ஆவணப்படத்தின் தயாரிப்புப் பணிகள் நிறைவுற்று விரைவில் இந்த ஆவணப்படம் வெளிவரவுள்ளது. இது குறித்த தோழர் அருணபாரதியின் செவ்வி இவ்வார 'குமுதம்" எட்டில் வெளி வந்துள்ளது.
"குமுதம்" இதழில் வெளியான அப்பேட்டி:
சுனாமியில் ஜப்பான் நகரங்கள் அழிந்தது போல், சத்தமில்லாமல் நம்ம ஊர் கிராமங்களும் கடலுக்கு இரையாகிக் கொண்டிருக்கும் செய்தி கேட்டு விரைந்தோம்.அவை பாண்டிச்சேரி அருகில் இருந்தாலும் விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் வருகின்றன.
முதலில் சின்னமுதலியார்சாவடி, திருவொற்றியு+ர், சீனிவாசபுரம், தேவனாம்பட்டினம், உவரி என கடல் அரிப்பால் கரைந்து கொண்டிருக்கிற ஊர்களின் பட்டியலில் இப்போது சின்ன முதலியார்சாவடி. கிராமத்தைத் தொட்டவுடன் நம் கண்களில் படுவது, ஊரையெ மூழ்கடித்துவிடும் ஆசேவத்தில் மிக அருகில் ஆர்ப்பரிக்கிற கடல்தான்.ஊரின் கடைக்கோடியில் இருந்த வீடுகள் அனைத்தும் சிதிலமாகிக் கிடக்கின்றன.
பாதி நிர்மூலமாகிவிட்ட வீட்டுக்குள் உட்கார்ந்து ஒரு பெரியவர் சகஜமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார். "உங்க வீடு எங்கே?" என சிலரிடம் கேட்டால், கடலை நோக்கி கைகாட்டுகிறார்கள். கடந்த மூன்று வருடங்களுக்குள் இவர்களின் வீடுகள் கடலுக்குள் போய்விட்டன. காரணம் கடல் அரிப்பு! கடல் அலைகள் இங்கே 160 வீடுகளைக் கலைத்துப்போட்டுவிட்டதாம். மொத்தத்தில் இந்த ஊர் வேகமாக கடலுக்குள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.
ராஜேந்திரன் என்ற மீனவரிடம் பேசினோம். "ரெண்டு வரு'த்துக்கு முன்னால் எங்க ஊர்லருந்து கடல் 100 மீட்டர் தொலைவில் இருந்துச்சு. இப்போ உள்ளே வந்து, வீடுகளை அடிச்சு, இன்னும் வேகமா நெருங்கிட்டிருக்கு. அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கிற மழைக்காலங்கள்லதான் கடல் வீடுகளை அடிச்சுட்டுப் போயிடுற சேதாரம் அதிகம் நடக்குது" என்று சோகத்துடன் சொல்கிறார்.
கடலின் அடுத்தகட்ட தாக்குதலுக்கு வசதியான பாக்கியத்தின் வீடு இருக்கிறது. "போன வரு'ம் கடல் தண்ணி எதிர்வீட்டுல புகுந்ததுல வீடு திடீர்னு இடிஞ்சு விழுந்துடுச்சு கீழே விழுந்த கவர்களுக்கு நடுவுல என் பையன் சிக்கிக்கிட்டான். பையன் காலை அறுத்துதான் எடுக்கணுமோங்கிற அளவுக்குப் பயந்துட்டோம். காயம் ஆறி அவன் வேலைக்குப் போக ரெண்டு மாசம் ஆச்சு" என்கிறார் பாககியம்.
அருகிலுள்ள தந்திராயன்குப்பம், பொம்மையார்பாளையம் ஆகிய கடலோரக் கிராமங்களையும் கடல் வேகவேகமாக விழுங்கி வருகிறது. இவற்றில் தந்திராயன்குப்பத்தில் கடலோரத்தில் இரு பக்கமும் கற்சுவர் எழுப்பி, தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளதால் கடல் அரிப்பு கொஞ்சம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பக்கத்தில் உள்ள கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டால், அண்மைக் கிராமங்களை நோக்கி கடல் நீரோட்டம் திரும்பி, அங்கே கடல் அரிப்பு அதிகமாகும் என்பது இன்னொரு வேதனை.
கடல் அரிப்பால் காணாமல் போகும் இந்தக் கிராமங்களைப் பற்றி ஐ.டி. ஊழியரும் சமூகச் செயல்பாட்டாளருமான அருணபாரதி "வெப்பம்" என்ற ஆவணப்படம் எடுத்து வருகிறார்.
அவர் சொல்லும் தகவல்கள் உணர்த்தும் ஒரே செய்தி, "நிலைமை கைமீறிப் போகிறது!".
"கடல் அரிப்பை மீனவர்களின் பிரச்சினையாவே பலர் பார்க்குறாங்க. அது மொத்த தமிழகத்துக்கான பிரச்னை. மீனவ கிராமங்களை விழுங்கிட்டு, கடல் ஊருக்குள்ள தானே வந்தாகணும்?
1989-இல் புதுச்சேரியில் கடலின் இயற்கை நீரோட்டத்தை மறிச்சு கட்டப்பட்ட மீன்பிடித் துறைமுகம் இந்தக் கடல் அரிப்புக்கு முதல் காரணம். இது போன்ற உள்ளுர் பிரச்சினைகளை விட முக்கியக் காரணம் புவிவெப்பமயமாதல்.
பு+மியின் வெப்பம் கூடிட்டே போறதால், உலகம் முழுக்க பல பனிமலைகள் உருகிட்டிருக்கு. அதனால் கடல்களின் நீர்மட்டம் அதிகரிச்சுட்டே இருக்கு. இந்தியாவின் நீண்ட கடலோர மாவட்டங்களைக் கொண்ட மூன்றாவது பெரிய மாநிலம் தமிழகம் தான். அதனால் கடல்மட்ட உயர்வால் தமிழகத்தில் பாதிப்புகள் அதிகமாவே இருக்கும்.
கடலோரத்தில் கட்டப்பட்டிருக்குற கல்பாக்கம் அணுஉலை, கூடங்குளம் அணுமின் நிலையம் போன்றவை கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்பட்டால், இப்போ ஜப்பானுக்கு ஏற்பட்ட பயங்கரம் நம்மூரில் நடக்காதுன்னு அரசால் உறுதியாகச் சொல்ல முடியுமா?" என்று கேட்கிறார் பாரதி.
கேள்வி சரிதான். பதில் யார் தருவார்?
நன்றி: குமுதம்
விரைவில் வெளிவரவுள்ள இந்த ஆவணப்படத்தில் தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் தோழர் கி.வெங்கட்ராமன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் தோழர் கோ.சுகுமாரன், இளந்தமிழர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினரும் இயற்கை வேளாண் உழவருமான தோழர் ம.செந்தமிழன் ஆகியோரது செவ்விகள் இடம்பெற்றுள்ளன.
கல்லூரி மாணவர் பிரகாஷ் இந்த ஆவணப்படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கிறார். வெப்பமயமாதல் குறித்து, இந்த ஆவணப்படத்திற்காக கவிஞர் கவிபாஸ்கர் எழுதியப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment