Wednesday, September 24, 2008

இந்து முன்னணிக்கு த.க.இ.பே. கண்டனம்

இந்து முன்னணிக்கு த.க.இ.பே. கண்டனம்

தமிழகத்தில் சமீபகாலமாக பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்கள் முற்போக்கு இயக்கங்கள் நடத்தும் கூட்டங்களில் வன்முறைகளை நிகழ்த்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்து முன்னணி போன்ற பார்ப்பனிய இந்துத்துவ அமைப்புகள் இதனை முன்னின்று நடத்துகின்றன.

கடந்த மாதம் 23ஆம் தேதி கோவையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட இயக்குனர் சீமானுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி, கற்கள், சோடாபாட்டில்களை வீசி வன்முறையில் பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்கள இறங்கினர். இதில் பெரியார் தி.க.வை சேர்ந்த தோழர்களுக்கு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் புகாரின் பேரில் இந்து முன்னணியினர் மீது கொலைமிரட்டல், தாக்குதல், கல்வீச்சு உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

23-09-2008 அன்று இரவு போரூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணியினர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் பலர் தாக்கப்பட்டனர். இதில் காவல்துறையினரும் தாக்குதலுக்கு உள்ளனார்கள். இது தொடர்பாக காவல்துறை இந்து முன்னணியினர் இருவரைக் கைது செய்துள்ளது.

இது மட்டுமல்லாது தமிழகமெங்கும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற
பார்ப்பனிய இந்துத்துவ வெறி அமைப்புகள் வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. சிறுபான்மை முஸ்லிம், கிருத்துவர்கள் மீது மட்டுமல்லாது பெரும்பான்மையாக உள்ள இந்துமதத்தில் பிறந்த தமிழர்கள் மீதும் இவ்வமைப்புகள் தாக்குதல் நடத்திவருகின்றன. இந்த போக்கை இனியும் அனுமதிக்காமல் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் இத்தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். முற்போக்கு இயக்கங்கள், தமிழ்த் தேசிய அமைப்புகள்
இணைந்து பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்களின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து போராட முன் வரவேண்டும்.


தோழமையுடன்,
கவிபாஸ்கர்,
செயலாளர்,
தமமிழ்க் கலை இலக்கியப் பேரவை

Friday, September 12, 2008

இந்திய அரசின் படை உதவிக்கு த.தே.பொ.க. கண்டனம்

புலிகள் தாக்குதலில் இலங்கையில் இந்திய அதிகாரிகள் காயம்
இந்திய அரசின் படை உதவிக்கு
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை தாக்குதலில் கடந்த 09.09.08 அன்று இரவு வவுனியாவிலுள்ள இலங்கை இராணுவ தலைமையகத்தில் 10 சிங்களப் படையாட்கள் கொல்லப்பட்டதுடன் இரண்டு இந்திய இராணுவ பொறியாளர்கள் காயம்பட்டுள்ளதாக அதிகாரப் பூர்வ தகவல் கூறுகிறது. சிந்தாமணி ரவுத், ஏ.கே. தாக்கூர் ஆகிய அவ்விருவரும் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த ரேடார் பொறியாளர்கள் ஆவர்.

இந்திய அரசு தரும் படைவகை உதவியோடு, நேரடியான படையாட்கள் துணைக் கொண்;டு தான் சிறீலங்கா அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்துகிறது என்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லிக் கொண்டாலும் உண்மையில் சிறீலங்கா அரசு நடத்துவது ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனக்கொலைப் போராகும். சிங்களப் படை தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் உள்நாட்டு அகதிகளாக புலம் பெயர்ந்து உணவும், மருந்தும் இன்றி மரத்தடி வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.

இலங்கையில் நடக்கும் அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை ஐ.நா. மனித உரிமை அமைப்பு உள்ளிட்ட மனித நேய அமைப்புகள் பலவும் கண்டித்து வருகின்றன.

இந்த உள்நாட்டு போரில் தாம் தலையிடவில்லை என்று சொல்லிக்கொண்டே இந்திய அரசு இலங்கைக்குப் போர்ப் படகுகளையும், ரேடார், எக்ஸ்ரே பைனாகுலர் உள்ளிட்ட கருவிகளையும் அளித்து வருகிறது. ஆயினும் நேரடி இராணுவத் தலையீடு செய்யவில்லை என்பதாகவே இந்திய பிரதமரும் உயர்மட்ட அதிகாரிகளும் கூறி வந்தனர்.

ஆனால் இது உண்மைக்கு மாறான தகவல் என்பதை வவுனியா இராணுவத் தலைமையகத்தில் இந்திய இராணுவப் பொறியாளர்கள் காயம்பட்டுள்ள செய்தி தெளிவாக்குகிறது.

இந்தியாவின் இவ்வாறான படை வகை உதவிகளைக் கொண்டு தான் ஈழத் தமிழர்கள் மீது மட்டுமின்றி, தமிழ்நாட்டு மீனவர்கள் மீதும் அன்றாடம் சிங்களப் படை கொலை வெறித் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்திய அரசு தமது இராணுவத் துறை வல்லுநர்களையும் ஆட்களையும் அனுப்பி, ஆயுத உதவிகள் வழங்கி தமிழினப் படுகொலைக்குத் துணை போவதைத் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியப் படையாட்களைத் திரும்ப அழைத்து கொள்ளுமாறும், கருவி உதவிகளை நிறுத்துமாறும் வலியுறுத்துகிறேன்

இப்படிக்கு.
கி.வெங்கட்ராமன்
தலைமைச் செயற்குழு உறுப்பினர்

நாள் : 10.9.08
இடம் : சிதம்பரம்

குறிப்பிடத்தக்க பதிவுகள்