Monday, September 24, 2007

தமிழகத்தில் தலைதூக்கும் மதசார்பின்மை?! - க.அருணபாரதி

தமிழகத்தில் தலைதூக்கும் மதசார்பின்மை?!
க.அருணபாரதி
 
    இந்துத்வ பண்பாடு என்ன என்பதனை மக்களுக்கு வெட்டவெளிச்சமாகிக் கொண்டிருக்கிறன, தற்போதைய அரசியல் நிலவரங்கள். 'மதம் ஒரு அபின்' என்ற மார்க்சின் கூற்றுக்கு ஏற்ப மதத்தையே மூலதனமாக்கிக் கொண்டு அந்த அபினின் மூலம் வரும் போதையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள விழையும் மதவெறி சக்திகள் தற்பொழுது அதனை செய்து கொண்டிருக்கின்றன. அன்பையும் பண்பையும் போதிக்க வந்தவை மதங்கள் என இனியும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. மாற்றுக் கருத்து சொன்னவரின் தலையையும், நாக்கையும் துண்டு துண்டாக வெட்டுவதும்,  அவரது உறவினர் வீட்டைத் தாக்குவதும், பேருந்துக்களை எரிப்பதும் தான் அந்த மதம் சொல்லிக் கொடுத்த "பண்புகள்" போலும். குஜராத் மாநிலத்தில் குழந்தைகளை கூட விட்டுவைக்காமல் கொன்று குவித்த "இந்து"மத பண்பைப் பார்த்து உலகமே காறி உழிந்தது போதாதென்று மீண்டும் ஒரு கலவரத்திற்கு வழிவகுக்கின்றன இந்து வெறி பாசிச சக(க்)திகள்.
 
          பெரியாரின் மண்ணில் பார்ப்பன பாசிசசக்திகளான பா.ச.க அண்ட் கோவிற்கு பதவிக்காக காவடித்தூக்கிய திராவிட கட்சிகள் இன்று மாறி மாறி எதிர்க்கின்றன. ஆதரிக்கின்றன. அண்மையில் இறந்த மனித உரிமைப் போராளி வழக்கறிஞர் பி.வி.பக்தவச்சலம் அவர்களின் நினைவேந்தல் கூட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர்.பெ.மணியரசன் இதற்கொரு நல்ல உவமையை வழங்கினார். "'பாம்புக்கு பால் ஊற்றிவிட்டு படமெடுக்குதே'  என்று ஆடுவதைப் போல, பதவி சுகத்திற்காக நாட்டையே வடநாட்டு பார்ப்பன சக்திகளிடம் விற்றுவிட்டு பின்பு தன் தலைக்கு ஆபத்து என்றவுடன் உளறினால் என்ன அர்த்தம்? தமிழ்த் தேசத்தை கூறு போட்டு தில்லியார் வாங்கிவிட்டார்கள். பின்பு வாங்கியவன் இடி என்னும் போது குத்துதே என்பதா?"
 
          தமிழ்த் தேசத்தின் நிலைமை அப்படித் தான் இருக்கிறது. ஏற்கனவே பாபர் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் கலவரங்களில் தங்கள் மதம் போதித்த "அன்பும் பண்பும்" எத்தகையது என்பதனை உலகுக்கு வெளிப்படுத்திய தீவிர மதவெறியர் கட்சியான பாரதீய சனதாவுடன் பதவி சுகத்திற்காக காலில் விழுந்த "தன்மான" சிங்கங்களான தி.மு.க தற்பொழுது 'அது மதவெறியர் கட்சி' என்று அறைகூவல் விடுப்பதிலிருந்தே அவர்களுக்கு எங்கு குடைகின்றது என்பதை சொல்லாமல் சொல்கின்றது. இதுவே அ.தி.மு.க ஆட்சியிருந்து தி.மு.க ஆட்சியில் இல்லாமல் இருந்தால், அ.தி.மு.க பா.ச.கவை மதவெறி சக்தி என வர்ணித்திருக்கும், தி.மு.கவோ அ.திமு.க ஆட்சியை கலைக்க தில்லிக்கும், ஆளுனர் மாளிகைக்கும் படையெடுத்திருக்கும். காங்கிரஸ் எப்பொழுதும் போல கோஷ்ட்டிக்கு ஒரு அறிக்கை விட்டு குழம்பியிருக்கும். இனி, அடுத்து வரம் மாதங்களில் திடீரென அரசியல் தத்துவங்கள் புதிது புதிதாக பிறந்து தி.மு.கவும் பா.சகவும் கூட்டணி வைத்து கூட தேர்தலை சந்திக்கும். பிறகு பிரியும் பின் சேரும்.  அரசியல் அசிங்கங்களான தேர்தல் கட்சிகளால் ஒரு நல்ல திட்டம் எப்படி சூழ்நிலைக்கு ஏற்ப மதவாதம், கூட்டணி தர்மம் என பந்தாடப்படுகின்றது என்பதற்கு சேது சழுத்திரத் திட்டம் ஓர் நல்ல உதாரணம்.
 
சேது சமுத்திரத் திட்டத்தினால் தமிழகத்தின் தூத்துக்குடி நல்ல முக்கியத்துவம் பெறும். தமிழ் ஈழம் மலர்ந்த பின், ஈழத்தின் தலைநகராகும் தகுதியுடைய திரிகோணமலையும் பயன் பெறும். தமிழர் வாணிபம் சிறந்திட வழிவகுக்கும். இத்திட்டத்தினால் உண்மையிலேயே இல்லாத இராமர் கட்டிய புரூடா பாலம் இடிபடுகிறது என்ற ஆர்.எஸ்.எஸ்சின் மதவாத கூச்சலுக்கு முட்டுக் கட்டை இட வேண்டும். இல்லாமல் போனால், பின்னர் தெருக் குழாய் போட சாலையை இடித்தால் கூட "அது கிருஷ்ணர் போட்ட ரோடு" என்று ஒப்பாரி வைத்தாலும் வைப்பர்.
 
பா.ச.க அலுவலகத்தை தி.மு.கவினர் தாக்கியதும், ஆங்காங்கு நடைபெறும் தலைவர்களின் உருவ பொம்மை எரிப்புகள் ஆகியன தேர்தலுக்காக நடைபெறும் ஒத்திகைக் காட்சிகளே அன்றி வேறில்லை. பா.ச.கவை எதிர்த்து தி.மு.கவினர் செயல்படுவதால் தி.மு.க ஏதோ மதசார்பற்ற கட்சி என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். தேர்தலின் போது பூசணிக்காய் உடைத்து பிரச்சாரம் தொடங்கி அக்கழகத்தினரே அந்த சந்தேகத்தை தீர்த்து வைப்பர். "ஆரியமாயை" எழுதி பார்ப்பன திருட்டுத் தனங்களுக்கு சவுக்கடிக் கொடுத்த அண்ணாவின் பெயரால் கட்சிநடத்தும் அம்மையார், விநாயகர் சதுர்த்திக்கு அறிக்கை விடுகிறார். "நாங்கள் தான் உண்மையில் மதசார்பற்ற கட்சி"யென காங்கிரஸ்காரர்களும், விடுதலை சிறுத்தைகளும் நோன்பு கஞ்சிக் குடிக்கின்றனர். "அவிங்கலாம் சும்மா வேசம் போடறாங்க" என விபூதி பட்டையுடன் நாள் நட்சத்திரம் பார்த்து கட்சித் தொடங்கிய நடிகர் (கம்) அரசியல்வாதி விசயகாந்த் அறிக்கை விடுகிறார். ராகுகாலம் வந்தவிட்டதால் வீட்டிற்குள் சென்று தனியறையில் கதவை தாழிட்டுக் கொண்டு யாருடனும் பேச மாட்டென் என்று அறிவியல் பூர்வமாக யோசிக்கும் விசய டி.ராஜேந்தர் ஒருபுறம். சாதியற்ற சமுதாயம் மலரச் செய்வோம் என சபதமேற்று ஒரு சாதியினருக்காகவே கட்சித் தொடங்கியிருக்கும் சமத்துவக் கட்சி மற்றொருபுறம். அப்பப்பா தமிழகத்தின் அரசியலில் நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை...
 
    ஆக, தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க, ல.தி.மு.க(அப்பாடா...!) உள்ளிட்ட அனைத்து திராவிட கட்சிகள் மற்றும் உள்ள  சமத்துவ கட்சி, பா.ம.க உள்ளிட்ட மற்ற கட்சிகள் எதற்கம் மதசார்பின்மை எதுவென்று தெரியவில்லை. இந்து மதக் கூட்டத்தில் முஸ்லிம்களை திட்டுவது, முஸ்லிம் மதக்கூட்டத்தில் இந்துக்களை திட்டுவது என அரசியல்வியாதிகள் பதவிக்காக எல்லா அய்யோக்கியத்தனங்களையும் செய்வார்கள் தாம். ஏனெனில் அது அவர்களது தொழில் தர்மம். ஆனால் அப்பாவி மக்கள் மத்தின் பெயரால் அரசியல்வியாதிகளிடம் ஏமாறமல் இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். அவரவர் அவரவர் மதத்தை வீட்டிற்குள் வைத்து கொண்டாடுங்கள், வழிபடுங்கள். யார் வேண்டாமென்று தடுத்தது? ஆனால் மாற்றுக் கருத்துக்களை சொல்லுபவர்களின் கேள்விகளையம் பரிசீலிக்க வேண்டும். "இராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்?" என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, மனிதனே உருவாகாத அந்த காலதத்தில் இராமனும் அவர்களது பரிவாரங்களும் பாலம் எப்படி கட்ட முடியும் என்பதனை அறிவியல் பூர்வமாக சிந்திக்க வேண்டும். சிந்திக்க மறுத்துவிட்டு பழமையை போற்றி வாழ்வதும் சிந்தித்து செயல்படுவதும் நமது கைகளில் தான் இருக்க வேண்டும். அடுத்தவர் கைகளில் அல்ல...

-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அரு ணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Tuesday, September 18, 2007

ஜீவா நூற்றாண்டு விழா

தமிழ்க் கலை இலக்கிய பேரவை

நடத்தும்

ஜீவா நூற்றாண்டு விழா



நாள்: 22-09-07, காரிக்கிழமை.
நேரம்: மாலை 6.00 மணிக்கு

தலைமை
தோழர் உதயன்,
தமிழக ஒருங்கிணைப்பாளர், த.க.இ.பே

வரவேற்புரை
கவிஞர் கவிபாஸ்கர்

விழாப்பேரூரை
பாவலர் இரா.இளங்குமரனார்
நிறுவனர், திருவள்ளுவர் தவச்சாலை, அள்ளுர்

வாழ்த்துரை
மருத்துவர் செ.தெ.தெய்வநாயகம்,
தாளாளர், செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி

கருத்துரை

கவிஞர் சிற்பி. பாலசுப்பிரமணியம்
ஜீவாவும் இலக்கியமும்

தோழர் பெ.மணியரசன்
ஜீவாவும் மண்ணுக்கேற்ற மார்க்சியமும்

தோழர் அ.பத்மனாபன்
நாஞ்சில் நாடும் ஜீவாவும்

நன்றியுரை
தோழர் க.அருணபாரதி,
த.க.இ.பே

தொடர்புக்கு
தமிழ்க் கலை இலக்கிய பேரவை,
20, முத்துரங்கம் சாலை,
தியாகராய நகர், சென்னை.
பேச: 9841604017

அனைவரும் வருக ! இலக்கியம் பருக !

Monday, September 17, 2007

தந்தை பெரியார் பிறந்த நாள்


இன்று
 
தந்தை பெரியார் பிறந்த நாள்

''புதிய உலகின் தொலைநோக்காளர் : தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் : சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை : அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி' - இவற்றை திராவிடர் கழகத்து தொண்டர்களோ பெரியார் பற்றுள்ளவர்களோ சொல்லவில்லை. 1970 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சபையின் துணை அமைப்பான உலக கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ அமைப்பு அவருக்கு விருது வழங்கிய போது இப்படித் தான் குறிப்பிட்டனர். பெரியார் கடவுள் மறுப்பாளராகவும் பார்ப்பன(பிராமண) எதிர்ப்பாளராகவுமே பல இடங்களில் நினைவு கொள்ளப் படுகிறார். ஆனால் அவரை ஆராய்ந்து பார்த்து சிந்திக்க விரும்பபினால் உண்மை விளங்கும்.

'பிறப்பிலேயே ஒரு மனிதன் தாழ்ந்தவனாக பிறப்பது தான் விதி. அவன் கல்விக் கற்கக் கூடாது. கோயிலுக்கு செல்ல கூடாது. மற்றவர்களுக்கு அடிமை சேவகம் மட்டுமே புரிய வேண்டும்.' என்று மனிதனை மனிதனே இழிவு படுத்தும் கொடுமையான பாதகமான மனுநீதியை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட இந்து மதத்தில் பலதரப்பட்ட மக்கள், 'கடவுளின் கட்டளை' என்ற போர்வையில் ஏமாற்றப்பட்டு பிறருக்கு(பார்ப்பனருக்கு) அடிமை சேவகம் புரிவதை கடுமையாக எதிர்த்து போர்க்குரல் எழுப்பியவர் தான் பெரியார். பார்ப்பனர்கள் மலத்தை மிதித்து விட்டால் காலை மட்டும் கழுவுக் கொணடு விட்டுக்குள் நுழைவர். ஆனால் ஒரு தாழ்த்தப்பட்ட மனிதனின் துணி தெரியாமல் அவர் மீது பட்டுவிட்டால் கூட அதனை தீட்டு என்று குளித்து விட்டுத் தான் வீட்டிற்குள் நுழைவார். இது போன்ற மனிதத் தன்மையற்ற செயல்களை கடைபிடித்ததை கடுமையாக சாடியவர் தான் பெரியார். இரண்டாயிரம் வருடங்களாக படிக்கக் கூடாது என கல்வி புறக்கணிக்கப்பட்ட பார்ப்பனரல்லாத மக்களுக்கு கல்வி வேண்டும் என கூறி அவர்களுக்கு உதவும் வண்ணம் இடஒதுக்கீடு என்னும் நிவாரண முறையை கொண்டு வந்து சமூக நீதி நிலைநாட்ட வழிவகுத்தார். அவர் மறைந்த பின்னரும் அவரின் தாக்கம் இச்சமூகத்தின் மீது எப்படி படர்ந்திருக்கின்றது என்பதற்கு எடுத்துக் காட்டு ஆங்காங்கே நடைபெறும் பெரியார் சிலை உடைப்புகள். அவரது சிலையை பார்த்தால் கூட பொறுக்க முடியாத அளவிற்கு அவரது பகுத்தறிவு பிரச்சாரம் பார்ப்பனிய இந்துத்வ வெறியர்களுக்கு வெறுப்பூட்டியிருக்கிறது.

பார்ப்பனிய சக்திகளின் வருகைக்கு முன்னர் தமிழ்ச் சமுதாயத்தில் சாதி என்பது தொழிலை அடிப்படையாகக் கொண்ட ஓர் பிரிவு தான். தமிழர்கள் அதனை வைத்து ஒருநாளும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டதில்லை. அவரவர் தம் தொழிலை செய்து கொண்டு அமைதியாக யாரையும் அடிமைப்படுத்தாது வாழ்ந்து வந்தனர். ஆனால் பின்னர் வந்த வந்தேறிகளான ஆரிய அயோக்கிய கும்பல் புராண இதிகாசங்கள் போன்ற கேட்கக் கூசும் ஆபாசக் கதைகளை அள்ளிவிட்டு பிறப்பின் அடிப்படையில் சாதி பிறப்பதாக புதிய ஏமாற்றுக் கதையையும் சொல்லி, பக்தியின் பெயரால் மிரட்டி அதை நம்ப வைத்து, ஆதித் தமிழர்களை தரம் தாழ்த்தி ஊருக்கு வெளியே குடிசைகளில் குடியமர்த்தி, அவர்தம் வீட்டு மகளிரை மட்டும் கோயில்களில் தங்கவைத்து 'இறைசேவை' என்ற பெயரால் விபசாரம் செய்வித்து அவர்களின் வாழ்வை நாசமாக்கி, அவர்தம் பிள்ளைகள் கல்விக் கற்க தடை செய்து மகா கொடுமைகளையும் அயோக்கிய தனங்களையும் கொஞ்சமும் வெட்கங்கொள்ளாமல் மதத்தின் பெயராலும் இறைவனின் பெயராலும் புகுத்தி வந்த பார்ப்பனர்களைத் தான் கண்டித்தார் பெரியார். அவர்களுக்கு மக்கள் சேவகம் புரிவது மதத்தின் பெயரில் உள்ள பயத்தின் மீது தான். அதனால் தான் மதநம்பிக்கையையே சாடினார் பெரியார். மதத்தின் பெயரால் நடக்கும் மூடத்தனங்கள் சாதிக் கொடுமைகள், மதக்கலவரங்கள் இவற்றை எதிர்த்து நாம் குரல் கொடுத்து போராட வேண்டும்.  'தமிழ்நாடு தமிழருக்கே' என தமிழ்த் தேச நலனை முன்னிறுத்தி தன் இறுதிநாள்வரை வாழ்ந்த பெரியாரே 'தமிழ்த் தேசியத் தந்தை'யாவார். அவரது லட்சியத்தை நிறைவேற்ற வேண்டிய அரும்பணியை நாம்மால் முடிந்தவரை ஆற்றுவோம் என இந்நாளில் உறுதியேற்போம்.

-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Friday, September 14, 2007

எமது நெஞ்சங்களை உலுக்குகிறது பழ. நெடுமாறனின் போராட்டம்: யாழ். பொது அமைப்புக்களின் ஒன்றியம்

எமது நெஞ்சங்களை உலுக்குகிறது பழ. நெடுமாறனின் போராட்டம்: யாழ். பொது அமைப்புக்களின் ஒன்றியம்
வியாழக்கிழமை 13 செப்ரெம்பர் 2007 19:44 ஈழம்ஸ தாயக செய்தியாளர்ஸ

மனிதப் பேரவலத்தை நாளாந்தம் அனுபவித்து பட்டினிச்சாவை எதிர்நோக்கும் எமக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்து வருவதற்காக தமிழீழ விடுதலை ஆதரவாளர் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் நடத்தி வரும் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருவது எமது நெஞ்சங்களை உலுக்குகிறது என்று யாழ்ப்பாணம் பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.


யாழ். பொது அமைப்புக்களின் ஒன்றியம் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

யாழ்.குடாவை பிற மாவட்டங்களுடன் இணைக்கும் ஏ-9 நெடுஞ்சாலையானது சிறிலங்கா அரசினால் மூடப்பட்டுள்ளதால் சகிக்கமுடியாத மனிதப்பேரவலத்தை நாளாந்தம் அனுபவித்து பட்டினிச்சாவை எதிர்நோக்கும் சகோதர தமிழ் உறவுகளுக்காக தமிழக உறவுகளிடம் சேகரித்த உணவு மற்றும் மருந்துப் ருட்களை யாழ்ப்பாணம் அனுப்ப கடந்த ஏழு மாதகாலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும் இந்திய மத்திய- தமிழக மாநில அரசுகள் உதவாத நிலையில் யாழ்ப்பாணம் நோக்கிய தியாகப்பயணத்தை தமிழர் தேசிய இயக்கத் லைவரும் தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான பழ. நெடுமாறன் மேற்கொண்டபோது தமிழக காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி எம்மை வந்து தாக்கிய போது இடிவிழுந்து போனோம்.

இந்திய அரசு மற்றும் தமிழக அரசு மனிதாபிமான ரீதியில் யாழ். குடா மக்களுக்கு உதவியிருக்க வேண்டும்.

அவர்கள் அவ்வாறு உதவாமல் இருப்பது மனிதாபிமானத்தை கேள்விக்குரியதாக்கியுள்ளது இந்தியாவிற்கு அழகல்ல.
ஏழு மாத கால முயற்சி தோற்றுப்போன நிலையில் படகுகள் மூலம் உணவுப்பொருட்களை கொண்டுவர முன்னேற்பாடாக மதுரை திருச்சி நகரங்களிலிருந்து தியாகப் பயணத்தை தொடங்கிய போது வழிநெடுகிலும் நின்று தமிழக உறவுகள் வாழ்த்தி அனுப்பியது ஈழத்தமிழர் நெஞ்சங்களை குளிரச் செய்தது.

கடந்த ஓராண்டாக சிறிலங்கா அரசு ஏ-9 வழியை மூடியிருப்பதால் யாழ்ப்பாண மக்கள் திறந்த வெளிச்சிறைக்குள் அடைபட்டுள்ளது போல் வாழ்கின்றனர்.

அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் சிறிலங்காவில் நடத்தப்படுகின்றனர். நாளாந்தம் கொலைகளும் ஆட்கடத்தலும் நிகழ்கின்றன. இச்சூழ்நிலையில் தான் பழநெடுமாறன் வருகை தர இருந்தார். அதனை இந்திய அரசு தடுத்திருப்பது ஈழத்தமிழர்களை வேதனைக்குள்ளாகியிருக்கிறது.

தமிழக உறவுகளால் எடுத்து வரப்பட்ட உணவை தடுத்த இந்திய அரசுஇ ஏ-9 பாதையை திறக்க சிறிலங்காவை வற்புறுத்த வேண்டும். இதனை மனிதாபிமானத்தின் பேரால் கேட்கிறோம்.

இந்நேரத்தில் கடந்த ஏழு மாத காலத்தில் யாழ்ப்பாண குடா மக்களிற்குரிய உணவு மருந்து எடுத்து வரப் போராடிய பழ. நெடுமாறனுக்கும் தமிழக உறவுகளிற்கும் ஈழத்தமிழர் சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம்.

இந்தியப் படை தடுத்தாலும் சிறிலங்காப் படை சுட்டாலும் எம் யாழ்ப்பாண மக்களுக்கு உணவு மருந்து எடுத்து செல்லப்படும் வரை போராட்டம் தொடரும் எனக்கூறியும் தமிழக காவல்துறை தடுத்த போது சாகும் வரை உண்ணாநிலை இருந்த நேரத்தில் பழ.நெ டுமாறன் கைது செய்யப்பட்டதும் ஈழத்தமிழர் நெஞ்சங்களை உலுப்பியுள்ளது.

இந்த உணர்வு பூர்வமான தியாகப்பயணத்தை மேற்கொண்ட ஈழத்தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினருக்கும் தமிழக உறவுகளுக்கும் ஈழத்தமிழர் சார்பிலும் யாழ்ப்பாண மாவட்ட பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் சார்பிலும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 நன்றி: புதினம்
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

உண்ணாவிரதம் இருக்கும் பழ.நெடுமாறன் மீது போலிசார் அடக்குமுறை

சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் பழ.நெடுமாறன் மீது போலிசார் அடக்குமுறை-பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர்-பதற்றம்

Posted: 13 Sep 2007 07:04 AM GMT-06:00

இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் சென்னையில் இன்று (13-09-2007) வியாழக்கிழமை சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.

அவரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், தமிழர் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்டோர் நேரில் சந்தித்துப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சென்னை கோயம்பேட்டில் பழ.நெடுமாறன் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை இன்று காலையில் தொடங்கினார். அப்போது அந்த வளாகத்துக்குள் அனுமதியின்றி உள்நுழைந்த தமிழகப் போலிசார் உண்ணாவிரதப் போராட்டப் பந்தலைப் பிரித்துப் போட்டு, இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தக் கூடாது என்று கூறியுள்ளனர். மேலும் மூத்த தலைவரான பழ.நெடுமாறனின் கையைப் பிடித்து இழுத்துள்ளனர். "இது எங்களுக்குச் சொந்தமான இடம். இங்கே உண்ணாவிரதம் இருப்பதை யாரும் தடுக்க முடியாது" என்று அங்கிருந்தவர்கள் போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைப் படம் பிடித்த "சன்" தொலைக்காட்சி உள்ளிட்ட பத்திரிகைத் துறையினரைப் போலிசார் தாக்கியுள்ளனர். இதனால் காவல்துறையினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே அங்கு மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து போலிசார் வெளியேறினர்.

சென்னையில் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை பழ.நெடுமாறன் மெற்கொண்டதைத் தொடர்ந்து, அவரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் செயலாளர் தியாகு, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், தமிழக அன்னையர் முன்னணியின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி, சமூக நீதிக் கட்சியின் தலைவர் ஜெகவீரபாண்டியன், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் அங்கு திரண்டுள்ளனர். போலிசாரின் அடக்குமுறையை அனைவரும் கண்டித்துள்ளனர்.

பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் இருக்கும் பகுதிக்குள் செல்ல செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் யாரையும் போலிசார் அனுமதிக்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் வளாகத்திற்கு வெளியே போலிசார் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. செய்தியறிந்து தமிழகம் முழுவதுமுள்ள தமிழ் உணர்வாளர்கள் சென்னையை நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றனர்.

Thursday, September 13, 2007

"எனக்கு ஏதாவது நேர்ந்தால் போராட்டக் குழு தொடர்ந்துப் போராடும்" - பழ.நெடுமாறன்.


"எனக்கு ஏதாவது நேர்ந்தால் போராட்டக் குழு தொடர்ந்துப் போராடும்" - பழ.நெடுமாறன்.

Posted: 12 Sep 2007 04:35 AM CDT

12-09-2007: இலங்கையில் வாடும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவு பொருட்கள், மருந்துகள் படகு மூலம் எடுத்துச் செல்ல முயன்ற தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களைத் தமிழகப் போலிசார் கைது செய்து நாகை அருகேயுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

அப்போது பழ.நெடுமாறன் அளித்த பேட்டி:

ஈழத் தமிழர்களுக்கு மனித நேய அடிப்படையில் திரட்டி வைத்திருந்த உதவிப் பொருட்கள் மருந்து, உணவுப் பொருட்கள் அனுப்புவதற்கு செஞ்சிலுவைச் சங்கத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது.

பட்டினியால் வாடும் தமிழர்களுக்கு நாங்கள் திரட்டி வைத்திருந்த பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு ஏற்றிச் செல்ல படகுகளைத் தயார் செய்து வைத்திருந்தோம். மாநில அரசு படகு தரக் கூடாது என மீனவர்களை மிரட்டியுள்ளது. இதனால் யாரும் படகு தரவில்லை. இது எங்களுடையப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகும். அதனால் எங்கள் குழு உடனடியாக கூடிப் பேசி முடிவெடுத்து, இன்று முதல் நான் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பது என்றும், மற்றவர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பது என்றும் முடிவு செய்துள்ளோம். அதன்படி போராட்டத்தைத் தொடர்கிறோம்.

எனக்கு ஏதாவது நேர்ந்தால் போராட்டக் குழு தொடர்ந்து போராட்டத்தை நடத்தும்.

இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இலங்கைக்குப் படகுமூலம் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்ல முயன்ற பழ.நெடுமாறன் கைது

Posted: 12 Sep 2007 07:44 AM CDT

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் போர் நடந்து வருவதைத் தொடர்ந்து, அங்கு வாழும் ஈழத்தமிழர்கள் உணவு, மருந்து கிடைக்காமல் பட்டினியால் வாடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் செயல்படும் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு தமிழகமெங்கும் ரூ.1 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள், மருந்துகள் திரட்டினர். அதனை யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பி வைக்க அனுமதி கோரினர். ஆனால், அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

இதனிடையே, பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோர் உணவு, மருந்துகள் அனுப்ப அனுமதி அளிக்க மத்திய அரசை வலியுறுத்தினர். அதன்பின்னும், மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் நாகப்பட்டினம், இராமேசுவரம் ஆகிய பகுதிகளின் கடல் வழியாக படகு மூலம் சேகரித்த உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் செல்ல தியாகப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.

இதன்படி, இரண்டு குழுவினர் 07-09-2007 முதல் 11-09-2007 வரை பிரச்சாரம் மேற்கொண்டனர். திருச்சியிலிருந்து நாகை வரையிலும், மதுரையிலிருந்து இராமேசுவரம் வரையிலும் வாகனப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் ஏராளமான வாகனங்களில் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்றனர்.

இதன்படி, 12-09-2007 அன்று காலை 10 மணியளவில் பழ.நெடுமாறன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு இயக்கத்தினர் உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றுடன் நாகப்பட்டினம் கடற்கரை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்குச் செல்ல முயன்றனர். அப்போது, மீனவர்களிடம் போலிசார் படகுகள் கொடுக்கக் கூடாது என மிரட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பழ.நெடுமாறன், நாகை கடற்கரையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து அமர்ந்து கொண்டார். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

செய்வதறியாது தவித்த போலிசார் பின்னர் பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை நாகை அருகேயுள்ள காடம்பாடி காவலர் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

இதனிடையே, பழ.நெடுமாறன் "ஈழத் தமிழர்களுக்கு உணவு, மருந்துகள் அனுப்ப மத்திய, மாநில அரசுகள் தடை போடுகின்றன. என்ன விலைக் கொடுத்தாவது எடுத்த செயலை முடிப்போம். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்" என அறிவித்துள்ளார். அவரோடு கைது செய்யப்பட்ட அனைவரும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழக அரசும் காவல்துறையும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

பழ.நெடுமாறன் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதத்தால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க பதிவுகள்