Tuesday, November 28, 2006

இலங்கை அதிபரை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம்இலங்கை அதிபர் ராஜபக்ஸேவவை இந்தியா வரவேற்றதை கண்டித்து மாவீரர் பழ நெடுமாறன் தலைமையில் ஈழத்தமிழர் கூட்டமைப்பினர் நடத்திய மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள மெமோரியல் ஹாலில் 26-11-2006 ஞாயிறு அன்று நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் தமிழர் தேசிய இயக்கம், தமிழ்த் தேச பொதுவுடைமை, இயக்கம், தமிழக இளைஞர் முன்னனி, உள்ளிட்ட தமிழ் இயக்கங்களின் தோழர்கள் கலந்து கொண்டு இலங்கை அதிபருக்கு எதிராக குரலெழுப்பினர்.

--
***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

Monday, November 20, 2006

இந்த வார மாமனிதர்: பெரியார்

Periyar E.V.Ramaswamy
பெரியார்
1879 - 1973

"நான் மனிதனே!  நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி.  இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.  "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்" என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. "


Sunday, November 19, 2006

பெரியாரின் முக்கிய பேச்சுக்கள்

சுயமரியாதை
மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும்.
மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும்.
சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம்
மனிதன் உலகில் தன் சுயமரியாதையை - தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும்.
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.

நான் யார்?

நான் எனக்கு தோன்றிய, எனக்குச் சரியென்று படுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்îதாடு கூடி உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல.
எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக்கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம்போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல.
எனது பொதுவாழ்வில் நான் அறிவு பெற்ற பிறகு, பார்ப்பனரல்ல èதார் ஆட்சி என்றால் வலியப்போய் ஆதரித்தே வந்திருக்கிறேன். இதில் நான் மானம் அவமானம் பார்ப்பதில்லை.
நான் என் ஆயுள் வரை யாரிடமும் ஓட்டுக் கேட்க மாட்டேன். எனக்காக இரண்டு நல்ல (புகழ்) வார்த்தைகள் சொல்லும்படி யாரிடமும் எதிர்பார்க்கமாட்டேன்.
"நீ ஒரு கன்னடியன் எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம்?" என்று என்னைக் கூடக் கேட்டார்கள். "தமிழனுக்கு எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா" என்றேன். இதற்குக் காரணம், ஒரு தமிழன், இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்.

சமுதாயச் சீர்திருத்தம்

சாதி வித்தியாசமோ, உயர்வு தாழ்வே கற்பிக்கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லிவிட வேண்டும்: மீறிப் படிக்க ஆரம்பித்தால் அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும்.
நாம் அரசியல் துறையில் முன்னேறி மாற்றம் பெற்றிருக்கிறோமே தவிர, சமுதாயத் துறையில் இன்னமும் பிற்போக்கான நிலையில்தான் இருக்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும்.
ஒரு சமூகமென்றிருந்தால் அச் சமூகத்தில் ஏழைகளில்லாமலும், மனச்சாட்சியை விற்றுப் பிழைப்பவர்கள் இல்லாமலும் செய்வதுதான் சரியான சமூகச் சீர்திருத்த வேலையாகும்.
சீர்திருத்தம் என்பது தேவையற்றதை நீக்கிவிட்டுத் தேவையுள்ளதை மட்டும் வைத்துக்கொள்ளுதலே யாகும்.
சமுதாயத்தில் பார்ப்பனர் என்றும் பஞ்சமர் என்றும் பிரிவுகள் இருக்க வேண்டியது அவசியம்தானா? அதற்குக் கடவுள் பொறுப்பாளி என்று கூறப்படுமானால் அக்கடவுளைப் பஞ்சமனும் சூத்திரனும் தொழலாமா?
தலைப்புக்கு திரும்புதல்

கல்வி

எல்லா மக்களுக்கும் கல்வி பரப்புவது, நம் நாட்டில் பொது உடைமைக் கொள்கையைப் பரப்புவது போன்று அவ்வளவு கடினமான கரியமாய் இருக்கிறது.
கல்வியறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதிகாரிகள் எல்லோரும் மாணவ ர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, நாணயம் இவைகளை வளர்க்க முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
படிப்பு எதற்கு? அறிவுக்கு, அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் - தொல்லை கொடுக்காதவனாய் - நாணயமாய் வாழ்வதற்கு.
முதலாவதாக, மாணவர்கள் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அடுத்து, ஒழுங்குமுறை பழக வேண்டும். அதற்கு அடுத்தாற்போல் தான் பாடம்.

தமிழ்மொழி

ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றே யாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கோண்டு இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை.
தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று சொல்லுகிறேன். வங்காளிக்கு வங்கமொழியில் பற்றுண்டு; மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு; ஆந்திரனுக்கு ஆந்திர மொழியில் பற்றுண்டு; ஆனால், தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை. தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதவரையில் தமிழர்கள் முன்னேற்றமடையமாட்டார்கள்.
நான் தமிழினிடத்தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால் அதன் மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையையும் அது மறை நேர்ந்தால் அதனால் இழப்பு ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடத்து அன்பு செலுத்துகிறேன்.
மற்றொரு மொழி நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து அதனால், நமக்கு ஏற்படும் இழப்பை அறிந்து சகிக்கமுடியாமல்தான் எதிர்க்கிறேனே யொழியப் புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.
மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதும் அறிவையும் திறமையையும் தைரியத்தையும் உண்டாக்கக் கூடியதும் ஆகிய சிறந்த கலைகளையெல்லாம் தமிழில் எழுதிப் பரவச் செய்வதன் மூலம், மக்களுடைய அறிவையும், தமிழ் மொழியையும் செம்மை செய்வதே தமிழ் உணர்ச்சியாகும்.

எழுத்துச் சீர்திருத்தம்

எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முந்திய பதிப்புகளிலும் எழுத்துக்களிலும் ``ஈ'' என்கின்ற எழுத்தானது ``இ'' எழுத்தையே மேலே சுழித்த வட்டவடிவத்தில் இருந்து வந்திருக்கிறது.
இன்னும் 400, 500 ஆண்டுகளுக்கு முந்தின கல் எழுத்துக்கள் அநேகம், வேறு வடிவத்தில் இருந்து வந்திருக்கின்றன. அதுபோலவே இப்போ தும் சில எழுத்துக்களை மாற்ற வேண்டியதும் சில எழுத்துக்களைக் குறைக்க வேண்டியதும், சில குறிகளை மாற்ற வேண்டியதும் அவசிய ம் என்றும், அனுகூல மென்றும்பட்டால் அதைச் செய்யவேண்டியது த èன் அறிவுடைமை.
ஒரு மொழியோ, ஒரு வடிவமோ எவ்வளவு பழையது - தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்ளுகின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றைச் சீர்திருத்த வேண்டிய அவசியமிருக்கின்றது என்பது அதன் உண்மைத் தத்துவமாகும்.
எழுத்துக்களை உருவம் மாற்றுவது, குறிப்புகள் ஏற்படுத்துவது புதிய எழுத்துக்களை சேர்ப்பது என்பது போலவே சில எழுத்துக்களை அதாவது அவசியமில்லாத எழுத்துக்களைக் குறைக்க வேண்டியதும் அவசியமாகும்.
மொழியின் பெருமையும், எழுத்துக்களின் மேன்மையும், அவை எளிதில் தெரிந்து கொள்ளக் கூடியதாகவும், கற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருப்பதைப் பொறுத்தே ஒழிய வேறில்லை.

திருக்குறள்

திருவள்ளுவரின் குறளை மெச்சுகிறார்களே ஒழிய காரியத்தில் அîதாடு, அதற்கு நேர்விரோதமாக கீதையைப் போற்றுகிறார்கள்.
அறிவினால் உய்ந்துணர்ந்து ஒப்புக்கொள்ளக்கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்களைக் கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள்.
கம்பராமாயணத்தில் 100 பாட்டும், கந்தபுராணம் அல்லது பெரிய புராணத்தில் 200 பாட்டும் படிப்பதைக் காட்டிலும் திருக்குறளில் 10 பாட்டுப் படிப்பது எவ்வளவோ அறிவூட்ட வல்லது.
குறள் வெறும் ஒழுக்கத்தையும், வாழ்க்கைக்கு வேண்டிய அனுபவ·ர்வமான பிரத்தியட்ச வழியையும் கொண்டதாகும்.
குறள் ஒரு அறிவுக் களஞ்சியம். பகுத்தறிவு மணிகளால் கோக்கப்பட்ட நூல்.

கூட்டுறவு

கூட்டுறவு வாழ்க்கை பிறருக்கு நாம் எவ்வாறு சகாயம் செய்வது, எவ்வாறு உதவி செய்வது என்பதை இலட்சியமாகக் கொண்டதேயாகம்.
நமது உடலில் பழைய தனிமைத் தத்துவ இரத்தைத்தை எடுத்துவிட்டுக் கூட்டுறவுத் தன்மை என்கிற இரத்தத்தைப் பாய்ச்ச வேண்டும்.
மனிதன் பகுத்தறிவுள்ள காரணத்தால்தான் தன் சமுதாயக் கூட்டு வாழ்க்கைக்கென்று பல திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறான். அத்திட்டங்களை நிறைவேற்றத் தனி மனிதனால் முடியாது. அதற்கு மற்றவர் உதவி இருந்தே தீர வேண்டியிருக்கிறது.
கூட்டுறவு என்கிற கொள்கை சரியான உயரிய முறையில் நம்நாட்டில் ஏற்பட்டுவிடுமானால் மக்கள் சமூகமே சஞ்சலமற்று, நாளைக்கு என்ன செய்வதென்ற ஏக்கமின்றி, திருப்தியுடன் நிம்மதியாக-கு­கலமாக வாழ வழி ஏற்பட்டுவிடும்.
நாம் செலவழிப்பதில் வகைதகையற்ற முறையில் வீண் செலவு செ ய்து வருகின்றோம். கூட்டுறவு முறையில் நமது வாழ்க்கையை நடத்தினால், இன்றைய நமது செலவில் எட்டில் ஒரு பாகம் தான் செலவு ஏற்படும். பாக்கி இன்னும் ஏழு பேருக்கு உதவக் கூடியதாயிருக்கும். நம் நாட்டு நிலைமைகளை மாற்றியமைக்காவிட்டால் நம் வாழ்வு விரைவில் அîதாகதியாகிவிடுமென்பது நிச்சயம்.

பொருளாதாரம்

கடவுளுக்குக்கு நன்றி செலுத்தும் முறையிலும் இன்னும் மேன்மேலும் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக விண்ணப்பம் போட்டு, லஞ்சம் செலுத்தும் முறையிலும் செல்வத்தைப் பாழாக்குகிறார்கள். இதன் பயனாகவே, இந்த நாட்டின் ஆண்டொன்றுக்குப் பல கோடி ரூபாய் பாழாவதைப் பார்க்கலாம்.
மக்களக்குள்ள சமுதாயக் கொடுமை தீரவேண்டியது எவ்வளவு அவசியமோ அது போலவே, மக்களுக்குள்ள பொருளாதாரக் கொடுமையும் தீரவேண்டியது அவசியமாகும்.
நான் ஒரு நிமிடம் அரசனாய் இருந்தாலும் முதல் முதல் திருமணம் முதலிய பலவகைகளிலும் ஏற்படும் பொருள் விரயத்தைத் தடுக்கத் ­க்குத் தண்டனை நிபந்தனையுடன் சட்டம் செய்வேன். பொருள் நட்டம் தான் இன்று இந்தியாவைப் பிடித்த பெரும் பிணி என்று சொல்லுவேன்.
செல்வம் என்பது உலகின் பொதுச்சொத்து, அதாவது மக்கள் அனைவரும் அனுபவிக்க உரிமையுள்ள சொந்தமான சொத்தாகும். அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை, எவருக்கும் அது பொதுச்சொத்தாகும். அனுபவிக்கும் உரிமைபோல அதை அழியாமல் பாதுகாக்கவும் உரிமை உண்டு.
நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியப் பொறுப்பு ஆகிய தன்மைகள் இல்லாத போக்கு உச்ச நிலையடையும் வகையில் மனித சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது. சொத்துரிமை இல்லாமல் தடுப்பதே இதற்குப் பரிகாரமாகும்.

திருமணம்

மணமக்கள், உயிர் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பழகும் முறையைப்போல் நடந்துகொள்ள வேண்டும். எதிலும் தான் கணவன் என்ற ஆணவத்தை மணமகன் கொள்ளக்கூடாது. மணமகளும் தான் கணவனுக்கு அடிமைப் பொருள் - அடுப்·துவதற்கு என்றே வந்தவள் என்ற எண்ணமில்லாது பழக வேண்டும்.
மணமக்கள் சந்ததி உற்பத்தி செய்வதில் அவசரப்பட்டுவிடக் கூடாது. திருமணம் நடந்து குறைந்தது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னாவது குழந்தை பெறுவதாயின் மிக நல்லதாகும்.
ஒருவனுடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்.
சுயமரியாதைத் திருமணம் என்பது அறிவு ஆராய்ச்சியின் காரணமாய் ஏற்பட்டது.
திருமணம் என்பது மணமக்களை மட்டும் பொறுத்ததல்ல. நாட்டின் முன்னேற்றத்திலும் தொடர்பு கொண்டிருக்கிறது.

அரசியல்

பிறவியிலும் பணத்திலும் உயர்வு தாழ்வு இல்லையானால் ஆளுவதிலும் ஆளப்படுவதிலும் உயர்வு தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று அரசன் பயப்படுகிறான்.
நம் நாட்டுக்கு இன்று எவ்வித அரசியல் கிடைப்பதானாலும் அதில் சமூக சமத்துவமும், சமூக ஒற்றுமையும் உண்டாக்கக்கூடிய தன்மை இருக்க வேண்டும்.
பணம் உள்ளவனும் பணம் இல்லாதவனும் உலகத்தில் இருக்கும்வரை லஞ்சம், பிச்சை முதலானவைகள் ஒழியவே ஒழியாது.
இலஞ்சம் ஒழிய வேண்டுமானால், தனி உடைமைத் தர்மம் அழிந்து, ஒழிந்து, பொதுஉடைமை நிலை ஏற்பட்டால்தான் முடியும். அதில்லாதபடி இலஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுவது மனுதர்மம் பேசுவதேயாகும்.
சமுதாயத் துறைக்கு பாடுபடுவதுதான் உண்மையான அரசியல் தொண்டாகும்.

பொதுத்தொண்டு

தன்னலமற்ற பொதுத்தொண்டு செய்பவர்கள் - பிரதிபலன் கருதாது உழைக்கக் கூடியவர்கள் எண்ணிக்கை நாட்டில் மேன்மேலும் பெருகவேண்டும். அவர்களின் சீரிய குணங்கள் பொதுமக்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும். மனிதனாகப் பிறந்தவர் பொதுவாழ்வில் எப்படி நடந்துகொண்ண வேண்டுமென்பதற்கு அவர்களின் வாழ்க்கையே எடுத்துக்காட்டாக இருக்கும்.
பிறப்பதும் சாவதும் இயற்கை, ஆனால் மக்கள் பாராட்டுதலுக்கு உகந்தவகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்றமாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்ற வேண்டும்.
சுகபோகத்தினால் இன்பம் காண்பதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காண்பதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்காகவும் தொண்டுக்காகவும் நம் வாழ்வு இருக்க வேண்டும் என்று கருத வேண்டும்.
ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொருத்த மட்டில்தான் மானத்தையும், கவுரவத்தையும் கவனிக்க வேண்டும். பொதுநலம், பொதுத்தொண்டு என்று வந்துவிட்டால் அவை இரண்டையும் பார்க்கக்கூடாது.
மனிதன் திருடுகிறான், பெய் பேசுகின்றான், பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை, சாதியை விட்டுத் தள்ளுவதில்லை, ஆனால் சாதியைவிட்டுத் தள்ளிவிடப்படுகிறான், கல்யாணம் செய்தால், சாதியை விட்டுத் தள்ளிவிடப்படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது பாருங்கள்.

மலர்கள்

சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கமே பக்தியைவிட இன்றியமையாது. ஒழுக்கம் என்பது, சொல்லுகின்றபடியே நடப்பதும் நடந்தபடியே செல்லுவதுமாகும்.
பக்தி என்பது தனிச் சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து. பக்தி இல்லாவிட்டால், இழப்பில்லை ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.
தொழிலாளி-முதலாளித்தன்மை முறையே இருக்கக் கூடாது. வேலை செய்பவர்கள் பங்காளியாக அல்லாமல் கூலிக்காரர்களாக இருப்பது அடிமைத்தனம்.
நாடு, மொழி, கடவுள், மதம், சாதி என்று எந்தபற்றுமின்றி, மானுடப் பற்றுடன் அறிவைக் கொண்டு தங்குதடையின்றி சிந்தித்துச் செயல்புரிவதே பகுத்தறிவாளர் கடமையும், பொறுப்புமாகும்.
தீண்டாமை என்பதே சாதி காரணமாக ஏற்பட்டதே தவிர, அதற்கு வேறு காரணமே ஆதாரமே இல்லை. சாதியை வைத்துக்கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பது சிறிதும் அறிவுடைமையாகாது.

 

பகுத்தறிவு

இராமாயணத்திலும், பாரத்திலும் ஆகாய விமானம் இருக்கிறது. ஆனால், அது மந்திர சக்தியால் ஓடியிருக்கிறது. ஆங்கில இலக்கியத்தில் ஆகாய விமானம் பற்றிய விளக்கம் இருக்கிறது. இது இயந்திர சக்தியால் ஓடுகிறது. நமக்கு எது வேண்டும்? மந்திர சக்தியா? இயந்திர சக்தியா?
அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் தேவைக்கும் பொருத்தமில்லாத காரியங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தின் பேராலே மதத்தின் பேராலே, சாதி வகுப்பின் பேராலோ மற்றெதன் பேராலே நடத்தப்படக் கூடாது.
கடவுள் சென்னது, மகான் சொன்னது, ரிஷி சென்னது, அவதார புருடர்கள் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன்புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை.
மூட நம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே உழை ப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது.
மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடைமையோடும் ஆண்மையோடும் நின்று எதையும் நன்றாய் ஆராச்சி செய்து, காலத்திற்கும் அவசியத்திற்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவுடைய மனிதனின் இன்றியமையாத கடமையாகும்.

அறிவியல்

இயந்திரம் கூடாதென்றால் மனிதனுக்கு அறிவு விருத்தி கூடாது என்பதுதான் பொருளாகும்.
இன்று நாம் எவ்வளவு மாறுபாடு அடைந்துவிட்டோம். நம் வசதிக ளும் வாழ்வும் ஏராளமாகப் பெருகிவிட்டன. அதற்குமுன் கட்டைவ ண்டிதான். இன்று ரயில், மோட்டார், ஆகாய விமானம் முதலிய ந வீன வசதிகள், தீ உண்டாக்க சக்கிமுக்கிக் கல்லை உராய்ந்îதாம் , இன்று ஒரு பொத்தானை அழுத்தினால், ஆயிரக்கணக்கான மின்ச èர விளக்குகள் எரிகின்றன. வாழ்க்கையில் இவ்வளவு மாற்றமடைந் துள்ள நம் மக்களின் புத்திமட்டும் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த து போலவே இருக்கிறதே!.
கொஞ்ச காலத்திற்குமுன் கடவுளைப் பற்றிய கதைகளை அப்படி யே, அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக்கொ ண்டிருந்தவர்கள் கூட, இப்பொழுது அப்படியே நம்புவதற்கு வெட் கப்பட்டுக் கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன் மையை மறைத்துக் கொண்டு, விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு சிரமப்படுகிறார்கள்.
சக்கிமுக்கிக் கல்லால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து "எடிசன்" அப்புறம் படிப்படியாக முன்னேற்றமாகி இப்பொழுது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம்; எனவே மாற்றம் இயற்கையானது; அதைத் தடுக்க யாராலும் முடியாது.
மக்கள் பிறப்புக்கூட இனி அருமையாகத்தான் போய் விடும். அது போலவே சாவும் இனிக் குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டு வாழ முடியும். யாரும் சராசரி என்று இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள். ஆண், பெண் உறவுக்கும் பிள்ளைப் பேற்றுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.

இலக்கியம்

எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதன் மதிப்பு, அந்த நூலின் பயனை அளவாகக் கொண்டதே ஒழிய, அதை ஆக்கியவனையோ, அதில் உள்ள தெய்வீகத் தன்மையையோ, இலக்கண இலக்கிய அள வையையோ, அமைப்பையோ, அற்புத தன்மையையோ அளவாகக் கொண்டது ஆகாது.
இலக்கியம் என்பது நாகரீகத்தை புகத்த வேண்டும். மக்களிடம் உ யரிய குணங்களைப் புகுத்துவதாக இருக்க வேண்டும்.
இலக்கியம் எதற்காக? இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்? எப் படிப்பட்டதை இலக்கியம் என்று சொல்லலாம்? அவை எதற்காக இருக்க வேண்டும்? என்பது பற்றிச் சிந்தித்தால், மனிதனின் வாழ்க்கைக்கு உயிர் மட்டும் அல்லாமல் மனித சமுதாய வளர்ச்சிக் கும் ஏற்றதாக என்பது என் கருத்து.
நம் மக்களிடம் நிரம்பியிருக்கும் மடமை, மானமற்ற தன்மை, இழிநி லை, அறிவற்ற தன்மை இவைகளைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தின்மீதே "இலக்கிய மறுமலர்ச்சி" பற்றிச் சிந்திக்க வேண் டும்.
மதம், கடவுள் சம்பந்தமற்ற - யாவரும் பொதுவான இயற்கை ஞ èனத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞான த்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம்தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல், அதைக் கையாளும் மக்கள் ஞான முடையவர்களாவார்கள்.

கலைகள்

"தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டுக்கள் பாடப்பட வேண்டும்" தமிழில் இசை இருக்க வேண்டும்" என்று கூறுபவர்களை நையாண்டிசெய்து, அவ்வாறு கூறுவதும் கோருவதும் முட்டாள்தனம் என்று மேடைகள் மீதேறிப் பேசிடத் துணிவுகொண்ட கூட்டத்தினருக்கும் இத்தமிழ்நாடு இடங்கொடுத்துக் கொண்டிருக்கிறது.
நல்ல தமிழில் - இயற்கை எழில்களையும், தமிழரின் வீரத்தையும்,அன்பையும், மானமிக்க சமத்துவ வாழ்வினையும், வரலாற்றினையும், நேர்மையையும், நீதி நெறிகளையும், தமிழ்நாட்டுப் பற்றையும், மொழியின் ஆர்வத்தையும், ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் எடுத்துக்காட்டும் பாட்டுக்களையே பாடுமாறு செய்தல் வேண்டும்.
நாடகங்களிலே இரண்டு விதமுண்டு. ஒன்று பாட்டாக நடத்திக் காண்பிப்பது; மற்றொன்று வசன ரூபமாய் நடத்திக் காண்பது. வசன ரூபமாய்க் காண்பிப்பவைகளையே மக்கள் விரும்புகிறார்கள்.
தமிழர்களின் தன்மானத்தை வளர்ப்பதற்கும், தமிழர்களுக்கு அறிவூட்டுவதற்கும், தமிழர்கள் மனிதத் தன்மை அடைவதற்கும் பயன்படாத இயலோ, இசையோ நடிப்போ எதற்காக வேண்டும்? அது என்ன மொழியில் இருந்தால்தான் என்ன?
எப்படிப்பட்ட கலையும், ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் சிறிதும் பயன்படக்கூடாதோய் இருக்க வேண்டும்.

ஒழுக்கம்

பொதுவாழ்வின் பெயரால் ஒழுக்கக் கோடாக, லஞ்சகராக, திருடர்களாக நடப்பவர்களை ஒருநாளும் விட்டுவைக்கக் கூடாது.
ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழவேண்டுமானால் அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
மனிதனிடம் சுலபத்தில் ஒழுக்கத்தைப் புகுத்த வேண்டுமானால், மாணவப் பருவத்தில்தான் முடியும்.
பிறருக்கு எந்தவிதத் தொல்லையும் தராத வாழ்வே ஒழுக்கம். இது எல்லாவித பேத நிலையும் ஒழித்த நிலையில்தான் வளர முடியும். ஒழுக்க அடிப்படையே இன்ப வாழ்வு.
ஒழுக்கம் என்பது தனக்கும் அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும்.

பெண் உரிமை

மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயொழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கும் அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.
பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்வதைவிட, ஆண்டான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகம்.
இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்துவரும் வேதனையையும் இழிவையும், அடிமைத் தனத்தையும்விட அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.
கற்புக்காகக் கணவனின் திருகச் செயலையும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொடுமை ஒழிய வேண்டும்.
ஆண் எப்படி வேண்டுமானாலும் திரியலாம், எவ்வளவு மனைவிகளை வேண்டுமானாலும் மணக்கலாம், என்கின்ற முறையே, விபச்சாரம் என்னும் பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றது.

இளைஞர்கள்

வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாகபுத்தியும் ம èத்திரம் இருந்தால் போதாது. நன்மை தீமையை அறியும் குணமும், சாத்தியம் அசாத்தியம் அறியும் குணமும், ஆய்ந்து ஓய்ந்து பார்க்கும் தன்மையும் இருந்தால் தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக்கூடியவர்கள் ஆவார்கள்.
வாலிபப் பருவம், அபாயகரமான பருவம், சுலபத்தில் நெருப்புப் பற்றிக் கொள்ளக்கூடிய பொருளைப் போல் மிகப் பத்திரமாய் காப்பாற்றப்படவேண்டிய பருவம்.
பித்தலாட்ட, மத சம்மந்தமான மூட நம்பிக்கைகள் அனைத்தையும் ஒழிக்க வாலிபர்கள் முனைய வேண்டும்.
வாலிபர்கள் சுயமாகச் சிந்திக்குமாறு பழகப்படுத்துவதேயில்லை, பகுத்தறிவை உபயோகிக்கச் சந்தர்ப்பமளிக்கப்படுவதே இல்லை அறிவுக்கும் அனுபவத்துக்கும் சம்பந்தப்படுத்திப் பழக்குவதேயில்லை. இத்தகைய நிலைமை மாறாதவரை, வாலிபர்கள் சுயமாகச் சிந்தித்துப் பார்த்து ஆராய்ந்து தாங்களே ஒரு முடிவுக்கு வருவது முடியாதோகும்.
இளைஞர்கள் குழந்தைகளுக்ச் சமமானவர்கள். சமீபத்தில் உள்ளதைப் பற்றுகிறவர்கள், பின்விளைவை அனுபவித்து அறியாதவர்கள். கண்ணோட்டம் விழுந்தால் பற்றி விடுபவர்கள். எழுச்சி என்பது எங்கொங்குக் காணப்படுகின்றîதா, கூட்டம் கு­கலம் என்பவை எங்கெங்குக் காணப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டுவிடுவதுமான குணமுடையவர்கள்.

பல்துறை

சிலர் சாமியைப் பார்த்தால் சாமி சக்தி ஓடிப்போவானேன்? சிலர் கோயிலுக்கு வந்தால் கோயிலும் சாமியும் தீட்டுப்ட்டுப் போவானேன்? சிலர் சாமியைத் தொட்டால் சாமி இறந்து போவானேன்? ஒரே பெயரும் உருவமும் உள்ள சாமிக்கு ஊருக்கு ஒரு விதமாய்ச் சக்திகள் ஏற்பட்டிருப்பானேன்?
காசி, ·ரி, பண்டரிபுரம் முதலிய ஊர்களில் உள்ள சாமிகள் யார் தொட்டாலும் சாவதில்லை. அங்குக் கோயிலுக்கு போகிறவர்கள் எல்லாம் தங்களே நேரில் சாமியைத் தொட்டு தலையில் தண்ணீர்விட்டு மலர் போட்டுக் கும்பிடுகிறார்கள். அதே பெயருள்ள சாமி நமது தமிழ்நாட்டில் மட்டும் நாம் தொட்டால் செத்துப் போய்விடுகிறîதா, ஏன்? இப்படி சாமிகளின் சக்தியும் உயிரும் கோயில்களின் யோக்கியதையும் ஊருக்கு ஒரு விதமாய் இருப்பானேன்?
எவன் ஒருவன் கடன் வாங்காமல் வரவுக்கேற்ற மறையில் செலவு செய்து வருகிறானே அவன்தான் பிரபு ஆவான்.
நல்ல குடும்பம் எனப்படுவது வரவுக்கு மிஞ்சிச் செவு செய்யாமல் இருப்பதாகும். தமது வாழ்க்கைக்குச் செலவை வரவுக்கு உள்பட்டே அமைத்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட குடும்பந்தான் கண்ணியமான குடும்பம்.
சாதி ஒழிப்புக்கு இன்றைய அரசியல் சட்டம் இடந்தரவில்லை. அதை, அடிப்படை உரிமைக்கு விரோதம் என்கிறது. அதேபோல்தான் வகுப்புவாரி விகிதப் பேச்சும் பேசாதே அது வகுப்புத் துவேசம் என்கிறது. சாதி இருப்பது தவறல்லவாம். சாதிப்படி உரிமை கேட்டால் மட்டும் தவறு என்றால் இதைவிடப் பித்தலாட்டம் வேறு இருக்க முடியுமா?

 

சத்தியம் மக்கள் சேவை மையம் தொடங்கப்பட்டது

2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி நானும் எனது நண்பர்களும் சோந்து எங்களுக்கென தனயேயொரு அமைப்பை ஏற்படுத்தினோம். அது தான் ‘சத்தியம் மக்கள் சேவை மையம்’.


மிகுந்த ஆவலுடன் ஆரம்பித்த இந்த இயக்கத்தை இன்றுவரை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். ஆரம்பத்தில் துணைத் தலைவராக இருந்த நான் 2004 ஆம் ஆண்டு முதல் தலைவராக செயல்பட்டு வருகிறேன். எமது நண்பர்கள் மூலம் எம்மாலியன்ற சிறுசிறு உதவிகளை செய்து வந்தோம். பலமுறை ஆதரவற்றோர் இல்லங்களில் குழந்தைகளுக்கு விருந்தளித்துள்ளோம்.


சென்ற வருடம் ஜுன் மாதம் கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஓவியப் பயிற்சி அளித்தோம்.
அந்த விழாவில் இன்று புதுவை சட்டமன்ற உறுப்பினராக உள்ள திரு. ஓம் சக்தி சேகர் அவர்கள் கலந்து கொண்டார்.நான் எழுதிய எங்களது இயக்கத்தின் கொள்கை விளக்க புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியும் இணையதளத்தின் தொடக்க விழாவும் நடைபெற்றது.


2006 ஆம் ஆண்டு நடந்த புதுச்சேரி சட்டமன்ற தேர்தலின் போது அனைவரும் வாக்களிக்க வேண்டி பிரச்சார செய்தோம். எங்களது பிரச்சாரத்திற்கான பலனும் கிடைத்தது. புதுச்சேரி வரலாற்றில் முதன்முறையாக 86மூ சதவிகிதம் வாக்கு பதிவானது.

புதுவை பூரான்கள் இயக்கத்தில்...

2001 ஆம் ஆண்டின் முடிவில் புதுவை பூரான்கள் இயக்கம் என்கிற சமூக தொண்டு நிறுவனத்தின் கிளையை பள்ளியில் ஏற்படுத்தி 1 வருடம் தலைவராக பணியாற்றினேன். சுமார் 219 மாணவர்கள் இதில் சேர்ந்தனர்.

எனது கவிதைகள் பல முக்கிய தினங்களன்று நோட்டீஸாக அச்சிடப்பட்டு வினியோகிக்கபட்டது….


உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 2002 ஆம் ஆண்டு வெளிடப்பட்ட எனது கவிதை துண்டு பிரச்சுரம்…


குடியரசு தினத்தை முன்னிட்டும் குஜராத் பூகம்பதினத்தை முன்னிட்டும் 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட எனது கவிதை பிரச்சுரம்…

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 13-2002 ஆம் நாள் பூரான்கள் இயக்கத்தின் இரத்ததான முகாம் நடைபெற்றது.


வலமிருந்து இடம்: செயலர். ஆனந்த் (எனது தம்பி), நான், போன்ஸ் ரமேஷ், பூரான்கள் இயக்கத்தின் அகில இந்திய தலைவர்., சத்தியராஜ்( கிளை நிர்வாகி)


தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூரான்களின் கொள்கை விளக்க கையேடு வெளியிடப்பட்டது. அதில் எனது கவிதை கடவுள் வாழ்த்தாக வெளியிடப்பட்டிருந்தது.


நிகழ்ச்சியில் நினைவு பரிசு வழங்குகிறேன். பெறுபவர் புதுச்சேரி ஜீசஸ் கணிணி நிறுவன உரிமையாளர் திரு.. கஸ்பர். பின்னால் அமர்ந்திருப்பவர் பாவேந்தர் பாரதிதாசனின் புதல்வரும் புதவைத் தமிழ் சங்கத்தின் தலைவருமான கவிஞர். மன்னர் மன்னன்.


2003 ஆம் வருடம் எங்களது ஊரில் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினோம். விழாவிற்கு பாவேந்தர் பாரதிதாசனாரின் மகனும் புதுவைத் தமிழ் சங்கத்தின் தலைவருமான கவிஞர். மன்னர் மன்னன் அவர்களும் பாரதி அறக்கட்டளையின் தலைவருமான பாரதியும் கலந்து கொண்டனர்.


மாணவர் சங்கத்தில் நான்..

பன்னிரெண்டாம் வகுப்பு மேல்நிலைக் கல்வியை கலவைக் கல்லூரி எனப்படும் கல்வே காலேஜில் படித்தேன். அப்பொழுது இந்திய மாணவர் சங்கத்தில் நானும் எனது நண்பர்களும் இணைந்தோம். சங்கம் நடத்திய பல போராட்டங்களில் நாங்கள் பங்கேற்றோம்.
அதில் குறிப்பிடத் தக்கவையாக பல நிகழ்வுகள் நடந்தன. புதுச்சேரி சட்டக்கல்லூரியில் நடந்த முறைகேடுகளுக்கு சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய உண்ணாவிரதத்திற்க்காக வகுப்புகளை புறக்கணித்து விட்டு நாங்களும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.புதுச்சேரிக்கு தனியாக கல்வி வாரியம் அமைக்கக் கோரி மாநில அளவில் நடைபெற்ற போராட்டம். அந்த கோரிக்கை 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு பரிசீலிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்படடுள்ளன.மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு நடத்தப்பட்ட ஆகஸ்ட் வேலை நிறுத்தப் போராட்டம்.பள்ளி பருவத்திலே...

எல்லோரையும் போலவே எனக்கும் நாட்டுப் பற்று பள்ளிப் பருவத்தில் தான் துளிர் விட்டது.

புதுச்சேரியின் மிகப்பழமையான பிரஞ்சு உயர்நிலைப்பள்ளியான சொசியத்தே புரோகிரசிஸ்த்தே பள்ளியில் சிறுவயது முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தேன்.ஆறாம் வகுப்பின் போது பள்ளியில் இயங்கிய பாரத சாரண இயக்கத்தில் சேர்ந்தேன்(1996). அதில் நடத்தப்பட்ட பல்வேறு பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டு முதலுதவி உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்றேன்.குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று அரசு சார்பில் நடைபெறும் கொடியேற்ற விழாவில் மார்ச் பாஸ்ட்டில் தொடர்ந்து 3 வருடம் கலந்து கொண்டேன்.

எட்டாம் வகுப்பு பயிலும் போது சங்கரதாஸ் நாடக சபா நடத்திய வினாடிவினாப் போட்டியில் முதற்பரிசு பெற்றேன். (21-09-1997)

வகுப்பின் போது மதுரைத் தமிழ் சங்கம் நடத்திய தமிழ் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.

மிகப் பிடித்த திரைப்படங்கள்

திரைப்படங்கள் மீது எனக்கு மிகுந்த ஆர்வமிருந்தது. அதில் கலைக்கும் காதலுக்கும் கொடுக்கப்பட்ட மரியாதையே அதற்கு காரணம். வெகுஜன ஊடகமான இதில் இன்று ஆபாசமும் வன்முறையும் வக்கிரமும் மிகுந்து காணப்படுவதால் அதன் மேலிருந்த ஆர்வம் குறைந்து போய்விட்டது.

ஞானராஜசேகரன் இயக்கிய ‘பாரதி’
வரலாற்றில் இன்றும் நிலைத்திருக்கும் மாமனிதர்களின் வாழ்க்கையை படம் பிடிப்பது இயல்பான காரியம் என்றாலும், இந்த திரைப்படம் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு பாரதியை புரிந்து கொள்ள மட்டுமல்லாமல் சுவாரசியமாக அதனை படம்பிடித்திருந்தார். அதன் தாக்கம் தான் எனது பாரதிப் பற்றை வளர்த்தது.

சத்தியராஜின் ‘புரட்சிக்காரன்’
நான் எதை நினைத்தேனோ அதை படமாக்கியிருந்தனர். சமூகத்தில் வேரூன்றியிருக்கும் மூட நம்பிக்கைகளுக்கு சாவு மணியடிக்க வேண்டும் என்கிற பெரியாரின் கொள்கையையே படமாக்கியது பிரமாதம். கடவுளை ஏற்பவர்கள் சிந்தனைக்கு இந்த படத்தை சிபாரிசு செய்கிறேன்.

கதிரின் ‘காதல் வைரஸ்’
எனது கதையோ என்று நினைக்கும் அளவிற்கு என் வாழ்வில் நான் அனுபவித்த பல சம்பவங்களை எனக்கு பட்டியலிட்டு ஞாபகபடுத்திய படம்.

செல்வராகவனின் ‘ரெயின்போ காலனி’
காதலின் வலியை வலிமையை உணர்த்திய காவியம். இன்றும் இந்த படத்தின் பாடல்களை தான் தினமும் முனுமுனுத்துக் கொண்டிருப்பேன். எனது நெஞ்சில் பதிந்த சில நினைவுகளை எழுப்பக்கூடிய வல்லமை இந்த படத்திற்கு உண்டு.

சீமானின் ‘தம்பி’
இந்த படத்தை பார்த்த பிறகு தான் கொள்ளைகளை திரைத்துறையில் பரப்ப முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ‘எமது ஆயுதங்களை நமது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்’ என்ற பொதுவுடைமை பேரறிஞர் தோழர் மாவோவின் வைரவரிகளை கொண்டு தொடங்கும் இந்த படம் எதிர்காலத்திற்கான ஒரு அறைகூவல்.

மிகப்பிடித்த திரைப்பாடல்கள்
பாரதி- கேளடா மானிடா…
புரட்சிக்காரன் - தூங்கும் புலியை…
காதல் வைரஸ் - எந்தன் வாழ்வின்…
ரெயின்போ காலனி - நினைத்து நினைத்து…

மிகப்பிடித்த இடங்கள்

சென்னையில் மிகப் பிடித்த இடங்கள்
தந்தை பெரியார் சமாதி
பெரியார் என்ற மாமனிதரின் அருமைப் பெருமைகளை உணர்த்திய இடம். அங்கு அமைந்துள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் புத்தகங்கள் தான் என்னை சுயமரியாதை பகுத்தறிவு சிந்தனைகள் பக்கம் இழுத்துச் சென்றன….

கண்ணகி சிலை புத்தகக்கடைகள் சாலை
புத்தகங்கள் வாசிப்பதின் மீது எனக்கு தீராத தாகத்தை ஏற்படுத்தியது இந்த சாலை தான். எனது நண்பர்கள் என்னுடன் கடற்கரைக்கு வர பயப்படுவதும் இந்த கடைகளால் தான்.

புதுச்சேரியில் பிடித்த இடங்கள்

மகாகவி பாரதியார் புதுவையில் வாழ்ந்த வீடு
எங்கள் வீட்டிலிருந்து சில தூரத்திலேயே உள்ள இந்த வீட்டீல் தான் நான் எனது கனவு நாயகராகக் கருதி வாழ்ந்து கொண்டிருக்கும் மகாகவி வாழ்ந்தார் என்று நினைக்கும் போதே பெருமையாக இருக்கிறது.

புதுவை கடற்கரை
இந்த கடற்கரை கரையில் தான் எமது புதுவை நண்பர்களின் சந்திப்பு நடைபெறும். புதுவை வரும்போதெல்லாம் இங்கு சந்தித்து பேசிக்கொள்வது வழக்கமாகிவிட்டது. இதே கடற்கரையில் எனது கவிதைகளுக்கு காரணமானவள் வருகை தந்திருக்கிறாள் என்று அறிந்த போது அதன் மதிப்பு மேலும் உயர்ந்து நிற்கிறது.

வாழ்வில் மறக்கவே முடியாத இடங்கள்
நான் படித்த கல்லூரி
கல்லூரி பருவம் தான் என்னை முழு மனிதனாக்கியது. சென்னை புந்தமல்லி அருகே உள்ள எனது கல்லூரி மறக்கமுடியாத பலவற்றை எனக்கு பரிசாக கொடுத்து உதவியது. எனது நண்பர்கள் எல்லோரும் திடலில் விளையாடிக் கொண்டிருக்கும் போது நான் மட்டும் தனியே அலைந்த புல்வெளிகள், காடு மேடுகள் என அங்குள்ள அனைத்தும் எனக்கு புதுப்புது அர்த்தங்களை சொன்ன ஆசிரியர்களாக விளங்கின. தனிமையில் இருக்கும்போது அவையே என் வாழ்வை இனிமையாக்கின..

மனம் விரும்புபவை

விரும்பும் நிறம் : சிகப்பு

படித்ததில் பிடித்த புத்தகங்கள் :

தமிழரின் தலையாய தேசியப் பிரச்சனைகள்,
மாவீரர் பழ நெடுமாறன்
தமிழ்க்குலம் பதிப்பாலயம், சென்னை.

கறுப்புத் தமிழனே கலங்காதே,
இ. ஜே. சுந்தர்.
ஏழில் நிலா பதிப்பகம், சென்னை.

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை,
மாவீரர் லெனின்,
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ.

போராடும் தருணங்கள்,
தோழர் மருதையன்
புதிய ஜனநாயகம் வெளியீடு, சென்னை.

தமிழர்: சிந்தனை புதிது,
முனைவர். க. ப. அறவாணன்,
தமிழ்க் கோட்டம், புதுச்சேரி.


செல்ல விரும்பும் நாடு :
தமிழனுக்கென தனி ஒரு நாடு பிறந்தால் அங்கு செல்ல விரும்புகிறேன்….

Sunday, November 12, 2006

வணக்கம் தோழர்களே...


சுயசரிதை எழுதும் அளவிற்கு நான் ஒன்றும் பெரும் சாதனைகள் படைத்தவனல்ல. உலகின் மூத்த இனமான தமிழினத்தின் 7 கோடி மக்களுள் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்…
உலகில் பிறந்த எந்த உயிரினமும் எந்த பொருளும் பிறர் உதவியின்றி வாழ்ந்திட இயலாது. ஓவ்வொரு பொருளும் உயிரும் மற்றவற்றை சார்ந்தே வாழ வேண்டும் என்பது இயற்கை வகுத்துள்ள நியதி. இதற்கு மனிதன் மட்டும் விதிவிலக்கல்ல…
மனிதன் வாழ்வதற்கும் பிறரை வாழ்விப்பதற்கும் உறவுகளே முக்கிய காரணங்கள். இந்த உறவுகள் தாய், தந்தை, காதலி, சகோதரி, சகோதரன், நண்பன், தோழி என குடும்ப சூழலில் ஆரம்பித்து மொழி, இனம், நாடு, குடிமகன் என சகல விடயங்களிலும் உறவுகளே வாழ்கின்றன. ..அந்த உறவுகளுக்காகத் தான் மனிதன் வாழ்கிறான். போராடுகிறான்…
இப்படிப்பட்ட மனித உறவுகளுக்கு அடிப்படை காரணம் அன்பாகும். அதனால் தான் ஆன்மிகப் பெரியோர் அன்பே சிவமென கதைப்பர். அந்த அன்பு தன்னை சார்ந்தவர்களிடத்தில் மட்டுமே இருந்தால் பயன்தராது. பிறரையும் தன்னை சார்ந்தவன் போல கருதி தன்னுரிமை கெடாத வண்ணம் பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும் என்கிற சிந்தனையை முன்வைத்து எனது இணையதளத்திற்குள் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்….
என்னைப் பற்றி தெரிந்து கொள்ளவும் பிறர் புரிந்து கொள்ளவும் இந்த இணையதளம் உதவும் என நம்புகிறேன். இருக்கும் புதிய உறவுகளை வளப்படுத்தவும் புதிய உறவுகளை பெறவும் இந்த வலைதளம் உதவும் என மனதார நம்புகிறேன். எனது கவிதைகள், கட்டுரை, குறும்படங்கள் போன்ற படைப்புகளை இந்த இணையத்தில் பார்த்து ரசிக்கலாம். தங்கள் விமர்சனங்கள் எதுவானாலும் எமக்கு எழுதலாம்.
22 வயதாகும் நான் தற்போது சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். மறுமலர்ச்சி என்கிற இணையத் தமிழ் மாத இதழையும் நடத்தி வருகிறேன்..
சமூகம், சமுதாயம், தத்துவம், கொள்கைகள் போன்ற உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள் தொடர்பு கொண்டு கருத்துக்கள் பரிமாற இந்த வலைதளம் மிகவும் உதவும் என எதிர்பார்க்கிறேன்…
தோழமையுடன்
க.அருணபாரதி

குறிப்பிடத்தக்க பதிவுகள்