Tuesday, November 13, 2007

வைகோ, பழ.நெடுமாறன், மணியரசன் உள்ளிட்ட 346 பேர் கைது

வைகோ, பழ.நெடுமாறன், மணியரசன்
உள்ளிட்ட 346 பேர் கைது
 
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழக அரசின் அனுமதி மறுப்பை மீறி வீரவணக்கம் ஊர்வலம் நடத்த முயன்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 346 தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மன்றோ சிலை அருகே இன்று திங்கட்கிழமை மாலை 4:30 மணிக்கு பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் தலைமையில் ம.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். இதனையடுத்து
 
ஆதரிப்போம் ஆதரிப்போம்
தமிழீழ விடுதலைப் புலிகளை
ஆதரிப்போம் ஆதரிப்போம்
 
வீரவணக்கம் வீரவணக்கம்
தமிழ்ச்செல்வனுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்
 
என்பது உள்ளிட்ட முழக்கங்களை வைகோ எழுப்ப தொண்டர்களும் முழக்கமிட்டு ஊர்வலமாக நகர முயற்சித்தனர்.





அப்போது ம.தி.மு.க. நிர்வாகி வேளச்சேரி மணிமாறனை காவல்துறை தாக்கியதாக வைகோ குற்றம்சாட்டி முழக்கமிட்டார்.
 
இதனைத் தொடர்ந்து வைகோவிடமிருந்த ஒலிபெருக்கியை காவல்துறை பறித்தனர். அதனால் ஆவேசமடைந்த வைகோ, ஒலிபெருக்கியை பிடுங்கிய உங்களால் என் தொண்டையை பிடுங்க முடியுமா? என்று காவல்துறையினரிடம் கூறி ஒலிபெருக்கி இல்லாமல் முழக்கமிட்டார்.





அதன் பின்னர் வைகோ, பழ.நெடுமாறன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் மணியரசன், ஓவியர் வீரசந்தானம், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மற்றும் அங்கு திரண்டிருந்த ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் மாலை 5:20 மணியளவில் கைது செய்தனர்.
 
அப்போது, இந்திய மத்திய அரசைக் கண்டித்தும் தமிழக காவல்துறையைக் கண்டித்தும் வைகோ முழக்கங்களை எழுப்ப திரண்டிருந்தோரும் உரத்த குரலில் அந்த முழக்கங்களை எழுப்பினர்.





மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் வே.ஆனைமுத்து, கவிஞர் இன்குலாப் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

14 பெண்கள் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட 346 பேரும் இன்று இரவு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்