நேற்று(01.03.2015) மாலை, சென்னை - ஆவடியில் உள்ள இந்திய அரசின் திண்ணூர்தித் தொழிற்சாலை [H.V.F. - O.C.F.]த் தொழிலாளர்களால் நடத்தப்படும் “தமிழர் நலக்கழகம்” அமைப்பின், நான்காம் ஆண்டுவிழா சிறப்புக் கூட்டத்திற்கு, வாழ்த்துரை வழங்க அழைக்கப்பட்டிருந்தேன்.
கூட்டத்தில், அய்யன் திருவள்ளுவர், பாவாணர், சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் ஆகியோரது திருவுருவப்படங்கள் திறந்து வைக்கப்பட்டன. உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந. அரணமுறுவல், மறைமலையடிகள் அவர்களின் மகன் திரு. தி. தாயுமானவன், தமிழர் தேசிய முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் செ.ப.முத்தமிழ்மணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்று, உரையாற்றினேன்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், நான் கலந்து கொண்டு பேசினேன்.
ஆவடியில் உள்ள இந்திய அரசுத் தொழிற்சாலை என்பது, தமிழர்களின் நலனுக்காக - தமிழர்களின் வாழ்வாதாரத்திற்காக - தமிழகத்தில் நிறுவப்பட்டத் தொழிற்சாலை. ஆனால், அத்தொழிற்சாலையில் தமிழர்களுக்கு மிகப்பெரும் அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவிலான பொறியியல் மற்றும் தொழிற்பயிற்சி(ITI மற்றும் Polytechnic) கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால், ஆவடியிலோ அதிகளவிலான அயல் இனத்தார் பணியில் அமர்த்தப்பட்டுக் கொண்டுள்ளனர். தொடர்ந்து, இதற்கு எதிராகப் பலப் போராட்டங்களை நாம் நடத்தி வந்துள்ளோம். எனினும், இப்போக்கு தொடர்கின்றது.
தற்போது, கிடைத்துள்ள புதிய ஆதாரங்களின்படி, ஆவடி தொழிற்சாலை நிர்வாகத்தால் நடத்தப்படும் தொழிற்பழகுநர் பயிற்சிப் பள்ளியில் 70 விழுக்காட்டினர் அயல் இனத்தார் என்று தெரியவந்துள்ளது.
தமிழர்களின் பல்லாயிரக்கணக்கான நிலத்தில் - நீரை உறிஞ்சி - தமிழர்களின் உழைப்பை உறிஞ்சி உருவான அந்தத் தொழிற்சாலையில், தமிழர்களுக்கு இடமில்லை எனில், எதற்காக அத்தொழிற்சாலை?
எனவே, ஆவடியில் இந்த அநீதிக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டுமென அங்குள்ள அனைத்து அமைப்புத் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துப் பேசினேன். விரைவில், அதற்கான செயல்திட்டங்களில் இறங்குவோம்!
தமிழகத்தின் இந்திய அரசுத் தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என முழங்குவோம்!
தோழமையுடன்,
க.அருணபாரதி
பொதுச் செயலாளர்,
தமிழக இளைஞர் முன்னணி.
பேச: 9841949462