Sunday, February 24, 2008

சிறையில் உடைத்த செந்தமிழ் - கவிபாஸ்கர் கவிதை

சிறையில் உடைத்த செந்தமிழ்
மொழிப்போர் நாளில் சிறையில் எழுதிய கவிதை
கவிஞர் கவிபாஸ்கர்

என்
இனத்தின் சொத்து;தமிழுக்கு
சேதம் விளைவிக்கிறது
இந்தி, ஆங்கிலம்

நாங்கள்
பொதுச்சொத்தை
சேதம் செய்ததாய்
எங்களை பொய்வழக்கு
அழைக்கிறது...

இரவு பண்ணிரென்டு மணி
இரும்புக் கதவு
இருமாப்பாய் நின்று கொண்டு
சிறைக் கொட்டடிக்கு
வரவேற்றது...

ஆடையை கழட்டி
அடையாளம் கேட்டன
காக்கிச் சட்டைகள்
அணிந்த ஆடையை
கழட்ட மறுத்தோம்
சாதியை கேட்டதும்
சொல்ல மறுத்தோம்

வரிசையாய்
நிற்க வைத்து
கருப்பு இருட்டுக்குள்
அழைத்துச் சென்றார்கள்
கம்பிகளால்
கட்டப்பட்ட வேறோரு
தேசம் - சிறை...

தள்ளினார்கள்
தடுமாறி உள்ளே புகுந்தோம்

நிற்பதற்கே இடமில்லை
குற்றங்கள் செய்த
மனிதக் கும்பல்
கும்பகரணத் தூக்கத்தில்
குறட்டை விட்டன...
தூங்க இடமின்றி
தூங்கினோம்...

பீடிப்புகை
நுரையீரலில்
ஆணி அடித்தது
கஞ்சா நெடி
மூளையின் முகவரி
கேட்டது

கழிவறை நாற்றம்
மூக்குத் துளையில்
ஊசிப்போட்டது
இருமல் சத்தம்
காதுகளைத் திருகி
காயம் செய்தது..

விடியவே இல்லை
தட்டி எழுப்பினார்கள்
உட்கார வைத்து
கணக்கு பார்த்தனர்
குற்றங்கள் செய்த
கூட்டத்திற்கு நடுவில்
நாங்களும் நிரம்பினோம்

சாப்பிடுவதற்கு
தட்டுயில்லை
குடிப்பதற்கு குளிப்பதற்கு
குவளையில்லை...

'போராட்டம்' செய்து
உள்ளே வந்தோம்
உள்ளே சென்று
போராடினோம்
உணவை மறுத்து...

தேநீர்
நிறமிழந்த தேநீரை
சாப்பிடும் தட்டில்
குடித்தோம்
குடிக்கும் குவளையில்
குழம்பும்
குளிக்கும் குவளையில்
சோறுமாய் - துருபிடித்த
உணவை கூடி உண்டோம்

தூக்கத்தை
யாரிடமாவது
கடனாய் வாங்கி
தூங்கலாம் போலிருந்தது

கொசுக்களுக்கு
இரத்தம் கொடுத்தோம்
ஆயுள் கைதிகளுக்கு
ஆறுதல் சொன்னோம்

செய்யாத தவறுக்கு
செத்து வாழும்
மனிதருக்கு - நம்பிக்கை
உயிர் கொடுத்தோம்
இருந்த நாளில்
இதயம் மலர
மனிதம் வளர்த்தோம்

கொலை, திருட்டு
கற்பழிப்பு, சாராயம்
'நிபந்தனையின்றி'
வரிசையாய் - உள்ளே
வலம் வருகின்றன

இந்தியை, ஆங்கிலத்தை
தார்பூசி அழித்த
என் செம்மைத் தமிழ்
பூட்டியக் கதவை
உடைத்துக் கொண்டு
'நிபந்தனையில்'
வெளியே போராட வருகிறது
----------------------------------------------------------------
மொழிப்போர் நாளில் தஞ்சை அஞ்சல் மற்றும் தந்தி தலைமை அலுவலகத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி மற்றும் ஆங்கில எழுத்துகளை தார்பூசி அழித்த போராட்டத்தில் கலந்து கொண்டு திருச்சி நடுவண் சிறையிலடைக்கப்பட்ட போது எழுதிய கவிதை (25-02-2008).
நன்றி : தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 2008 மாத இதழ்

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்