Thursday, January 29, 2009

தீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை!

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசையும் அதற்கு துணை பொகம் இந்திய அரசையும் கண்டித்து தீக்குளித்து வீரமரணியம் எய்திய சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...

செய்தி: விகடன்

Thursday, November 27, 2008

தமிழீழ மாவீரர் தின உரை நவம்பர் 27 2008

தமிழீழ தேசியத் தலைவர் உரை




தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2008.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!


இன்று மாவீரர் நாள்.

தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது
இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து
கௌரவிக்கும் புனித நாள்.

ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது
தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட
எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.

எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன்
வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது
நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத்
தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள்
புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.

எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான
அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள்
புரிந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள்.
இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது
மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம்
காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து
வருகிறது.

சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும்

எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த
மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள்
படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான
மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள
சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.

மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே
பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம்
கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின்
சுமையிலிருந்தும் விடுபட முடியாது.

மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே
இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ
வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள்
நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது
திண்ணம்.




எனது அன்பான மக்களே!

என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு
நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து
வருகிறது.

சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர்
நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய
வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ
இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான
நோக்கம்.

தனித்து நின்று போராடுகிறோம்

இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை
முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத
பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து,
சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது.

சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை
எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து
நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று,
எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.

நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணம்

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு
வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல
திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே
எதிர்கொண்டிருக்கிறோம்.

எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம்
எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு
நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின்
ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.

பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு
எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து
நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும்
மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப்
புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின்
ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.


இந்த மண் எங்களின் சொந்த மண்

சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு
என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர்
நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட
காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.

இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும்
அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம்
நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது
வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.

ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த
நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத
வழியிலும் போராடி வருகிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது
ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில்,
வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம்
வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி
வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள்.
அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச்
சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது.

அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத
கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக
எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.

சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப்
பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை
நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக்
கையளித்தது.

சமாதானத்துக்கு எப்போதும் நாம் தயார்

தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை
வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை
நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது
விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு
என்றுமே எதிரானவர்கள் அல்லர்.

அதேநேரம், நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை.
சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க,
திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில்
பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம்.

எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம்
முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம்
தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும்,
நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே
இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.


அனைத்துலகத்தை ஏமாற்றவே பேச்சுவார்த்தை நாடகம்

பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின்
முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத்
திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற்
கலந்துகொண்டோம்.

போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில்
நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின்
அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும்
பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம்.

இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான
கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினால் அன்று. சிங்கள
அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள
பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களில்
கலந்துகொண்டோம்.

உலக அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த
அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப்
பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக
அமையவில்லை.

புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் அனைத்துலக
சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறிலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப்
பயன்படுத்தியது.

பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும்
படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச்
சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது
சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.

பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து,
படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம்
சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்கள தேசம் போர்த் தயாரிப்பு
வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.

சமாதான முயற்சிகளுக்கு ஊறுவிளைவித்த உலக நாடுகளின் தடை

இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய
உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில்
இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது.

எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச்
சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில்
பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி
ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை
விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு
ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள்
போட்டன.

தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது
எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள
அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற
தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப்
பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின்
பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே
அடைத்து, அவமதித்தன.

இந்நாடுகளின் ஒரு பக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்; பேச்சுக்களில் நாம்
வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன.
இது சிங்கள தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத
சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள
தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.


அனைத்துலக நாடுகளின் பாராமுகம்

சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின்
மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர்
நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது
சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை;
கவலை கூடத் தெரிவிக்கவில்லை.

மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை
அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக
வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன
அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து
வருகிறது.

இன்று சிங்கள தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ
அணுகுமுறையிலும் இராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு
செயற்படுகிறது.

தமிழினத்துக்கு எதிரான போர்

தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின்
கீழ் தமிழர்களை ஆட்சிபுரிய வேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது.
இதனால் போர் தீவிரம் பெற்று, விரிவுபெற்று நிற்கிறது.

இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர்
அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்;
தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப்
போர்.

இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின்
கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத்
துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத்
திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.

பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான
இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டு
வீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது.

சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக
அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து
இறப்பு வரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள்
ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும்
சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது.

வரலாறு காணாத கொடூர அடக்குமுறை

எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு
எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப்
புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.

உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது
தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின்
பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச்
சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.

சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில்
மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர்.
சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான
நிகழ்ச்சியாகி விட்டது.

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன
அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும்
இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள்
நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.

கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும்
கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு
நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது.

எமது மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியாது

இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம்
கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும்
செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது
விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது.

எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும்
இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய
உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும்
வீச்சாகியிருக்கிறது.

பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை
தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான,
கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று.

எமது விடுதலைப் போராட்டம் எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதல்ல

உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை
நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும்
தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ
குறுக்காக நிற்கவில்லை.

எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும்
தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட
வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும்
நடந்துகொண்டதுமில்லை.

உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம்

எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும்
எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே
விரும்புகிறோம்.

இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே
சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான
உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள
நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும்
புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை
அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

இந்தியாவுடனான உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறோம்

இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு
அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி
ஒலிக்கின்றன.

எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து
வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன
எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.

அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும்
ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.

இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும்
முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது.

இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக
வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச்
சந்திக்க நேர்ந்தது.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது
இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது.

எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை.
இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள்.
எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான
நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழக உறவுகளுக்கு நன்றி

காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது
மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக
எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை
இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும்
ஏற்படுத்தியிருக்கிறது.

எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக
மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச்
சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேநேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக்
குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான
நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை
நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு
வேண்டிக்கொள்கிறேன்.

எனது அன்பான மக்களே!

சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்து
விடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது.

போருக்கு குரல் கொடுக்கும் சிங்கள தேசம்

அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத்
தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு
போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது.

போரை கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும்
குரல் கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள்
வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமர மக்கள் வரை போருக்கே குரல்
கொடுக்கிறார்கள்.

தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை
வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான்
போரைத் திணித்திருக்கிறது.

எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே
கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த
பகைமைத் தவிர்ப்பையும் ஏற்க மறுத்து, அதனை ஏளனம் செய்து போரைத் தொடர்ந்து
நிற்பதும் சிங்கள தேசம்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும்
நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்கள தேசம்தான்.

சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்தி
வருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள
அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.

வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்து கட்சிக் கூட்டம் என இந்த
ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

கடந்து சென்ற இந்த நீண்ட கால ஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை
ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு
தீர்வினையும் முன்வைக்கவில்லை.

மாறாக, சிங்கள தேசம் தனது படைக்கல சக்தியால் தமிழர் நிலங்களைப்
பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது
நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலைய
வைத்திருக்கிறது.

சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப் போகிறது?

தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப்
பிளந்து, அங்கு தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி,
இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது.

புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம்
எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக்
கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது?
தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம் பேசும் சக்தியை
அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின்
வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்க மறுக்கும் சிங்களம், எப்படி எமது
மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?

தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே
பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக்
கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய
நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது.

சிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம்
இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி
ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.

ஆக்கிரமிப்புக்கு என்றுமே இடமளிக்கப்போவதில்லை

பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம்
பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான
இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட
ஒரு பெருமைமிக்க இனம்.

இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே
தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது
இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற
வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள
ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.

தொடர்ந்து போராடுவோம்

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை
எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின்
சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில்,
காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம்
தொடர்ந்து போராடுவோம்.

புலம்பெயர் இளைய சமுதாயத்துக்கு பாராட்டு

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும்
எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக்
குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு
அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும்
உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப்
பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய
சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும்
தெரிவித்துக்கொள்கிறேன்.

சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது
மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென
உறுதியெடுத்துக்கொள்வோமாக.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

(வே. பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

Saturday, October 25, 2008

கைதுகளால் மட்டும் நிலைநிறுத்தப்படும் “இந்தி”யத் தேசிய ஒருமைப்பாடு

கைதுகளால் மட்டும் நிலைநிறுத்தப்படும்
"இந்தி"யத் தேசிய ஒருமைப்பாடு
க.அருணபாரதி

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து வரும் இந்த சமயத்தில் தேவையில்லாமல் சில கைது நடவடிக்கைகளில் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு ஈடுபட்டிருப்பதற்குத் துண்டுதலாக செயல்பட்டக் கும்பல் யார் என்பதனை நாடறியும். அந்தக் கும்பலை அம்பலப்படுத்தி எழுதினால் அது சாதீயவாதமாக சிலருக்குத் தென்படுகிறது. என்ன செய்ய? "குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்."

"இந்தி"ய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசியதாக ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, அதன் அவைத் தலைவர் எம்.கண்ணப்பன் ஆகியோர் முதலில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர், இராமேசுவரத்தில சிங்கள இனவெறி அரசிற்கு ஆயதங்கள் வழங்கும் "இந்தி"ய அரசைக் கண்டித்து திரைக் கலைஞர்கள் நடத்தியப் பொதுக் கூட்டத்தில், பிரிவினையைத் தூண்டிப் பேசியதாக இயக்குநர்கள் சீமான, அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தமிழகக் காவல்துறை இவர்கள் மீது ("இந்தி"ய) தேசத் துரோகக் குற்றத்தின் மிகப்பிரபலமான 123(பி) பிரிவின்படி வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த பிரிவில் இவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற திட்டத்துடன் சட்டவிரோ செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities Act -1967) சிலப் பிரிவுகளின் படியும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இவர்கள் செய்த குற்றம் தான் என்ன? எவ்வகையில் இவர்கள் பிரிவினைக்குத் தூண்டினார்கள்? இவர்களைப் பிரிவினைக்குத் தூண்டியது எது? கைது செய்யப்பட்டவர்கள் தனிநபர்கள் அல்ல. தமிழ்த் தேசிய இன மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் தலைவர்கள், கலைஞர்கள். குற்றங்களை செய்தவர்களை விட அதனைச் செய்யத் தூண்டுபவர்களுக்குத் தான் அதிக தண்டனையாம். சட்டம் கூறுகிறது. அப்படியெனில் இவர்களை "இக்குற்றச் செயலுக்கு" தூண்டியது எது என்று ஆராய்வோம்.

இந்தியா ஒரு தேசமல்ல. தனக்கென தனிப்பண்பாடு, மொழி, பொருளியல் என பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கின்ற ஒரு துணைக் கண்டமே ஆகும். இப்படி வாழ்ந்த பல்வேறு நாடுகள் அடக்குமுறையாலும் மக்களின் அனுமதியின்றும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தியா என்ற ஒற்றைத் தேசமாகக் கட்டமைக்கப்பட்டது. இப்படிப்பட்ட துணைக்கண்டங்களில் ஒற்றையாட்சி (Unitary) எனப்படும் அரசியலமைப்பு, தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் ஒன்றன் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்தி சில தேசிய இனங்கள் கொழுக்கவும் சில தேசிய இனங்கள் மிகவும் பின்தங்கிய நிலைக்குச் செல்லவும் வழிவகுக்கும்.

இதற்கு மாற்றாக கூட்டாட்சியையும் சிலர் முன்மொழிவர். அந்த கூட்டாட்சியும் ஒவ்வொரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரிப்பதாக அமைய வேண்டுமே தவிர ஒரு தேசிய இனத்தின் ஒற்றைச் சார்பு தலைமையில் அமையக்கூடாது. இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் கட்டமைக்கப்பட்டது தான் "இந்தி"ய அரசியலமைப்புச் சட்டம்.

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், பல்வேறு தேசிய இனங்களின் மீதும் "இந்தி" மொழி ஆதிக்கம் செலுத்தவும், "இந்தி" பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் மற்ற அயல் தேசிய இனங்கள் மீது அவர்கள் அரசியல் ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தவும் வழிவகுத்திருக்கிறது. அப்படி தான் செயல்படுத்தப்பட்டும் வருகின்றது.

1965-ல் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயன்ற "இந்தி"ய அரசை எதிர்த்துப் போராடி மறத்தமிழர்கள் 300க்கும் மேற்பட்டவர்களை "இந்தி"ய தேசிய இராணுவம் சுட்டுக் கொன்றதை எந்தத் தமிழனால் மறக்க இயலும்?

இப்படிப்பட்ட இந்திய அரசக் கட்டமைப்பில் சிக்குண்ட பல தேசிய இனங்கள் ஒன்றோடு ஒன்றோடு மோதும் போது அவற்றிற்கு நடுவராக இருந்து தீர்க்க வேண்டிய இந்திய அரசு இதுவரை என்ன செய்திருக்கிறது? வேடிக்கைப் பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டதைத் தவிர? இதற்குக் காரணம் அதன் ஒற்றைச் சார்புத் தன்மை தான் என்பதை எவரால் மறுக்க இயலும்?

காவிரிச் சிக்கலில் கர்நாடகம் தமிழக நீர் உரிமையை மறுத்து இந்திய அரசின் உச்சநீதிமன்றத்தையும் மதிக்கத் தவறியது. தமிழர்கள் கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டார்கள். இந்திய அரசு என்ன செய்திருக்க வேண்டும்? உடனடியாக பிரச்சினையைத் தீர்க்க ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.ஆனால் அது நடக்கவில்லை. வேடிக்கைப் பார்த்தது "இந்தி"யா. இதே நிலை தான் மற்றப் பிரச்சினைகளிலும் தொடாகின்றது.

இந்தியா என்ற கட்டமைப்பை மறுத்து கர்நாடகம் செய்த அராஜகங்களை இந்திய அரசு வேடிக்கைப் பார்க்கும். ஆனால் தமிழன் செய்தால் அவன் மீது தேச விரோத முத்திரைக் குத்தும். ஒவ்வொருத்தருக்கும் ஒருவகைப்பட்ட நீதி. இது தானே பார்ப்பனியம். இப்படித் தானே இந்திய அரசு செயல்பட்டது. செயல்பட்டுக் கொண்டு்ம் இருக்கிறது.

மலையாளிகள் முல்லைப் பெரியாறுப் பிரச்சினையிலும் கன்னடாகள் காவிரி நீர் சிக்கலிலும் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை மறுத்தும் இந்திய அரசின் உச்சபட்டச நீதிமன்றமான உச்சநீதிமன்றத்தை எதிர்த்தும் பேசலாம். செயல்படலாம். என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். இந்திய தேசியம் கட்சிகளும், இந்தியத் தேசிய வாதிகளுக்கும் அதைத் தடுக்க வக்கில்லை. பேசுவதற்குத் துப்பில்லை. ஆனால் தமிழகம் தனது நீண்ட காலக் கனவான சேது சமுத்திரத் திட்டம் தடுக்கப்படுவதைக் கண்டித்து பந்த் நடத்தினால் மட்டு்ம் இந்திய அரசின் உச்சிகுடுமி மன்றம் ஞாயிற்றுக் கிழமை விடுப்பு என்றாலும் அவசர அவசரமாகக் கூடிக் கண்டிக்கும். இது தான் இந்திய தேசியமா..?

இவற்றிக்கு எல்லாம் மேலாக "இந்தி"ய அரசு ஈழப்பிரச்சினைத் தொடர்பில் என்ன செய்து கொண்டிருக்கிறது? "இந்தி"ய அரசு தனது ஆரிய இனவெறித் தன்மையுடன் சிங்கள அரசிற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் இராணுவ உதவிகளையும் இன்ன பிற உதவிகளையும் திட்டமிட்டு பல வருடங்களாக செய்து வருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இதனைப் பல்வேறு சமயங்களில் தமிழகத்தில் உள்ள பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் வெளிப்படுத்தியும் அதனை தமிழக அரசோ "இந்தி"ய அரசோக் கண்டுகொள்ளாமல் இருந்தன. அண்மையில் தான் இவ்வுதவிகள் அம்பலப்படுத்தப்பட்டதோடு அதனை இந்த நிமிடம் வரை "இந்தி"ய அரசு மறுக்கவில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

"இந்தி"ய அரசு சிங்களனுக்கு உதவ வேண்டிய அவசியம் என்ன? அவனுக்கு உதவினால் இந்தியாவிற்கு கிடைக்கும் லாபம் தான் என்ன? பாகிஸ்தான், சீனம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிங்களனுக்கு ஆயுதங்களை வெளிப்படையாகக் கொடுப்பது உலகில் அனைவருக்கும் தெரியும். இது இந்திய அரசுக்கும் அதன் பாதுகாப்புத் துறைக்கும் தெரியாதா? தெரியும். இருந்த போதும் அவாகள் அமைதி காத்தார்கள். தம் இன எதிரிகளான தமிழர்கள் தானே அழிகிறார்கள் என்பதால் அமைதி காத்தார்கள். ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது சில புன்முறுவல்களையும் தமிழக மீனவர்கள் கொல்ப்பட்ட போது வாய்விட்டு சிரித்து மகிழ்ந்திருப்பார்கள், இந்த "இந்தி"யத் தேசிய வாதிகள்.

அண்டை நாடு ஆயதங்கள் வாங்கிக் குவிப்பதால் நம் நாட்டிற்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என்ற எண்ணம் "இந்தி"ய பாதுகாப்புத் துறைக்கு ஏன் ஏற்படவில்லை? ஏன் தமது அடிமையான தமிழக மீனவனை சிங்களப் படைகள் சுட்டுக் கொன்ற போது கூட அவன் மீதும் "இந்தி"யன் என்ற முத்திரைக் குத்தியுள்ளோமே என்ற எண்ணம் கூட அவர்களுக்கில்லை. உயிரைப் பணயம் வைத்து தமிழக மீனவாகள் பிடித்து வரும் மீன்களுக்கு அந்நிய செலாவணி வரி கேட்டு பிச்சை எடுக்க மட்டும் வந்துவிடுவார்கள் இந்த "இந்தி"ய வரிப் பொறுக்கிகள். இதுவே பாகிஸ்தான் தனது படைகளை எல்லையில் குவித்தாலோ சீனா படைகளை குவித்தாலோ இந்தியத அமைதியாக இருந்திருக்குமா? அப்படியெனில் சிங்களன் ஆயதங்கள் குவித்த போது இந்திய அரசு அமைதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் தானும் ஆயுதங்களை வழங்கியது எதற்காக?

ஏற்கெனவே நீர்சிக்கல்களால் அயல் தேசிய இன மாநிலங்கள் "இந்தி"ய கட்டமைப்பை மதிக்காமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது என்னடா "இந்தி"யத் தேசியம் என்று பல முணுமுணுப்புகள் தமிழகத்தில் எழந்திருந்ததை எவராலும் மறுக்க முடியாது. மின்வெட்டால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் பொழுதுகூட நம் தமிழ் மண்ணில் உள்ள நெய்வேலி மண்ணிலிருந்து மின்சாரத்தைப் பிடுங்கி இந்த நீர்தரமாட்டோம் என்று அடம்பிடிக்கும் அடாவடி அயல் தேசிய இனத்தவருக்கு பகிர்ந்தளிக்கிறது "இந்தி"ய அரசு. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நமது நாடு என்று நாம் "இந்தி"யாவை நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் தலைமையோ நம் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவிக்க ஆய்தங்கள் வழங்கி உதவிப்புரிகிறதே என்ற வலி தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது உண்மையா இல்லையா? இந்த உண்மையை எவ்வளவு நாள் நாம் பொத்திப் பொதத்தி வைக்க இயலும்?

பிரிவினைக்குத் தூண்டியது கைது செய்யப்பட்டவர்கள் அல்ல. அவர்களை அவ்வாறு பேச வைத்த அயல் தேசிய இனங்களும் அதைக் கண்டு கொள்ளாமல் கள்ள மவுனம் சாதிக்கும் "இந்தி"ய அரசுமே ஆகும். இதனை முதலில் "இந்தி"யத் தேசிய வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல, விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று பார்ப்பன இந்தியத் தேசியக் கும்பல் வெறிக்கூச்சல் போடுகின்றது. அப்படியெனில் முதலில் ஆனந்த விகடன் கருத்துக் கணிப்பிலும் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்துக் கணிப்பிலும் விடுதலைப் புலிகளை ஆதரித்த பெரும்பான்மை தமிழக மக்களை சிறையில் தள்ளுவார்களா இந்த "இந்தி"யத் தேசியவாதிகள்? இப்படிச் செய்தால் தமிழ் மக்களின் கோப நெருப்பே உங்களைப் சுட்டுப் பொசுக்கிவிடும். கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும். ஈழத்தமிழர்களுக்காக போராடுவதை திசைத்திருப்பும் விதமாக செயல்படும் இப்போக்கைக் கண்டித்து மக்கள் அணி திரள வேண்டும். ஏனெனில், கைது செய்யப்படுவது மனிதர்கள் தானேத் தவிர மக்கள் மனிதில் உள்ள கருத்துக்கள் அல்ல!




--
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
http://www.arunabharathi.blogspot.com/
-----------------------------------------------------------

குறிப்பிடத்தக்க பதிவுகள்