Wednesday, February 29, 2012

ஈழம்: இந்தியத்தின் நரித்தனம் தொடர்கிறது - க.அருணபாரதி

ஈழம்: இந்தியத்தின் நரித்தனம் தொடர்கிறது

க.அருணபாரதி

இந்தியா எந்த நேரத்திலும் நம்பக்கம் சார்பாகவே செயற்படும்4 நாள் சுற்று(லா) பயணமாக இலங்கைக்கு சென்றிருந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசிய பின், மகிழ்ச்சி பொங்க இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீ.எல்.பெய்ரிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தது இது.

தமிழர்களுக்கு எங்கு இன்னல் ஏற்பட்டாலும், அந்த இன்னலை ஏற்படுத்துபவர்கள் யாராயினும் அவர்களுக்கு உதவி செய்து உபசரிப்பது தான் இந்தியாவின் தலையாயப் பணி. அதனால் தான் தனது சொந்த நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லும் நாடாக இருந்தாலும், பாதிக்கப்படுவது தமிழர்கள் என்ற காரணத்தால் சிங்கள அரசுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டுகிறது இந்திய அரசு. இலட்சக்கணக்கானத் தமிழர்களை இனவழிப்பு செய்திட சிங்கள இனவெறி அரசுக்கு நிதி, ஆயுதம் என பலவகைகளிலும் உதவி நின்றதோடு மட்டுமின்றி, இன்று வரை அவ்வரசுக்கு ஆபத்து வரும் போதெல்லாம் முட்டுக் கொடுத்தும் வருகின்றது இந்திய அரசு.

இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கை நன்கு உணர்ந்ததால் தான், இந்தியா எப்போதும் எங்கள் பக்கம் என இந்திய அமைச்சர் கிருஷ்ணாவை பக்கத்தில் நிறுத்திக் கொண்டே, இறுமாப்புடன் கொக்கரிக்கிறார் சிங்கள அமைச்சர். இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க உதவுகிறோம் என்று கூறிக் கொண்டு இந்திய அரசு அரங்கேற்றி வரும் அண்மைய நாடகத்தின் ஒர் காட்சி மட்டும் தான் இது.

முள்ளிவாய்க்கால் போர் முடிந்த பிறகு, சற்றொப்ப கடந்த 18 மாதங்களாக, 15க்கும் மேற்பட்ட சுற்றுகளில் நடத்தப்பட்ட, இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுகளில் இதுவரை எவ்வித குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படவில்லை.

சிங்கள இனவெறி அரசின் அரசியலமைப்புக் கட்டமைவிற்குள் தமிழர்களுக்கு ஓர் தீர்வு என்ற வகையில் நடைபெறுகின்ற இப்பேச்சுவார்த்தைகளால் உண்மையில் தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என நாம் உறுதியாக நம்பலாம். ஏனெனில், கடந்த அரை நூற்றாண்டுகளாக சிங்கள அரசு நடத்திய ஏராளமான பேச்சுவார்த்தை மோசடி நாடகங்களைக் கண்டு தமிழ் மக்கள் சலித்துவிட்டனர்.

சிங்கள அரசின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தி, புலம் பெயர்ந்த தமிழர்கள் நடத்திய தொடர் போராட்டங்கள் ஏற்படுத்திய அழுத்தங்கள் காரணமாக அனைத்துலக சமூகத்தின் முன் சிங்கள அரசு சந்தேகக் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

மேலும், சேனல்-4 தொலைக்காட்சி தொடர்ந்து வெளியிட்ட சிங்கள அரசின் போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்கள், டப்ளின் அனைத்துலக மக்கள் நீதிமன்றத்தில் சிங்கள அரசு போர்க் குற்றவாளி அரசு தான் என வழங்கப்பட்டத் தீர்ப்பு, ஐ.நா. நியமித்த மூவர் குழுவின் அறிக்கை என சிங்கள அரசுக்கு அனைத்துலக சமூகம் தொடர் நெருக்கடிகளை தந்தது.

உலகின் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், பத்திரிக்கையாளர்களும் சிங்கள அரசின் தமிழினப் படுகொலையை அம்பலப்படுத்தி குற்றப்பத்திரிக்கை வாசித்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ் போன்ற மேற்குலக நாடுகளில் உள்ள சனநாயக சக்திகளும், மனித உரிமை செயல்பாட்டாளர்களும் சிங்கள அரசைக் கேள்விகளால் துளைத்தெடுக்கின்றனர்.

தற்போது சிங்கள அரசு நடத்தி வரும் பேச்சுவார்த்தை கூட, இலட்சக்கணக்கான தமிழர்களையும், போராளிகளையும் கொன்றொழித்த சிங்கள இனவாத அரசின் போர்க்குற்றங்கள் அனைத்துலக சமூகத்தின் முன் ஏற்படுத்தியுள்ள களங்கத்தை துடைத்தெறிய நடத்தப்பட்டு வரும் ஒப்புக்கு சப்பான நாடகம் தான்.

இப்பேச்சுவார்த்தை, உண்மையில் சிங்கள அரசு அனைத்துலக சமூகத்தின் முன் நற்பெயர் வாங்கிக் கொள்ளத் தான் உதவுமே தவிர, தமிழர்களுக்கு எவ்வகையிலும் உதவப்போவதில்லை என்பதை அப்பேச்சுகளின் போது சிங்கள அரசு நடந்து கொள்ளும் விதத்திலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

அனைத்துலக சமூகத்தின் குற்றப் பார்வையிலிருந்து தப்புவதற்காக, போர்க்குற்றங்கள் குறித்த இலங்கை அரசு தானே விசாரித்து தாக்கல் செய்த ‘LLRC ஆணைக்குழு அறிக்கையும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கவில்லை. சிங்கள அரசின் போர்க் குற்றங்கள் குறித்து, ஐ.நா. நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல பகுதிகள் சிங்கள அரசின் LLRC அறிக்கையில் ஒரு பேச்சுக்குக் கூட கூறப்படவேயில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வறிக்கையை முற்றிலும் நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா இவ்வறிக்கை போதுமானதாக இல்லை என கருத்து வெளியிட்டது.

ஆனால், சிங்கள அரசோடு இணைந்து தமிழின அழிப்புப் போரை நடத்திய இந்திய அரசு மட்டும் தான் இவ்வறிக்கையை வரவேற்கத்தக்கது என்றும் ஆக்கப்பூர்வமானது என்றும் கருத்து கூறியது.இவ்வறிக்கைக்கு மேல் விசாரணையேத் தேவையில்லை என்றும் இந்தியா வாதிட்டது. LLRC அறிக்கையை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவையும் இலங்கைக்கு அனுப்பியது இந்திய அரசு.

கிருஷ்ணா கொழும்பு சென்று இறங்கியதும், பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா போன்ற பகுதிகளில் மீன்பிடிப்பதற்கு தமிழக மீனவர்களுக்கு இருக்கும் பாரம்பரிய உரிமையை கைவிட இந்திய அரசு ஒப்புக் கொண்டுவிட்டதாகவும், இது இலங்கைக்கு கிடைத்த வெற்றி என்றும் சிங்கள மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்ன பிபிசிக்கு பேட்டியளித்தார்.

இதன் விளைவு சிறிது நேரத்திலேயே தெரியத் தொடங்கியது. இராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை கற்களால் அடித்து விரட்டியது சிங்களக் கடற்படை. மறுநாள், தமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாயின.

தமிழர்களை மதியாமல் தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவை, இலங்கைக்கு பரிசாகக் கொடுத்த இந்திய அரசு, அப்போது இயற்றிய கச்சத்தீவு ஒப்பந்த்த்தில் கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமைகள் வழங்கியிருந்தது. ஆனால், அவ்வுரிமையை மறுத்து இந்திய மக்களவையிலேயே பேசியவர் தான் எஸ்.எம்.கிருஷ்ணா. தற்போது, அவ்வுரிமைகளை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக கைவிட்டு தமிழ் இனத்திற்கு மீண்டுமொரு முறை துரோகமிழைத்திருக்கிறது.

இந்திய அரசின் இத்துரோக நடவடிக்கையால், தமிழக மீனவர் மீதான தாக்குதல் இனி மேன்மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

போர்க்குற்றம் தொடர்பான உலகளாவிய நெருக்கடிகளில் திளைத்த சிங்கள அரசு, கொழும்பு வந்திறங்கிய கிருஷ்ணாவை கண்ட பிறகு தான் நிம்மதிப் பெருமூச்சுடன் இந்தியா எப்போதும் எங்கள் பக்கம் என அறிவித்தது.

வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடக்கவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 19ஆவது அமர்வுக் கூட்டத்தில், இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டுமென மேற்குலக நாடுகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது. ஒருவேளை அவ்வாறு விவாதம் வந்தால், அதில் இந்திய அரசு என்ன கருத்து கூறும், எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதற்கான நடைமுறை ஒத்திகை தான் இது.

கிருஷ்ணாவின் வருகைக்குப் பின் சிங்கள அமைச்சரும் மனித உரிமைகளுக்கான சிறப்புத் தூதுவருமான மகிந்த சமரசிங்கஜெனீவா கூட்டத்தில் எங்களால் எந்தவகையான அனைத்துலக அழுத்தங்களையும் எதிர்கொள்ள முடியும் என்று உறுதிபடத் தெரிவித்ததன் பின்னணியில் இந்திய அரசே ஒளிந்து நிற்கிறது.

தற்போது, எஸ்.எம்.கிருஷ்ணா சென்றது மட்டுமல்ல, இனப்படுகொலைக் குற்றவாளியாக நிற்கும் சிங்கள அரசின் இரத்தக்கரையைத் துடைக்கவும், கவலைப்படாதீர் நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் கூறவும் இந்திய அரசின் அதிகாரிகளும் அமைச்சர்களும் போர் முடிந்த பின்னர் அவ்வப்போது இலங்கைக்கு தொடர்ச்சியாக பயணம் மேற்கொண்டு வந்து கொண்டுதான் உள்ளனர்.

அனைத்துலக சமூகத்தை ஏமாற்றுவதற்காக, சிங்கள அரசு நடத்தும் அரைகுறை பேச்சுவார்த்தை கூட அங்கு வேண்டா வெறுப்பாகத் தான் நடத்தப்படுகின்றது என்பது இந்திய அரசுக்கும் நன்கு தெரியும்.

பேச்சுவார்த்தைகளின் வழியே தான் தமிழர்களுக்கு ஓர் அரசியல் தீர்வு கிடைக்கும்என்று எஸ்.எம்.கிருஷ்ணா கொழும்பில் சொல்லிக் கொண்டிருந்த வேளையில் தான், இலங்கை அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைக் கூட்டங்களை மூன்று முறை புறக்கணித்திருக்கிறது. திட்டமிட்டபடி தாம் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்த போதும் இலங்கை அரசுத் தரப்பில் இருந்து யாரும் வரவில்லை என்று தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

பேச்சுவார்த்தைக் கூட்டத்தை இலங்கை அரசு புறக்கணித்தது குறித்து வாய்த்திறக்காத இந்திய அரசு, தமிழர்களுக்குத் அரசியல் தீர்வு கிடைக்க நாங்கள் காலக்கெடு விதித்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க மாட்டோம் என்றும் அறிவித்து அதன் உண்மை முகத்தை பகிரங்கமாகவே அம்பலப்படுத்தியது. சிங்கள அரசின் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவரான அமைச்சர் ஸ்ரீபால டி சில்வாவும், இந்தியாவிடமிருந்து தமக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இது தான் பேச்சுவார்த்தைகளை முன்னகர்த்துவதில் இந்திய அரசுக்கு இருந்த அக்கறையின் இலட்சணம்!

உண்மையில் இந்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்தோ, தொடர்ந்து சிங்களக் கடற்படையால் தாக்கப்பட்டு வரும் தமிழக மீனவர்களின் நிலை குறித்தோ பேசுவதற்காக இலங்கை செல்லவில்லை. போர்க்குற்றவாளி அரசாக நிற்கும் இலங்கை அரசின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும், பாதாளத்திற்குச் சென்றுவிட்ட இலங்கையின் பொருளியலை சரிகட்ட திட்டங்கள் தீட்டுவதற்காகவும் தான் அவர் இலங்கை சென்றார்.

உலகமய சந்தைப் பொருளியலின் காரணமாக உலகளாவிய அளவில் பொருளியல் பெருமந்தம் ஏற்பட்டுள்ளது. இது இந்தியா, இலங்கை உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த வாரம் கூட இலங்கை அரசு அத்தியாவசியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்து மக்களின் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டது. மேலும், இராசபக்சே குடும்பத்தினரின் ஆதிக்கம், இராணுவத்தினரின் கட்டற்ற அதிகாரம், போர்ப் பொருளாதாரம் ஏற்படுத்தியுள்ள பொருளியல் பாதிப்புகள் என இலங்கை அரசு தனக்குள்ளும் நெருக்கடிகளால் முற்றுகையிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தான், இலங்கையின் பொருளியலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி கட்டவும், அவர்களுடன் வடநாட்டு பெருமுதலாளிய நிறுவனங்களுக்கு உள்ள பொருளியல் பிணைப்பை மேலும் உறுதிப்படுத்தி புதிய ஒப்பந்தங்கள் போடும் திட்டங்களுடன் தான் கிருஷ்ணா இலங்கை பயணமானார். இந்திய - இலங்கை நாடுகளுக்கிடையே சற்றொப்ப 443 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருளியல் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது இதற்குச் சான்று.

அதே வேளையில், தமிழர்களுக்கு அதிகாரமோ அரசியல் தீர்வோ கிடைக்கக் கூடாது என்பதில் சிங்கள அரசை விட அதிக உறுதியுடன் இந்தியா உள்ளது என்பதை மறைமுகமாக பறைசாற்றவும் கிருஷ்ணாவின் பயணம் பயன்பட்டது.

மூன்று இலட்சம் தமிழர்களை முள்வேலிக்கம்பி முகாம்களுக்குள் முடக்கி வைத்திருக்கும் இராசபக்சே, தமிழர் திருநாளான பொங்கல் விழாவை கிருஷ்ணாவை வைத்துக் கொண்டு, ஒப்புக்காக நடத்தினார். அந்நிகழ்வை தான் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சற்று நேரம் தள்ளி வைத்து உத்தரவிட்ட இராசபக்சே தன்னை நெகிழ வைத்துவிட்டார் என்றும், அவர் நல்ல பண்பாளர் என்றும் இராசபக்சேவுக்கு நற்சான்று வழங்கவும் கிருஷ்ணா தவறவில்லை.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கையின் ஒருமைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். இலங்கையின் 13ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் வகையிலான ஓர் தீர்வுத் திட்டத்தை தமிழர் பிரச்சினைக்கு இலங்கை அரசு முன் வைக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்திய அரசு வலியுறுத்துகிற, இலங்கையின் 13ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் ஏற்கெனவே இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகளாலும், தமிழீழ மக்களாலும் நிராகரிக்கப்பட்ட ஒன்று தான். இது இந்தியாவில் தற்போது நிலவுகின்ற குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட மாநிலக் கட்டமைப்புகளை விடவும், குறைவான அதிகாரங்களைக் கொண்ட மாகாண கட்டமைப்புகளை உருவாக்க துணை செய்கின்றது.

எனினும், இந்தக் குறைந்தபட்ச அதிகாரங்கள் கூட தமிழர் கைகளுக்கு சென்றுவிடக் கூடாது என சிங்கள இனவாத அரசு கவனமுடன் நடந்து வருகின்கிறது. 13ஆவது சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளவாறு காவல்துறை, காணி நிர்வாகம் உள்ளிட்டவற்றை மாகாணங்களுக்குக் கையளிக்க இலங்கை அரசு பல்லாண்டுகளாகவே தொடர்ந்து மறுத்து வருகின்றது. இது ஒருக்காலும் சாத்தியமற்றது என அதிபர் இராசபக்சே வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

மேலும், 2010ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட 18ஆவது சட்டத்திருத்தம் இலங்கை அதிபருக்கு மேலும் பல அதிகாரங்களை வழங்கியும், 13ஆவது சட்டத் திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் பலவற்றை விழுங்கியும் இலங்கை அரசின் இனவாதக் கட்டமைப்பை மேலும் இறுக்கியிருக்கிறது.

தமிழின விரோத இந்திய அரசு ஒரு பேச்சுக்காக வலியுறுத்துகிற 13ஆவது சட்டத் திருத்தத்தைக் கூட மறுப்பது தான் சிங்கள இனவாத அரசு மாறா நிலைப்பாடு. இந்நிலையில், 13+ என்ற பெயரில், 13ஆவது சட்டத் திருத்தத்தையும் தாண்டி தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுவோம் எனவும் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் இராசபக்சே வாக்குறுதி அள்ளி வீசிய போதும், அதனை இந்தியா சுட்டிக்காட்ட முற்படவில்லை. உண்மையில், இருதரப்பினரின் நோக்கமும் தமிழர்களை ஒடுக்குவது தான் என்ற வகையில், இந்தியா சிங்களத்தோடு எவ்வகையிலும் முரண்பட விரும்பவில்லை.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவைத் தொடர்ந்து, கூடங்குளம் அணுமின் நிலையச் சிக்கலில் இந்திய அரசின் முகவராக செயல்பட்ட முனைவர் அப்துல் கலாமையும் இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பியது. இலங்கை சென்ற கலாம், அங்கு இராசபக்சே அரசால் முன்மொழியப்பட்ட மும்மொழித் திட்டத்தை (சிங்களம்-தமிழ்-ஆங்கிலம்) தொடங்கி வைத்தார். 1958இல் தமிழர்கள் மீது சிங்கள மொழியைக் கட்டாயமாகத் திணித்த தனிச் சிங்கள சட்டத்தின் இன்றைய மறுவடிவம் இது.

அனைவரும் எதிர்பார்த்தது போலவே, கலாம் இராசபக்சேவுக்கு நற்சான்று வழங்கிவிட்டு, 1989இல் புலிகளுடனான போரில் இறந்துபோன இந்திய அமைதிப்படையினரின் நினைவுச் சின்னத்தில் அவர்களை வாழ்த்திப் போற்றி கையொப்பமிட்டார். கலாமின் கபடப் புன்னகையில் இந்திய அரசின் நரித்தனம் தான் தெரிந்தது.

மொத்தத்தில் தமிழர்களுக்கு எதிரான தனது நரித்தனமான வேலைகளை இந்திய அரசு தொடங்கி விட்டது. இதற்கெதிரான தமிழர்களின் போராட்ட முன்னெடுப்புகளை நாமும் தொடங்கியாக வேண்டும்.

இதோ, புலம் பெயர்ந்த தமிழர்கள் வரும் மார்ச் மாதத்தில் நடக்கவிருக்கும் ஐ.நா. மன்ற மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் சிங்கள அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தி நீதி கேட்டு நடைபயணம் என்ற பெயரில் ஜெனீவாவில் மாபெரும் மக்களி திரள் எழுச்சி ஒன்றுகூடலை நிகழ்த்த அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்திய அரசு இக்கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவாக நிற்கக் கூடாது என்றும், உலக நாடுகளின் முன்னிலையில் தமிழீழப் பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக மக்களாகிய நாம் இந்திய அரசை நெருக்கி முழக்கமிட வேண்டும். இதுவே இன்றைய வரலாற்றுத் தேவையும், கடமையும்.

(இக்கட்டுரை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் – மாதமிருமுறை பிப்ரவரி 1-15 இதழில் வெளியானது. கட்டுரையாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர்)

குறிப்பிடத்தக்க பதிவுகள்