Monday, April 09, 2007

அத்தியூர் விஜயா வழக்கு நிதி தர வேண்டுகோள்!

அத்தியூர் விஜயா வழக்கு நிதி தர வேண்டுகோள்!

செஞ்சி வட்டம், அனந்தபுரம் அருகேயுள்ள அத்தியூரைச் சேர்ந்த பழங்குடி இருளர் பெண் விஜயாவை, ஒரு திருட்டு வழக்கில் அவரது பெரியப்பா மகன் வெள்ளையனைத் தேடிச் சென்ற புதுச்சேரி போலீசார் ஆறுபேர் கடந்த 29-7-1993 அன்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தனர்.

பல்வேறு போராட்டங்கள், சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து தமிழக அரசு இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது. வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 2-7-1997 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் புதுச்சேரி போலீசார்களான நல்லாம் கிருஷ்ணராய பாபு (உதவி ஆய்வாளர்), வி.ராஜாராம் (தலைமைக் காவலர்), ஜி.பத்மநாபன் (காவலர்), கே.முனுசாமி (காவலர்), ஜி.சுப்புராயன் (காவலர்), கே.சசிகுமார் நாயர் (தலைமைக் காவலர்) ஆகியோர் விஜயாவை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இவ்வழக்கில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் சேர்க்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட விஜயாவின் வேண்டுகோளை ஏற்று விழுப்புரம் முன்னாள் - அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம். ரகுமான் ஷெரிப் அவர்கள் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கு விசாரணையின்போது காவல்துறையினர் எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கவில்லை.

அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.ரகுமான் ஷெரிப், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம், புதுச்சேரி கோ.சுகுமாரன், பேராசிரியர் பா.கல்யாணி ஆகியோரின் ஒத்துழைப்பாலும், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஆதரவோடும் 42 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இவ்வழக்கில் கடந்த 11-8-2006 அன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திரு. என். ரத்னராஜ் அவர்கள் தீர்ப்பு வழங்கினார். புதுச்சேரி போலீசார் ஆறுபேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 31,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் விஜயாவுக்கு 13 ஆண்டுகள் கழித்து நீதிகிடைத்தது அனைவருக்கும் ஆறுதல் அளித்தது.

இந்நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட புதுச்சேரி போலீசார் ஆறு பேருக்கும் கடந்த 6-11-2006 மற்றும் 8-11-2006 ஆகிய நாளிட்ட உத்தரவின்பேரில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.சி.ஆறுமுகம் ஆகியோர் பிணை வழங்கியுள்ளனர். தண்டனை வழங்கி மூன்று மாதத்திற்குள் பிணை வழங்கப்பட்டது என்பது விஜயாவுக்கு காலங்கடந்து கிடைத்த நீதியைக் கேள்விக் குறியாக்கி உள்ளது.

மேலும், பாலியல் வன்கொடுமை செய்த புதுச்சேரி போலீசார் புதுச்சேரி அரசில் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்ட நாள் வரை அதாவது 13 ஆண்டுகள் பணியில் இருந்து வந்தனர். மேலும், பலருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த 5-1-2007 அன்றுதான் ஆறு போலீசாரையும் பணி நீக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில், வழக்கு விசாரணையை வேகப்படுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்புப் பெற குற்றவாளிப் போலீசார் முயற்சி செய் வருவதாக அறிகிறோம். வரும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அவர்களின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

இச்சூழலில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள பிணையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பெண் வழக்கறிஞர்கள் சார்பில் ஒரு பொதுநல வழக்கு தொடர வேண்டியதற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் மேற்கொண்டு வருகிறார். தில்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணி இவ்வழக்கில் ஆஜராகி வழக்கை நடத்த உள்ளார். இதற்கான நடைமுறை செலவுத் தொகை குறைந்தபட்சம் ரூ.10,000/- தேவைப்படுகிறது. மேலும், 13 ஆண்டு காலமாக விஜயா வழக்கைப் பார்த்ததினால் பேராசிரியர் கல்யாணி அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பணம் செலவாகியுள்ளதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

அத்தியூர் விஜயாவிற்கு கிடைத்துள்ள நீதியை நிலைநாட்டவும், தொடர் சட்ட நடவடிக்கைகளுக்கும் தங்களிடம் பொருளுதவி எதிர்நோக்குகிறோம். அருள் கூர்ந்து தாங்கள் தங்களால் முடிந்தளவு நிதி அனுப்பி வைத்து விஜயாவுக்கு நீதி கிடைத்திட உதவ வேண்டுகிறோம்.


பேராசிரியர் பா.கல்யாணி
கோ.சுகுமாரன்


முகவரி: 15, முதல் மாடி,
 9-ஆவது குறுக்கு வடக்கு விரிவு,
ரெயின்போ நகர்,
புதுச்சேரி - 605 011.
பேச: 98940 54640

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்