(தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் ஏப்ரல் 2010 இதழில் வெளியான கட்டுரை)
- பரமஹம்ச நித்தியானந்த சுவாமிகள் என்றறியப்பட்ட ஒரு சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொண்ட காட்சிகள் ஊடகங்களில் வெளியானது. அவரது ஆசிரமங்கள் தாக்கப்பட்டன.
கல்கி பகவான் என்றறியப்பட்ட சாமியாரின் மடத்தில். அவரது பக்தர்களுக்கு போதை மருந்து கொடுத்திருந்தது அம்பலமானது.
சங்கரமடத் தலைவர் காஞ்சி ஜெயந்திரர், கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுதலையானார்.
சிறுவர்களுடன் பாலியல் வல்லுறவு வைத்துக் கொண்ட கிறித்தவ ஆயர்களை போப் ஆண்டவர் அனுமதித்திருந்தது, அம்பலமானது.
சமயவாதிகள் என சமூகத்தில் அறியப்படும் மேற்படியானவர்கள் அவ்வப்போது குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், மாட்டிக் கொள்வதும் அன்றாடச் செய்திகளுள் ஒன்றாகி விட்ட இன்றைய சூழலில், மக்கள் இந்தச் சாமியார்களிடம் சென்று சிக்கிக் கொள்ளும் நிலை, அதிகரித்துள்ளதன் காரணத்தை ஆராய்வது நமக்கு அவசியம்.
நித்தியானந்தரின் மோசடி அம்பலமானவுடன், தமிழக முதல்வர் கருணாநிதி திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‘என்ன தான் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தாலும் இந்த மக்கள் திருந்தப்போவதில்லை’ என்றும் தெரிவித்திருந்தார். நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து தேர்தலில் போட்டியிடும், தன் ‘கழகக் கண்மணி’களைக் கூட பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து, திருத்த முடியாத கருணாநிதியின் அறிக்கை வேடிக்கையானது.
மோசடி சாமியார்களை அம்பலப்படுத்தும் விதமாக செய்திகள் வெளியிட்ட காரணத்தால், ஊடகங்களுக்கு, ஏதோ சமூகப் பொறுப்புணர்வு வந்துவிட்டதாக நாம் கருதிக் கொண்டால் அது பிழையே ஆகும்.
சாமியார்களின் புனிதப் பிம்பத்தை உடைத்தெறியும் முன்பு, கோடிகளில் திரைமறைவு பேரம் நடத்தப்பட்டு, அதில் உரிய விலை கிடைக்கப் பெறாத காரணத்தினாலேயே, இந்த மோசடிச் சம்பவங்கள் வெளியிடப்பட்டிருக்கக் கூடும். பரபரப்புக் காட்சிகளை வெளியிட்டுக் காசாக்குவதில் கைதேர்ந்த, ஊடகங்களுக்கு இதில் நிச்சயம் பங்கு இருந்திருக்கும்.
ஏனெனில், நித்தியானந்தரோ, கல்கியோ சாதாரணமானவர்கள் அல்லர். பல்வேறு நாடுகளில் தனது ஆசிரமங்களின் கிளைகளைப் பரப்பி, அதிகார வர்க்கத்தினருடன் கை குலுக்கி நின்றவர்கள். முற்றும் துறந்த துறவிகளான இவர்களின் சொத்துகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஈடானவை. உலகமய காலகட்டத்திற்கு முன்பிருந்த, குறிச்சொல்லும் காவிச் சாமியார்களல்ல இவர்கள். மாடமாளிகைகள் போல ஆசிரமங்கள் அமைத்துக் கொண்டு, கண்டம் விட்டு கண்டம் பறந்தோடி, கோடிகளில் விளையாடுகின்ற நவீன உலகமய சாமியார்கள் தான் இவர்கள்.
நித்தியானந்தர் போன்ற மோசடிச் சாமியார்கள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளும் விதமாக முன்னின்று உழைத்த ஊடகங்கள், இன்று அவர்களது மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும் முன்னிற் கின்றன. ‘கதவைத் திற காற்று வரட்டும்’ என்ற தொடர் மூலம் நித்தியானந்தாவிற்கு அடையாளம் கொடுத்த ‘குமுதம்”, அவரது காமலீலைகளை தம் இணையதளத்தில் வெளியிட்டு காசு சம்பாதிக்கவும் கூச்சப்படவில்லை. ‘நாங்களும் ஏமாந்து விட்டோம்’ என்று அப்பாவி பக்தர்களைப் போல் இதற்கு ஒரு சமாதானமும் கூறிக் கொண்டது. ஊடகங்களின் இந்த கூச்சமற்றத் தன்மை தன்னிலிருந்து பிறந்ததில்லை. தம்மை இயக்கும் முதலாளியத்திலிருந்து பிறந்தது அது.
கடவுள் நம்பிக்கையின் பெயரால், சோதிடப்பலன், எண் கணிதம், கைரேகை என பல்வேறு நம்பிக்கைகளை வீட்டிற்குள் திணிக்கும் தொலைக்காட்சிகளும், அவற்றையே பிரதானமாகக் கொண்ட பத்திரிக்கைகளும், உழைக்கும் மக்களிடையே அவர்களது எதிர்காலம் குறித்த அச்சத்தை கிளறிவிடுகின்றன. இதன் விளைவாக, மக்கள் இது குறித்த ஆழ்ந்த சிந்தனையிலேயே விழுந்து கிடக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தமது மொழி, இனம், கல்வி, வாழ்வாதாரம் என சராசரி மனிதர்களின் உரிமைகள் அனைத்தும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இன்றைய உலகமயச் சூழலில், ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் இந்த ‘எதிர்காலம் குறித்த அச்சம்’ என்ற காரணி, மதங்களின் இருப்புக்கு உதவுகிறது.
முதலாளியத்தின் உழைப்புச் சுரண்டலால் தம் வசந்தங்களை இழந்து, ஒடுக்கப்பட்டு நிற்கின்ற உழைக்கும் மக்கள், தம் அவலங்களுக்கு காரணம் முதலாளியமே என்று எளிதில் உணர்ந்து விடுவதும் இல்லை. அவ்வாறு அவர்கள் உணராததற்கு முக்கியக் காரணியாக மக்களிடையே நீடிக்கும் கடவுள் நம்பிக்கையும் விளங்குகிறது. தாம் அறிந்து கொள்ள முடியாத பலவற்றுக்கும் கடவுளின் பெயரால் நியாயம் கற்பித்துக் கொள்கிற ‘சமரச’ மனநிலையே இதனை தீர்மானிக்கிறது.
இதன் பின்னணியில் தான், ‘தம் பிறப்பையும், தம் வாழ்வையும், தம் துன்பங்களையும் தீர்மானிப்பது கடவுள் தான்’ என்று, தமக்குத் தாமே கற்பிதம் செய்து கொள்ளுமாறு உழைக்கும் மக்கள் பணிக்கப்படுகின்றனர். அதனை அவர்கள் பெருமளவில் ஏற்றுக் கொண்டும் உள்ளனர்.
கடவுள் நம்பிக்கையின் பெயராலும், விதியின் பெயராலும், உழைக்கும் மக்கள் மீதான உழைப்புச் சுரண்டல் நியாயப்படுத்தப்படுவதனால் தனியுடைமை யானது மக்களிடம் நிலவும் கடவுள் நம்பிக்கையை நிறுவனமயப்படுத்துகிறது. மதநிறுவனங்களை வளர்த்து விடுகிறது.
உழைக்கும் மக்கள் மீதான உழைப்புச் சுரண்டல் தீவிரப்படுத்தப்பட்டு வரும் இன்றைய உலகமய காலகட்டத்தில், உழைக்கும் மக்கள் கொடுந்துன்பம் அடைந்து வருகின்றனர். வேலை வாய்ப்பில் ஒரு நிச்சயமற்ற நிலை, சிறு தொழில் - வணிக நிறுவனங்கள் தொடர முடியுமா என்ற நிச்சயமற்ற நிலை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மன உளைச்சலிலேயே உழல்பவர்கள் அதிகம். மக்கள் தம் துன்பங்களுக்கு மருந்து தேடி மத நிறுவனங்களிடம் சிக்குவதும் அதிகரித்துள்ளது. ஏழை எளிய மக்கள் தம் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள சிறு சிறு சாமியார்களிடமும், படித்த - நடுத்தர வர்க்க மக்கள் நித்தியானந்தர் போன்ற நவீன சாமியர்களிடமும் சிக்குகின்றனர்.
இதே காலகட்டத்தில் தான், சுரண்டும் மேட்டுக் குடியினர் தம் சுரண்டலின் மூலமாக கிடைத்த பணத்தை பதுக்கிக் கொள்ளவும், அந்தச் சுரண்டலுக்கு துணை போன அரசியல்வாதிகள் தம் கருப்புப் பணத்தை பதுக்கிக் கொள்ளவும் ஓர் இடமும் தேவைப்பட்டது. அவ்விடத்தையும் இந்த நவீன சாமியார்களே நிறைவு செய்தனர்.
சுரண்டி சேர்த்துப் பதுக்கியப் பணம் குறித்த கவலையால் நிம்மதியிழக்கும் மேட்டுக்குடியினர் “எதையோ” இழந்து விட்டதாகப் புலம்பியபடி இந்த நவீன சாமியார்களிடம் தான் வருகிறார்கள். அண்மையில், தில்லியில் ‘ஜீவ் முராத் திவிவேதி என்ற சாமியார் பகலில் யோகம், தியானம், சொற்பொழிவு என்று நடித்து விட்டு, இரவில் விபச்சாரத் தரகு வேலை பார்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்டு கைதான பெண்கள் பலரும் படித்த, நடுத்தர மற்றும் மேட்டுக்குடிப் பெண்கள் தான் என்பதும் தெரியவந்தது.
இந்த நவீன சாமியார்கள் குறிவைத்து, இழுப்பதும் இது போன்ற பின்னணி கொண்டவர்களைத் தான். பணக்கார வெளிநாட்டு பக்தர்களின் மனநிலையும் கூட அது தான். இவ்வாறு தான் இந்த நவீன சாமியார்கள் உருவெடுக்கிறார்கள்.
நாம் அன்றாட வாழ்வில் மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் முறைகள், பொருளியல் ரீதியாக தமக்குக் கீழானவர்களிடமும் அன்பு செலுத்துதல், வேலைப்பளு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கு தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி, மனம் திறந்து பேச ஏற்பாடு செய்தல், தமது மன உளைச்சலை போக்கும் விதமாக அவர்களை நடனம் ஆட விடுதல், வாய்விட்டு கத்தக் கூறுதல், ’பேரானந்தம்’ - ‘மகிழ்ச்சி’ போன்ற பற்பலப் பெயர்களிட்டு அவர்களை மனம் விட்டு சிந்திக்கக் கூறுதல். இவை தான் இந்த நவீன சாமியார்கள் செய்பவை. இதற்காக ஆயிரக்கணக்கில் அவர்கள் கட்டணம் வசூலிப்பதும் உண்டு. சொற்பொழிவுகளுக்கு, சில மணிநேரங்கள் அவருடன் கழிக்க, அவர் ஆசிர்வாதம் செய்வதற்கு என இலட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதும் உண்டு.
மன உளைச்சலுக்கு ஆளான தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் பலரும் இந்த நவீன சாமியார்களின் பிடியில் விழுவது இன்று அதிகரித்துள்ளது. மன உளைச்சலைப் போக்க அந்த சாமியார்கள் கொடுக்கும் பயிற்சிகள் எதுவும் தேவையில்லை. சின்னஞ்சிறு குழுந்தைகளிடம் குடும்ப உறவுகளிடமும் மனம் விட்டுப் பேசினால் கூட மன உளைச்சலைப் போக்கி விடலாம் ஆனால், கணினி, கைப்பேசி என நீண்ட நேரம் இயந்திரங்களுடன் இயங்கியே பழகி விட்ட, இவர்களுக்கு மனிதர்களுடன் பழகுவது அபூர்வமானதல்லவா? உயிரற்ற இயந்திரங்களுடன் வாழ்ந்து, உயிருள்ள இயந்திரங்களாகவே மாறிப் போன தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு இதற்கென்று நேரம் வேண்டும் அல்லவா? எனவே, இதற்கென தனியாக நேரம் ஒதுக்கி அவர்கள் நவீன சாமியார்களை நாடுகிறார்கள்.
“மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!” என்று சுவாமி சுகபோதானந்தா ஆனந்த விகடனில் எழுதியத் தொடர், இந்த நோக்கிலேயே எழுதப்பட்டது. 2008ஆம் ஆண்டு உலகமயப் பொருளாதாரப் பின்னடைவுக்குப் பின், உழைப்புச் சுரண்டல் தீவிரப்படுத்தப்பட்டதால், உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை போக்கும் விதமாக வெளிவந்த சின்னத்திரை சிரிப்பு நிகழ்ச்சிகள் வெற்றி பெற்றதன் பின்னணியிலும், உலகமயமே நிற்கிறது. கிராமங்களை அழித்த உலகமயம், நகரங்களில் இளைஞர்களை இடம் பெயர்த்ததன் பின்னணியில் தான், கிராமத்துக் கதைப் பின்னணி கொண்ட தமிழ்த் திரைப்படங்கள் வெற்றி பெற்று ஓடியதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். கிராம வாழ்வை இழந்த இளைஞர்கள் இவ்வாறான படத்தில் ஆறுதல் அடைகிறார்கள்.
இவ்வாறு, உழைப்புச் சுரண்டலால் மன உளைச்சலில் சிக்கித் தவிக்கும் மக்கள், பிறரோடு அன்பாக தாம் பேசுவதற்கும், பழகுவதற்கும் கூட ஓரு சாமியாரின் வழிகாட்டுதலுக்காக நிற்க வேண்டிய அவல நிலையை, உலகமயம் நமக்கு உருவாக்கித் தந்திருக்கிறது.
இந்தச் சாமியார்கள் இதற்கென பல்வேறு பயிற்சிகள் அளிப்பதோடு மட்டுமல்லாமல், உலகமயம் வலியுறுத்துகின்ற நுகர்வியப் பண்பாட்டையும், தம் போதனைகள் வாயிலாக புதிய வகையில் மக்கள் மனதில் புகுத்தும் வேலையை செய்கிறார்கள். இதற்காகவே, இவா;களை மேலும் ஊக்கமளித்து வளர்க்கின்றன, ஊடகங்கள். இந்த போதனையைத் தான் உலகமயமும் அதனால் பயன்பெறுகின்ற ஆளும் வர்க்கங்களும் விரும்புகின்றன.
‘இன்றுள்ள சமூக அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு யோசிங்கள்’ என்கிறது உலகமயம். அதனையே இந்த நவீன சாமியார்களும் வழிமொழிகிறார்கள்.
“அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் நீயும் நானும் தோழர்களே! என்று கூறிய சேகுவேராவின் கருத்து மிகவும் மோசமான கருத்து. அவரை இளைஞர்கள் முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது’’ என ஒரு நூல் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாகவே பேசினார் ஜக்கி வாசுதேவ்.
‘புவி வெப்பமயமாதலிலிருந்து உலகைக் காக்க மரம் நடுங்கள்’ என்று, மரங்கள் நடுவதற்கான திட்டம் தீட்டிய ஜக்கி வாசுதேவ், முதலாளிகளின் இலாப வேட்டைக்காக உலகெங்கும் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டதன் விளைவு தான் புவி வெப்பமயமாதல் என்ற உண்மையை பேசுவதில்லை. அதற்கெதிராகப் போராடுவதும் அவரைப் பொறுத்தவரை “வன்முறை கருத்து”.
அதாவது, ‘போராட்டம் என்பதே கூடாது. ஒவ்வொரு தனிமனிதரும் அவரவர் வாழ்க்கையை ஒழுங்காய் நடத்தினால் போதும்” என்று கூறி, மனிதர்களை குழுவாக இயங்க விடாமல் செய்து, உதிரிகளாக்கிட விரும்புகின்ற முதலாளியத்தின் குரலைத் தான் இந்த நவீன சாமியார்கள், “உள்ளுணர்வு”, “தனிமனித ஒழுக்கம்’, “தன்னிலிருந்து யோசி” என்று பல்வேறு வடிவங்களில் கூறுகிறார்கள்.
இலாப வேட்டைக்காக காத்து நிற்கும் உலகமயம், ‘அனைத்துப் பொருட்களையும் நுகருங்கள்’ எனக் கூறுகின்றது. அதனையே, “அத்தனைக்கும் ஆசைப்படு” என்கிறார்கள், இந்த நவீன சாமியார்கள்.
‘பாலியல் சுதந்திரம்’ என்ற பெயரில் கட்டுப்பாடற்ற பாலியல் உறவுகளை வளர்க்கக் கோருகிறது உலகமயம். இதன் மூலம், குடும்ப உறவுகளை சிதைத்து, மனிதர்களை உதிரிகளாக்கி இலாபம் கொழுக்கவும் அது திட்டமிடுகிறது. இதனையே வழிமொழிந்து, ‘உன்னை மட்டும் யோசி, உன்னிலிருந்து தான் எல்லாம் பிறக்கிறது’’ என்று போதிக்கிறார்கள் நவீன சாமியார்கள். ”இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்; மாற்ற முயலாதே” என்பதும் சிறீ சிறீ ரவிசங்கரின் உபதேசம்.
பெருமளவில் நிதிக்குவிந்து நிறுவனமயமான காரணத்தால் இந்த நவீன சாமியார்களுக்கு எளிதில் அரசியல் செல்வாக்கும் வந்து சேர்கிறது. சந்திராசாமி, ஜெயேந்திரர் போன்ற மோசடி சாமியார்கள் ஒரு நாட்டிற்குள் உள்ள அரசியல்வாதிகளுக்கு இடையே தரகு வேலை பார்க்கும் நிலை மாறி, இன்று சிறீ சிறீ ரவிசங்கர் போல பல நாடுகளுக்கு இடையே தரகு வேலை பார்க்கும் நிலையாக இந்த நவீன சாமியார்களின் நிலை முன்னேறியுள்ளது.
மதங்களைக் கடந்த ஆன்மிகம் என இந்த நவீனச் சாமியார்கள் கூறினாலும், அவர்கள் மூழ்கிக் கிடப்பதென்னவோ இந்துத்துவ அரசியலில் தான். இதனை அவர்களது, இந்துமத சார்பு - வடமொழி சார்பு நிலையை மட்டும் வைத்து உணர்த்தவில்லை. நேரடியான அரசியல் நடவடிக்கையின் மூலமாகவே உணர்த்தியிருக்கின்றனர்.
சிறீ சிறீ ரவிசங்கர், ராமர் பாலத்தை முன்னிறுத்தி சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்துக் கொண்டுள்ளார். இட ஒதுக்கீட்டையும் ரவிசங்கர் எதிர்க்கிறார். நித்தியானந்தர் தலைமறைவானதும் இந்து மதவெறிக் கட்சியான சிவசேனாவின் தலைவர் தான் செய்தியாளர்களை சந்தித்தார்.
எனவே, இந்த நவீனச் சாமியார்களின் குற்றங்களை தனிநபர் குற்றங்களாக மட்டும் கருதாமல் அதனை சமூகப் பின்னணியுடன் தொடர்பு படுத்தி ஆராய்தலே நமக்கு உண்மைக் குற்றவாளியை அடையாளம் காட்டும்.
வரம்பற்ற வேலை நேரம், தலையை கொதிக்க வைக்கும் வேலைச்சுமை, எந்த நேரத்திலும் வெளியில் வீசப்படலாம் என்ற நிலை இவற்றுக்கிடையே உயர் ஊதியத்திற்காக பணியாற்றிக் கொண்டு, குடும்ப உறவை, மன அமைதியை, சமூக வாழ்க்கையை இழந்து தவிக்கும் உயர் நடுத்தர இளைஞர்களுக்கு உடனடி நிவாரணமாக பலவித போதைகள் வழங்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், இந்த உலகமய உயர்நுட்ப சாமியார்களின் உபதேசங்கள். காரணங்களைப் போக்காமல் விளைவுகள் மீது கவனத்தைத் திருப்பும் உலகமய உத்திகளில் ஒன்று தான் சாமியார்களின் வளர்ச்சி.
இதைப்புரிந்து, காரணங்களுக்கு எதிராகப் போராடுவதே மக்கள் விடுதலைக்கு வழி.
(தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் ஏப்ரல் 2010 இதழில் வெளியான கட்டுரை)