Monday, February 26, 2007

பிளவை நோக்கிய பாதையில் இலங்கை - இலக்கியன்

பிளவை நோக்கிய பாதையில் இலங்கை..
இலக்கியன்
 
பூகோள ரீதியாக இந்தியாவின் கீழே கண்ணீர் துளி போல அமைந்திருக்கும் இலங்கை இன்று இரத்தத் துளியாக மாறியிருக்க காரணம் எது? சுதந்திர இலங்கை அமைய பெற்ற பின்னர் சிங்கள இனவெறிக்கு இலங்கையை நகர்த்திய பண்டாரநாயகாவின் ஆட்சியும் அதை தொடந்து வருகிற இனவெறி கொள்கைகளும் அடிப்படை காரணம். பல படுகொலைகளை, யுத்தங்களை, இடப்பெயர்வுகளை சந்தித்து நார்வே நாட்டின் முயற்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளும், ரணில் விக்கிரம சிங்கே தலைமையில் அமைந்த அரசும் செய்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்காலிக சமாதானம் கொண்டுவந்தது.

விமான குண்டு வீச்சுக்களை சந்தித்து பழக்கப்பட்டுப்போன மக்களும் பாதிக்கப்பட்ட தென்னை, பனை மரங்களும் குண்டு சத்தங்களை கேட்டு பல மாதங்கள் கடந்திருந்தது. சமாதானம் பேச கைகோர்த்தபடி புலிகள் இயக்கத்தை உடைக்கும் 'சாணக்கிய' வேலையில் ஈடுபட துவங்கி வடக்கு, கிழக்கு என பிரிவினையை தூண்டி கிழக்கு மாகாண தளபதி கருணாவை பகடைக் காயாக பயன்படுத்தியது. அதை தொடர்ந்து வெடித்த மோதலில் பிரபாகரன் அனுப்பிய படையால் கருணாவும் அவரது அணியினரும் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு துரத்தப்பட்டனர். தொடர்ந்து மறைமுகமாக மோதல் துவங்கியது. இந்த மோதலை உருவாக்கிய பெருமை றா, சி.ஐ.ஏ மற்றும் இலங்கை அரசை சார்ந்ததாக கருதப்படுகிறது. தொடர்ந்து இராணுவம் மறைமுக தாக்குதல்களில் ஈடுபட, புலிகள் மறைமுக தாக்குதலை துவங்க இன்று சமாதான புறாவின் இறக்கை பறிக்கப்பட்டு துப்பாக்கி முனையில் சாகடிக்கப்படுகிறது. இந்த மறைமுக யுத்தத்தில் பாதிக்கப்படுவது அப்பாவி தமிழ் மக்கள். குடும்பம் குடும்பமாக படுகொலை, பாலியல் பலாத்காரம், காணாமல் போதல் என ஒரு பக்கம். பயத்திலும் பீதியிலும் குடும்பம் குடும்பமாக மண்ணை, உறவுகளை இழந்து படகில் ஆபத்தான பயணம் செய்து 'அகதி' என்ற முத்திரை குத்தப்பட்டு இராமேஸ்வரம் கரையில் சேர்வது இன்னொரு பக்கம். தமிழகம் நோக்கி வரும் வளியில் ஆபத்தில் சிக்கி பிணங்களாக கரையில் ஒதுங்குவது இன்னொரு அவல நிலை. இப்படியான இவர்கள் வாழ்வில் எதற்காக இந்த சோகங்கள்.
 
 
வங்காலை படுகொலை காட்சிகள்
 
 
 
சமீபத்தில் இலங்கை, மன்னார் வாங்காலையில் தமிழ்க் குடும்பம் ஒன்றை படுகொலை செய்து வெறியாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். படுகொலை செய்யப்பட்டதில் சிறு வயது குழந்தைகள் இருவரும் அடக்கம். வீட்டு கூரையில் கயிற்றால் கட்டி தொங்கவிட்டு சித்திரவதை செய்து கொல்லப்படும் அளவு இந்த சிறார்கள் செய்த கொடுந்தவறு என்ன? தமிழர்களாக ஒரு தமிழ் குடும்பத்தில் இலங்கை அரசின் ஆளுகையில் பிறந்தது அவர்கள் செய்த தவறா? தந்தையை கண் முன்னே கட்டி தொங்க விட்டு கதற கதற கொலை செய்ததை பார்த்த சாட்சிகளாக அவர்கள் இருந்திருப்பார்கள் என்பதாலா? இத்தனை கொடுமைகளையும் நிகழ்த்திய வெறியர்கள் அந்த மழலைகளின் அன்னையாரை பாலியல் பலாத்காரம் செய்து, கட்டி தொங்க விட்டு சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். இந்த படுகொலையை இரவோடு இரவாக நடத்தியது யார்? அந்த பகுதியில் பகல் வேளையில் இராணுவம் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாகவும்,கொடிய ஆயுதங்களுடன் மாலை வேளையில் நடமாடியதாகவும் அப்பகுதி மக்கள் சாட்சியளிப்பதில் சந்தேகம் இராணுவத்தை நோக்கி செல்கிறது.
 
Tamilwin.com 

அண்மையில் வவுனியா மாவட்டத்தில்
அரச கட்டுப்பாட்டு பிரதேசத்தில்
கொல்லப்பட்டவர்

இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் இப்படி தமிழர்களுக்கு எதிரான கொலைகள் அதிகரித்து வருவது அரசாங்கம் சமாதானம் மீது நம்பிக்கை இல்லாமல் படுகொலைகளை மீண்டும் ஆயுதமாக கையில் எடுப்பதாக தெரிகிறது. இதற்கு முன்னர் அல்லைப்பிட்டியில் படுகொலை செய்தவர்களையோ, வாங்காலை படுகொலையில் ஈடுபட்டவர்களையோ இதுவரை கைது செய்து முறையான விசாரணைக்கு உட்படுத்தவில்லை. அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் யாராக இருப்பினும் மக்களை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அவர்களும் குற்றவாளிகளே.

இலங்கை அரச அதிபர் மகிந்தா ராஜபக்சே கண்களை மூடி நடத்துகிற படுகொலைகளே இலங்கை என்ற அவரது ஒற்றை தேச கொள்கையை உடைக்கப் போகிற வலுவான ஆயுதம். முரண்பாடுகளின் முடிவு மோதல்களும், மோதல்கள் பிரிவினையிலும் முடிவது அறிவியல் தத்துவம். இலங்கை, தமிழீழம் என இரண்டு தேசங்களை உருவாக்க இலங்கை இராணுவமும் அரச இயந்திரமும் படுகொலைகளில் ஈடுபட, உலகக்காவல்காரனும், ஐரோப்பிய கூட்டமைப்பும் மனித உரிமைகளை சவப்பெட்டியில் ஆணியடித்து அடக்கம் செய்கிறது. விடுதலைக் குரல் கொடுத்த மக்கள் வென்றதும் வல்லமை பொருந்திய அரசுகள் வீழ்ந்ததும் வரலாற்றின் பக்கங்களில் பலவற்றை காணலாம். அந்த பட்டியலில் விரைவில் தமிழீழ மக்களும், இலங்கை அரசும் இரு வேறு இடங்களில் இடம் பெறுவர். எல்லைக் கோடுகளை விட மனித மதிப்பீடுகள் உயர்ந்தவை. விடுதலைக்காக எல்லையை பங்கிடலாம், எல்லைக்காக மனித மாமிசத்தை கூறு போடலாமா?

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்