Wednesday, December 27, 2006

திலிபனும் அகிம்சையும்

செப்டம்பர் 26. 
 
12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை தமிழீழ விடுதலைக்காக அற்பணித்த நாள். அதுவும் அவர் தனது அகிம்சை போராட்டத்தை அகிம்சை வழியை உலகுக்கு பெரிய அளவில் அறிமுகப்படுத்திய மாத்மா காந்தி பிறந்த நாடான இந்தியாவை நோக்கி தொடங்கி, இந்தியாவால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் மறைந்தார். அகிம்சை வழியில் தன் விடுதலையை பெற்றெடுத்ததாக கூறும் இந்தியா, உலகெங்கிலும் அகிம்சை குறித்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் இந்தியா, அகிம்சை போராட்டத்தை கையிலெடுத்த திலீபனுக்கு அளித்த பரிசு இது தான்.

திலீபனின் போராட்டம் மற்றொரு முறை அகிம்சை என்ற உளுத்துப் போன தத்துவத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே நான் காண்கிறேன்.

திலீபனுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. திலீபன் காந்தீய வழியில் தன் போராட்டத்தை முயன்றார். ஆனால் காந்தி போல முயலவில்லை. திலீபன் தன் உயிரை ஒரு பொருட்டாக கருதவில்லை.

அகிம்சை ஒரு நெடிய போராட்டம். போராடிக் கொண்டே இருக்கலாம். முடிவு போராட்டத்தின் கையில் இல்லை. எதிராளியின் வலிமையை பொறுத்தே உள்ளது.

அகிம்சை மூலமாக இந்தியா விடுதலைப் பெற்றது என்பதே இந்திய விடுதலையை ஒட்டி எழுப்பபட்ட மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் தானே தவிர அகிம்சை மட்டுமே இந்தியாவின் விடுதலைக்கு காரணமாக அமைந்து விட வில்லை. இந்திய விடுதலை அகிம்சையினால் நிகழ்ந்தது என்றால் இந்தியா விடுதலையான அதே நேரத்தில் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்ற இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்றவற்றின் விடுதலைக்கு காரணமாக அமைந்தது எது ? அகிம்சையா ?

"காந்தி தாத்தா வாங்கிக் கொடுத்த சுதந்திரம்" என பாடபுத்தகங்களும், திரைப்படங்களும், ஊடகங்களும் தொடர்ந்து எழுப்பிய அகிம்சை பிம்பம் நம் மூளையை சளவை செய்ததில் இருந்து நாம் வெளியேறவேயில்லை. இந்தியா பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் ஒரு காலனியாக உருமாறியத்தற்கும் சரி, பிறகு விடுதலையானதற்கு சரி - முக்கிய காரணம் - பொருளாதாரம் தான்.

in the larger world it came eventually to be realized that colonial territory was only marginally relevant to economic progress, if it was relevant at all. The dissidence and revolt of the colonial peoples and a more civilized attitude by the colonial powers are often credited with bringing the colonial era to end. More attention might well be accorded to the rather simple but persuasive fact that colonies had become no longer economically worthwhile. Territory was not the thing.

என்று தன்னுடைய "A Journey Through Economic Time" என்ற புத்தகத்தில் கூறுகிறார் புகழ்ப் பெற்ற பொருளாதார நிபுணர் ஜான் கால்பிரைத். காலனியாதிக்கத்தின் விடுதலைக்கு revolt of the colonial peoples and a more civilized attitude by the colonial powers தான் காரணம் என்பதை கால்பிரைத் மறுக்கிறார். காலனியாதிக்கத்தின் முடிவுக்கு colonies had become no longer economically worthwhile என்பது தான் காரணம் என்கிறார் கால்பிரைத்.

இவரின் இந்த வாதம் தவிர வரலாற்றை பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது இது நமக்கு தெளிவாக புரியும். சோழர் கால வரலாறு முதல் இன்றைய இராக் யுத்தம் வரை அனைத்திற்கும் பொருளாதாரம் தான் அடிப்படைக் காரணம் என்னும் பொழுது அந்த பொருளாதார காரணிகளை விலக்கியே வரலாற்றை மக்களுக்கு நம்முடைய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றளவும் உலகில் உருவான பன்னாட்டு தனியார் நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்த நிறுவனம் - பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி தான். வணிக நோக்கங்களுக்காக உள்ளே நுழைந்து பின் படிப்படியாக நாடு பிரிட்டிஷ் எகிதிபத்திய அரசிடம் சென்று சேர்ந்தது வரலாறு. பொருளாதார காரணங்களுக்காக முதலில் தொடங்கிய காலனியாதிக்கம், பின்பு படிப்படியாக மாறி நாடு பிடிக்கும் ஆசையாக உருவெடுத்தது. பின் தங்கள் நாட்டின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பிற நாடுகளை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதாக மாற்றம் பெற்று விட்டது.

இவ்வாறு உருவான பிரிட்டிஷ் எகாதிபத்தியம் ஒரு கட்டத்தில் உலகின் கால்வாசி இடத்தை தன் வசம் வைத்திருந்தது. சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இவ்வாறு உருவான நிலையில் தான் இந்த மிகப் பெரிய பரப்பளவை நிர்வகிப்பதில் இருக்கும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டது. இந்தச் சூழ்நிலையில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் தான் இந்தியா உள்ளிட்ட பல காலனியாதிக்க நாடுகள் விடுதலைப் பெற முக்கிய காரணமே தவிர, அகிம்சைக்கு பெரிய பங்கு இருப்பதாக நான் நினைக்க வில்லை.

இரண்டாம் உலகப் போர் ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. போரினால் நிர்மூலமான பொருளாதாரத்தை நிர்மாணிக்க வேண்டிய தேவை இருந்தது. அவ்வாறான தேவைக்கு இடையே ஒரு தூர தேசத்தில் இந்தியா உள்ளிட்ட ஆசியப் பகுதிகளை பராமரிப்பது பெருத்த சவால் மிகுந்த காரியமாகவே இருந்தது. இந் நிலையில் தான் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் விடுதலைப் பெற்றன. இரண்டாம் உலகப் போருக்குப் முன்பு வரை மிக வலுவான பொருளாதார மற்றும் இராணுவ பலத்துடன் விளங்கிய பிரிட்டன் போருக்குப் பின் உலக அரசியலில் தன் முக்கியத்துவத்தை இழந்து அமெரிக்காவும், சோவியத் யூனியனும் வலுப்பெற தொடங்கியதன் பிண்ணனியும் இந்திய விடுதலையின் பிண்ணனியும் ஒன்று தான் - அது பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் சரிவு.

காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் என்ற வகையில் அகிம்சை இந்திய விடுதலைக்கு முக்கிய காரணமாக உருவாக்கப்பட்டதே தவிர, இந்திய விடுதலை அகிம்சையால் மட்டுமே நிகழ வில்லை.

காந்தியின் அகிம்சை போராட்ட முறையாகட்டும், பாலஸ்தீனம், இலங்கை, காஷ்மீர் போன்ற இடங்களில் நடக்கும் ஆயுத போராட்டம் ஆகட்டும் - இவற்றுக்கு ஒரு பொதுவான அடிப்படை உள்ளது

தங்கள் போராட்டத்திற்கு வலுசேர்க்க, தாங்கள் எதிர்த்து போராடும் நாடுகளின் பொருளாதார அடித்தளத்தை தகர்ப்பது தான் இந்த பொதுவான நோக்கம். காந்தியின் நோக்கமும் அது தான், பிரபாகரனின் நோக்கமும் அது தான், ஹமாஸ் அமைப்பின் நோக்கமும் அது தான்.

ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து முழுமையான விடுதலையை ஆதரிக்காத காந்தி, பிறகு நடத்திய பல போராட்டங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்க தான் முற்பட்டது. அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி அகிம்சை. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றாலும், அந்த அரசாங்கத்தை பிரிட்டிஷாரிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு நடத்திக் கொண்டிருந்தவர்கள் "இந்தியர்கள்" தான். இந்தியா போன்ற பெரிய நாட்டினை நிர்வாகிக்க கூடிய ஆட்பலமோ, இராணுவ, காவல்துறை எண்ணிக்கை பலமோ (ஆயுத பலம் அல்ல) பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இல்லை. அவர்கள் இந்தியர்களைச் சார்ந்தே தங்கள் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தனர். அவ்வாறான நிலையில் பிரிட்டிஷ் ஆட்சியை முடக்க வேண்டுமானால் அவர்கள் செயல்படுவதை முடக்க வேண்டும். இந்தியார்கள் பிரிட்டிஷ் வேலையைப் புறக்கணித்தால், பிரிட்டிஷாரின் நிர்வாகம் ஸ்தம்பிக்கும். அதைத் தான் காந்தி செய்ய முயன்றார். ஆனால் அதில் எந்தளவுக்கு வெற்றி பெற்றார் என்பதை வரலாற்றை புரட்டுபவர்களுக்கு புரியும்.

இங்கு கவனிக்க வேண்டியது, ஆயுதப் போராட்டம் இல்லாமலேயே பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதை காந்தி முன்னெடுத்தார். அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைக்க வில்லை என்றாலும் ஒரு புது போராட்ட முறையை அறிமுகப்படுத்தியிருந்தார்.

ஆனால் இந்த நிலையா இன்று ஆயுதப் போராட்டம் நடைபெறும் நாடுகளில் உள்ளதா ?

மக்கள் எண்ணிக்கை, பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் சிறுபாண்மையாக உள்ளவர்களின் போராட்டம் எந்த வகையிலும் அகிம்சையை கொண்டு நடக்க முடியாது. காரணம் இலங்கை பொருளாதாரம் தமிழர்களை நம்பி இல்லை. இந்திய பொருளாதாரம் காஷ்மீரை நம்பி இல்லை. இந்த சிறுபான்மை இனத்தவரின் அகிம்சை போராட்டத்தை நசுக்க கூட வேண்டியதில்லை. கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் கூட இந்த போராட்டம் பல ஆண்டு காலம் நடந்து கொண்டே இருக்கும். இது தான் இலங்கையிலும், காஷ்மீரிலும் ஆரம்ப காலங்களில் நடந்தது.

இத்தகைய நிலையில் தான் அகிம்சை என்பது அர்த்தமில்லாமல் போய் விட்டது. இலங்கை, பாலஸ்தீனம், காஷ்மீர் போன்ற தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அவர்கள் எதிர்த்து போரிடும் நாடுகளின் பொருளாதாரத்தை சிதைப்பதில் தான் உள்ளது. அதனால் தான் ஆயுதப் போராட்டங்கள் தொடங்குகின்றன. ஒரு விடயத்தை கவனிக்கலாம். இன்று இலங்கையில் ஆயுதப் போராட்டம் தொடங்கியிருக்காவிட்டால் இலங்கை பொருளாதார ரீதியில் நல்ல வளர்ச்சி பெற்றிருக்கும். சிங்கள ஆதிக்கம் முழுமை பெற்றிருக்கும். மாறாக ஆயுதப் போராட்டம் சிங்கள ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது மட்டுமில்லாமல், இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தும் இருக்கிறது.

அகிம்சை ஒரு விடுதலைப் போராட்ட முறை அல்ல. அது ஒரு கவன ஈர்ப்பு. இந்த கவனஈர்ப்பை காந்தி சரியாக நடத்தினார். ஆனால் திலீபன் அகிம்சையை தன் போராட்ட வடிவமாக எடுத்தார். அதன் பலன் அவர் உயிர் இழப்பு.

திலீபனின் நினைவு தினம் அகிம்சை ஒரு விடுதலைப் போராட்ட முறையல்ல என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி விட்டுச் செல்கிறது

 

 
 
நன்றி : தோழர் ஒம்ஸ்ரீ

 

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்