Tuesday, February 13, 2007

தமிழர்களுக்கெதிராக கன்னடர்கள் அட்டகாசம்

தமிழர்களுக்கெதிராக கன்னடர்கள் அட்டகாசம், 'ஞே' என வேடிக்கை பார்க்கும் தமிழ்நாட்டுத் தமிழர்கள்


 

அமெரிக்காவில் குண்டு வெடித்தால் ஐரோப்பாவிலும் அது எதிரொலிக்கிறது, ஈராக்கில் குண்டு விடித்தால் மேல்விசாரத்தில் தூக்கம் கெடுகிறது, காஸ்மீரத்துப் பண்டிதர்களுக்காகக் கூடக் குரலெழுப்பினார்கள் சிலர், ஆனால் பெங்களூரில் தமிழர்கள் வீடுகள் எரிந்தாலும், கன்னடர்களின் பயமுறுத்தலாலும், ஆர்ப்பாட்டங்களாலும் தமிழர்களைப் பயந்து நடுங்கச் செய்து, தமிழர்களின் வியாபாரங்களை மூடச் செய்தாலும், தமிழ்படங்களை ஓடாமல் செய்து, தமிழ்நாட்டுப் பேருந்துகளைத் தடுத்தாலும், தமிழர்களைத் தமது சொந்த நாட்டிலேயே, ஜேர்மனியில் யூதர்கள் எப்படி நாசிகளுக்குப் பயந்து நடுங்கினார்களோ அதே போல் கன்னட வெறியர்களைக் கண்டு அவர்களைப் பயந்து நடுங்கச் செய்தாலும், அது மட்டுமல்ல கன்னட வெறியர்கள் தமிழ்நாட்டு எல்லைக்குள் தீவட்டிகளுடன் வந்து வெருட்டினாலும் கூடத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒரு ஆர்ப்பாட்டமோ, எதிர்ப்போ தெரிவிக்காமல் எனக்கென்ன போச்சு என, ஞே என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்.

தமிழ் நாட்டுத் தமிழர்களின், தமிழுணர்வும், தமிழின உணர்வும் முற்றாக அற்றுப் போய் விட்டதா அல்லது தமிழ் நாட்டில் இன்னமும் பொருளாதார, அரசியல் அதிகாரங்கள் தமிழரல்லாதவர்களின் கைகளில் இருப்பதால் தமிழர்களின் தன்மானம் நசுக்கப்பட்டு விட்டதா?

தமிழ்நாட்டுத் தமிழர்கள், தமிழுக்காகத், தமிழர்களுக்காகக் குரலெழுப்பினால் அவர்களை இந்தியாவுக்கு எதிரானவர்களாகவும், இந்திய ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிப்பவர்களாகவும், குறுகிய மனப்பான்மையுள்ளவர்களாகவும், "பகுத்தறிவுகள்" எனவும் சாயம் பூசி அவர்களுக்கு மேல் பாய்ந்து குதறுகின்ற இந்தியாவின் போலி தேசியவாதிகள் எல்லாம் கன்னடவெறியர்களுக்கெதிராக மூச்சு விடாமல் இணையத்தளங்களிலும், வலைப்பதிவுகளிலும் மெளனம் சாதிக்கிறார்கள்.

அரசியல்வாதிகளாக மாறிய தமிழரல்லாத நடிக, நடிகைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும் போதெல்லாம் தீக்குளித்தும், கைவிரல்களை மட்டுமல்ல கைகளையும் வெட்டிக் கொண்ட தமிழ்நாட்டு மானத்தமிழர்கள் அயல் மாநில வெறியர்கள் தமிழர்களை அச்சுறுத்தியும், நிம்மதியாக வாழ விடாமல் துன்புறுத்தியும், ஆர்ப்பாட்டங்கள் செய்தும் அவர்களின் வியாபார நிலையங்களைப் பகிஸ்கரிப்புச் செய்தும் தமிழர்களைச் சொந்த நாட்டிலேயே இரண்டாந்தரக் குடிமக்களாக்குகிறார்களே, அதையெல்லாவற்றையும், அவர்களின் சகோதரர்களாகிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் பார்த்துக் கொண்டிருப்பதன் காரணமெதுவாக இருக்கும்?

தமிழ்நாட்டில் உழைத்த பணத்தைக் கர்நாடகத்தில் முதலீடு செய்யும்
ரஜனிகாந்தின் கட் அவுட்டுக்குக் கற்பூரம் காட்டிக் காவடியெடுக்கும் தமிழ்நாட்டின் திராவிட திலகங்களுக்கு கர்நாடகத்தில் அடி வாங்கும் தமிழர்களுக்காக ஒருநாளைக்காவது ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தி, கர்நாடகாவிலுள்ள தமிழர்கள் அனாதைகளல்ல, அவர்களுக்கும் அறுபது கோடி சகோதரர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கன்னட வெறியர்களுக்கு உணர்த்த தெரியவில்லை என்பது தான் மிகவும் வேதனை தரும் விடயம்
.

தமிழர்களின் இந்தக் கையாலாகாத் தனத்தை நொந்து தான் " சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாடல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே", செய்வதறியாரடி என்றார் பாரதியார்.

கன்னடர்களில் படித்தவர்கள் படிக்காதவர்கள், தமிழ்நாடு போட்ட பிச்சையில் வயிறு வளர்த்த கன்னட நடிக, நடிகைகள், கன்னட அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழர்களைத், தமிழ் நாட்டின் நலன்களை எதிர்க்கிறார்கள், அங்கு வாழும் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையை நரகமாக்குகிறார்கள், இதே நடைமுறைகளைத் தான் ஆரம்பத்தில் இலங்கையில் சிங்களவர்களும் மேற்கொண்டார்கள், அப்படியான கலவரங்களிலெல்லாம் கொழும்பில் வாழ்ந்த தமிழர்களுக்கு வட, கிழக்கிற்கு ஓடிப் போகக் கூடியதாக இருந்தது.


ஆனால் தமிழ்நாட்டுக்கு ஒடி வரவும் முடியாமல், தலை முறை, தலைமுறையாக பெங்களூரில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தார்மீக ஆதரவையாவது வழங்காது விட்டால் அதை விடக் கையாலாகாத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

இவ்வளவுக்கும் தமிழ்நாட்டுக்குக் காவேரி நீரைக் கொடுக்கச் சொல்லி விட்டார்களே என்பதற்காகத் தான் அங்கு வாழும் தமிழர்களைத் துன்புறுத்துகிறார்கள், அதற்காக என்றாலும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் பொங்கியெழுந்து தமது உணர்வுகளைத் தெரிவித்திருக்க வேண்டாமா?

கன்னடர்கள் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடும் திரையரங்குகளை எரிக்கிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் என்னடாவென்றால், உலகத்திலேயே தலைசிறந்த ஒப்பனைக் கலைஞராகிய ரஜனிகாந்தின் ஒப்பனையாளர், எப்படா ரஜனியின் உண்மையான தோற்றத்தை மறைத்து, ரஜனியை மீண்டும் கண்ணெடுத்துப் பார்க்கக் கூடிய ஜென்மமாக மாற்றிக் காட்டுவார், நாங்களும் காசைக் கொடுத்து அதைப் பார்த்திட்டுக் கைதட்டுவோமென்று பார்த்த கண்கள் பூத்துப் போகக் காத்திருக்கிறார்கள் .

திராவிடக் கட்சிகளின் குடுமிச்சண்டையாலும், போட்டி பொறாமையினாலும், தமிழ்நாட்டிலிருந்து எந்தவித ஆதரவுப் போராட்டத்தையும் காணாத கர்நாடக தமிழர்களின் கட்சிகள் கூடக் கன்னடவெறியர்களிடம் தப்பி உயிர்வாழ்வதற்கு வேறு வழியில்லாமல் தமிழர்களுக்கெதிரான வன்முறைக்கும் கடையடைப்புக்கும் தமிழர்களே ஆதரவளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்களாம்.

தமிழ்நாட்டில் கர்நாடகத்துக்கோ, ஆந்திராவுக்கோ அல்லது கன்னடர்களுக்கும், தெலுங்கர்களுக்குமெதிராக வன்முறைகளோ ஆர்ப்பாட்டங்களோ நடந்தால் கன்னடர்களும், தெலுங்கர்களும் ஆதரவளிப்பார்களா?

தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஒற்றுமையின்மையும், கையாலாகாத்தனமும், தமது வலிமையைத் தாம் உணராமல் வந்தான் வரத்தானிடம் ஆட்சியையும், அதிகாரத்தையும் கொடுத்து விட்டுக் கைகட்டி, வாய்புதைத்து நிற்கும் ஏமாளிக் குணமும் போகும் வரை தமிழினம் உருப்படாது.


"கொலைவாளினை எடடா
மிகுகொடியோர் செயல்அறவே!
குகைவாழ் ஒரு புலியே
உயர் குணமேவிய தமிழா"


"தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!

தலை மீது சுமக்கின்றான்

அடிமை என்னும் சொல்லை!

எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்!
எச்சிலை அவன் போடத் தின்னுகின்றான்!
எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்
இசை தெலுங்கானது பாட்டினிலே!
இந்தி கோல் ஓச்சுது நாட்டினிலே!

திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே!
தீந்தமிழ் எரியுது தீயினிலே

ஒடுங்கி ஒடுங்கி இவன் ஆமையானான்!
உதைத்தாலும் வதைத்தாலும் ஊமையானான்!
நடுங்கி நடுங்கி இவன் வாழ்ந்துவிட்டான்!
நாளுக்கு நாளிவன் தாழ்ந்துவிட்டான்!
உலகெல்லாம் நேற்றிவன் ஆண்டதென்ன?
ஊர் ஊராய் இன்றிவன் மாண்டதென்ன?
மலைபோல நேற்றிவன் எழுந்ததென்ன?
மரம்போல வீழ்ந்தானே வீழ்ந்ததென்ன? "

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்