Wednesday, July 02, 2008

மோசடி நிறுவனங்களும் உலகமய நுகர்வியமும் - க.அருணபாரதி

மோசடி நிறுவனங்களும் உலகமய நுகர்வியமும்
க.அருணபாரதி
 
நுகர்வுப் பண்பாடு உலகமயம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, தானே வளர்த்து வரும் செல்லப்பிராணியான 'நுகர்வியம்' (Consumersim), உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களின்  உழைப்பையும் உடைமைகளையும் சுரண்டுவதற்கு துணைநிற்பதோடு அவர்களின் வாழ்வையும் பண்பாட்டையும் ஏகாதிபத்திய நாடுகளின் சீரழிந்த கலாச்சாரமாக மாற்றிக் கட்டமைத்து நாசாமாக்குகிறது. கிராமப்புறங்களை காலி செய்து விட்டு உழைக்கும் மக்களை நகரத்தை நோக்கி படையெடுக்கச் செய்த உலகமயம், "நகரங்களை" முக்கிய சந்தைக் களங்களாகவே பார்க்கின்றன. இந்தியாவின் சென்னை, மும்பை, பெங்களுர், கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நுகர்வுக் கலாச்சாரம் ஏற்படுத்தும் பாதிப்புகளால் மக்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமைகளாக வாழ்வதையே விரும்புமாறு மாற்றப்பட்டுள்ளனர்.  மக்களை ஒருவகை மனநோயில் ஆழ்த்தி அவர்களின் உழைப்பை உடைமைகளை சுரண்டி கொழுத்திட இந்நுகர்வுக்  கலாச்சாரமே பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரிதும் பயன்படுகிறது.
 
நுகர்வுப் பண்பாட்டின் ஊதுகுழலாய் ஊடகங்கள்
கடந்த ஆண்டு சென்னை வடபழனி பகுதியில் ஒரு சிறுவன் செல்பேசி வாங்குவதற்காகவும் இருசக்கர வாகனத்திற்காகவும் தன் சக நண்பனையேக் கொலை செய்தது நினைவிருக்கலாம். அதனை ஒரு குற்றவியல் சம்பவமாக மட்டும் கருதி விட முடியாது. ஒரு சிறுவனின் மனதில் நுகர்வுப் பண்பாடு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தான் அச்சிறுவனை அவ்வாறு செய்ய தூண்டியிருக்கிறது. திரைப்படங்கள், செய்தித்தாள்கள் உள்ளிட்ட ஊடகங்கள், விளம்பரப்படங்கள், விளம்பர வெட்டுருக்கள், செல்லிடத்துப் பேசிகள், இணையதளங்கள் என அனைத்து ஊடக சாதனங்களும் உலகமயத்தின் ஊதுகுழலாக மாறி நுகர்வு வெறியை திட்டமிட்டு மக்களிடம் பரப்புகின்றன. அதிகரித்து வரும் மோசடிகள் பன்னாட்டு நிறுவனங்கள் மீதும் அவை விற்கும் பொருட்கள் மீதும் நுகர்வு பண்பாடு; "புனித"ச் சாயத்தை பூசி அவற்றை வாங்குவது தான் "மேட்டுக்குடிமைத்தனம்" என்றும் "கௌரவம்" என்றும் நடுத்தர மக்களுக்கு கூறுகிறது. இது போன்ற பிரச்சாரங்களால் மயங்கிக் கிடக்கும் மக்களை பன்னாட்டு நிறுவனத்தின் பொருள் என்று கூறி போலிப் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றும் மோசடிச்செயல்கள் அதிகரித்துவிட்டன. இது போன்ற மோசடிச் சம்பவங்கள் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்களைக் குறிவைத்தும் நடுத்தர உழைக்கும் மக்களைக் குறிவைத்தும் தான் பெரும்பாலும் நடக்கின்றன. ஏற்கெனவே கடன் அட்டை மோசடிகள்(கிரெடிட் கார்டு மோசடி) போன்ற மோசடிகளைத் தொடர்ந்து மேலும் புதிது புதிதாக மோசடிகள் பெருகிவருகின்றன.
 
தங்கக் காசு மோசடி
மேலே குறிப்பிட்ட மோசடி வகையைச் சார்ந்த மோசடி தான் சென்னையில் தற்பொழுது நடந்துள்ள "தங்கக் காசு மோசடி" நிகழ்வு. 'கோல்ட் க்வெஸ்ட்' என்கிற இந்நிறுவனம் தன்னை பன்னாட்டு நிறுவனம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சென்னையில் ஐந்து  நட்சத்திர விடுதிகளில் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள், மேட்டுக்குடி குடும்பப் பெண்கள் என குறி வைத்து அழைத்து கூட்டங்கள் நடத்தி உறுப்பினர்களை சேர்த்து வந்தது. இந்நிறுவனம்  மோசடி செய்ய பயன்படுத்திய வித்தை தான் "மல்டி லெவல் மார்க்கெடிங்" எனப்படும் 'சங்கிலித் தொடர் வணிகம்'.
 
அமெரிக்க அரசின் தன்னாட்சி அமைப்பான  'கூட்டாட்சித் தொழில் ஆணையம்' ( Federal Trade commision) என்ற அமைப்பு வணிக நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதைப் பற்றியும், அவை கடைபிடிக்கும் வணிக முறைகள் பற்றியும் ஆய்வு செய்து பட்டியல் தயாரித்து அளிக்கும். அவ்வாறான பட்டியலில் சங்கிலித் தொடர் நிறுவனங்களை இந்த ஆணையம் சேர்க்க மறுத்துவிட்டது. தொழில் வாய்ப்பு விதிகளின் கீழ் (Business rules and oppurtunities) சங்கிலித் தொடர் வணிகத்தை அங்கீகரிக்க முடியாது என மேற்கண்ட ஆணையம் கூறிவிட்டது. மார்ச் 2008-இல் இந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் சங்கிலித் தொடர் வணிகம் வாடிக்கையாளர்களை வணிகம் செய்யத் தூண்டுவதை விட மூளைச் சலவை செய்கிறது. மத நம்பிக்கையை போல விசுவாசத்தை பரப்புகிறது. இந்த வழிமுறையைத் தொழில் வழிமுறையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று ஆணையம் கூறியது. புகழ் பெற்ற அமெரிக்க சங்கிலித் தொடர் வணிக நிறுவனமான ஆம்வே(Amway) நிறுவனத்தை இந்த "மூளைச்சலவை" வழிமுறைக்கு எடுத்துக்காட்டாக ஆணையம் கூறியது. (பார்க்க: http://www.ftc.gov/opa/2008/03/busrule.shtm) அமெரிக்காவின் வணிக ஆணையத்தின் கண்டனத்திற் குள்ளான ஆம்வே சங்கிலித் தொடர் வணிக நிறுவனம் தமிழகத்தில் எந்த தடையும் இன்றி கொடிகட்டி பறக்கிறது. சங்கிலித் தொடர் வணிக நிறுவனங்கள் வாங்குவோரிடம் பொருள் பற்றிய முழுத் தகவல்களை சொல்லாமல் திரித்துக் கூறி வணிகம் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பதால் அதனை ஞாயமான வணிகமாக அங்கீகரிக்க முடியவில்லை என்று அமெரிக்க ஆணையம் கூறுவது கவனிக்கத்தக்கது.

திறந்தப் பொருளாதாரமும் தனியார்மயமும் கோலோச்சுகிற அமெரிக்காவிலேயே சங்கிலித் தொடர் வணிகம் ஐயத்தோடு பார்க்கப்படும் போது இந்தியாவில் இந்த மோசடி வணிகத்திற்கு எந்தக் கண்காணிப்பும் இல்லை என்பது வெட்கக் கேடானது. 'கோல்ட் க்வெஸ்ட்'; நிறுவனத்தில் ஒருவர் ரூ 30,000 கொடுத்து உறுப்பினராவார். அந்நிறுவனம் அவருக்கு தங்கக் காசு ஒன்றைக் கொடுக்கும்.
அவ்வாறு சேர்ந்த பின்பு அவர் 3  பேரை உறுப்பினர்களாக இதே போல் சேர்க்க வேண்டும். சேர்த்து விடப்பட்ட மூவரும் அவரவர்கள் 3 பேரை உறுப்பினர்களை சேர்த்து விட்டுக் கொண்டே போவர். எத்தனை பேரை சேர்க்கின்றனரோ அதற்கு ஏற்றாற் போல் முதல் முதலில் சேர்ந்தவர் முதல் அவருக்கு பின் சேர்பவர்கள் அனைவருக்கும் தரகு பணம் கொடுக்கப்படும். இதன் மூலம் எளிதில் பணம் பார்த்துவிடலாம் என்று கவர்ச்சிகரமாக விளம்பரப் படுத்திய பல 'பிரபல'ங்களை யெல்லாம் பேசவிட்டு மூளைச்சலவை செய்து உறுப்பினர்களை சேர்த்து வந்தது இந்நிறுவனம். இப்படி இந்நிறுவனத்தில் சேர்பவர்கள்  அனைவரும் 3 பேரை சேர்த்து விட முடியாது. ஒரு சிலர் தான் சேர்ப்பர். எவரையும் சேர்க்க முடியாதவர்கள் அவர்கள் கொடுத்த பணத்தை இழந்திட வேண்டியது தான். அவர் கட்டிய பணத்தை நிறுவனம் அப்படியே எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு இந்நிறுவனம் சுமார் ரூ.100 கோடி அளவில் மோசடி செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித் துள்ளனா;. இந்நிறுவனத்தின் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் காவல்
துறையினரால் முடக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் ஏமாந்த பலரும் இந்நிறுவனம் பன்னாட்டு நிறுவனம் என சொன்னதால் தான் இதில் இணைந்தோம் என்று செய்தி ஊடகங்களுக்கு பேட்டியும் கூட அளித்தனர். பன்னாட்டு நிறுவனம் என்றால் அவ்வளர் கவர்ச்சி.
 
 'விஸ்ப்ரோஸ் டெக்னாலஜிஸ்' - வேலை வாய்ப்பு மோசடி
'தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை பார்த்தால் நிறைய பணம் சம்பாதிக்க முடியும். அப்பொழுது தான் சுகமான வாழ்க்கை அனுபவிக்க முடியும்' என்று உருவாக்கப்பட்ட மாயையில் வீழ்ந்துள்ள மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மோசடிச் சம்பவம் இது. ஏற்கெனவே தகவல் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு வேலை மோசடிகள் நடப்பது குறித்து நாம் தெரிவித்திருக்கிறோம். இதுவும்
அவ்வகை மோசடியே. 'விஸ்ப்ரோஸ் டெக்னாலஜிஸ்' என பெயரிடப்பட்டு சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வந்து கொண்டிருந்த இந்நிறுவனம் 'பணம் கொடுத்தால் வேலை' என்று தகவல் தொழில்நுட்பத் துறையில் எப்படியும் வேலை பார்க்க வேண்டும் என்ற துடிப்பில் இருந்த எண்ணற்ற வேலையில்லாத இளைஞர்களை அழைத்து பணம் வாங்கிக் கொண்டு பணி அளித்தது. ஒவ்வொருவரிடமும் வசதிகளை பார்த்து ரூ. 30,000 முதல் 2 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு இந்நிறுவனம் அவர்களை வேலைக்கு எடுத்துள்ளது. வேலையில் சேர்ந்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 10,000 சம்பளம் தரப்படும் என்றும் உறுதியளித்தது. இளைஞர்கள் பலர் இந்நிறுவனத்தில் சேர்ந்து விட்டு பிறகு இந்நிறுவனத்தில் கிடைக்கும் பணி அனுபவத்தை வைத்து பெரிய நிறுவனங்களுக்கு வேலையில் அமர்ந்து விடலாம் என்ற கனவில் தொகையைக் கட்டி சேர்ந்துள்ளனர். அதற்காக பலர் சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் கூட சேர்ந்துள்ளனர். இப்படி சுமார் 3000 பேர் வரை சேர்த்த இந்நிறுவனம் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு பல மாதங்கள் சம்பளம் கொடுக்காமல் இருந்து வந்தது. இப்பிரச்சினை எழுந்தவுடன் நுனி நாக்கு ஆங்கிலத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆந்திராவைச் சார்ந்த இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள்  நிறுவனத்தை திடீரென மூடிவிட்டு தலைமறைவாகினர். அவர்களை காவல்துறை தொடர்ந்து தேடி  வருகின்றது. இது போன்ற நிறுவனங்கள் சென்னையில் இன்னும் அதிகம் உள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறையில்  கிடைக்கும் அதிக ஊதியத்திற்காக இது போன்ற சிறு நிறுவனங்களில் சேர்ந்து வேலை செய்யாமலேயே பணம் கொடுத்து போலி பணி அனுபவச் சான்றிதழ்களை (Fake experience certificate) பெற்றிடத் துடிக்கும் இளைஞர்களைக் குறி  வைத்தும் பல மோசடி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
பல பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இது போன்ற போலி சிறு  நிறுவனங்களைக் கண்டறிந்து அந்நிறுவனங்களின் பட்டியலைக் கூட தயார் செய்து வைத்திருக் கின்றன. 'விப்ரோ' போன்ற பெரிய  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அப்பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு தான் நேர்முகத் தேர்வே நடத்துகின்றன.
தீர்வு தான் என்ன?
 
இந்திய அரசு அமெரிக் காவிற்கும் உலகமயத்திற்கும்  நிரந்தர அடிமையாகவே சேவை செய்யும் என்பது காலம் நமக்கு உணர்த்தி வரும் பாடம். தமிழ்த் தேசியமே உலகமயத்தை எதிர்க்கும் சரியான அடித்தளமாகும். ஏனெனில் நுகர்வுப் பண்பாட்டிலிருந்து மீள்வதற்கான மாற்றுப் பண்பாட்டு வழியாக மண்ணின் பண்பாடே விளங்கு கிறது. உலகமய நுகர்வியத்திற்கு எளிதில் இரையாகிறவர்கள் பண்பாட்டு வேரறுந்தவர்களே ஆவர். தமது மண்ணையும்,  மண்ணின் வரலாற்றையும், மண்ணின் அறிவியல் சார்ந்த - அறவியல் சார்ந்த விழுமியங் களையும் நிராகரிக்க வைப்பதின் மூலமே நுகர்வியம் நிலை பெறுகிறது. இந்த நுகர்வியம் உருவாக்குகின்ற தணியாத ஆசையே மோசடி நிறுவனங்களின் வாய்ப்பான முதலீடாகும். கண்மண் தெரியாத நுகர்வுவெறியிலிருந்து மீள்வது தான் இந்த மோசடி நிறுவனங்களிடம் சிக்காமல் இருக்க ஒரே வழியாகும். இந்த வழியை உருவாக்குவது அறிவியல் வழிப்பட்ட அந்தந்த மண்ணின் மரபுகளாகும். தமிழர்கள் நம்முடைய மரபிலுள்ள முற்போக்கான, அறவியல் சார்ந்த விழுமியங்களில் தோய்ந்தால் நூலறுந்த பட்டமெனத் திசையற்றுத் திரியும் நுகர்வியத்திலிருந்து மீளமுடியும். உலகமய மோசடிகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
 
--

-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்