Friday, May 14, 2010

மாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்பு (16.05.2010)

முள்ளிவாய்க்கால் வீரவணக்கம்
மாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்பு
இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு
சென்னை, 17. 29.04.2010.

தமிழீழ மக்கள் மீது, சிங்கள - இந்தியக் கூட்டுப் படைகள் நடத்திய தமிழின அழிப்புப் போர் முடிவுற்று ஓராண்டாகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இரக்கமின்றி குண்டுகள் வீசப்பட்டுக் கொன்றொழிக்கப்பட்ட அந்த இறுதி நாட்களைப் போல் கொடூரமான நாட்களை, உலகில் எந்தவொரு இனமும், எந்தவொரு விடுதலைப் போராட்டமும் சந்தித்ததில்லை.

இனவெறியின் கோரப் பசிக்கு பலியான எம் தமிழ் உறவுகளுக்கும், தமிழீழத் தாயக விடுதலைக்காக போர்க்களத்தில் நின்றுப் போராடி உயிர் ஈகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் இளந்தமிழர் இயக்கம் தனது வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவை துக்க தினமாக நினைவு கூர்வதுடன், அந்நாளை இன விடுதலைப் போராட்டத்திற்கு சூளுரை மேற்கொள்ளும் நாளாக கடைபிடிக்குமாறு இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவை நினைவுகூறும் விதமாகவும், தேர்தல் அரசியலை சாராத மாற்று அரசியல் எழுச்சியே தமிழினத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்று வலியுறுத்தும் வகையிலும், மாற்று அரசியலை முன்னிறுத்தி, தன் இன்னுயிரை தீக்கிரையாக்கிய ஈகி முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில், முதன் முறையாக மார்பளவு சிலை தஞ்சையில் நிறுவப்படவுள்ளது. இச்சிலை தமிழ்நாட்டுத் தமிழர்களின் எழுச்சிக்கு குறியீடாகவும், மாற்று அரசியல் வெளிக்கான தொடக்கப் புள்ளியாகவும் அமையட்டும்.

முள்ளிவாய்க்கால் பேரழிவுப் போர் தொடங்கப்பட்ட நாளான மே 16 (16.05.2010) அன்று மாலை தஞ்சாவு+ர் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, சாணுரப்பட்டி (செங்கப்பட்டி) பகுதியில் அமைந்துள்ள தனியார் இடம் ஒன்றில், இச்சிலை நிறுவப்படுகின்றது.
சிலை திறப்பு நிகழ்வுக்கு மாவீரன் முத்துக்குமாரின் தந்தையார் திரு. ச.குமரேசன் கலந்து கொள்ள இசைவு தந்துள்ளார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. பெ.மணியரசன் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார். இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட முத்துக்குமார் சிலையை அன்பளிப்பாக வழங்கி, இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. ம.செந்தமிழன், சிறப்புரையாற்றுகிறார்.

சிலை திறப்பு நிகழ்வை முன்னிட்டு, பிற்பகல் 2 மணிளவில் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து மாணவர்கள் - இளைஞர்கள் சுடரேந்தி வரும் வகையில், சுடரோட்டம நிகழ்வு நடைபெறுகின்றது. பு+தலூர், ஆவாராம்பட்டி, நந்தவனப்பட்டி வழியாக சாணுரப்பட்டிக்கு இச்சுடரோட்டம் வந்தடைகிறது.

மாலையில், ‘முள்ளிவாய்க்கால் வீரவணக்கம்’ என்ற தலைப்பில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மேனாள் சட்ட மேலவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு கி.வெங்கட்ராமன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநா; ராம், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல, புதியதொரு தொடக்கம் என்பதை இவ்வுலகிற்கு நாம் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை தமிழகத் தமிழர்கள் மறந்து விடக்கூடாது. தாய்த் தமிழகத்தில் எழுகின்ற எழுச்சியே தமிழீழ மக்களின் நலன் காக்கும் என்பதை உறுதியாக நம்பிக் களம் இறங்க வேண்டிய சூழல் இது என்பதை முன்வைத்தும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தமிழகமெங்கும் உள்ள இன உணர்வாளர்கள், கட்சி வேலிகளைக் கடந்து ஒன்று கூட வேண்டும் எனவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன விடுதலைக்கான சூளுரை தினமாக நெஞ்சிலேந்தி, விடுதலைப் பாதையில் அணிதிரள வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறது. தமிழ் உணர்வாளர்கள் இந்நிகழ்வில் பெருந்திரளாக பங்கெடுக்க வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

சிலை திறப்பு மற்றும் வீரவணக்கப் பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், இளந்தமிழர் இயக்கமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. சிலை திறப்பு நிகழ்வில், பங்களிப்பு செலுத்த விரும்பும் உணர்வாளர்கள், elanthamizhar@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரி அல்லது +91-9841949462 என்ற கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உதவலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு
நோர்வே ஈழத்தமிழா அவை வாழ்த்து!

ஈழத்தமிழர்களுக்காக தன் இன்னுயிரைத் தீக்கிரையாக்கிய மாவீரன் முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சிலை எழுப்புவதற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பில், நோர்வே ஈழத்தமிழர் அவை இளந்தமிழர் இயக்கத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.

நோர்வே ஈழத்தமிழர் அவையின் தலைவர் வைத்திய கலாநிதி பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்கள் எழுதியுள்ள அக்கடிதத்தை மகிழ்வுடன் யாம் வெளியிடுகின்றோம்.

இளந்தமிழர் இயக்க பணி சிறக்க வாழ்த்துகள்!





வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் ஏற்றி வைத்த தீயினில் உருவாகி, எம் இன விடுதலைக்கு அயராது பாடுபடும் இளந்தமிழர் இயக்கத்திற்கு நோர்வே ஈழத் தமிழர் அவையின் வணக்கம்.

வரலாற்றின் ஆதி காலம் முதல் இன்று வரை மொழி, இன, பண்பாட்டால் தமிழகமும் தமிழீழமும் ஒன்றென வாழ்ந்து வந்தாலும், முத்துகுமாரின் உயிர் தியாகம் நம் உறவின் மேன்மைக்கு புதியதோர் அத்தியாத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது. அவ்வீர இளைஞனுக்கு இளந்தமிழர் இயக்கம் நினைவு சின்னம் எழுப்புவதை முன்னிட்டு, நோர்வே ஈழத் தமிழர் அவை பெரு மகிழ்ச்சி அடைவதுடன், தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. வன்னிப் போரின் பொழுதும் இன்றும் இளந்தமிழர் இயக்கத்தின் சீர்மிகு வரலாற்றுக் கடமையினை நோர்வே ஈழத் தமிழர் அவை அறிந்தே வைத்துள்ளது.

எம் மாவீரர்களின் தியாகத்தால் தணல் விட்டு எரியும் விடுதலை தாகம், தமிழக மக்களின் உறுதுணையுடன் தான் விடை காணும் என்பதில் எமக்கு எள்ளளவும் ஐயம் இல்லை. எம் இலட்சிய தீயை அணையாமல் எடுத்து சென்றிட யாம் புதிதாக அரசியல் வழிப் போராட்டத்தை முன்னெடுத்து உலகின் மனசாட்சியை உலுக்கத் தொடங்கியுள்ளோம். எம் வரலாற்றில் முதல் முறையாக புலம் பெயர்ந்த தேசத்தில் வாழும் மக்களின் ஆணையை வாக்கெடுப்பின் மூலம் பெற்று பலம் மிக்க அமைப்பாக நோர்வே ஈழத் தமிழர் அவை செயல்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க செயலாக்கத்தைப் பற்றி எம் தமிழக உறவுகளிடையே எடுத்தியம்பி எம் விடுதலைக்கு வலு சேர்க்க இவ்வேளையில் வேண்டிநிற்கிறோம்.

மேலும், எம் அடுத்த தலைமுறையினருக்கு தமிழ்த் தேசிய சிந்தனையின் விதியினை விதைப்பது நம் போன்றோரின் கடமை என்பதனையும், கடல் கடந்து வாழ்ந்தாலும் எம் கைகள் ஒன்று சேர்ந்தால் பல பணிகளை நாம் செய்யலாம் என்பதனையும் இங்கு நினைவு படுத்துகிறோம்.

இவ்வாறு தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளந்தமிழர் இயக்கம் நன்றி

நோர்வே ஈழத்தமிழர் அவையின் வாழ்த்துக் கடிதத்திற்கு நன்றி தெரிவிப்பதோடு, தமது கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போன்று தொடர்ந்து இன விடுதலைக்காக இணைந்து செயல்படுவோம் என்றும் நாம் உறுதியளிக்கிறோம்.

குமுதம் ரிப்போhட்டரில் சிலை திறப்பு நிகழ்வு குறித்த செய்தி

தமிழகத்திலிருந்து வெளியாகும் பிரபல செய்தி வார இதழான 'குமுதம் ரிப்போர்ட்டர்” ஏடு, முத்துக்குமார் சிலை தொடர்பாக இவ்வாரம் செய்தி வெளியிட்டுள்ளது.


சிலை திறப்பு நிகழ்வு இணையத்தில் நேரடி ஒளிபரப்பு

மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்பு நிகழ்வையும், முள்ளிவாய்க்கால் வீரவணக்கப் பொதுக் கூட்ட நிகழ்வையும் இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்திட, மீனகம்.காம் இணையதளத்தினர் முன் வந்துள்ளனர். அவர்களுக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பங்களிப்பு செய்ய விரும்புவோர்க்கு...

மாவீரன் முத்துக்குமார் சிலையில் தங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் இன உணர்வாளர்கள் தமது பங்களிப்புகளை 14.05.2010 மாலைக்குள் அனுப்பி வைக்கமாறு அன்புடன் வேண்டுக் கேட்டுக் கொள்கிறோம். இதற்குரிய வங்கிக் கணக்கு எண் விபரத்தையும் யாம் இங்கு வெளியிடுகின்றோம்.

வங்கிக் கணக்கு விவரங்கள்:


தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழர் இயக்கம்
Cell : +91 9841949462

Thursday, May 13, 2010

தமிழ் எழுத்து சீர்திருத்த எதிர்ப்பு மாநாடு(16.05.2010) வெற்றி பெற வாழ்த்துகள்!

செவ்வணக்கம் தோழர்களே..

உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் முக்கியக் காரணியாக விளங்கும் தமிழ் மொழியை, சிதைக்கும் நோக்கிலேயே இந்த எழுத்து மாற்றம் அறிவிக்கப்பட உள்ளதோ என்ற கேள்வி தான், எழுத்து மாற்றம் குறித்து முதன் முதலில் அறிந்த போது ஏற்பட்டது.

எழுத்து மாற்றும் குறித்து அறிந்த போது, தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் கொண்டு வருகிறோம் என்ற பெயரில், மொழியை சிதைக்கும் நோக்கில் செயல்படும் தமிழக அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டியது நம் கடமையாகும என்றும் உணர்ந்தேன்.

இந்த தருணத்தில் தான், தமிழ் எழுத்துகளை சீர்திருத்தம் என்ற பெயரில் சிதைக்க நினைக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள தமிழ் எழுத்து சீர்திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் புதுச்சேரியில், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் 16.05.2010 அன்று 'தமிழ் எழுத்து மாற்ற எதிர்ப்பு” மாநாடு ஏற்பாடாகியுள்ளது.

இந்த மாநாடு தொடர்பான புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் தொடக்க நிலை ஆலோசனைக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். மாநாட்டு ஏற்பாடுகளிலும் பங்கு வகிக்க நினைத்திருந்தேன். ஆனால், நான் சார்ந்துள்ள இளந்தமிழர் இயக்கம் சார்பில் தஞ்சையில் மாவீரன் முத்துக்குமார; சிலை திறப்பு நிகழ்வை நடத்த திட்டமிட்டதால், மாநாட்டில் பங்கு பெற இயலாமல் போனதற்கு மிகவம் வருந்துகிறேன்.

எனினும், மாநாடு வெற்றி பெறவும், மாநாட்டில் உரையாற்றும் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்க்கணினி ஆர்வலர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் இந்த முயற்சி பெரு வெற்றி பெற்று, தமிழ் எழுத்து சீர்திருத்த எதிர்ப்பிற்கு மேலும் உதவும் என்று மனதார நம்புகிறேன்.

வாய்ப்புள்ள நண்பர்கள், பதிவர்கள், இம்மாநாட்டில் நிச்சயம் பங்கு பெற வேண்டும். எழுத்து சீர்திருத்தம் தொடர்பான மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அதற்கு தொடர்ந்து நாம் உறுதுணையாக நிற்கவும் உறுதியேற்க வேண்டும்.

தோழமையுடன்,
க.அருணபாரதி


"தமிழ் எழுத்து மாற்ற எதிர்ப்பு” மாநாடு" - 16.05.2010


நாள்; 16-05-2010 ஞாயிறு காலை 9.45 முதல் 6.00 மணிவரை

இடம்: வணிக அவை (பாரதி பூங்கா அருகில்) நிகழ்ச்சி அரங்கு, புதுச்சேரி-1,

காலை அமர்வு: காலை 10.00 முதல் 1.00 மணிவரை

உணவு இடைவேளை: பகல் 1.01 முதல் 2.00 வரை

பிற்பகல் அமர்வு : 2.01 மணிமுதல் முதல் மாலை 6.00 மணிவரை

நிகழ்ச்சியில் பங்கேற்போர் பட்டியல்
  1. புலவர். இரா.இளங்குமரனார், தமிழறிஞர்,

  2. திரு.இராம.கி, பொறியாளர், சென்னை, பொதுக்குழு உறுப்பினர், உலகத்தகவல் தொழில் நுட்ப மையம்,

  3. பேராசிரியர்.செல்வக்குமார், மின்னனு மற்றும் கணிப்பொறி பொறியியல் துறை, வாட்டர் லூ பல்கலைக்கழகம், கனடா, (ஒலி/ஒளிப்பதிவு உரை)

  4. திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா (ஒலி/ஒளிப்பதிவு உரை)

  5. திரு.மணி.மு.மணிவண்ணன், பொறியாளர், சென்னை,

  6. முனைவர். சொ. சங்கரபாண்டி, தமிழ்மணம், வாஷிங்டன் அமெரிக்கா (ஒலி/ஒளிப்பதிவு உரை)

  7. பேராசிரியர் மா.லெ. தங்கப்பா, புதுச்சேரி

  8. பேராசிரியர் நா.இளங்கோ, தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி.

  9. திரு.சுப. நற்குணன் மலேசியா (இணைய வழி உரை)

  10. தென்மொழி திரு மா.பூங்குன்றன் சென்னை

  11. திரு,நா.மு.தமிழ்மணி செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி

  12. புலவர் க.தமிழமல்லன் புதுச்சேரி,

  13. திரு,சீனு அரிமாப்பாண்டியன் புதுச்சேரி

  14. திரு.தமிழ நம்பி, விழுப்புரம்

  15. பாவலர். அரங்க நடராசன் புதுச்சேரி

  16. திரு.விருபா. குமரேசன் சென்னை

  17. திரு,எழில் இளங்கோ விழுப்புரம்,

அனைவரையும் வருக என வரவேற்கும்,


Wednesday, April 21, 2010

உலகமயம் உருவாக்கிய நவீன சாமியார்கள் - க.அருணபாரதி

(தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் ஏப்ரல் 2010 இதழில் வெளியான கட்டுரை)





  • பரமஹம்ச நித்தியானந்த சுவாமிகள் என்றறியப்பட்ட ஒரு சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொண்ட காட்சிகள் ஊடகங்களில் வெளியானது. அவரது ஆசிரமங்கள் தாக்கப்பட்டன.



  • கல்கி பகவான் என்றறியப்பட்ட சாமியாரின் மடத்தில். அவரது பக்தர்களுக்கு போதை மருந்து கொடுத்திருந்தது அம்பலமானது.



  • சங்கரமடத் தலைவர் காஞ்சி ஜெயந்திரர், கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுதலையானார்.



  • சிறுவர்களுடன் பாலியல் வல்லுறவு வைத்துக் கொண்ட கிறித்தவ ஆயர்களை போப் ஆண்டவர் அனுமதித்திருந்தது, அம்பலமானது.


சமயவாதிகள் என சமூகத்தில் அறியப்படும் மேற்படியானவர்கள் அவ்வப்போது குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், மாட்டிக் கொள்வதும் அன்றாடச் செய்திகளுள் ஒன்றாகி விட்ட இன்றைய சூழலில், மக்கள் இந்தச் சாமியார்களிடம் சென்று சிக்கிக் கொள்ளும் நிலை, அதிகரித்துள்ளதன் காரணத்தை ஆராய்வது நமக்கு அவசியம்.


நித்தியானந்தரின் மோசடி அம்பலமானவுடன், தமிழக முதல்வர் கருணாநிதி திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‘என்ன தான் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தாலும் இந்த மக்கள் திருந்தப்போவதில்லை’ என்றும் தெரிவித்திருந்தார். நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து தேர்தலில் போட்டியிடும், தன் ‘கழகக் கண்மணி’களைக் கூட பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து, திருத்த முடியாத கருணாநிதியின் அறிக்கை வேடிக்கையானது.

மோசடி சாமியார்களை அம்பலப்படுத்தும் விதமாக செய்திகள் வெளியிட்ட காரணத்தால், ஊடகங்களுக்கு, ஏதோ சமூகப் பொறுப்புணர்வு வந்துவிட்டதாக நாம் கருதிக் கொண்டால் அது பிழையே ஆகும்.

சாமியார்களின் புனிதப் பிம்பத்தை உடைத்தெறியும் முன்பு, கோடிகளில் திரைமறைவு பேரம் நடத்தப்பட்டு, அதில் உரிய விலை கிடைக்கப் பெறாத காரணத்தினாலேயே, இந்த மோசடிச் சம்பவங்கள் வெளியிடப்பட்டிருக்கக் கூடும். பரபரப்புக் காட்சிகளை வெளியிட்டுக் காசாக்குவதில் கைதேர்ந்த, ஊடகங்களுக்கு இதில் நிச்சயம் பங்கு இருந்திருக்கும்.

ஏனெனில், நித்தியானந்தரோ, கல்கியோ சாதாரணமானவர்கள் அல்லர். பல்வேறு நாடுகளில் தனது ஆசிரமங்களின் கிளைகளைப் பரப்பி, அதிகார வர்க்கத்தினருடன் கை குலுக்கி நின்றவர்கள். முற்றும் துறந்த துறவிகளான இவர்களின் சொத்துகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஈடானவை. உலகமய காலகட்டத்திற்கு முன்பிருந்த, குறிச்சொல்லும் காவிச் சாமியார்களல்ல இவர்கள். மாடமாளிகைகள் போல ஆசிரமங்கள் அமைத்துக் கொண்டு, கண்டம் விட்டு கண்டம் பறந்தோடி, கோடிகளில் விளையாடுகின்ற நவீன உலகமய சாமியார்கள் தான் இவர்கள்.

நித்தியானந்தர் போன்ற மோசடிச் சாமியார்கள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளும் விதமாக முன்னின்று உழைத்த ஊடகங்கள், இன்று அவர்களது மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும் முன்னிற் கின்றன. ‘கதவைத் திற காற்று வரட்டும்’ என்ற தொடர் மூலம் நித்தியானந்தாவிற்கு அடையாளம் கொடுத்த ‘குமுதம்”, அவரது காமலீலைகளை தம் இணையதளத்தில் வெளியிட்டு காசு சம்பாதிக்கவும் கூச்சப்படவில்லை. ‘நாங்களும் ஏமாந்து விட்டோம்’ என்று அப்பாவி பக்தர்களைப் போல் இதற்கு ஒரு சமாதானமும் கூறிக் கொண்டது. ஊடகங்களின் இந்த கூச்சமற்றத் தன்மை தன்னிலிருந்து பிறந்ததில்லை. தம்மை இயக்கும் முதலாளியத்திலிருந்து பிறந்தது அது.

கடவுள் நம்பிக்கையின் பெயரால், சோதிடப்பலன், எண் கணிதம், கைரேகை என பல்வேறு நம்பிக்கைகளை வீட்டிற்குள் திணிக்கும் தொலைக்காட்சிகளும், அவற்றையே பிரதானமாகக் கொண்ட பத்திரிக்கைகளும், உழைக்கும் மக்களிடையே அவர்களது எதிர்காலம் குறித்த அச்சத்தை கிளறிவிடுகின்றன. இதன் விளைவாக, மக்கள் இது குறித்த ஆழ்ந்த சிந்தனையிலேயே விழுந்து கிடக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தமது மொழி, இனம், கல்வி, வாழ்வாதாரம் என சராசரி மனிதர்களின் உரிமைகள் அனைத்தும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இன்றைய உலகமயச் சூழலில், ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் இந்த ‘எதிர்காலம் குறித்த அச்சம்’ என்ற காரணி, மதங்களின் இருப்புக்கு உதவுகிறது.

முதலாளியத்தின் உழைப்புச் சுரண்டலால் தம் வசந்தங்களை இழந்து, ஒடுக்கப்பட்டு நிற்கின்ற உழைக்கும் மக்கள், தம் அவலங்களுக்கு காரணம் முதலாளியமே என்று எளிதில் உணர்ந்து விடுவதும் இல்லை. அவ்வாறு அவர்கள் உணராததற்கு முக்கியக் காரணியாக மக்களிடையே நீடிக்கும் கடவுள் நம்பிக்கையும் விளங்குகிறது. தாம் அறிந்து கொள்ள முடியாத பலவற்றுக்கும் கடவுளின் பெயரால் நியாயம் கற்பித்துக் கொள்கிற ‘சமரச’ மனநிலையே இதனை தீர்மானிக்கிறது.

இதன் பின்னணியில் தான், ‘தம் பிறப்பையும், தம் வாழ்வையும், தம் துன்பங்களையும் தீர்மானிப்பது கடவுள் தான்’ என்று, தமக்குத் தாமே கற்பிதம் செய்து கொள்ளுமாறு உழைக்கும் மக்கள் பணிக்கப்படுகின்றனர். அதனை அவர்கள் பெருமளவில் ஏற்றுக் கொண்டும் உள்ளனர்.

கடவுள் நம்பிக்கையின் பெயராலும், விதியின் பெயராலும், உழைக்கும் மக்கள் மீதான உழைப்புச் சுரண்டல் நியாயப்படுத்தப்படுவதனால் தனியுடைமை யானது மக்களிடம் நிலவும் கடவுள் நம்பிக்கையை நிறுவனமயப்படுத்துகிறது. மதநிறுவனங்களை வளர்த்து விடுகிறது.

உழைக்கும் மக்கள் மீதான உழைப்புச் சுரண்டல் தீவிரப்படுத்தப்பட்டு வரும் இன்றைய உலகமய காலகட்டத்தில், உழைக்கும் மக்கள் கொடுந்துன்பம் அடைந்து வருகின்றனர். வேலை வாய்ப்பில் ஒரு நிச்சயமற்ற நிலை, சிறு தொழில் - வணிக நிறுவனங்கள் தொடர முடியுமா என்ற நிச்சயமற்ற நிலை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மன உளைச்சலிலேயே உழல்பவர்கள் அதிகம். மக்கள் தம் துன்பங்களுக்கு மருந்து தேடி மத நிறுவனங்களிடம் சிக்குவதும் அதிகரித்துள்ளது. ஏழை எளிய மக்கள் தம் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள சிறு சிறு சாமியார்களிடமும், படித்த - நடுத்தர வர்க்க மக்கள் நித்தியானந்தர் போன்ற நவீன சாமியர்களிடமும் சிக்குகின்றனர்.

இதே காலகட்டத்தில் தான், சுரண்டும் மேட்டுக் குடியினர் தம் சுரண்டலின் மூலமாக கிடைத்த பணத்தை பதுக்கிக் கொள்ளவும், அந்தச் சுரண்டலுக்கு துணை போன அரசியல்வாதிகள் தம் கருப்புப் பணத்தை பதுக்கிக் கொள்ளவும் ஓர் இடமும் தேவைப்பட்டது. அவ்விடத்தையும் இந்த நவீன சாமியார்களே நிறைவு செய்தனர்.

சுரண்டி சேர்த்துப் பதுக்கியப் பணம் குறித்த கவலையால் நிம்மதியிழக்கும் மேட்டுக்குடியினர் “எதையோ” இழந்து விட்டதாகப் புலம்பியபடி இந்த நவீன சாமியார்களிடம் தான் வருகிறார்கள். அண்மையில், தில்லியில் ‘ஜீவ் முராத் திவிவேதி என்ற சாமியார் பகலில் யோகம், தியானம், சொற்பொழிவு என்று நடித்து விட்டு, இரவில் விபச்சாரத் தரகு வேலை பார்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்டு கைதான பெண்கள் பலரும் படித்த, நடுத்தர மற்றும் மேட்டுக்குடிப் பெண்கள் தான் என்பதும் தெரியவந்தது.

இந்த நவீன சாமியார்கள் குறிவைத்து, இழுப்பதும் இது போன்ற பின்னணி கொண்டவர்களைத் தான். பணக்கார வெளிநாட்டு பக்தர்களின் மனநிலையும் கூட அது தான். இவ்வாறு தான் இந்த நவீன சாமியார்கள் உருவெடுக்கிறார்கள்.

நாம் அன்றாட வாழ்வில் மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் முறைகள், பொருளியல் ரீதியாக தமக்குக் கீழானவர்களிடமும் அன்பு செலுத்துதல், வேலைப்பளு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கு தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி, மனம் திறந்து பேச ஏற்பாடு செய்தல், தமது மன உளைச்சலை போக்கும் விதமாக அவர்களை நடனம் ஆட விடுதல், வாய்விட்டு கத்தக் கூறுதல், ’பேரானந்தம்’ - ‘மகிழ்ச்சி’ போன்ற பற்பலப் பெயர்களிட்டு அவர்களை மனம் விட்டு சிந்திக்கக் கூறுதல். இவை தான் இந்த நவீன சாமியார்கள் செய்பவை. இதற்காக ஆயிரக்கணக்கில் அவர்கள் கட்டணம் வசூலிப்பதும் உண்டு. சொற்பொழிவுகளுக்கு, சில மணிநேரங்கள் அவருடன் கழிக்க, அவர் ஆசிர்வாதம் செய்வதற்கு என இலட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதும் உண்டு.

மன உளைச்சலுக்கு ஆளான தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் பலரும் இந்த நவீன சாமியார்களின் பிடியில் விழுவது இன்று அதிகரித்துள்ளது. மன உளைச்சலைப் போக்க அந்த சாமியார்கள் கொடுக்கும் பயிற்சிகள் எதுவும் தேவையில்லை. சின்னஞ்சிறு குழுந்தைகளிடம் குடும்ப உறவுகளிடமும் மனம் விட்டுப் பேசினால் கூட மன உளைச்சலைப் போக்கி விடலாம் ஆனால், கணினி, கைப்பேசி என நீண்ட நேரம் இயந்திரங்களுடன் இயங்கியே பழகி விட்ட, இவர்களுக்கு மனிதர்களுடன் பழகுவது அபூர்வமானதல்லவா? உயிரற்ற இயந்திரங்களுடன் வாழ்ந்து, உயிருள்ள இயந்திரங்களாகவே மாறிப் போன தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு இதற்கென்று நேரம் வேண்டும் அல்லவா? எனவே, இதற்கென தனியாக நேரம் ஒதுக்கி அவர்கள் நவீன சாமியார்களை நாடுகிறார்கள்.

“மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!” என்று சுவாமி சுகபோதானந்தா ஆனந்த விகடனில் எழுதியத் தொடர், இந்த நோக்கிலேயே எழுதப்பட்டது. 2008ஆம் ஆண்டு உலகமயப் பொருளாதாரப் பின்னடைவுக்குப் பின், உழைப்புச் சுரண்டல் தீவிரப்படுத்தப்பட்டதால், உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை போக்கும் விதமாக வெளிவந்த சின்னத்திரை சிரிப்பு நிகழ்ச்சிகள் வெற்றி பெற்றதன் பின்னணியிலும், உலகமயமே நிற்கிறது. கிராமங்களை அழித்த உலகமயம், நகரங்களில் இளைஞர்களை இடம் பெயர்த்ததன் பின்னணியில் தான், கிராமத்துக் கதைப் பின்னணி கொண்ட தமிழ்த் திரைப்படங்கள் வெற்றி பெற்று ஓடியதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். கிராம வாழ்வை இழந்த இளைஞர்கள் இவ்வாறான படத்தில் ஆறுதல் அடைகிறார்கள்.

இவ்வாறு, உழைப்புச் சுரண்டலால் மன உளைச்சலில் சிக்கித் தவிக்கும் மக்கள், பிறரோடு அன்பாக தாம் பேசுவதற்கும், பழகுவதற்கும் கூட ஓரு சாமியாரின் வழிகாட்டுதலுக்காக நிற்க வேண்டிய அவல நிலையை, உலகமயம் நமக்கு உருவாக்கித் தந்திருக்கிறது.

இந்தச் சாமியார்கள் இதற்கென பல்வேறு பயிற்சிகள் அளிப்பதோடு மட்டுமல்லாமல், உலகமயம் வலியுறுத்துகின்ற நுகர்வியப் பண்பாட்டையும், தம் போதனைகள் வாயிலாக புதிய வகையில் மக்கள் மனதில் புகுத்தும் வேலையை செய்கிறார்கள். இதற்காகவே, இவா;களை மேலும் ஊக்கமளித்து வளர்க்கின்றன, ஊடகங்கள். இந்த போதனையைத் தான் உலகமயமும் அதனால் பயன்பெறுகின்ற ஆளும் வர்க்கங்களும் விரும்புகின்றன.

‘இன்றுள்ள சமூக அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு யோசிங்கள்’ என்கிறது உலகமயம். அதனையே இந்த நவீன சாமியார்களும் வழிமொழிகிறார்கள்.

“அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் நீயும் நானும் தோழர்களே! என்று கூறிய சேகுவேராவின் கருத்து மிகவும் மோசமான கருத்து. அவரை இளைஞர்கள் முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது’’ என ஒரு நூல் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாகவே பேசினார் ஜக்கி வாசுதேவ்.

‘புவி வெப்பமயமாதலிலிருந்து உலகைக் காக்க மரம் நடுங்கள்’ என்று, மரங்கள் நடுவதற்கான திட்டம் தீட்டிய ஜக்கி வாசுதேவ், முதலாளிகளின் இலாப வேட்டைக்காக உலகெங்கும் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டதன் விளைவு தான் புவி வெப்பமயமாதல் என்ற உண்மையை பேசுவதில்லை. அதற்கெதிராகப் போராடுவதும் அவரைப் பொறுத்தவரை “வன்முறை கருத்து”.

அதாவது, ‘போராட்டம் என்பதே கூடாது. ஒவ்வொரு தனிமனிதரும் அவரவர் வாழ்க்கையை ஒழுங்காய் நடத்தினால் போதும்” என்று கூறி, மனிதர்களை குழுவாக இயங்க விடாமல் செய்து, உதிரிகளாக்கிட விரும்புகின்ற முதலாளியத்தின் குரலைத் தான் இந்த நவீன சாமியார்கள், “உள்ளுணர்வு”, “தனிமனித ஒழுக்கம்’, “தன்னிலிருந்து யோசி” என்று பல்வேறு வடிவங்களில் கூறுகிறார்கள்.

இலாப வேட்டைக்காக காத்து நிற்கும் உலகமயம், ‘அனைத்துப் பொருட்களையும் நுகருங்கள்’ எனக் கூறுகின்றது. அதனையே, “அத்தனைக்கும் ஆசைப்படு” என்கிறார்கள், இந்த நவீன சாமியார்கள்.

‘பாலியல் சுதந்திரம்’ என்ற பெயரில் கட்டுப்பாடற்ற பாலியல் உறவுகளை வளர்க்கக் கோருகிறது உலகமயம். இதன் மூலம், குடும்ப உறவுகளை சிதைத்து, மனிதர்களை உதிரிகளாக்கி இலாபம் கொழுக்கவும் அது திட்டமிடுகிறது. இதனையே வழிமொழிந்து, ‘உன்னை மட்டும் யோசி, உன்னிலிருந்து தான் எல்லாம் பிறக்கிறது’’ என்று போதிக்கிறார்கள் நவீன சாமியார்கள். ”இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்; மாற்ற முயலாதே” என்பதும் சிறீ சிறீ ரவிசங்கரின் உபதேசம்.

பெருமளவில் நிதிக்குவிந்து நிறுவனமயமான காரணத்தால் இந்த நவீன சாமியார்களுக்கு எளிதில் அரசியல் செல்வாக்கும் வந்து சேர்கிறது. சந்திராசாமி, ஜெயேந்திரர் போன்ற மோசடி சாமியார்கள் ஒரு நாட்டிற்குள் உள்ள அரசியல்வாதிகளுக்கு இடையே தரகு வேலை பார்க்கும் நிலை மாறி, இன்று சிறீ சிறீ ரவிசங்கர் போல பல நாடுகளுக்கு இடையே தரகு வேலை பார்க்கும் நிலையாக இந்த நவீன சாமியார்களின் நிலை முன்னேறியுள்ளது.

மதங்களைக் கடந்த ஆன்மிகம் என இந்த நவீனச் சாமியார்கள் கூறினாலும், அவர்கள் மூழ்கிக் கிடப்பதென்னவோ இந்துத்துவ அரசியலில் தான். இதனை அவர்களது, இந்துமத சார்பு - வடமொழி சார்பு நிலையை மட்டும் வைத்து உணர்த்தவில்லை. நேரடியான அரசியல் நடவடிக்கையின் மூலமாகவே உணர்த்தியிருக்கின்றனர்.

சிறீ சிறீ ரவிசங்கர், ராமர் பாலத்தை முன்னிறுத்தி சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்துக் கொண்டுள்ளார். இட ஒதுக்கீட்டையும் ரவிசங்கர் எதிர்க்கிறார். நித்தியானந்தர் தலைமறைவானதும் இந்து மதவெறிக் கட்சியான சிவசேனாவின் தலைவர் தான் செய்தியாளர்களை சந்தித்தார்.

எனவே, இந்த நவீனச் சாமியார்களின் குற்றங்களை தனிநபர் குற்றங்களாக மட்டும் கருதாமல் அதனை சமூகப் பின்னணியுடன் தொடர்பு படுத்தி ஆராய்தலே நமக்கு உண்மைக் குற்றவாளியை அடையாளம் காட்டும்.

வரம்பற்ற வேலை நேரம், தலையை கொதிக்க வைக்கும் வேலைச்சுமை, எந்த நேரத்திலும் வெளியில் வீசப்படலாம் என்ற நிலை இவற்றுக்கிடையே உயர் ஊதியத்திற்காக பணியாற்றிக் கொண்டு, குடும்ப உறவை, மன அமைதியை, சமூக வாழ்க்கையை இழந்து தவிக்கும் உயர் நடுத்தர இளைஞர்களுக்கு உடனடி நிவாரணமாக பலவித போதைகள் வழங்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், இந்த உலகமய உயர்நுட்ப சாமியார்களின் உபதேசங்கள். காரணங்களைப் போக்காமல் விளைவுகள் மீது கவனத்தைத் திருப்பும் உலகமய உத்திகளில் ஒன்று தான் சாமியார்களின் வளர்ச்சி.

இதைப்புரிந்து, காரணங்களுக்கு எதிராகப் போராடுவதே மக்கள் விடுதலைக்கு வழி.

(தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் ஏப்ரல் 2010 இதழில் வெளியான கட்டுரை)

குறிப்பிடத்தக்க பதிவுகள்