Saturday, January 26, 2008

காவல்துறையினர் கொடுத்த பொய்ச் செய்திக்கு மறுப்பு

கோயம்பேட்டில் த.தே.பொ.க. தோழர்கள் மீது
காட்டுமிராண்டித் தனமாகத் தடியடி நடத்தியதை
மூடிமறைக்க காவல்துறையினர் கொடுத்த
பொய்ச் செய்திக்கு மறுப்பு
பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அறிக்கை
நேற்று(25-01-2008) மொழிப்போர் தியாகிகள் நாள் என்பதால், ஏற்கெனவே அறிவித்தபடி காலை 10 மணிக்கு தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள், அரசுப் பேருந்துகளில் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள 'அல்ட்ரா டீலக்ஸ்', 'எஸ்.இ.டி.சி' போன்ற எழுத்துக்களை சென்னை கோயம்பேட்டில் கருப்பு மைபூசி அழித்தார்கள். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் கண்மூடித்தனமாக தோழர்களை தடியால் அடித்து காயப்படுத்தினார்கள். இதில் 16 தோழர்கள் காயம்பட்டார்கள். அவர்களில் 9 பேருக்கு மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு தோழருக்கு இடது முன்கை எலும்பு முறிந்துவிட்டது. இவர்களில் 6 பேர் கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்கள்.

காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தனமான தடியடியில் பாதிக்கப்பட்ட சென்னை க.பாலகுமரன் கோயம்பேட்டில் சட்டவிரோதமாக நடந்து கொண்டு, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் அவர்களுக்கு புகார் மனு கொடுத்துள்ளார். அதன் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் ஆங்கில எழுத்துக்களை அழித்த த.தே.பொ.க தோழர்களை பொதுமக்களும் பேருந்து ஊழியர்களும் தாக்கியதாக சென்னை மாநகரக் காவல்துறை அதிகாரிகள் சிலர் தவறான செய்தி கொடுத்து, காவல்துறை தாக்கியதை மூடி மறைத்துள்ளார்கள். காவல்துறை கொடுத்த அச்செய்தி உண்மையல்ல.

எனவே தாங்கள் ஆங்கில எழுத்துக்களை அழித்த த.தே.பொ.க. தோழர்களைத் தடியடி நடத்தி தாக்கிப் படுகாயப்படுத்தி எலும்பு முறிவையும் ஏற்படுத்தியவர்கள் காவல்துறையினரே என்ற உண்மைச் செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.




1 கருத்துகள்:

வவ்வால் said...

அருணபாரதி,

செய்தித்தாள்களில் படித்த போதே அட என்ன நம் மக்கள் அந்த அளவுக்கு பொது சொத்தின் மீது ஆர்வம் காட்டி விட்டார்களா என்று ஆச்சர்யப்பட்டேன், வழக்கம் போல காவல்துறையின் திரிக்கப்பட்ட செய்தி தானா?

உண்மையை வெளியிட்டுள்ளீர்கள்,பாராட்டுக்கள்! அதே சமயம் போக்குவரத்து பேருந்துகளில் ஆங்கிலம் இருப்பதால் என்ன கேடு, தமிழ் தெரியாதவர்களும் பேருந்துகளை தெரிந்துக்கொள்ளத்தானே,

மேலும் தமிழிலும் எழுதப்பட்டு இருக்குமே, த.நா. அரசு விரைவுப்பேருந்து,சொகுசுப்பேருந்து , வண்ணத்திரை பேருந்து என்றெல்லாம்.

இரண்டு மொழிகள் இருப்பதால் ஒன்றும் கெட்டு விடாது பேருந்துகள்.

தமிழ் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இருந்தது என்றால் போராடுவதில் ஒரு நியாயம் இருக்கிறது.

குறிப்பிடத்தக்க பதிவுகள்