Tuesday, April 24, 2007

தமிழனைக் கொல்ல சிங்களனுக்கு உதவும் இந்தியா

தமிழனைக் கொல்ல சிங்களனுக்கு
உதவும் இந்தியா
க.அருணபாரதி
 
    இந்தியா இலங்கைக்கு தற்பொழுது புதுப்புது நவீன ஆயுதங்களைக் கொடுத்து உதவியுள்ளது பற்றி செய்திகள் வெளியாகி உள்ளன.  ஏற்கெனவே தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களின் உச்சத்தில் வீற்றிருக்கும் சிங்கள இராணுவ நடவடிக்கைகளைக் கண்டு உள்ளம் பூரித்து போன 'இந்தி்'ய அரசின் இந்த செயல் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 
    பாகிஸ்தான், சீனம் உள்ளிட்ட நாடுகளால் இந்தியாவிற்கு எல்லையில் அச்சுறுத்தல் இருப்பது  போல இலங்கைக்கு பக்கத்து நாடுகளுடன் எந்தவொரு சண்டையும் இல்லை. இலங்கையில் உள்நாட்டு போர் தான் நடக்கிறதாம். அதற்கு இவ்வளவு ஆயுதங்கள் கொடுத்து உதவும் மனிதாபிமானமுள்ள மானங்கெட்ட  அரசுகள் சொல்கின்றன. இருந்த போதும், இலங்கைக்கு 'பெரியண்ணன்' அமெரிக்கா, 'சின்ன அண்னண்' இந்தியா, 'பங்காளி' பாகிஸ்தான் என பலநாடுகள் இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவுவது வெட்ட வெளிச்சம். பெரியண்னண் அமெரிக்காவை பொறுத்தவரை ஆயுதங்களை பின்லேடன் காசு கொடுத்தால் கூட கொடுத்து விடுவார்கள். அந்த அளவிற்கு பணம் மற்றும் லாபவெறி அவர்களிடம் ஊறிப் போயுள்ளதை சின்னக் குழந்தையும் சொல்லும் என்பது ஊரறிந்த சேதி.
   
    இலங்கையிடம் போதிய ஆயுதங்கள் இல்லையெனில் பிறர் ஓடி வந்து பிடித்துக் கொள்ளும் நிலைமையும் அங்கில்லை. விடுதலைப்புலிகளும் இலங்கை முழுமையும் எங்களுக்கு கொடு என சொன்னதும் இல்லை. சொல்லப்போவதும் இல்லை. சொல்லவும் மாட்டார்கள். அப்படியிருக்க பெரும் ஆயதங்களை குவிக்க வேண்டிய அவசியமென்ன என்பதனை ''இந்தி''யா சிந்திக்காது. ஏனெனில் அதன் அதிகார பீடங்களில் அமர்ந்து ஆட்சி செய்பவர்களுக்கு ஈழத்தமிழர்கள் இன எதிரிகளாக தென்படுகின்றனர். ஈழத் தமிழரின் நலன் பற்றி மனிதாபிமான அக்கறையுடன் பேசினால் கூட 'ராசீவ் காந்தி.. ராசீவ் காந்தி.. ராசீவ் காந்தி்'' என்று ஒப்பாரி வைக்கும் போலி தேசியவாதிகளான கதர்சட்டை முகாமிற்கு பல்லக்குத் தூக்கி தமிழினத்தை விற்று பிழைப்பு நடத்தக்கூடிய திராவிட தேசிய கட்சிகளின் போலி முகங்களை தமிழக மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
 
    தான் ஒருத்தர் தான் தமிழன மக்களின் கருத்தை பிரதிபலிப்பதாகக் கருதிக் கொண்டு திண்டிவனத்தார் இந்தியா இலங்கைக்கு ஆயுதம் வழங்கியதை கண்டித்து அறிக்கை விடுத்தார். அவரது கண்டனத்தால் சிறு துரும்பும் அசையப் போவதில்லை. அசையாது. ஏனெனில அவரது மகனுக்கு கொடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் பதவிக்கு விசுவாசமாக இருக்க வேண்டாமா? அப்புறம் எதற்கு கண்டன அறிக்கை..,? அதெல்லாம் இங்குள்ள தமிழின உணர்வாளர்களின் ஒட்டை பெற்றிடவே. மத்திய 'இந்தி'ய அரசின் படுபாதக செயலான இச்செயலைக் கண்டு உண்மையிலேயே ஈழத்தமிழர்களின் மீது அக்கறை பிறந்திருக்குமானால், திண்டிவனத்தார் அவரது மகனை பதவிவிலகச் சொல்லி மன்மோகன் சிங் அரசை ஆட்டம் காணச் செய்திருக்க வேண்டும். ஆனால் அவரது பதவி பாசம் அதனை செய்ய சொல்லாது. ''நீங்க திட்டுங்க.. அறிக்கை விடுங்க.. எங்கையாவது போய் போராட்டம் கூட பண்ணுங்க.. நாங்க ஆயுதம் கொடுத்துண்டு தான் இருப்போம்" என்று செயல்படும் மத்திய அரசிடம் தமிழக ஓட்டு அரசியல் கட்சிகள் பதவி அரசியல் செய்து ஈழத்தமிழர்களை ஒழிக்க நினைக்கும் சிங்கள அரசுக்கு மறைமுகமாக துணை போகின்றன.
 
    அங்கு சிந்தப்படுவது தமிழனின் குருதி என்பதை இவர்கள் என்று உணரப்போகிறார்களோ தெரியவில்லை. இங்கிருக்கும் தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்தை தடுக்க யோக்கியதை இல்லாத மத்திய கப்பற்படையும் தமிழக அரசும் வாய்ச்சவடால் பேசியே காலம் ஓட்டுவதை புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்துவிடும் என எண்ணிக்கொண்டிருக்கும் தமிழக அரசியல் டீலர்கள் அந்த கடிதத்தால் என்ன நடந்தது என்று எண்ணிப் பார்த்ததுண்டா?
   
    உகாண்டா நாட்டில் சர்க்கரை ஆலை ஒன்றை கட்டுவதற்கு குசராத்தை சார்ந்தவர்கள் முயன்ற போது, சொந்த நாட்டின் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதைக் கண்டு பொங்கியெழுந்த உகாண்டா மக்கள் ஒரு குசராத் சேட்டை கொன்றனர். என்ன நடந்தது? பா.ச.க அத்வானி ஓடிச் சென்று நேரடியாக வெளியுறவு அமைச்சகத்துக்கே சென்று இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று விசாரித்ததோடு மட்டுமல்லாமல் உகாண்டாவின் இந்தியத் தூதரகத்தையும் தொடர்பு கொண்டு பேசினார். தமிழக மீனவர்கள் இங்கு சிங்கள் வெறியநாய்களின் வேட்டைக்கு ஆளாகி செத்துக் கொண்டிருக்கும் ''தமிழின''த் தலைவர் என்ன செய்து கொண்டிருந்தார்? ஈழத்தமிழர்கள் மீது பதவிக்காக பாசம் செலுத்த மறுத்தது "நியாயம்"(?!)  "தர்மம்"(?!). ஆனால் இங்கு அவருக்கு ஓட்டுப்போட்டு மகுடம் சூட்டிய தமிழக மீனவர்கள் மீது அக்கறை செலுத்தாமல் கடிதம் மட்டும் எழுதி பிழைப்பு நடத்துவது நியாமா? தர்மமா?
 
    தனக்கு வேண்டப்பட்ட பதவி அளிக்கப்படவில்லை என்ற காரணத்திற்காகவும், மக்களுக்கு அந்த குறிப்பிட்ட பதிவியை வைத்து சேவை செய்ய முடியவில்லையே என்ற மன''வருத்த''த்தாலும் பதவியேற்க மறுத்த போது இருந்த ''வே(ட)கம், (ந)துடிப்பு'', தன் சொந்த மக்களை எந்த நாட்டுக் காரனோ சுட்டுக் கொல்லும் பொழுது ஏனில்லை? தடுப்பது எது?
 
    இவ்வளவு நடந்த பின்னரும் தமிழக மீனவர்கள்  மீண்டும் அவருக்கோ அல்லது செயலற்ற அறிக்கை விடும் செயலலிதாவுக்கோ தான் ஓட்டுப்போட்டு தனது விசுவாசத்தை காட்டி வெற்றி பெற வைக்கப்போவது உறுதி. மக்களுக்கு இல்லாத ரோசம் தலைவர்களுக்கு மட்டும் வந்துவிடுமா என்ன? காலம் பதில் சொல்லும் என நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.... தமிழக ஓட்டு அரசியல் கட்சிகள் தாம் தமிழினத்தின் சாபமும் சோகமும்.. மக்கள் இதனை புரிந்து கொள்ளாதவரை தமிழனை கடலில் மட்டுமல்ல கரையில் வந்து கூட சுட்டுவிட்டு போவான் சிங்களன்.. ஏனெனில் தமிழினத்தை விற்று பதவி அரசியலில் திளைக்கும் தலைவர்கள் இங்கு ஒரு வார்த்தையை மட்டும் தவறாமல் உபயோகிப்பார்கள் - "கூட்டணி தர்மம்".

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்