Thursday, May 24, 2007

"கைநிறைய சம்பளம்.. மனம் நிறைய வெறுப்பு...."

"கைநிறைய சம்பளம்.. மனம் நிறைய வெறுப்பு...."

தகவல் தொழிற்நுட்ப உலகின் புதிய நெருக்கடி

க.அருணபாரதி

தகவல் தொழிற்நட்பத் துறை மீது சவாரி செய்யும் உலகமயமாக்கலின் வளர்ச்சி உளவியல், வாழ்க்கை முறை, குடும்ப உறவுகள் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் மேற்கத்திய கலாசாரத்தை புகுத்துவதிலும், தனித்தன்மை வாய்ந்த இம்மண்ணின் கலாசாரங்களை அழிப்பதிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வருவது கண்கூடு. தமிழகத்தில் ஆங்கிலம் பேசி தான் வாழ முடியும் என்கிற போலித்தனமான நிலைமையை பெற்றெடுத்திருப்பது இதற்கொரு முன்னுதாரணமாகும். தற்பொழுது அதன் தாக்கங்கள் பல்வேறு வடிவங்களில் மக்களை தாக்குகின்றன.

தகவல் தொழிற்நுட்பத்துறையில் பணிபுரிவோர்க்கு வேலைப் பளு அதிகமாக கொடுக்கப்பட்டு சம்பளமும் தாராளமாக வழங்கப்படுகிறது. சம்பளம் அதிகமாக கொடுக்கப்படுவதால் உழைப்புச் சுரண்டல் இங்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. சாதாரண மென்பொறியாளர் சுமார் 14 மணி நேரம் உழைப்பதை நிறைய இடங்களில் பார்க்க முடியும். வெளிப்பணியேற்ற மையங்கள் எனப்படும் 'பி.பி.ஒ' நிறுவனங்களில் பணிபுரிவோர் இதை விடக் கடுமையாக உழைப்புச் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகினறனர். காப்பீடு, மருத்துவம், அலுவலகப் பணிகள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் பணிகளை இந்தியத் துணைக் கண்டத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து செய்திட முடியும். அதனை செய்பவர்கள் தாம் பி.பி.ஓ நிறுவனங்கள். வெளிநாட்டவருக்கு இணையான ஆங்கில அறிவு, காப்பீடு உள்ளிட்ட சில துறைகளில் பொருட்களை தொலைபேசியில் பேசி விற்க செய்யும் திறமை உள்ளிட்ட பல திறன்களை பெற்றவர் தாம் இதில் பணியாற்ற முடியும். 8 மணி நேர வேலை கோட்பாடு இங்கு பெயரளவில் கூட இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்களை பெற்றேத் தீர வேண்டும் அல்லது பொருட்களை விற்றுத் தீர வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்படுவதும் உண்டு. அதற்காக மிகவும் சிரத்தையுடன் அந்த இலக்கை அடைவதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. இவர்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கு வாடிக்கையாளர்களை இவர்களால் அடைய முடியாவிட்டால் அவர்களை பணி நீக்கம் செய்திடவும் அந்நிறுவனங்களால் முடியும். ஏனெனில் அவர்கள் நிரந்தர பணியாளர்கள் முறையில் பணியமர்த்தப்படுவது இல்லை. இது போன்ற நடவடிக்கைகளாலும், வேலை நிரந்தரமின்மை, பயம், மனஉளைச்சல், மன அழுத்தம் உள்ளிட்ட பல கூறுகளாலும் பணியாளர்கள் பெரிதும் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். 'இன்றைய பி.பி.ஒ நிறுவன பணியாளர்கள் பத்தொன்பதாவது நூற்றாண்டு சிறைக் கைதிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். அல்லது ரோமானிய கப்பல்களில் அடைத்து வைக்கப்பட்டு கடின வேலைகள் செய்த அடிமைகளைப் போல நடத்தப்படுகிறார்கள். அந்த அடிமைகளுக்கு சாப்பாடு தவிர வேறு எதுவும் கிடையாது. வெளி உலகத்தைப் பார்க்கக் கூட அனுமதி கிடையாது. கப்பலின் அடித்தளத்தில் அடைந்து கிடக்க வேண்டும். அதே போல இந்திய தொழிலாளர்களையும் பணத்தை மட்டுமே காட்டி சக்கையாகப் பிழிந்து விடுகிறார்கள்", இதை சொல்வது நாமல்ல. இந்தியாவின் தகவல் தொழிற்நுட்பத் தலைநகரம் எனப்படும் பெங்களுரில் உள்ள வி.வி.கிரி நேசனல் இன்ஸ்டிடியூட் ஆப் லேபர் ( VV Giri Institute of Labour, Bangalore) என்கிற மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் தன்னாட்சி பெற்ற நிறுவனம். சுமார் இருநூறு பேரிடம் ஆய்வு நடத்தி இந்தக் கருத்தினை வெளியிட்டிருக்கிறார்கள். (பார்க்க: சூனியர் விகடன், 1.1.06 )

கடந்த மார்ச் மாதம் புனேவில் நடைபெற்ற போதை விருந்து ஒன்று நடைபெற்றது. அதற்கான ஏற்பாடுகளை கணிணி நிறுவனங்களே செய்ததும் அம்பலமானது. அதில் கலந்து கொண்ட தகவல் தொழிற்நுட்பத்துறை ஊழியர்கள் உட்பட சுமார் 280 பேர் கைது செய்யப்பட்டனர். இது போன்ற விருந்துகள் சென்னையிலும் நடந்திருப்பதாகவும் அதில் 25 ஆண்களை கைது செய்து, காவல்துறையினர் விடுவித்ததும் தெரியவந்துள்ளது (தினமலர் 06-03-2007). கடந்த 2001 ஆம் ஆண்டு (29-10-2001) அன்று, அமெரிக்காவில் பணிபுரிந்து விட்டு இந்தியாவிற்கு திரும்பிய 24 வயதே ஆன கணிணி மென்பொறியாளர் புதுதில்லியில் கேசவபுரத்தில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அந்த தற்கொலைக்கான காரணத்தை குறிப்பிட்டு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அவர் தன் வேலையில் மனநிறைவில்லாததையும், வேலைக் காரணமாக தன் வீட்டையும் குடும்பத்தினரையும் மகிழ்ச்சி படுத்த முடியாமைக்கும் வருந்தியுள்ளார் (செய்தி: IANS). கடந்த 2002 ஆம் ஆண்டு சனவரி மாதம் சப்பான் நாட்டைச் சேர்ந்த கணிணி மென்பொறியாளர் அதிக வேலை பளுக் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அந்த ஊழியரின் குடும்பம் அந்நிறுவனத்திடம் நிவாரணம் கோரிய போது அதனை அந்நிறுவனம் ஏற்காமல் தள்ளுபடி செய்தது. இதனால் கொதித்துப் போன அவர்களது உறவினர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அந்நிறுவனத்திடம் நிவாரணம் பெற போராடி வெற்றியும் பெற்றனர். உலகில் தற்கொலை செய்து கொள்வோர் அதிகமுள்ள நாடு சப்பான் என்பதும் குறிப்பிடத் தக்கது. வேலை பளுக் காரணமாக சுமார் 652 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று தேசிய காவல் நிறுவனம்(செய்தி: NPயு) தெரிவிக்கிறது. தற்பொழுது இது போன்ற தற்கொலைகள் இந்தியத் துணைக் கண்டத்திலும் நடைபெறத் தொடங்கியுள்ளன. இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு எனப்படும் பெங்களுரில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. கடந்த சில வருடங்களாக பெங்களுரின் தற்கொலைகள் மிகவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன என காவல் துறையினர் தெரிவித்தனர்(பார்க்க இந்து:26-11-2006).

இது போன்ற தற்கொலைகளுக்கு பெரிதும் காரணமாயிருக்கும் வேலைபளுவும் மனஅழுத்தமும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தெரியாமலிருக்க பல நிறுவனங்கள் பணம் உள்ளிட்ட சலுகைகள் அளித்தும், நடன விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தியும் அவர்களை மகிழ்ச்சிபடுத்துகின்றன. சில நிறுவனங்கள் இதற்கென நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் மது உள்ளிட்ட பல போதை பொருட்களும் கூட கிடைக்க வழிசெய்வது தற்பொழுது அம்பலமாகியுள்ளது. அதிக பணவரவாலும், மன அழுத்தம் காரணமாகவும் இளைஞர்கள் தவறான காரியங்களில் ஈடுபட வழிகள் அதிகமாகின்றன. மது, மங்கை என வாழ்வை அனுபவிக்கத் தொடங்கி கலாச்சாரத்தையும் சீரழிக்க முற்படுகின்றனர். சில பன்னாட்டு நிறுவனங்கள் பணியாளர்கள் பெண்களுடன் உல்லாசமாக இருக்கவும் அதற்கென நிதியும் ஒதுக்கி அதிர்ச்சியடைய செய்துள்ளன. அதனை டேட்டிங் அலவன்ஸ் என்பர். இந்தியாவில் விப்ரோ நிறுவனம் அது போன்ற அலவன்ஸ் கொடுத்ததால், தன் கணவர் வேறொரு பெண்ணுடன் சென்று விட்டார் என்று அவர் மனைவி கான்பூர் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். பின்னர் அது போன்ற அலவன்ஸ் தங்கள் நிறுவனத்தில் இல்லையென அந்நிறுவனம் விளக்கம் அளித்தது. கடந்த மாதம், நாடு முழுதும் உள்ள 3000 தகவல் தொழிற்நுட்பத்துறை ஊழியர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவில் பல தகவல்கள் வெளிப்பட்டன. தகவல் தொழிற்நுட்பத் துறை ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதால் இல்லற வாழ்வில் நாட்டமின்றி இருக்கின்றனர் என்றும் அவர்களது குடும்ப உறவுகள் பாதிக்கப்படுகின்றன என்றும் அந்த ஆய்வு முடிவுகள் கூறுகிறது (தினகரன் 28-04-2007).


மனஅழுத்தத்தை போக்க யோகா, மனப்பயிற்சி உள்ளிட்ட பல வழிகள் இருக்கிற போதும் பல நிறுவனங்கள் மேற்கத்திய பாணியில் 'டிஸ்கொத்தே', நடன விருந்து என்று தன் ஊழியர்களிடம் அயல்நாட்டு கலாச்சாரத்தை புகுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. ஆனால் இது குறித்து கேள்வி எழுப்பினால் தகவல் தொழிற்பத்துறையினர் மற்ற துறையினரைவிட அதிக சம்பளம் பெறுவதால் மற்றவர்களுக்கு ஏற்படும் மனக்குறைவு தான் இக்குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் காரணம் என சாக்கு சொல்லுகின்றனர். ஆனால் இவற்றால் பாதிக்கப்படப்போவது நமது பிற்கால சந்ததியினரே என்பதை உணர மறுக்கின்றனர். ஒருபுறம், காடுகள் அழிக்கப்படுதல் மற்றும் வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் உலகம் அச்சுறுத்தல் பெற்றிருக்கும் போதே, உலகமயம் விவசாய நிலங்களை பறிக்க திட்டமிடுகிறது. மறுபுறம், வேலை பளு அதிகம் கொடுத்து உழைப்பு சுரண்டலை தீவிரப் படுத்தி பணியாளர்களை மனஅழுத்தத்தில் ஆரம்பித்து தற்கொலை வரை கொண்டு செல்கிறது. மனிதகுலத்திற்கு எதிரான உலகமயத்தின் தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

குறிப்பு: இக்கட்டுரை 'சற்றுமுன்' கட்டுரைப் போட்டியின் 'சமூகம்' பிரிவிற்காக எழுதப்பட்டது...

--
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

1 கருத்துகள்:

சிவபாலன் said...
This comment has been removed by the author.

குறிப்பிடத்தக்க பதிவுகள்