள்...

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டுமெனக் கூறும் உங்களது கேரளக் கட்சிக் கிளையைக் கண்டி்க்கவோ, குரல் கொடுக்கவோ உங்களுக்கு துப்பு கிடையாது.. அதற்கு வக்கும் இல்லை... உங்களது சி.பி.எம். தமிழ்நாட்டில் கட்சி நடத்த என்னய்யா தகுதி இருக்கு?

க.அருணபாரதி said...

------------------------------
****சிங்கள இன வெறியன் தமிழச்சியின் மானத்தைப் பறித்த போது சீறிப் பாய்வதுபோல் பாசாங்கு செய்த ஓட்டுப் பொறுக்கித் தமிழனைப் போலன்றி அச் சமயத்தில் அதற்கெதிராகக் கண்டனக் குரலை எழுப்பியதுடன் நிற்காமல் இலங்கைத் தமிழரின் இனப் பிரச்சனைக்குச் சரியான அரசியல் தீர்வை வாக்கு வங்கிக்கு வளைந்து கொடுக்காமல் அச்சமின்றி முன்மொழிந்தவன் அவன்;
--------------------------------
சிங்களணும் தமிழனும் சேர்ந்து வாழுங்கள் எனக் கூறிய அந்தத் தீர்வை, வெட்கம் சிறிதுமின்றி "சரியான அரசியல் தீர்வு" என பிதற்றுகிறீர்கள்.. ஈழத்தமிழர்கள் உங்கள் கருத்துக்கு செருப்படி கொடுத்துவிட்டதை மறந்துவிட்டீர்களா?

-------------------------------
***** தாய் மண்ணில் சிதம்பரத்திலும், சின்னாம்பதியிலும்,வாச்சாத்தியிலும்,உத்தப்புரத்திலும் தங்கத் தமிழன் தன்னினப் பெண்களையே சின்னாபின்னம் செய்தபோது-- உங்களைப் போன்ற சிங்கத் தமிழர்கள் வசதியாக ஒதுங்கிக் கொண்டபோது-- மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் சளைக்காமல் சமர் புரிந்தவன்;
-------------------------------
நீங்கள் கூறுகின்ற இடங்களில் நடந்த அனைத்து சிக்கல்களையும் தமிழ் இன உரிமை பேசும் அமைப்புகளும், இயக்கங்களும் எப்போதும் புறக்கணித்ததே இல்லையே... நாங்கள் ஒதுங்கிக் கொண்டோம் என்று சொல்கிறீர்களே அதற்கு என்ன ஆதாரம்..? வாச்சாத்தியைக் கண்டு கொள்ளக் கூடாது என்று அறிவிப்பு விடுத்த தமிழ் அமைப்புகளை உங்களால் கூற முடியுமா...? ஏனய்யா இப்படி பச்சையாப் புளுகிறீங்க...? என்ன பிரச்சினை உங்களுக்கு...?

-------------------------------
******விடுதலைப் போராட்ட காலந்தொட்டு மொழிவாரி மாநிலம், தாய்மொழிக் கல்வி,மாநில மக்களின் மொழியில் நீதிமன்ற, நிர்வாக நடவடிக்கை என்கிற முழக்கங்களை முன்னுக்குப் பின் முரணின்றி அறிவியல் பூர்வமாக முன்வைத்துப் போராடியவன்;
-----------------------------------------------------------------
அடேங்கப்பா... பயமா இருக்குங்க...

தோழர் ஜே.வி.ஸ்டாலின் கூற்றுப்படி பொது மொழி, தாயகம் என அனைத்துத் தகுதிகளும் கொண்ட பல்வேறு தேசிய இனங்களை அடக்குமுறையால் ஒன்றிணைத்த மோசடித்தனமான கட்டமைப்பு தான் இந்தியக் கட்டமைப்பு.. இந்தக் கட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு தேசிய இனமும் இன்று தனது சுயநிர்ணய உரிமையைப் பெறாமல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கிறது.. அதனால் தான் 1940களில் கூட, உங்கள் கட்சித் திட்டத்தில் 'இந்தியா விரும்பிச் சேர்ந்த மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்' என்று சொல்லப்பட்டது..

ஆனால் இந்த வரிகள் உங்கள் கட்சித் திட்டத்தில் இல்லை.. அது ஏன்?
இதை ஏன் நீக்கினீர்கள் எனச் சொல்ல முடியுமா?

தமிழ் இனத்தை 'இந்தியா' என்ற ஜெயிலுக்குள்ள அடைச்சிட்டு உங்களுக்கு நான் தான் தட்டுக் கொடுத்தேன், சோறு போட்டேன், என ஜெயிலர் சொல்வது போல் தான், சி.பி.எம். கட்சி தமிழ் இனத்திற்கு போராடியதாகச் சொல்வது.

*******அண்மைக் காலத்தில் தமிழில் தந்தி, தமிழுக்குச் செம்மொழித் தகுதி, பாட்டாளி வீட்டுப் பிள்ளைக்காக சமச் சீர்க் கல்வி ,தீண்டாமை ஒழிப்பு என அப்பாவித் தமிழனின் அடிப்படையான பண்பாட்டுப் பிரச்சனைகளுக்காக எண்ணற்ற இயக்கங்களை இடையறாது நடத்தி வருபவன்;
///////////////////

இந்த பிரச்சினைகளுக்காக போராடிய ஒரே கட்சி சி.பி.எம். கட்சி மட்டும் தான் எனச் சொன்னால், அது மக்களையும், மக்கள் இயக்கங்களையும் நீங்கள் எந்தளவிற்கு முட்டாள் எனக் கருதுகிறீர்கள் என்பதற்கு இது சான்றாகும்.. இந்த சிக்கல்களுக்கு காலம் காலமாகப் போராடி வருபவை தமிழியம் பேசும் அமைப்புகளும், இயக்கங்களும் தான். நீங்க ஓட்டுப் பொறுக்கித் தின்னுவிட்டு அது செரிப்பதற்காக பேசியவற்றையெல்லாம் சாதனையாக சொல்லிக் கொண்டிருந்தால், அது எந்தவகையில் தன்னலம் கருதாத போராட்டங்களாகும்?

a .v. Samikkannu said...

"என்ன சொல்ல வர்றீங்க..!

முல்லைப் பெரியாறு அணை நீரால்,
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இரண்டரை இலட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறுகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்று எண்ணுகிற மலையாளிகளை நாங்கள் சகப்பாட்டாளியாக கருத வேண்டுமா?

தமிழ்நாட்டு மக்கள் வயிற்றிலடிக்க கிளம்பியிருக்கும் அவர்களை, தமிழர்கள் சகப்பாட்டாளிகளாக கருத வேண்டும் என்று மலையாளிகளின் சார்பாக பேசுகின்ற நீங்கள் வேண்டுமானால் அவ்வாறு கருதிக் கொள்ளுங்கள்"........
தாங்கள் மேற்கோளிட்டுள்ள எனது அந்தப் பத்தியின் இறுதி வாசகத்தை மீளப் படியுங்கள்; இங்கே கடை மடையனாம் எனக்குக் கால்வாய்த் தண்ணீரை மறுக்கிற என் இனத்தானை எனது எதிரியாக மட்டும் பார்ப்பதா அல்லது அவனுக்கும் எனக்கும் சொந்தமான தமிழின விரோதியாகப் பார்ப்பதா? அல்லது இருவரையும் சார்ந்த உற்றார் உறவினர்களைச் சேர்த்துக் கொண்டு கோதாவில் இறங்குவதா ? ஒரு பிரச்சனையை அதுவாக மட்டும் பாராமல் அதற்குக் காரணமானவனின் இனத்தையும் சாதியையும் இணைத்துப் பேசுவதும் அவனின் இனத்தோடும் சாதியோடும் அதற்கு முடிச்சு போடுவதும் அப்பட்டமான அரசியல் அயோக்கியத்தனம் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து; அது ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளின் நரித்தனம் ! அதை உங்களைப் போன்ற இளம் கலைஞர்களும் கைக்கொள்ளலாகாது எனும் ஆழ்ந்த அக்கறையே என் எதிர்வினைக்குக் காரணம்.
(2) "பிரச்சினைக்கு தீர்வு சொல்ல முடியல அப்புறம் என்ன விரோதியாகிறான்னு வீரவசனம்?"******
அணைகளும் , அணுமின் நிலையங்களும் அவற்றுக்கருகிலுள்ள மக்களுக்கு இன்று அச்சமூட்டுகின்றன; அவர்களின் அச்சத்தைப் போக்கிடல் அவசியம்; இந்த மிகப் பழைய முல்லைப் பெரியாற்றின் வலு குறித்த வல்லுநர் கருத்துக்கேற்ப அதன் உயரம் தீர்மானிக்கப்பட வேண்டும் : இப்போதுள்ள பாசனப் பரப்புக்கு பாதிப்பு இல்லாவகையில் இவ்வணை தொடர்பான ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட்டு தக்கவாறு மீள்வரைவு செய்யப்பட வேண்டும் ; இதற்கு இரு மாநிலங்களிலுமுள்ள கட்சிகளும்,மக்களும் உணர்ச்சி வசப்படாமல் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதைத் தவிர எடுத்தேன் கவிழ்த்தேன் என வாய்ச் சவடால் அடிப்பதில் பயனேதும் இல்லை ; இப்படிப் பேசிப் பேசித்தான் ஈழத் தமிழனைச் சாகடித்துக் கொண்டிருக்கிறீர்கள்!
(3)"சு.சாமி எங்களை 'தேசத்துரோகி'னு சொல்றார்.. நீங்களும் எங்களை குறுந்தேசிய இனவாதினு சொல்றீங்க.. உங்களுக்கும் சு.சாமிக்கும் அப்படி என்னங்க கருத்து நெருக்கம்..?" இந்த குறிப்பிட்ட பிரச்சனையில் ஆர்.எஸ்.ஆர்.எஸ். சு.சாமியும் நீங்களும் ஒன்றுபடுவதற்கான காராணத்தை அங்கே குறிப்பிட்டுள்ளேன்; அதற்கு நேரடியான பதில்லில்லை; எனினும் உங்களின் எதிர்க் கேள்விக்கு என் பதில் இதோ : இப்பிரச்சனை தவிர வேறெதிலும் உங்களின் நிலைபாடு என்ன என்பதும் , அவர் எதைக் கருதி அவ்வாறு உங்களைத் தேசத் துரோகி என்கிறார் என்பதும் னக்குத் தெரியாது என்பதால் அது பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை; ஆனால், இப்பிரச்சனையைப் பொறுத்த மட்டில் தங்களின் இனவெறிக் கண்ணோட்டம் மிகத் தவறானது என்பதே என் கருத்து.
(4)"யாருங்க இவிங்களுக்கு ஜால்ரா அடிச்சது... நீங்க அட்ராஸ் மாறி வந்துட்டீங்கனனு நினைக்கிறேன் பாஸ்".....
அதிகார மையங்களில் அமர்ந்து கொண்டிருக்கிற ,இது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வாய்ப்புள்ளவர்களைப் பற்றி--- கங்கிரசுக்கும், பா.ஜ.கவுக்கும் நெருக்கமான ஐயாக்களையும் , அம்மாக்களையும் பற்றி-- எதுவும் பேசாமல் ஒதுங்கிப் போவது சரியா? அவர்களைக் கண்டுகொள்ளாமல், கண்டிக்காமல் இருக்கலாமா ?

asokan muthusamy said...

அருண்பாரதிக்கு; பல்வேறு தேசிய இனங்களை அடக்கு முறையால் ஒன்றிணைத்தார்களா? யார்? எந்த இனம்? இந்தியாவில் அடக்கும் இனம் என ஒன்று கிடையாது என்பது தெரியுமா? பஞ்சாபி சர்தார்ஜியும், கன்னட கவுடாவும், உ பி தாகூரும் (வி.பி.சிங்)இங்கு பிரதமாராக முடியும். ஸ்டாலினை மேற்கோள் காட்டுவது பொருத்தமல்ல. அவர் காலத்தில்தான் சோவியத் யூனியனுடன் மேலும் சில குடியரசுகள் சேர்க்கப்பட்டன. (லாத்வியா, லித்துவேனியா). லெனினே போலந்திற்கு ஒரு தீர்வும், பின்லாந்திற்கு ஒரு தீர்வும் கூறுகிறார். ஆனால், இடம் பொருள் ஏவல் எதுவும் பார்க்காமல் தட்டையாகப் பிரயோகிப்பதற்குப் பெயர் மார்க்சியமல்ல.

குறிப்பிடத்தக்க பதிவுகள்