தமிழர் புத்தாண்டு எது? சித்திரையா? தையா?
"இப்பொழுதெல்லாம் புத்தாண்டென்றால் ஆங்கிலப் புத்தாண்டு என்றாகிவிட்டது...." என சுப்பு சொல்கிறார். அது புத்தாண்டு பற்றிய அவரது மனத்தடங்கலைக் காட்டுவதாக உள்ளது.
என்ன செய்வது? எப்படி செய்திப் பரிமாற்றத் துறையில் ஆங்கில மொழி உலகளாவிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறதோ அதே போல் ஆங்கிலப் புத்தாண்டும் இனம், பண்பாடு ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து எல்லோருக்கும் உரித்தான ஒரு புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறித்தவத் தமிழர்களுக்கு சனவரி முதல் நாளே புத்தாண்டு என்பது மனங்கொள்ளத்தக்கது.
ஆங்கில மொழி ஆதிக்கத்தின் காரணமாக இந்த நூற்றாண்டு முடியுமுன்னர் தமிழ் உட்பட 100 மொழிகள் அழிந்தொழிந்து விடும் என அய்க்கிய நாடுகள் கல்வி, பண்பாடு அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஆங்கில மொழி ஆதிகத்துக்கான காரணங்கள் பலவுண்டு. அவற்றை வரிசைப்படுத்தலாம் என நினைக்கிறேன்.
1) ஆங்கிலேயர்கள் 18 – 20 ஆம் நூற்றாண்டு வரை பலநாடுகளைப் பிடித்து ஆண்டார்கள்.
2) ஆங்கிலேயர் நாடுகளைப் பிடித்து அங்கெல்லாம் புலம்பெயர்ந்த போது தங்களது மொழியை அந்தந்த நாடுகளில் ஆட்சிமொழியாக வைத்துக்கொண்டார்கள்.
3) ஆங்கிலேயர் அறிவியல், மருத்துவம், வரலாறு, வானியல் போன்ற துறைகளில் ஈட்டிய அளப்பரிய சாதனை.
ஆங்கில புத்தாண்டு புகழடைவதற்கு முக்கிய காரணம் உரோமர்கள் கண்டு பிடித்த நாள்காட்டியே ஆகும். முதலில் உரோம பேரரசர் யூலியஸ் சீசர் (கிமு 100 – கிமு 44) அவர்களே ஒரு புதிய நாள்காட்டியை அறிமுகப்படுத்தினார். கிமு 46 ஆண்டின் நாள்களை 445 நாள்களாக அதிகரித்தார்.
இது சமய விழாக்களை உரிய காலத்தில் கொண்டாடும் முகமாகச் செய்யப்பட்டதாகும். சீசர் (Sosigenes) என்ற வானியலாளரின் அறிவுரைப்படி ஒரு ஆண்டின் நாள்களை 365 எனவும் நான்காண்டுக்கு ஒருமுறை பெப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக் கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு 1,000 ஆண்டு காலத்தில் 8 நாள்களை அதிகரிகச் செய்துவிட்டது.
கிபி 1563 யூலியன் நாள்காட்டி அடிப்படையில் வேனில் சமயிரவு (vernal equinox) மார்ச்சு 100 இல் இடம்பெற்றது. ஆனால் வேனில் சமயிரவு 21 க்கு முந்தி வரக்கூடாது என போப்பாண்டவர் கிறெகோறி முடிவு செய்தார். எனவே போப்பாண்டவர் 1582 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதத்தில் பத்து நாள்களைக் குறுக்குமாறு ஆணை பிறப்பித்தார். அதனால் ஒக்தோபர் 4, 1582 (யூலியன்) அடுத்து ஒக்தோபர் 15 (வெள்ளிக்கிழமை) தொடர்ந்தது. மேலும் ஒரு ஆண்டு 00 முடிந்து அதனை 400 ஆல் பிரிக்க முடிந்தால் பெப்ரவரி மாதத்தில் மேலும் ஒரு நாளைக் கூட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இன்று உலகம் முழுதும் கிறெகோறி செம்மைப்படுத்திய நாள்காட்டியே பின்பற்றப்படுகிறது. அந்த நாள்காட்டியின் படி சனவரி முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகும்.
ஆங்கில புத்தாண்டுபற்றி மனத்தடங்கலை வெளியிட்ட சுப்பு "சனவரி ஒன்றுக்கு முன் சித்திரை ஒன்று என்னவாயிற்று?" எனக் கேட்கிறார்.
சனவரி புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே!
சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை? தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம் பெற்றுள்ளன. அனைத்துச் சொற்களும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறான வடமொழி வடிவங்களே!
இப்போது வழங்கும் பிரபவ தொடங்கி சய ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையா தலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940)
60 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதனாலும் அது மிகக் குறுகிய காலத்தைக் (60ஆண்டுகள்) கொண்டுள்ளதாலும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாது. ருத்ரோத்காரி ஆண்டில் ஒருவர் பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியமுடியாது. (பக்கம் 163 - பாவாணரின் ஒப்பியன்மொழி நூல் -1940)
மேற்குறிப்பிட்டவை மூலமாக 60 ஆண்டு வந்தவழிஇ அது நடைமுறைக்கு நாட்டில் வந்த ஆண்டுஇ வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாமை ஆகியன பற்றிய செய்திகளை நாம் அறிய முடிகிறது.
கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குழுந்தைகள்தாம் 60 தமிழ் ஆண்டுகள் என்பது புராணக் கதை.
இந்தக் கதையே அருவருக்கத்தக்கது. ஆபாசமானது. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது. கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது. மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது.
இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், சமுதாயம், நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியாது.
இந்த 60 ஆண்டு முறையும் பிறவும் தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்பதற்குச் சான்றாக விளங்குவதால் அறிவு ஆசான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழர்கள் மானமும் அறிவும் உள்ள மக்கள் என்றும் சித்திரை தமிழர்களது புத்தாண்டு அல்லவென்றும் சொன்னார்கள்.
இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.
திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு தைத் திங்கள் முதல்நாள் பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள.
இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் "மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்" என்று விளக்கம் தந்தார்.
இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் அடங்குவர்.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு 31. எனவே, ஆங்கில ஆண்டுடன் (2007) 31 அய்க் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2038.
தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. எனவே இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆகும்.
தமிழர்களுக்கு தையில் தொடங்கும் ஒரு தொடர் ஆண்டு தேவை. வேண்டுமென்றால் சித்திரையை இந்துக்களது புத்தாண்டாகக் கொண்டாடலாம்.
தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு வானியல் அடிப்படையும் உண்டு. அன்றுதான் ஞாயிறு தனது தென் திசை நோக்கிய செலவை முடித்துக் கொண்டு வட திசை நோக்கிய செலவை மகர இராசியில் இருந்து மேற்கொள்கிறது.
எனவே தமிழர் தை முதல் நாளை புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் பிறந்த நாள் என முப்பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டும். .
தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்
(புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்)
பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்
(புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்)
--
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
0 கருத்துகள்:
Post a Comment