தோழருக்கு வணக்கம்...!
அவசரமாய் நடந்ததால், அழைப்பிதழ் அச்சடிக்கவில்லை. மேளதாளங்கள் இல்லை. ஆனாலும், எளிமையாக இனிமையாக நடந்தேறியது என் திருமணம்..!
இரு வீட்டுப் பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி நடந்த இந்த திருமணம், முறைப்படி தஞ்சை மாவட்ட பதிவு அலுவலகத்தில் 21.09.2010(செவ்வாய்க்கிழமை) அன்று காலை பதிவு செய்யப்பட்டது. 23.09.2010 அன்று தஞ்சையில் எளிமையான முறையில் தமிழ்த் தேசிய இன உணர்வாளர்கள் முன்னின்று, சரோஜ் நினைவகத்தில் வரவேற்பு நிகழ்வை நடத்தி வைத்தனர்.
திருமண வரவேற்பு நிகழ்வுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர். பழ.இராசேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ் இன உரிமைப் போராட்டங்களில் பங்கெடுத்து அதிக முறை சிறை சென்றவரும், தஞ்சை த.தே.பொ.க. நகரச் செயலாளருமான தோழர் இராசு.முனியாண்டி வரவேற்புரையாற்றினார்.
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளருமான தோழர் பெ.மணியரசன், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணையாசிரியரும், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகருமான தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, இளந்தமிழர் இயக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ம.செந்தமிழன், கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினரும், திரைப்படபாடலாசிரியருமான கவிஞர் கவிபாஸ்கர், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு, வழக்கறிஞர் கரிகாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிப் பேசினர்.
தமிழ் மொழியை புறந்தள்ளி வடமொழியை முன்னிறுத்தும் புரோகித முறையை புறந்தள்ளியும், பெண்களை அடிமைப்படுத்தும் தாலியை அணிவிக்காமலும் தந்தைப் பெரியார் காட்டிய சீர்திருத்த வழியில் இத்திருமணம் இனிதே நடந்தது.
என்னை பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருக்கும் தோழர்களுக்கு, எனது துணைவியார் சத்யாவையும் அறிமுகப்படுத்தி வைப்பதில் மகிழ்கிறேன்.
நன்றியுடன்,
க.அருணபாரதி
0 கருத்துகள்:
Post a Comment