Saturday, March 26, 2011

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கரம் நம்மூரில் நடக்காதா? குமுதம் இதழில் வெளியான பேட்டி!

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கரம் நம்மூரில் நடக்காதா? அருணபாரதி கேள்வி!

புவிவெப்பமயமாதல் மற்றும் கடல் அரிப்பு காரணமாக தமிழகத்தின் பல்வேறு கிராமங்கள் கடலுக்குள் மூழ்கி வருகின்றன. இது குறித்து விளக்கும் 'வெப்பம்" என்று பெயரிடப்பட்ட ஆவணப்படத்தை இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் க.அருணபாரதி இயக்கி வருகின்றார். இளந்தமிழர் இயக்கமும் பன்மைவெளி வெளியீட்டகமும் இணைந்து இந்த ஆவணப்படத்தை தமிழகமெங்கும் கொண்டு செல்ல உள்ளது.

ஆவணப்படத்தின் தயாரிப்புப் பணிகள் நிறைவுற்று விரைவில் இந்த ஆவணப்படம் வெளிவரவுள்ளது. இது குறித்த தோழர் அருணபாரதியின் செவ்வி இவ்வார 'குமுதம்" எட்டில் வெளி வந்துள்ளது.
 
"குமுதம்" இதழில் வெளியான அப்பேட்டி:
 
சுனாமியில் ஜப்பான் நகரங்கள் அழிந்தது போல், சத்தமில்லாமல் நம்ம ஊர் கிராமங்களும் கடலுக்கு இரையாகிக் கொண்டிருக்கும் செய்தி கேட்டு விரைந்தோம்.அவை பாண்டிச்சேரி அருகில் இருந்தாலும் விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் வருகின்றன.
 
முதலில் சின்னமுதலியார்சாவடி, திருவொற்றியு+ர், சீனிவாசபுரம், தேவனாம்பட்டினம், உவரி என கடல் அரிப்பால் கரைந்து கொண்டிருக்கிற ஊர்களின் பட்டியலில் இப்போது சின்ன முதலியார்சாவடி. கிராமத்தைத் தொட்டவுடன் நம் கண்களில் படுவது, ஊரையெ மூழ்கடித்துவிடும் ஆசேவத்தில் மிக அருகில் ஆர்ப்பரிக்கிற கடல்தான்.ஊரின் கடைக்கோடியில் இருந்த வீடுகள் அனைத்தும் சிதிலமாகிக் கிடக்கின்றன.
 
பாதி நிர்மூலமாகிவிட்ட வீட்டுக்குள் உட்கார்ந்து ஒரு பெரியவர் சகஜமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார். "உங்க வீடு எங்கே?" என சிலரிடம் கேட்டால், கடலை நோக்கி கைகாட்டுகிறார்கள். கடந்த மூன்று வருடங்களுக்குள் இவர்களின் வீடுகள் கடலுக்குள் போய்விட்டன. காரணம் கடல் அரிப்பு! கடல் அலைகள் இங்கே 160 வீடுகளைக் கலைத்துப்போட்டுவிட்டதாம். மொத்தத்தில் இந்த ஊர் வேகமாக கடலுக்குள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.
 
ராஜேந்திரன் என்ற மீனவரிடம் பேசினோம். "ரெண்டு வரு'த்துக்கு முன்னால் எங்க ஊர்லருந்து கடல் 100 மீட்டர் தொலைவில் இருந்துச்சு. இப்போ உள்ளே வந்து, வீடுகளை அடிச்சு, இன்னும் வேகமா நெருங்கிட்டிருக்கு. அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கிற மழைக்காலங்கள்லதான் கடல் வீடுகளை அடிச்சுட்டுப் போயிடுற சேதாரம் அதிகம் நடக்குது" என்று சோகத்துடன் சொல்கிறார்.
 
கடலின் அடுத்தகட்ட தாக்குதலுக்கு வசதியான பாக்கியத்தின் வீடு இருக்கிறது. "போன வரு'ம் கடல் தண்ணி எதிர்வீட்டுல புகுந்ததுல வீடு திடீர்னு இடிஞ்சு விழுந்துடுச்சு கீழே விழுந்த கவர்களுக்கு நடுவுல என் பையன் சிக்கிக்கிட்டான். பையன் காலை அறுத்துதான் எடுக்கணுமோங்கிற அளவுக்குப் பயந்துட்டோம். காயம் ஆறி அவன் வேலைக்குப் போக ரெண்டு மாசம் ஆச்சு" என்கிறார் பாககியம்.
 
அருகிலுள்ள தந்திராயன்குப்பம், பொம்மையார்பாளையம் ஆகிய கடலோரக் கிராமங்களையும் கடல் வேகவேகமாக விழுங்கி வருகிறது. இவற்றில் தந்திராயன்குப்பத்தில் கடலோரத்தில் இரு பக்கமும் கற்சுவர் எழுப்பி, தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளதால் கடல் அரிப்பு கொஞ்சம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பக்கத்தில் உள்ள கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டால், அண்மைக் கிராமங்களை நோக்கி கடல் நீரோட்டம் திரும்பி, அங்கே கடல் அரிப்பு அதிகமாகும் என்பது இன்னொரு வேதனை.
 
கடல் அரிப்பால் காணாமல் போகும் இந்தக் கிராமங்களைப் பற்றி ஐ.டி. ஊழியரும் சமூகச் செயல்பாட்டாளருமான அருணபாரதி "வெப்பம்" என்ற ஆவணப்படம் எடுத்து வருகிறார்.
 
அவர் சொல்லும் தகவல்கள் உணர்த்தும் ஒரே செய்தி, "நிலைமை கைமீறிப் போகிறது!".
 
"கடல் அரிப்பை மீனவர்களின் பிரச்சினையாவே பலர் பார்க்குறாங்க. அது மொத்த தமிழகத்துக்கான பிரச்னை. மீனவ கிராமங்களை விழுங்கிட்டு, கடல் ஊருக்குள்ள தானே வந்தாகணும்?
 
1989-இல் புதுச்சேரியில் கடலின் இயற்கை நீரோட்டத்தை மறிச்சு கட்டப்பட்ட மீன்பிடித் துறைமுகம் இந்தக் கடல் அரிப்புக்கு முதல் காரணம். இது போன்ற உள்ளுர் பிரச்சினைகளை விட முக்கியக் காரணம் புவிவெப்பமயமாதல்.
 
பு+மியின் வெப்பம் கூடிட்டே போறதால், உலகம் முழுக்க பல பனிமலைகள் உருகிட்டிருக்கு. அதனால் கடல்களின் நீர்மட்டம் அதிகரிச்சுட்டே இருக்கு. இந்தியாவின் நீண்ட கடலோர மாவட்டங்களைக் கொண்ட மூன்றாவது பெரிய மாநிலம் தமிழகம் தான். அதனால் கடல்மட்ட உயர்வால் தமிழகத்தில் பாதிப்புகள் அதிகமாவே இருக்கும்.
 
கடலோரத்தில் கட்டப்பட்டிருக்குற கல்பாக்கம் அணுஉலை, கூடங்குளம் அணுமின் நிலையம் போன்றவை கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்பட்டால், இப்போ ஜப்பானுக்கு ஏற்பட்ட பயங்கரம் நம்மூரில் நடக்காதுன்னு அரசால் உறுதியாகச் சொல்ல முடியுமா?" என்று கேட்கிறார் பாரதி.
 
கேள்வி சரிதான். பதில் யார் தருவார்?
 
நன்றி: குமுதம்

விரைவில் வெளிவரவுள்ள இந்த ஆவணப்படத்தில் தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் தோழர் கி.வெங்கட்ராமன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் தோழர் கோ.சுகுமாரன், இளந்தமிழர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினரும் இயற்கை வேளாண் உழவருமான தோழர் ம.செந்தமிழன் ஆகியோரது செவ்விகள் இடம்பெற்றுள்ளன.

கல்லூரி மாணவர் பிரகாஷ் இந்த ஆவணப்படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கிறார். வெப்பமயமாதல் குறித்து, இந்த ஆவணப்படத்திற்காக கவிஞர் கவிபாஸ்கர் எழுதியப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.




Wednesday, October 27, 2010

இந்தியாவே வெளியேறு - க.அருணபாரதி


‘இந்தியாவே வெளியேறு’ என்ற ஒற்றை முழக்கம் ஜம்மு - காசுமீர் பள்ளத்தாக்குகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்திய அரசின் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக காசுமீர் மக்களின் போராட்டம், மீண்டும் வெடித்துக் கிளம்பியிருக்கிறது.

காசுமீரி தேசிய இனத்தவரின் தாயகமான காசுமீரை, ஆக்கிரமித்த இந்தியா, அங்கு தன் இராணுவத்தை நிறுவி பேயாட்சி நடத்தி வருகின்றது. பதவிக்காகவும், பணத்திற்காகவும் இன உரிமையை விலை பேசுகின்ற, தேர்தல் கட்சிகளை வைத்துக் கொண்டு அங்கு சனநாயகம் தழைத்தோங்குவதாக இந்திய அரசு வெளியில் பொய் சொல்லி வருவதை இப்போராட்டங்கள் அம்பலப் படுத்துகின்றன.

1 இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத் தினரையும், சி.ஆர்.பி.எப். எனப்படுகின்ற நடுவண் காவல் படையினர் சுமார் 70,000க்கும் மேற் பட்டோரையும் காஷ்மீர் மண்ணில் குவித்து வைத்துக் கொண்டு அங்கு சனநாயக ஆட்சி நடைபெறுவதாக கூறுகின்றது, இந்திய அரசு. நடைமுறையில் அங்கு இராணுவ ஆட்சியே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து அத்துமீறல்களிலும், அடாவடித்தனங்களிலும் ஈடுபட்டு வந்ததன் காரணமாக, 2005ஆம் ஆண்டு நடுவண் துணை இராணுவப் படையினர் திரும்பப் பெறப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், அதற்கென ஒரு சிறுதுரும்பைக் கூட இந்திய அரசு இதுவரைக் கிள்ளிப் போடவில்லை.

பாகிஸ்தானும் தன் பங்கிற்கு அம்மண்ணை, தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. காசுமீரிகளின் தாயகமான காசுமீரை இந்தியாவும், பாகிஸ்தானும் பங்குபோட்டுக் கொண்டு உள்ளன.

இவ்விரு அரசுகளும், தங்களது ஆக்கிரமிப்பு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக பல போராளிக் குழுக்களை தானே உருவாக்கியும் இருந்தன. இந்தக் குழுக்களிடையே நடைபெறும் மோதல்களை முன்னிறுத்தி, காசுமீர் தாயகத்தின் விடுதலைக்காகப் போராடும் இயக்கங்களை இவ்விரு அரசுகளும் இணைந்தே ஒடுக்கி வந்துள்ளன.

தம் மண்ணை மீட்கப் போராடுகின்ற காசுமீர் விடுதலை இயக்கங்களுக்கு தீவிரவாத முத்திரைக் குத்துவதும், அதற்கு இந்து - முஸ்லிம் மதவாத சாயம் பூசுவதும், ஏகாதிபத்தியங்களின் சதி என்று இட்டுக் கட்டுவதுமாக தொடர்ந்து காசுமீர் விடுதலைப் போராட்டம் இவ்விரு அரசுகளால் ஒடுக்கப்பட்டு வருகின்றது.

போலி மோதல் என்ற பெயரில் அப்பாவி காசுமீர் மக்களும், காசுமீர் விடுதலைப் போராளிகளும் சுட்டுக் கொல்லப்படுவது தொடர்கதையாகவே நடந்து வருகின்றது. இந்தியப் படையினர் காசுமீரிப் பெண்களை வல்லுறவு கொள்வதும் அன்றாடம் தொடர்கிறது.

இந்திய இராணுவத்தின் இந்த அத்து மீறல்களுக்கு எதிராக, விடுதலை வேட்கையோடு காசுமீர் மக்கள் அவ்வப்போது போர்க் குணமுள்ள போராட்டங்களையும் முன்னெ டுத்தே வருகின்றனர். பல் வேறு மனித உரிமை ஆர்வலர் களும், பத்திரிக்கை யாளர்களும் இந்திய அரசின் இந்த அடக்குமுறை களுக்கு எதிராகத் தொடர்ந்து குரலெழுப் பியும் வருகின்றனர்.

இந்நிலையில் தான், கடந்த 30.04.2010 அன்று மச்சீல் செக்டர் என்ற பகுதியில், வீடு ஒன்றில் ‘தீவிரவாதிகள்’ பதுங்கி யிருப்பதாகக் கூறி, மூவர் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

விசாரணையில் சுட்டுக் கொல்லப்பட்ட மூவரும் ரபியாபாத் பகுதியிலிருந்து இராணுவத்தினரால், கடத்திக் கொண்டு வரப்பட்ட அப்பாவிகள் எனத் தெரிய வந்தது. பதவி உயர்வுக்காக இராணுவ மேஜர் உபேந்தர் என்பவன் அந்த போலி மோதலுக்கு உத்தரவிட்டிருந்ததும் அம்பலமானது. இது தொடர்பான இராணுவ அதிகாரிகளின் பேச்சுகள் ஊடகங்களில் வெளியாயின.

குற்றச்சாட்டுகள் உறுதியான பின், இந்த போலி மோதலை நிகழ்த்திய, இராணுவப் படையைச் சேர்ந்த அப்பாஸ், இராணுவத்திற்கு தகவல் கொடுக்கும் பஷிகர் அகமது, அப்துல் ஹமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேஜர் உபேந்தர் தலைமறைவானார். அவரை காவல்துறை இன்னும் தேடி வருகிறதாம்.

இந்தியத் தேசிய வெறியின் நிழலில் இந்த படுகொலைகள் மூடிமறைக்கப் படுவதும், இந்தியத் தேசப் பக்தியின் பெயரால் இப் படுகொலைகள் நியாயப் படுத்தப் படுவதும், இந்த போலி மோதலை விடக் கொடுமையானது.

தற்போது நிகழ்த்தப்பட்ட இந்த போலி மோதலையடுத்து, காசுமீரெங்கும் இந்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனக் குரல்கள் ஒலித்தன. இந்திய இராணுவத்தின் அடாவடித்தனத்திற்கு எதிராக, 11.06.2010 அன்று பாரமுலா மற்றும் சிறீநகர் மாவட்டங்களில், ஆர்ப் பாட்டம் நடத்திய பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது நடுவண் துணை இராணுவப் படை. அதில் பள்ளிக்கு சென்று கொண் டிருந்த 16 வயது மாணவன் துஃபைல் அகமது சுட்டுக் கொல்லப் பட்டான். பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், 25.06.2010 அன்று சுபோரில் பகுதியில் மீண்டும் ஒரு போலி மோதல் நிகழ்த்தப்பட, அதில் அப்பகுதியைச் சேர்ந்த 2 பேர் ‘தீவிரவாதிகள்’ என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல் களைக் கூட உறவினர்களிடம் ஒப்படைக்க மறுத்தது, இந்திய இராணுவம். இந்நிலையில் அவர் களது உடலை ஒப்படைக்கக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில், அஹமத் பட் என்ற 9 வயது சிறுவனின் உயிரைக் குடித்தன, துப்பாக்கிக் குண்டுகள்.

இவ்வாறு, ஜூன் 11 லிருந்து 27 வரை தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது மட்டும், 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். போராடிய மக்கள் மீது நடுவண் துணை இராணுவப் படை துப்பாக்கிச் சூடு நடத்தியதை, காசுமீர் மாநில அரசின் சட்ட அமைச்சர் அலி முகம்மது சாகர் கூட கண்டித்தார். நியாயம் கேட்டுப் போராடிய மக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள், மக்களை மேலும் மேலும் கொதிப் படையச் செய்தன. ஊரடங்கு உத்தரவுகளையும் மீறி மக்கள் ஒன்றுகூடிப் போராடினர்.

இந்திய இராணுவத்தின் இக்கொடுஞ்செயல்களைக் கண் டிக்கும் வகையில், ஜம்மு - காசுமீர் விடுதலை முன்னணி, ஹூரியத் மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்புப் போராட்டங்களை நடத்தின. காவல் துறையும், நடுவண் துணை இராணுவப் படையும் இணைந்து, இப்போராட்டங்களின் போதும் வன்முறையை ஏவின. இப் போராட்டங்களை நடத்திய ஜம்மு - காசுமீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக், ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்கள் மீர்வாஜ் உமர் பாரூக் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். தலைவர்கள் கைது செய்யப்பட்ட போதும், போராட்டங்கள் தொ டர்ந்தன.

இப்போராட்டங்களின் போது காசுமீரி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஓங்கி உச்சரித்த ஒரே முழக்கம் ’இந்தியாவே வெளியேறு” என்பது தான்.

காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா இப்போராட்டங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக வெட்கமின்றிப் புளுகித் தள்ளினார். இந்தப் புளுகலை அப்படியே ஒப்பிவித்தது பார்ப்பன பாரதிய சனதா கட்சி. பாதுகாப்புப் படை யினர் மீது விசாரணை செய்வதை விட ‘பிரிவினைவாத’ அமைப்புகள் மீது முதலில் நடவடிக்கை எடுங்கள் என்றார், பா.ச.க. செய்தித் தொடர்பாளர் அருண் ஜெட்லி. அதனை அப்படியே வழி மொழிந் தார், நடுவண் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

போலி மோதல்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் கடுமை யாக தண்டிக்கப்பட வேண்டும். காசுமீரில் குவிக்கப்பட்டுள்ள நடுவண் துணை இராணுவப் படை யினரும், இந்திய இராணுவத்தினரும் திரும்பப் பெற வேண்டும். இந்திய அரசு காசுமீர் மண்ணை விட்டு முழுவதுமாக வெளியேற வேண்டும். இதுவே காசுமீர் மக்களின் நலன் விரும்புகின்ற, மனித நேயர்களின் கோரிக்கையாகும்.
(தமிழ்த் தேசத் தமிழர் கண்ணோட்டம் ஆகஸ்ட் 2010 இதழில் வெளியான கட்டுரை)

Friday, October 01, 2010

நடந்தேறியது என் திருமணம்..!


தோழருக்கு வணக்கம்...!


அவசரமாய் நடந்ததால், அழைப்பிதழ் அச்சடிக்கவில்லை. மேளதாளங்கள் இல்லை. ஆனாலும், எளிமையாக இனிமையாக நடந்தேறியது என் திருமணம்..!



இரு வீட்டுப் பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி நடந்த இந்த திருமணம், முறைப்படி தஞ்சை மாவட்ட பதிவு அலுவலகத்தில் 21.09.2010(செவ்வாய்க்கிழமை) அன்று காலை பதிவு செய்யப்பட்டது. 23.09.2010 அன்று தஞ்சையில் எளிமையான முறையில் தமிழ்த் தேசிய இன உணர்வாளர்கள் முன்னின்று, சரோஜ் நினைவகத்தில் வரவேற்பு நிகழ்வை நடத்தி வைத்தனர்.

திருமண வரவேற்பு நிகழ்வுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர். பழ.இராசேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ் இன உரிமைப் போராட்டங்களில் பங்கெடுத்து அதிக முறை சிறை சென்றவரும், தஞ்சை த.தே.பொ.க. நகரச் செயலாளருமான தோழர் இராசு.முனியாண்டி வரவேற்புரையாற்றினார்.

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளருமான தோழர் பெ.மணியரசன், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணையாசிரியரும், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகருமான தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, இளந்தமிழர் இயக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ம.செந்தமிழன், கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினரும், திரைப்படபாடலாசிரியருமான கவிஞர் கவிபாஸ்கர், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு, வழக்கறிஞர் கரிகாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிப் பேசினர்.

தமிழ் மொழியை புறந்தள்ளி வடமொழியை முன்னிறுத்தும் புரோகித முறையை புறந்தள்ளியும், பெண்களை அடிமைப்படுத்தும் தாலியை அணிவிக்காமலும் தந்தைப் பெரியார் காட்டிய சீர்திருத்த வழியில் இத்திருமணம் இனிதே நடந்தது.

என்னை பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருக்கும் தோழர்களுக்கு, எனது துணைவியார் சத்யாவையும் அறிமுகப்படுத்தி வைப்பதில் மகிழ்கிறேன்.

நன்றியுடன்,

க.அருணபாரதி


குறிப்பிடத்தக்க பதிவுகள்