Wednesday, July 25, 2012

“புதுச்சேரி என்பது அரசியல் பூமி” - 'என் விகடன்' இதழில் எனது பேட்டி!


ஆனந்த விகடன் இதழுடன் வெளிவரும் என் விகடன்” துணை இதழின் புதுச்சேரிப் பதிப்பில், “எங்கள் ஊர்” பகுதியில், இவ்வாரம் (சூலை1-26) எனது செவ்வி வெளியானது.  அதனை இங்கு பதிகின்றேன். 


ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிகள் தமிழகத்தையும், ஏனைய இந்தியத் துணைக் கண்டத்து சமஸ்தானங்களையும் கைப்பற்றியதைப் போலவே, பிரஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனிகள் புதுச்சேரி, காரைக்கால், மாஹி, யானம் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றி வைத்திருந்தன.

1917 களில் இரசியப் புரட்சி தோற்றுவித்த எழுச்சி, புதுச்சேரியிலும் படர்ந்தது. அப்போது கம்யூனிஸ்ட்டுக் கட்சித் தலைவராக இருந்த வ.சுப்பையா தலைமையில், விடுதலை வேண்டி பல போராட்டங்கள் நடைபெற்றன. அந்தளவிற்கு கம்யூனிசப் பிடிப்புடன் இருந்த புதுச்சேரி, பிற்காலத்தில் காங்கிரசின் கோட்டையாக மாறிப் போனது வியப்பானது" என்ற வரலாற்றுத் தகவல்களோடு தன் ஊர் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார் 'தமிழர் கண்ணோட்டம்' ஆசிரியர் குழுவினைச் சேர்ந்த க.அருணபாரதி. 

“தமிழகத்தில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் இங்கும் எதிரொலித்தன. இந்தி எதிர்ப்புப் போரின் போது கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு 22 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்ட இராணுவத்தினர், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 15 பேரை சுட்டுக் கொன்றது. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய போது, புதுச்சேரியிலும் சோ்த்தெ வெற்றி கண்டார். ஆனால், புதுச்சேரியை தமிழகத்துடன் இணைப்பது குறித்து அ.தி.மு.க. அரசு பேசியது, அவர்களுக்கே ஆபத்தாக முடிந்தது.

தமிழகத்துடன் இணைக்கப்பட்டால் புதுச்சேரிக்கு இந்திய அரசால் வழங்கப்படும் சலுகைகள் நிறுத்தப்பட்டு விடும் என்ற அச்சத்தின் காரணமாக மக்கள் அம்முடிவை கடுமையாக எதிர்த்தனர். அம்முடிவை மேற்கொண்ட அ.தி.மு.க. அரசு விரைவிலேயே டிஸ்மிஸ் ஆகும் அளவிற்கு மக்கள் போராட்டம் வீரியத்துடன் நடைபெற்றது. அதன் பின், இன்றுவரை புதுச்சேரியில் அ.தி.மு.க. செல்வாக்குப் பெற்றக் கட்சியாக வளர முடியவில்லை.

காலனிய ஆட்சியின் போது, புதுச்சேரி நகர்ப்பகுதி, பிரஞ்சு அரசால் நன்கு திட்டமிட்ட முறையில் வடிவமைக்கப்பட்டது. பிரஞ்சு வெள்ளையின மக்கள் தனியாகவும், மண்ணின் மக்களான தமிழர்கள் “கருப்பின” மக்களாகவும் கருதி அவர்களைத் தனியாகவும் பிரித்து வைக்கும் வகையில் புதுச்சேரி நகரத்தை பிரெஞ்சு அரசு வடிவமைத்தது. காலனிய ஆட்சிமுறை முடிந்து விட்ட நிலையிலும், இந்நகர வடிவமைப்பு  இன்று வரை அப்படியே தொடர்கின்றது. 

இன்றைக்கு நாங்கள் சிறுபிராயத்தில் விளையாடி மகிழ்ந்த ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் மகிழுந்தும், இதர மோட்டார் வாகனங்களும், நாங்கள் விளையாடிய இடங்களை அடைத்துக் கொண்டு நிற்கின்றன. பல காலமாக பூட்டியவாறே கிடந்த பழைய வீடுகளின் திண்ணைகளில் புதிய வண்ணங்களில் கடைகளின் பெயர் பலகைகள் தொங்குகின்றன. கேரம் போர்டும்,  செஸ்ஸும்  விளையாடிய திண்ணைகள் இடிக்கப்பட்டு, அவை கார் நிறுத்துமிடமாகவும், புதிய கடைகள் வைக்கவும் உருமாற்றப்பட்டு விட்டன.

கிரிக்கெட் விளையாடி தெருவிளக்கை உடைத்து காவல்துறை வரை சென்ற அத்தெருவின் பத்தாண்டுகளுக்கு முன்னான “வரலாற்று” நிகழ்வுகள் எல்லாம், இத்தெருவில் இப்போது வசிக்கும் சிறுவர் - சிறுமியர்க்குத் தெரியாது. இப்போது, அவர்களில் பெரும்பாலோர், பெற்றோர்களின் எதிர்காலம் குறித்த அறிவுரையின் காரணமாக, ட்யூசன்களிலும், பயிற்சி வகுப்புகளிலும் மூழ்கிவிட்டனர்.

படங்கள்: முத்துக்குமார், ஆ.நந்தக்குமார், நன்றி: ஆனந்த விகடன்



Friday, July 20, 2012

தமிழ்த் தேசியத்தின் மீதான அவதூறுகளும், போலித் தமிழ்த் தேசியர்களும்




தமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலையும் கருத்து ரீதியாக எதிர்கொண்டு பதில் கூறாமல், அவரது பிறப்பை இனங்கண்டு, அவரை ‘கன்னடர்’ எனத் தூற்றுகின்றனர்.
seeman_340பெரியாரை மட்டுமின்றி, தமிழினத் துரோகிகளாக விளங்கும் கருணாநிதி, தங்கபாலு உள்ளிட்ட பலரையும் ‘தெலுங்கர்கள்’ எனத் தூற்றி, அவர்கள் செய்த துரோகங்கள் அனைத்தும் அவர்களது பிறப்பினால் மட்டுமே வருவது போலப் பேசுகின்றனர். ‘தமிழ்ச்’ சாதியில் பிறந்த ப.சிதம்பரம், பா.ம.க. இராமதாசு, தனியரசு, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் தமிழராய்ப் பிறந்துவிட்ட காரணத்தினாலேயே என்ன செய்து கிழித்துவிட்டனர் என அவர்கள் யாரும் அலசி ஆராய முற்படுவதில்லை.
ஒருவரின் நடைமுறைச் செயல்பாடுகளில் உள்ள தமிழினத் துரோகச் செயல்களைப் பட்டியலிட்டு விமர்சிக்காமல், அவர் பிறந்த சாதி எது என ஆராய்ச்சி செய்து தூற்றுகின்ற ‘மனுதர்மப்’ போக்கு சிலரால் முன்வைக்கப்படுகிறது. மனுதர்மப் பார்வையுடன் பேசித் திரியும் இப்போக்காளர்களை, தமிழ்த்தேசியர்கள் என பொதுமைப்படுத்தி அடையாளப்படுத்துபவர்கள் உள்நோக்கம் கொண்டவர்களாகவே இருக்க முடியும்.
ஏனெனில், ஆரியப் பார்ப்பனிய மனுதர்மத்தையும், சாதியையும், அதன் இன்றைய கருத்தியல் வடிவமான இந்தியத் தேசியத்தையும் தன் பிறப்பிலேயே மறுதலிப்பது தான் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியல் ஆகும். தமிழ்–தமிழினம் என பேசிக் கொண்டு திரிபவர்கள் எல்லோரும் தமிழ்த் தேசியர்கள் என பொதுமைப்படுத்தி அடையாளப்படுத்தத் தொடங்கினால், தமிழினத் துரோகி கருணாநிதியைக் கூட எளிதில் “தமிழ்த்தேசியர்” என அடையாளப்படுத்தி விடலாம்.
ஆக, வெறும் மொழிப்பற்றையும், இனப்பற்றையும், ஒரு விடுதலைக் கருத்தியலாகக் கருதுவது முற்றிலும் தவறானது. தமிழ்த் தேசியம் என்ற விடுதலைக் கருத்தியல் வெறும் மொழி - இனப் பற்று கொள்வதை மட்டும் கொண்டதல்ல. மாறாக,  முழுமையான மொழி – இன விடுதலைக்குப் பாடுபட மக்களை அணிதிரட்ட முன்வைக்கப்படும் கருத்தியலே தமிழ்த் தேசியம் ஆகும்.
திராவிடக் கருத்தியலை கடுமையாக எதிர்க்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியாரின் சமூகப் பங்களிப்பை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், அவரது தவறான கருத்துகளை சுட்டிக் காட்டி திறனாய்வு செய்கின்றது. இந்தி எதிர்ப்பை மேற்கொண்ட பெரியார், தமிழகத்தில் தமிழை முதன்மைப்படுத்துவதை விட்டுவிட்டு ஆங்கிலத்தை முதன்மைப்படுத்தினார். பகுத்தறிவுவாதம் என்ற பெயரில், தமிழர்களின் மரபார்ந்த அறிவியலையும், அறத்தையும் கொச்சைப்படுத்தி மேற்கத்தியவாதத்தை முன்வைத்து செயல்பட்டார். இவ்வாறு பெரியாரின் செயல்பாடுகள் மீது திறனாய்வுகளை முன்வைக்கும் நாம், ஒருபோதும் பெரியாரைக் 'கன்னடர்' என பிறப்பு அடிப்படையில் ஆய்ந்து, இத்திறனாய்வுகளை முன்வைப்பதில்லை.
வரலாற்றுப் போக்கி்ல் தமிழகத்தில், அயல் இனத்தாரின் படையெடுப்பால் பல்வேறு அயல் இனத்தவர்கள் குடியமர்த்தப்பட்டது உண்மையே. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இக்குடியேற்றத்தால், இங்கு வசிக்கத் தொடங்கிய அயல் இனத்தார் பல்வேறு சமூகங்களாக, தமிழ்ச் சமூகத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர்.
தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை வீட்டு மொழியாகக் கொண்டும், தமிழைத் தம் வாழ்வியல் மொழியாகவும் ஏற்றுக் கொண்டவர்கள் இவர்கள். பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வரும் இவ்வகைச் சமூகத்தினர், தங்களது தாயகத்துடன் முற்றிலும் தொடர்பை இழந்து, தமிழகத்தைத் தம் தாயகமாக ஏற்றுக் கொண்டவர்கள்.
அதேபோல், தம் வழிபாட்டு மொழியாக உருது, ஆங்கிலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், முகமதியர், கிறித்துவர்களை   'கவனத்துடன்'  கையாள வேண்டுமென்கிறது நாம் தமிழர் கட்சியின் ஆவணம். இது இந்துத்துவத்திற்கு நெருக்கமானப் போக்காகும்.    ஈழ விடுதலையை வலியுறுத்துவது, இந்திய இறையாண்மையை ஏற்றுக் கொள்வது, முகமதியர்கள் மற்றும் கிறித்துவர்களை சந்தேகப் பட்டியலில் வைப்பது ஆகிய நாம் தமிழர் கட்சியின் மூன்று செயல்திட்டங்களை மட்டும் நாம் இணைத்துப் பார்த்தால், இம்மூன்றையும் தங்களது செயல்திட்டமாக ஏற்றுக் கொண்டு ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டுள்ள, இந்திய மற்றும் இந்துத்துவ வெறியர்களின் கூடாரமான இந்து மக்கள் கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் குறைவான வேறுபாடுகளையே நாம் காண முடியும்.
நாம் முன்வைக்கும் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியல், எம்மதத்தவரையும் விலக்கி வைப்பதாகவோ, சந்தேகப் பட்டியலில் வைப்பதாகவோ இயங்கும் கருத்தியல் அல்ல. அனைத்து மதத்தவரையும் உள்ளடக்கிய தமிழ்த் தேசிய இனத்திற்கு விடுதலையைப் பெற்றுத் தரும் கருத்தியலே ஆகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழகத்தில் எழுந்த பல போராட்டங்களிலும், இவ்வாறு போலித் தமிழ்த் தேசியர்களால் வேறுபடுத்திப் பார்க்கப்படும் சமூகத்தினர் தங்களது பங்களிப்பைச் செய்துள்ளனர். வீட்டில் தெலுங்கு பேசினாலும், தமிழைத் தம் வாழ்வியல் மொழியாக ஏற்றுக் கொண்ட ஒடுக்கப்பட்ட சமூகமான அருந்ததியர்களின் அமைப்பான ஆதித்தமிழர் பேரவையினர், ஈழ விடுதலையை முன்வைத்துப் போராடுகின்றனர். பல முசுலிம் மற்றும் கிறித்தவ மத அமைப்புகள் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி போராடியிருக்கின்றன. அதேபோல, தெலுங்கு நாயுடு, நாயக்கர் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் இன்றும் தமிழர் உரிமை பேசும் பல்வேறு அமைப்புகளில் உறுப்பு வகிக்கின்றனர்.
இச்சமூக மக்களின் பங்களிப்புகளை ஏற்றுக் கொண்டு, அவர்களை அரவணைத்து, தமிழ்த் தேச விடுதலை என்ற உயரிய இலட்சியத்தின்பால் அவர்களை அணிதிரட்ட வேண்டியதே உண்மையான தமிழ்த் தேசியர்களின் கடமை. ஆனால், அதைச் செய்யாமல் அச்சமூக மக்களையும், இயக்கங்களையும் அவர்களது பிறப்பு வழி சாதியைக் கண்டுபிடித்து, அதன் காரணமாகவே அவர்கள் மீது வெறுப்பைக் கக்குவது தமிழ்த் தேசிய விடுதலைக்கு எதிரானது.
தம் வீட்டு மொழியாக அயல் மொழியைக் கொண்டிருந்தாலும், சமூக மொழியாக தாய்தமிழை ஏற்றுக் கொண்ட இச்சமூக மக்களை ஒட்டுமொத்தமாக ‘வடுகர்’ எனக் குறிப்பிட்டு, அவர்களை பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையில் வைத்து எதிர்க்க வேண்டும் என்ற கருத்தை அறிஞர் குணா முதலில் முன்வைத்தார். தமிழ்ச் சமூகத்தின் வானியல் அறிவு குறித்த பல சீரிய ஆய்வுகளை முன்வைத்த, அறிஞர் குணாவின் இப்பார்வை தவறானது. ஒரு தேசிய இனத்தின் தாயகப்பகுதியில் பல நூற்றாண்டுகளாக தங்கி, அம்மக்களோடு பிணைந்த உளவியலையும், வாழ்வியலையும் பெற்ற மக்களை முழுவதுமாக வெளியேற்றுவது பாசிசமே ஆகும்.
இப்பாசிசக் கருத்தை ஏற்றுக் கொண்ட தமிழர் களம், நாம் தமிழர் கட்சி, பா.ம.க. உள்ளிட்ட அமைப்புகளும், “எழுகதிர்” அருகோபாலன் போன்ற சிலரும் தான் “தமிழ்த் தேசியம்“ என்ற பெயரில் இத்தவறான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஆரியத்தின் தென்னாட்டுக் கிளையான திராவிடத்தை மட்டுமே இவர்கள் குறிவைத்து சாடுகிறார்களே ஒழிய, தமிழர்களின் முதன்மையான எதிரியான ஆரியப் பார்ப்பனிய இந்தியத் தேசியத்தை விட்டுவிடுகிறார்கள்.
‘தமிழனை தமிழனே ஆள வேண்டும்’ என்று கூறும் இவர்கள், தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியில் தம்மை அமர வைக்கக் கோருகிறார்கள். இந்திய அரசுக்குத் தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் கங்காணிப் பதவியான தமிழக முதல்வர் பதவியில், ‘தமிழ்ச் சாதியில்’ பிறந்த இவர்களை அமர்த்தக் கோரும் பதவி அரசியலைத் தான் இவர்கள், ஏதோ இனவிடுதலை அரசியல் போல் முன்வைத்து படம் காட்டுகிறார்கள். இதற்குப் பதில், அப்பட்டமாக, “எங்களை முதல்வராக்குங்கள்” என தே.மு.தி.க., ம.தி.மு.க., போன்ற தேர்தல் கட்சிகளைப் போல் இவர்கள் பரப்புரை செய்யலாம். அதைவிடுத்து, தமிழர் - தமிழ்த் தேசியம் என பேசுவதெல்லாம் வெறும் ஓட்டுகளுக்காகவே ஆகும்.
தமிழ்நாட்டு முதல்வர் பதவியில், “மானத்தமிழன்” அமர்ந்தாலும், மார்வாடி அமர்ந்தாலும் அதன் விளைவாக தமிழ் இனத்திற்கு ஏதும் கிடைக்கப் போவதில்லை. தமிழீழச் சொந்தங்களை அழித்தொழிக்கும் இலங்கைப் போரை நிறுத்த வேண்டுமென கொண்டு வரப்பட்ட தீர்மானம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக் கோரும் தீர்மானம், இலங்கை மீது பொருளியல் தடை கோரும் தீர்மானம் என ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு இந்திய அரசின் குப்பைத் தொட்டிக்குள் விழுந்த தீர்மானங்களைப் போல, அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து வெறும் தீர்மானங்கள் மட்டுமே போடுவதைத்தான் தமிழக சட்டமன்றம் செய்ய முடியுமே தவிர, ஒருக்காலும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் அரசியல் விடுதலையைப் பெற்றுத் தர முடியாது.
ramadas_220பெ.தி.க., ம.தி.மு.க., போன்ற அமைப்புகள் “திராவிடம்” என்ற தவறான சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு செயல்பட்டாலும், நடைமுறையில் அவர்கள் தமிழீழ விடுதலைக்கும் தமிழக உரிமைகளுக்கும் செய்த பங்களிப்புகளையும் நாம் மதிக்க வேண்டும். அவர்களது தவறான கருத்தியலின் காரணமாக, அவர்களது உண்மையான ஈகங்கள் பெருமையிழப்பதை நாம் தோழமை உணர்வுடன் சுட்டிக்காட்ட வேண்டும். பெரியாரின் ‘திராவிட’ கருத்தியலை ஏற்றுக் கொள்ளும் இவ்வமைப்பினர், அவர் முன்வைத்த தனித்தமிழ்நாடு என்ற இலக்கை தங்களது வேலைத் திட்டமாக இன்னும் ஏன் அறிவித்துச் செயல்படவில்லை என்பதும் நமது கேள்வியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு, தமிழ் – தமிழினம் என முழங்கி செயல்படும் அமைப்புகள் மற்றும் உணர்வாளர்களின் தத்துவ அடித்தளத்தையும், நடைமுறை வேலைத் திட்டங்களையும் தான் நாம் விமர்சிக்க வேண்டுமே தவிர, அவர்களது பிறப்புவழிச் சாதியை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துத் தூற்றுவது மனுதர்மப் போக்கே ஆகும். இதுவே, இப்போலித் தமிழ்த் தேசியர்களுக்கு பெரும் வேலையாகி  விட்டது.
சாதியை முன்வைத்து வெளியிடப்படும், இவ்வகை பதவி சுகம் தேடும் போலித் தமிழ்த் தேசியவாதிகளின் கருத்துகளை, உண்மையான “தமிழ்த் தேசியம்” எனக் கூறி, தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்களும், இந்தியத் தேசிய வெறியர்களும் உள்நோக்கத்துடன்  வெளியிட்டு அவதூறு செய்து மகிழ்கிறார்கள்.
திராவிடத்திற்கு மாற்றாக, தமிழ்த் தேசியக் கருத்தியலின் வலிமையை கருத்தியல் ரீதியாக எடுத்துரைக்க வேண்டுமே தவிர, தமிழ்ச் சமூகத்தின் இழிவான சாதியை வைத்து அதை நிறுவக் கூடாது.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, 1956ஆம் ஆண்டு இந்திய அரசால், மொழிவழி மாநிலமாக தமிழகம் உருவாக்கப்பட்டதற்குப் பிறகு தமிழகத்திற்குள் குடியேறி, பொருளியல் – பண்பாட்டு ஆதிக்கங்கள் புரியும், தெலுங்கர்கள், மார்வாடி-குசராத்தி சேட்டுகள், மலையாளிகள் உள்ளிட்ட அனைத்து அயல் இனத்தாரையும் வெளியேற்ற வேண்டும் எனக் கோருகிறது. தற்போது, தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் குடியேறி வரும் வடவர்களையும், மலையாளிகளையும் வெளியேற்றக் கோருவதும் இந்த அடிப்படையில் தான்.
தமிழீழத் தாயகப்பகுதிகளில் சிங்களவரைக் குடியேற்றி, தமிழ் மக்களை சிறுபான்மையாக்க முயலும் சிங்கள அரசின் இனவெறியைக் கண்டிக்கும் அதே அடிப்படையில் தான், த.தே.பொ.க., தமிழ்நாட்டுத் தமிழர்களை சிறுபான்மையாக்கும் விகிதத்தில் மிகை எண்ணிக்கையில் குடியேறும் வடவர்கள், மலையாளிகள் உள்ளிட்ட அயல் இனத்தாரை வெளியேற்றக் கோருகிறது. திராவிட இயக்கமான ம.தி.மு.க., போன்ற அரசியல் கட்சிகள் சிங்களக் குடியேற்றத்தைக் கண்டிக்கின்றனவே தவிர, தமிழகத்தில் மலையாளிகளையும், வடவர்களையும் வெளியேற்றக் கூடாது என்பதையும் நாம் விமர்சிக்கிறோம்.
தமிழகத்தில் மிகை எண்ணிக்கையில் உள்ள அயல் இனத்தாரை வெளியேற்றுகின்ற அதே வேளையில், தமிழக எல்லையோரங்களில் உள்ள பிற தேசிய இன மக்கள் மொழிச் சிறுபான்மையினராகக் கருதப்பட்டு, அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் நாம் கூறுகிறோம்.
இது உலகெங்கும் இன்றைக்கும் உள்ள 'விசா நடைமுறையைப் போன்றதாகும். ஆனால், அறிஞர் குணா பாதையில், தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்து குடியேறி, தமிழ் மக்களாக வாழுகின்ற சமூகத்தினரை வெளியேற்றவது என்பது நடைமுறைச் சாத்தியம் இல்லாத பாசிசத் தன்மையுடன் முன்வைக்கப்படும் திட்டமாகும். ஒரு தேசிய இனத்தின் தாயகத்தில் முழுவதுமாக ஒரே இனம் தான் வாழ வேண்டும் என்ற இனத்தூய்மையாக்கல் கொள்கை ஒருக்காலும் சாத்தியம் ஆகாது.
ஏனெனில், ஒரு தேசிய இனத் தாயகத்தின் எல்லைப் பகுதிகளில், அண்டைத் தேசிய இன மக்கள் குடியேறுவதும், பிறநாட்டினர் சிறு அளவில் குடியேறுவதும் இன்றைய நடைமுறையில் தவிர்க்க இயலாது. ஆனால், ஒரு தேசிய இனத்தின் தாயகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவே, பிற தேசிய இன மக்கள் குடியேறலாமேத் தவிர, அத்தேசிய இன மக்களை விட அதிகளவிலான பிற தேசிய இன மக்கள் குடியேறக் கூடாது என கட்டுப்பாடு விதிப்பது பாசிசமாகாது. இந்த அளவுகோல் வேறுபாடுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சிங்கள ஆதிக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொள்ள வேண்டுமென தமிழீழ மக்களைத் திரட்ட, தமிழீழத் தமிழர்களால் வழங்கப்படுகின்ற கருத்தியலே, அவர்களால் ‘தமிழ்த் தேசியம்’ என முன்வைக்கப்படுகிறது. அதே போல், இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாக உள்ள தமிழ்நாடு தம்மை விடுவித்துக் கொண்டு தனித் தமிழ்த் தேசமாக மலர வேண்டும் என்பதே தமிழகத்தில் ‘தமிழ்த் தேசியம்’ ஆக இருக்க முடியும்.
ஆனால், இந்திய அரசியலமைப்பையும், இறையாண்மையையும் ஏற்றுக் கொண்டு நடைபெறும் தேர்தல்களில் பங்கேற்பதும், தமிழ் இனத்தை இந்திய அரசுக்குக் காட்டிக் கொடுக்கும் மசோதா மன்றமாகத் திகழும் தமிழக சட்டமன்றத்திற்குப் போட்டியிடுவதும் தான் ‘தமிழ்த் தேசியம்’ என நாம் தமிழர் கட்சி, தமிழர் களம், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சியினர் பேசுகின்றனர்.
தேர்தல் அரசியல் மூலம் பெறுவதற்கு தமிழ்த் தேசியம் என்ன இடஒதுக்கீடு போன்ற சீர்திருத்தக் கொள்கையா என்று கூட இவர்கள் சிந்திப்பதில்லை. ‘அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு’ எனப் பேசி தேர்தல்களில் பங்கேற்று மக்களை ஏய்த்த தி.மு.க.வின் வழித்தோன்றல்களாகவே இவர்கள் மக்களிடம் தென்படுவார்கள். ம.தி.மு.க., பா.ம.க., கொ.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சி, தமிழர் களம் என எத்துணை அமைப்புகள் வந்தாலும் இதற்கு விதிவிலக்கல்ல.
தேர்தல்களில் வெற்றி பெற்று பதவிகள் பெறலாம், தமிழ்ச் சமூகத்திற்கு சில கூடுதல் உரிமைகளைக் கூடப் பெற்றுத் தரலாம் என்றாலும், ஒருபோதும் தமிழ்த் தேசிய விடுதலையைப் பெற்றுத் தர முடியாது. ஏனெனில், தமிழ்த் தேசியம் என்பது நாம் கேட்டுப் பெற வேண்டிய சலுகையல்ல; அது ஒர் தேசிய இனத்தின் விடுதலை இலக்கு. அதனை மக்கள் எழுச்சிப் போராட்டங்களே பெற்றுத் தரும், அதில் தேர்தல் கட்சிகளுக்கு இடமில்லை.
(கட்டுரையாளர் க.அருணபாரதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர்)


சிங்கள இனவெறியன் இராசபக்சேவின் திமிர்ப் பேச்சு


“தமிழ்நாட்டு மீனவர்கள் பாக் நீரிணையில் மீன்பிடித்தால் அவர்களை அனைத்துலக கடற்பரப்பு விதிகளின்படி சிறையிலடைப்பேன்” என சிங்களத் தடியரசுத் தலைவர் இராசபக்சே கொக்கரித்துள்ளார்.
பிரேசிலில் ரியோடிஜெனிரோ நகரில் நடை பெற்ற ரியோ பிளஸ் 20 ஐ.நா மாநாட்டில் உரையாற்றிய இராசபக்சே, “சிறிலங்காவுக்கு அருகில், வடக்கில் உள்ள அயல் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் வேண்டுமென்றே சிறிலங்கா கடற்பரப்புக்குள் வந்து, இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் வளத்தையும், அரிய கடல் செல்வங்களையும் கொள்ளையிடுகின்றனர். பாக் நீரிணையில் உள்ள கடல்வளம் எங்களுக்கு உரியது. எனவே, பிரச்சினைக்குரிய பகுதி என பாக்கு நீரிணை பகுதியைப் பிரகடனப்படுத்த வேண்டும். மீறி வருபவர்கள் மீது அனைத்துலக கடல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனுமதி வேண்டும்” என்று பேசினார்.
தமிழ்நாட்டு மீனவர்களும், ஈழத்தமிழ் மீனவர்களும் ஒற்றுமையுடன் மீன்பிடித்து வந்தகச்சத் தீவை, சிறீலங்காவிற்கு சொந்தமாக்கியது இந்திய அரசு. இதன் காரணமாக இன்றுவரை, கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை சுட்டுக் கொல்வதும், கடுமையாகத் தாக்குவதும், அம்மணமாக்கிக் கொடுமைப்படுத்துவதும், வலைகளை அழித்து நாசம் செய்வதும், சிறைபிடிப்பதும் என நாளுக்கு நாள் கொடுமைகளை அரங்கேற்றி வருகிறது இலங்கை.
கடந்த 19.06.2012 அன்றிரவு கூட, வேதாரணியம் - கோடியக்கரைக்கு தென்கிழக்குப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 9 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். 4 நாட்களுக்குப் பின்னர், தமிழக அரசின் தலையீட்டின் பேரில், அவர்கள் விடுதலையாயினர்.
அனைத்துலக கடற்சட்டத்தின்படி கைது செய்யப்படும் அயல்நாட்டு மீனவர்களை 20 ஆண்டுகள் வரை சிறையிலடைக்க முடியும். இதை மனதில் வைத்துக் கொண்டுதான், ஐ.நா. மாநாட்டில் சிங்கள இன வெறியன் இராசபக்சே தமிழகத் தமிழர்களின் மீது வெறுப்பை உமிழ்ந்து பேசியுள்ளார்.
அம்மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கோ, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனோ, இதை கண்டு கொள்ளவே இல்லை. தமிழ்நாட்டு மீனவர்கள் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உள்ளிட்ட பல அமைச்சர்கள் இராசபக்சே போலவே பேசியதை நாம் மறக்கவில்லை.
தமிழக மீனவர்களை 20 ஆண்டுகள் கொடுஞ் சிறையிலடைக்க இந்திய அரசும், சிங்கள அரசும் இணைந்து முடிவெடுத்து செயல்படுகின்றனவோ என்ற ஐயத்தையே ஐ.நா. மாநாட்டில் இராசபக்சேவின் பேச்சு வலுப்படுத்துகிறது.
தமிழக மீனவர்களை 20 ஆண்டுகளென்ன அங்கேயே கொத்துக் கொத்தாக சிங்களக் கடற்படையினர் சுட்டுக் கொன்றால் கூட இந்தியஅரசு கண்டு கொள்ளாது என்பது தெளிவு. தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளை மீட்க, கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி நாம் தான் களத்தில் இறங்க வேண்டும். அதுவே மீனவர் துயரத்திற்கு விடையளிக்கும்.

(இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012 ஜூலை 1-15 இதழில் வெளிவந்தது. கட்டுரையாளர் க.அருணபாரதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர்)

இலண்டனிலிருந்து விரட்டப்பட்ட இராசபக்சே



தமிழர்களின் வீரமிகு எதிர்ப்புப் போராட்டங்களின் காரணமாக, இலண்டன் மாநகரில் நடைபெற்ற பொதுநல ஆய நாடுகளின் வர்த்தக மாநாட்டில் உரை நிகழ்த்த முடியாமல் சிங்களத் தடியரசுத் தலைவர் இராசபக்சே விரட்டியடிக்கப் பட்டார்.
இலண்டன் மாநகரில் 06.06.2012 அன்று நடை பெறவிருந்த பொதுநல ஆய நாடுகளின் வர்த்தக மாநாட்டில் உரை நிகழ்த்துவதற்காகவும், இங்கிலாந்து மகாராணி எலிசபத்தின் வைர விழாவில் பங்கேற்பதற்காகவும் இலண்டன் மாநகருக்கு, சிங்களத் தடியரசுத் தலைவரும், போர்க் குற்றவாளியுமான இராசபக்சே வருகை தரவிருப்பதாக செய்திகள் வெளியாயின.
அதைத் தொடர்ந்து, இனவெறியன் இராச பக்சேவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 01.06.2012 அன்று பிரித்தானியாவில் வாழும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள், பொதுநல ஆய நாடுகளின் செயலகத்திற்கு முன்பு ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். “இராசபக்சே பேசு வதாக இருந்தால், மேன்சன் இல்லத்தில் அல்ல, அனைத்துலக நீதிமன்றத்தில் நின்று பேசட்டும்” என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கி நின்றனர் ஈழத்தமிழ் மக்கள். தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலைகளை நடத்திய இராசபக்சேவை மாநாட்டிற்கு அழைக்காதீர்கள் என வலியுறுத்தி பொதுநல ஆய நாடுகளின் செயலகத்தில் விரிவான கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
ஐ.நா.வின் மனித உரிமைகள் சட்டங்களுக்கு மாறாக தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி இராசபக்சே பிரிட்டன் வரும் போது அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இனக்கொலைக்கு எதிரான தமிழர்கள்(TAG) என்ற அமைப்பு, இலண்டன் மாநகரக் காவல்துறையினரிடம் புகார் மனுவை அளித்தது.
இராசபக்சேவின் பிரிட்டன் வருகையைக் கண்டித்தும், இராசபக்சேவை இலண்டனை விட்டு விரட்டியடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழகத் தலைவர்கள் அறிக்கைகள் மற்றும் காணொளிகள் வழியாக புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இணையவழி வேண்டுகோள்கள் விடுத்தனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், “கடந்த 2010ஆம் ஆண்டு ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்த இனவெறியன் இராசபக்சேவை, ஹீத்துரு விமான நிலையத்தை விட்டு இறங்கவிடாத அளவிற்கு வீரத்துடன் போராடித் திருப்பி அனுப்பிய பிரித்தானிய தமிழ் மக்கள், தற்போது அதே போன்று மீண்டும் இராசபக்சேவை விரட்டியடிக்க வேண்டும். அவர் விரட்டியடிக்கப்படும் போது, ஈழத்தமிழினப் படுகொலையை உலகம் மேலும் கூர்ந்து கவனிக்கும்” எனக் குறிப்பிட்டார்.
இராசபக்சே தங்கவிருந்த பார்க்லேன் நட்சத்திர விடுதிக்கு எதிரில் 04.06.2012 அன்று பிரித்தானியத் தமிழர் பேரவை சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராசபக்சேவின் பாதுகாப்புக்காக அவர் தங்கியிருந்த பார்க்லேன் நட்சத்திர விடுதிக்கு அழைக்கப்பட்டு வந்த 200 சிங்களவர்கள், சக்தி என்ற தமிழ் இளைஞர் ஒருவரைத் தாக்கிக் காயப் படுத்தியது தமிழ் மக்களை மேலும் கொதிப்பாக்கியது. எனினும், தாக்கிய சிங்களவரை இலண்டன் மாநகரக் காவல் துறை கைது செய்தது. இராசபக்சே உரை நிகழ்த்தவிருந்த மன்சன் ஹவுசிற்கு வெளியே ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும் பேருந்துகளில் இலண்டன் வந்தடைந்த பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள், தமிழீழ தேசியக் கொடியான புலிக் கொடியைத் தாங்கியும், தமிழீழ மக்களை இனப்படு கொலை செய்த போர்க்குற்றவாளி இராசபக்சேவை அம்பலப்படுத்தும் பதாகைகளைத் தாங்கியும் நின்றபடி எழுச்சி மிகுப் போராட்டங்களை நடத்தினர். ஈழத்தமிழர்களோடு, பிரிட்டன் வாழ் மனித உரிமை ஆர்வலர்களும், சனநாயக சக்திகளும் கரம் கோத்து நின்றனர். 
மாநாட்டில் கலந்து கொள்ள விருந்த 70க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், மாநாடு நடைபெறும் இடத்தின் வாயிலில் நடைபெற்றுவந்த தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டங்களை ஆர்வத்துடன் கண்ணுற்றனர்.
மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்த இராசபக்சேவின் மகிழுந்து ஊர்தியை அடையாளம் கண்ட தமிழர்கள், ஊர்தியை நோக்கி அழுகிய முட்டைகளையும், தண்ணீர் பாட்டில்களையும் வீசினர். புலத்துப் புலிகளின் ஆர்ப்பாட்டங்களைக் கண்டு, திடுக்கிட்டபடியே வேகமாக சென்றது இராசபக்சேவின் மகிழுந்து.
பொதுநலவாய அமைப்பின் செயலகத்திற்கு முன்பாக நடை பெற்ற ஈழத்தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டத்தின் போது, இலங்கையின் அரசியல் சாசனம் வாசித்துக் காண்பிக்கப்பட்டு, தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. தூக்கிலிடப்பட்டு இழுத்து வரப்பட்ட மகிந்த இராசபக் சேவின் உருவப் பொம்மையை ஆவேசத்துடன் இளைஞர்கள் கொளுத்தினர்.
புலம் பெயர்ந்த தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் இலண்டன் மாநகரை நிலைகுலைய வைத்தது. சேனல்-4, ஐ.பி.என். தொலைக்காட்சி, பி.பி.சி உலகச் சேவை, பி.பி.சி பண்பலை, தி இன்டிபென்டன்ட் பத்திரிகை, கார்டியன், லண்டன் ஈவினிங் ஸ்டான்ட்டட் உள்ளிட்ட  இலண்டன் நகரின் ஊடகங்கள் அனைத்தும் தமிழ் மக்களின் போராட்டத்தை விரிவாகப் பதிவு செய்தன. 
ஆவேசமிகு தமிழ் மக்களின் போராட்டங்களைக் கணக்கில் கொண்ட பொதுநல ஆய நாடுகளின் பொருளியல் மன்றக் குழுவினர் (Commonwealth Business Council - CBC), 06.06.2012 புதனன்று காலையில் நடைபெறவிருந்த இராசபக்சேவின் உரையை 'ஆழ்ந்த சிந்தனைகளுக்குப் பின்'இரத்து செய்வதாக அறிவித்தது. வெட்கித் தலைகுனிந்த இராசபக்சே தன் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதாக காண்பிப்பதற்காக, மத்திய இலண்டன் மார்ல் போரோ இல்லத்தில் எலிசபத் இராணியுடன் நடைபெற்ற மாநாட்டு விருந்தில் மட்டும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வுக்குச் செல்லும் போது கூட, சிங்களக்கொடி தாங்கி செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதன் காரணமாக, சிங்களக் கொடியைத் துறந்துவிட்டு சென்றார் மகிந்த இராசபக்சே.
உள்ளே விருந்து நடை பெற்றுக் கொண்டிருந்த போது, மார்ல்பாரோ மாளிகைக்கு வெளியே ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்கள் ஒன்றுகூடி இராசபக்சேவின் கொடும் பாவியைத் தூக்குக் கம்பத்தில் தொங்கவிட்டு தங்கள் கோபத்தை வெளிக்காட்டிக் கொண்டிருந்தனர்.
சென்னையிலுள்ள பிரிட்டன் துணைத் தூதரகம் முன்பு 06.06.2012 அன்று காலை, தமிழீழ மக்கள் மீது இனப் படுகொலை செய்த இராச பக்சேவை பிரிட்டனிலேயே கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், பொதுநல ஆய நாடுகள் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்றக் கோரியும், மே பதினேழு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒழுங்கமைக்கப்பட்டது. மே பதினேழு இயக்க  ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழக ஒடுக்கப் பட்டோர் விடுதலை இயக்கப் பொறுப்பாளர் வழக்கறிஞர் பாவேந்தன், த.மு.மு.க. பொறுப்பாளர் ஆருண் ரஷீத், நாம் தமிழர் கட்சி இணையதளப் பாசறைப் பொறுப்பாளர் தோழர் பாக்கியராசன், பெ.தி.க. தென் சென்னை மாவட்டச் செயலாளர் தபசிக்குமரன், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும் நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர்.  
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அருணபாரதி உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர். "கைது செய்! கைது செய்! இனப் படுகொலை போர்க்குற்றவாளி இராசபக்சேவை கைது செய்" என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர், பிரிட்டன் துணைத் தூதரக அலுவலகத்தில், இராசபக்சேவை இங்கிலாந்திலேயே கைது செய்யக் கோரும் விரிவான கோரிக்கை மடல் வழங்கப் பட்டது.
இங்கிலாந்து இராணி எலிச பெத், போர்க்குற்றவாளி இராசபக்சேவுடன் விருந்தின் போது கைக்குலுக்கி நின்றதைக் கண்டித்தும், பிரிட்டன் வாழ் தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் கனடா நாட்டின் தலைநகர் டெரொன்டோவிலுள்ள பிரிட்டன் தூதரகத்தின் முன், கனேடிய தமிழர்களின் தேசிய சபையின் சார்பில் நூற்றுக் கணக்கான புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ் மக்களின் போராட்டங்கள் காரணமாக, இனப் படுகொலை- போர்க் குற்றவாளி இராசபக்சேவின் உரை 2010ஆம் ஆண்டை போல இலண்டனில் மீண்டும் நிறுத்தப்பட்ட நிகழ்வு, அனைத்துலகின் முன் சிறீலங்கா அரசை தலைகுனியச் செய்தது. இராசபக்சேவின் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டமைக்கு இலங்கையின் வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்தது. இராசபக்சேவை விரட்டியடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க, பிரிட்டன் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய வாழ் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள், ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்த பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) உள்ளிட்ட புலம் பெயர் தமிழர் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் தமிழ் மக்களின் போற்றுதலுக்குரிய வர்கள்.
2008-2009இல் தமிழீழ மண்ணில் 1 இலட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த குற்றவாளியான இராசபக்சேவுக்கு, பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றத்தில் தண்டனை வாங்கித் தரும் வரை உலகத் தமிழர்கள் ஓயக்கூடாது.
***
இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சியளிக்கும் இந்தியா
தமிழீழ மக்களை இலசட்கணக்கில் கொன்று குவித்த இனவெறியன் இராசபக்சேவின் தம்பியும், இலங்கை பாதுகாப்பு செயலாளருமான கோத்தபயா இராசபக்சே விடுத்த வேண்டுகோளை ஏற்று அந்நாட்டு கடற்படைக்கு இந்தியா அதிநவீன பயிற்சிகளை அளிக்கவிருக்கிறது.
சிங்கப்பூரில் சூன் முதல் வாரத்தில் ஆசிய நாடுகளின் பாதுகாப்பு குறித்த மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிங்களப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா இராசபக்சே மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் தலைமையிலான அந்நாட்டுக் குழுவினர், இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மற்றும் அமெரிக்கப் பிரதிநிதி மார்ட்டின் டெம்ப்சி ஆகியோரை நேரில் சந்தித்துப்  பேசினர்.
சந்திப்பின் போது இலங்கை கடற்படைக்கு அதிநவீன பயிற்சி அளிக்க இந்தியாவும், அமெரிக்காவும் முன்வர வேண்டும் என்று கோத்தபயா வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இந்தியாவும், அமெரிக்காவும் அதிநவீன பயிற்சி அளிக்கவிருக்கின்றன.
தமிழீழ மக்களைக் கொன்று குவித்ததோடு மட்டுமின்றி, 600க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொன்ற சிங்களரின் கடற்படைக்கு, இந்திய அரசு பயிற்சிகள் வழங்குவது ஒன்றும் புதிதல்ல. இதே போன்ற பயிற்சிகள் பலமுறை இந்திய அரசால் வழங்கப் பட்டுள்ளன. 2009ஆம் ஆண்டு தமிழீழ மக்கள் மீதான போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்தியாவின் பல இடங்களில் இந்திய அரசு இவ்வாறு பயிற்சிகள் அளித்துள்ளது.
இப்பயிற்சிகள் தான், தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லவும், நடுக்கடலில் அவமானப் படுத்திதாக்கவும் பயன்படும் என இந்திய அரசுக்கு நன்கு தெரிந்திருப்பதால்தான், சிங்கள அரசு வேண்டுகோள் விடுத்தவுடனேயே அதை நிறைவேற்ற முற்படுகிறது இந்திய அரசு.
சிங்கள ஆரியமும், இந்திய ஆரியமும் தமிழர்க்கு என்றும் பகையே என்பது நாளுக்கு நாள் உறுதிப் பட்டுக் கொண்டே வருகிறது.

(இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012 ஜூன் 16 -30 இதழில் வெளிவந்தது. கட்டுரையாளர் க.அருணபாரதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர்)

மீண்டுன் அம்பலப்பட்ட ஐ.பி.எல்



சூதாட்டமும் விபச்சாரமும் இணைந்ததே ஐ.பி.எல். மட்டைப்பந்துப் போட்டிகள் என நாம் ஏற்கெனவே தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மே 2010 இதழில் எழுதியிருந் தோம். தற்போது, மீண்டும் ஒருமுறை இது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
பாரம்பர்யமான விதிகளுடன் நடத்தப்பட்டு வந்த மட்டைப்பந்து விளையாட்டுப் போட்டி களை, ‘விறுவிறுப்பாக்குகிறோம்’ என்ற பெயரில் சூதாட்டத்திற்கு ஏற்றதாக மாற்றியமைத்ததே ஐ.பி.எல். செய்த மாபெரும் ‘புரட்சி’யாகும்.
இது சூதாட்டம் என உறுதியானதும்தான், தமது கணக்கற்ற கருப்புப் பணத்தை வெள்ளை யாக்க விரும்பிய அம்பானி, விஜய் மல்லையா, இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் போன்ற பெரும் முதலாளிகள் இதில் தீவிரமாகக் குதித்தனர். மேலும், இம்முதலாளிகளின் உலகமயச் சீரழிவுப் பண்பாட்டை மக்களிடம் திணிப்பதற்கு இதனை ஒரு வாய்ப்பாகக் கருதும் டெக்கான் க்ரானிக்கல் போன்ற மேட்டுக்குடி ஊடகங்களும், சாருக்கான், பிரீத்தி ஜிந்தா போன்ற பாலிவுட் நடிகர்களும் இதில் தீவிரம் காட்டினர்.
கொச்சி அணியின் உரிமையாளர்களில் ஒருவரும் வைர இறக்குமதி முதலாளிகளுமான மேத்தா சகோதரர்கள், ஜெர்மன் நாட்டு வங்கி களில் கருப்புப் பணத்தைச் சேகரித்து வைத்திருந் தவர்கள் என முன்பே ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. எனினும், அது முறையாக விசாரிக்கப்படவும் இல்லை. யாரும் தண்டிக்கப்படவும் இல்லை.
ஐ.பி.எல். சூதாட்டத்தில் கோடிகளை வாரி இறைக்கும் விஜய் மல்லையா, தனது கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப் போதிய பணமில்லை என ஒப்பாரி வைத்தார். இவரது நிறுவனத்தை நட்டத்திலிருந்து காப்பாற்றுவதற்காக, நாட்டின் ஒட்டுமொத்த விமான சேவையையும் பன்னாட்டு நிறுவனங் களிடம் அடகு வைக்கத் துடித்துக் கொண்டி ருப்பவர்கள்தான் காங்கிரசு ஆட்சியாளர்கள். அந்தளவிற்குத் தனது பணபலத்தால் இந்திய அரசின் மீது செல்வாக்குச் செலுத்தும் விஜய் மல்லையா போன்றவர்கள்தான் இந்த விளை யாட்டின் உண்மையான பயனாளிகள்.
மட்டையடி வீரர்களையும், அணிகளையும் ஏலத்தில் எடுப்பதன் மூலமும், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம், வீரர்களின் விளம்பர வருமானம், மைதானங்களின் நுழைவுச்சீட்டு ஆகியவற்றின் வருமானம் மூலமும் சூதாட்டம் மற்றும் விபச்சார விருந்துகளின் மூலமும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நூறு கோடிகள் புரளும் ஐ.பி.எல். போட்டிகள், அரசியல்வாதிகளின் கண்களை அவ்வப்போது உறுத்துபவை. அதனாலேயே, ஐ.பி.எல். மீதான குற்றச்சாட்டுகள் காற்றிலேயே கரைந்து விடுகின்றன. மேலும், கட்சி வளர்ச்சிக்காகக் கோடிகளை வாரியிறைக்கும் முதலாளிகளின் சூதாட்டங்களுக்குத் தடை போடுவதற்கு முதலாளிய அரசுகளும், தேர்தல் கட்சிகளும் முனைப்புக் காட்டுவார்களா என்ன?
ஐ.பி.எல். போட்டிக்கான அறிவிப்புகள் தொடங்கிய போது ரோமானிய அடிமைகள் போல், அனைத்துலக மட்டைப் பந்து வீரர்களும், அணிகளும் முதலாளிகளாலும், கருப்புப் பண நடிகர்களாலும் ஏலம் எடுக்கப்பட்டனர். போட்டிக் கான அணிகளில் முதலீடுகள் குவிய விறுவிறுப்பான சூதாட் டம் தொடங்கியது. உண்மை யான போட்டி மைதானத்தில் நடைபெறவில்லை,பண முதலைகளின் மேசைகளில்தான் அவை நடை பெற்றனஎன்பதை போட்டிகள் தொடங்கிய பின் அம்பலமான பல்வேறு சூதாட் டங்களும், மோசடிகளுமே பறைசாற்றின.
2010ஆம் ஆண்டு, இந்திய மட்டைப்பந்து வாரிய (பி.சி.சி.ஐ.) அமைப்பின் துணைத் தலைவ ராகவிருந்த லலித் மோடி, தனக்குத் தெரிந்தவர்களை வைத்தே பல்வேறு ஐ.பி.எல். அணிகளில் முதலீடுகள் செய்தி ருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அணிகளின் உரிமையாளர்கள் யார் என வெளியிட்டதற்காக லலித் மோடியைக் கண்டித்த, அப்போதைய நடுவண் அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் சசி தரூர், தமது எதிர்கால மனைவிக்கு ஓர் அணியை வாங்கித் தந்திருந்ததும் அம்பல மானது.
தமிழகத்தின் ஊட்டியைச் சேர்ந்த மகேஷ் என்ற இளைஞர் கடந்த 2010 ஏப்ரலில், ஐ.பி.எல். போட்டிகளின் மீதான சூதாட் டத்தில், தனது பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதும், இச்சூதாட்டத் திற்கு தடை விதிக்கக் கோரி அவரது உறவினர்கள் மறியல் செய்ததும் வெறும் செய்திகளாக மட்டுமே அப்போது வெளி வந்தன.இவ்வாண்டும் அதே போல் 02.05.2012 அன்று மகாராட்டிர மாநிலத்தின் கோகல்பூரைச் சேர்ந்த அஷோக் நாக்தேவ் என்ற இளைஞர், ஐ.பி.எல். போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கடனாளியாகி தற் கொலை செய்து கொண்டார்.
இவ்வகை மோசடிகள் மட்டு மின்றி, ஐ.பி.எல். போட்டிகளின் முடிவுக்குப்பின்நடக்கும் போதை மற்றும் டிஸ்கொதே விருந்துகளும், அதில் கலந்து கொள்ளும்முதலாளிகள் மற்றும் மேட்டுக்குடியினரின் வாரிசு களும் அவ்வப்போது சர்ச்சை களில் சிக்கி, விபச்சார விருந்து களை வெளியுலகிற்கு அம்பலப் படுத்தினர்.
இது தொடர்பாக யார் மீதும் எவ்வித நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கப் பட வில்லை. மாறாக அவ்வப்போது கண்துடைப்பு சோதனைகள் மட்டுமே நடைபெறுகிறது.
இந்தியாவில் மட்டைப் பந்துப் போட்டிகள் விளை யாட்டு என்ற நிலையைக் கடந்து வணிகத் தன்மையை என்றைக்கோ அடைந்து விட்டாலும், அதன் உள்ளார்ந்த வடிவமாக இந்தியத் தேசிய வெறி திணிக்கப் பட்டுள்ளது. இந்தியத் தேசிய வெறியை வளர்க்கும் முக்கிய மதமாக மட்டைப்பந்து விளை யாட் டுகளை, பார்ப்பனிய ஊட கங்கள்ஊற்றி வளர்த்ததன் விளைவு இது.
இயல்பிலேயே சோம்பேறி விளையாட்டு என வர்ணிக்கப் படும் மட்டைப் பந்துப் போட்டிகள், சோம்பேறித் தனத்தையே ‘தேசியத் தொழி லாக’க் கருதும் ஆரியப் பார்ப் பனர்களுக்கு உகந்த விளையாட் டாகப் போற்றப்படுவதில் வியப் பில்லை. இதன் காரணமாகத் தான், ஆரிய இனவெறி நாடான இந்தியாவின் ‘தேசிய’த் தன்மை யைப் பறைசாற்ற மட்டைப் பந்து விளையாட்டுகள், பார்ப் பனிய ஊடகங்களால் பயன் படுத்தப்படுகின்றன. மக்களிட மும் பரப்புரை செய்யப்படு கின்றன.
ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின், ஆஸ்தி ரேலிய வீரர் லூக் போமர்ஸ் பேக் மீது, அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ரசிகர் ஜொஹெல் ஹமீது, தன் காதலரை மிகக் கடுமையாகத் தாக்கியதாகவும், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாகவும் தில்லி காவல்துறையிடம் புகார் அளித்தார். லூக் போமர்ஸ்பேக் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் உடனடி யாகப் பிணையும் வழங்கப் பட்டது.
இவர் மீது இது போன்ற புகார்கள் வருவது புதிதல்ல. கடந்த 2007ஆம் ஆண்டு மதுவிருந்தில் ஒரு புகாரில் சிக்கி தண்டிக்கப்பட்டார். இவருடன் தண்டிக்கப்பட்ட இன்னொரு வரான ஷான் மார்ஷ் தற்போது பஞ்சாப் அணிக்காக ‘விளை யாடிக்’ கொண்டிருக்கிறார். 2009ஆம் ஆண்டு போதையில் மகிழுந்து ஓட்டி, அதற்காக தனது ஓட்டுநர் உரிமத்தையும் இழந்தவர் லூக் போமர்ஸ்பேக்.
இப்பேர்ப்பட்ட ஒழுக்க சீலரை அப்பாவி என்பதாகக் காட்ட, கிங்பிஷர் மதுபான நிறுவனத்தின் முதலாளி விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் வக்காலத்து வாங்கினார். மேலும், முதலாளிய மேட்டுக் குடியின் பிள்ளைகளுக்கே உரியத் திமிருடன், பாதிக்கப் பட்ட பெண்ணை ஒழுக்க மற்றவர் என தனது இணையப் பக்கத்திலும் எழுதினார்.
கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவியில் இந்நிகழ்வு முழுவது மாகப் படம் பிடிக்கப்பட்டு விட்டது எனத் தெரிந்ததும், தான் அப்பெண்ணிடம் தவ றான முறையில் நடந்து கொள்ள முயன்றது உண்மை தான் என்றும், அப்போது மது போதையில் இருந்ததாகவும் லூக் போமர்ஸ்பேக் தெரிவித்து விட்டார். மேலும், அவருடன் கூட்டு சேர்ந்ததற்காக பெங்க ளூர் அணியின் கர்நாடக வீரர் அப்பண்ணாவை கைது செய்ய வும் காவல்துறை முயற்சித்தது. எனினும், அது நடைபெற வில்லை. குட்டு அம்பலப்பட்ட பிறகும், ‘இதெல்லாம் சகஜம் தானே’ எனும் விதமாக சித் தார்த் மல்லையா பதில் எதுவும் கூறாமல் கள்ளமவுனம் சாதித்தார்.
புகார் அளித்த அமெரிக்கப் பெண், திடீரெனத் தனது புகார் களை திரும்பப் பெற்றுக் கொள்ள விரும்புவதாக அறிவித் தார். சித்தார்த் மல் லையா ‘இத்தோடு எல்லாம் முடிந்து விட்டது’ என இணையத்தில் எழுதினார். ‘முடித்து விட்டார் கள்’ என்றே நாம் அதை மாற்றிப் படிக்கலாம்.
இதனிடையே, மும்பை ஜுஹு கடற்கரை அருகே உள்ள ஓக்வுட் பிரீமியர் என்ற நட்சத்திரக் கேளிக்கை விடுதி யின் மொட்டை மாடியில் ஐ.பி.எல். போட்டிகளை யொட்டி மது, போதை விருந்து நடைபெற்றது. அதில் வெளி நாட்டவர்கள்,ஐ.பி.எல். வீரர்கள், முதலாளிகள் மற்றும் தனியார் நிறுவன மேட்டுக் குடிகளின் வாரிசுகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மது அருந்தி கும்மாளம் போட்டனர். காவல் துறையினர் அங்கு செய்த சோதனையில், 58 ஆண்கள் மற்றும் 38 பெண்கள் உள்ளிட்ட 96 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் புனே வாரியர்ஸ் வீரர்கள் ராகுல் சர்மா, தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வெய்ன் பார்னல் ஆகியோரும் கைதாகினர். கைதானவர்களின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, சோதனைக்காக அனுப்பப்பட்டது. விருந்து நடைபெற்ற இடத்தில, சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த கொக்கைன், எக்ஸ்டசி மற்றும் சாராஸ் எனப்படும் பல்வேறு வகை போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உலகமயப் பொருளியல் சூதாட்டத்தின் ஒரு பகுதியான ஐ.பி.எல். போட்டிகளின் ஒரு பகுதியாக, உலகமயச் சீரழிவுப் பண்பாடு பரப்புரை செய்யப் படுவதையே இது காட்டியது.
இவற்றுக்கெல்லாம் மேலாக, ஐ.பி.எல். வீரர்கள் ‘ஸ்பாட் பிக்சிங்’ எனப்படும், சூதாட் டத்தில் ஈடுபட்டதும் அம்பல மானது. வடநாட்டில் இயங்கும் இந்தியா டி.வி. (மிழிஞிமிகி ஜிக்ஷி) என்ற தொலைக்காட்சி ஐ.பி.எல். வீரர்கள் விளையாடமல் இருப்ப தற்காகவும், வேண்டுமென்றே விளையாட்டின் போது தவறு கள் செய்வதற்கும் தரகர் மூலம் பணம் பெற்றதை புலனாய்வு செய்து வெளி யிட்டது. இதில் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுடன் ரகசியமாக உரை யாடி உண்மைகளையும் அத் தொலைக்காட்சி காணொளி களில் வெளியிட்டு அதிர வைத்தது.
டெக்கான் சார்ஜர்ஸ் அணிக் காக பங்கேற்கும் சுதிந்திரா என்ற வீரர், கடந்த ஆண்டு நடந்த முதல் தர போட்டி ஒன்றில், தொலைக்காட்சி நிருபரின் விருப்பத்திற்கு ஏற்ப வேண்டுமென்றே நோ-பால் வீசியுள்ளார். இவர் ரூ. 60 இலட்சம் கொடுத்தால் ஐ.பி.எல் தொடரில் அணிமாற தயார் என கூறியுள்ளார். இதே போல கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் ஸ்ரீவாஸ்தவ் நோ-பால் வீச ரூ. 10 லட்சம் கேட்டுள்ளார்.
இதனையடுத்து, 5 ஐ.பி.எல். வீரர்களை பி.சி.சி.ஐ. தற்காலிக பணிநீக்கம் செய்தது. ‘ஏன் இது வெளியில் தெரிந்தது?’ என்பது தான், பி.சி.சி.ஐ.-இன் கோபமே தவிர, ‘ஏன் விளையாட்டிற்காக காசு வாங்கினீர்கள்’ என்பதல்ல. உண்மையிலேயே, பி.சி.சி.ஐ.-க்கு விளையாட்டின் மீது அக்கறை இருக்குமானால், இவர்கள் ஐவரையும் நிரந்தரமாகத் தடை செய்திருக்க வேண்டும். அவர்கள் சம்பாதித்த பணத்தை திரும்பப் பெற்றிருக்க வேண்டும். இது மற்ற வீரர்களுக்கும் பயத்தை அளித்திருக்கும்.
ஆனால், இவ்வகை சூதாட் டத்தை சட்டப்பூர்வமாக நடத்த வேண்டுமென்ற கருத்தில் உள்ள முதலாளிகளின் கூடாரமான பி.சி.சி.ஐ. இதைச் செய்யுமா? பி.சி.சி.ஐ. முதலாளிகளிடம் பணம் வாங்கி பயன்பெறும் தேர்தல்கட்சிகள்தான் இதனைச் செய்யுமா? இவர்கள் அனை வரையும் வெறுத்து ஒதுக்கும், போர்க்குணமுள்ள மக்கள் திரளே இதைச் செய்ய முடியும். செய்ய வேண்டும்.
இவ்வாறு, ஊழல் பணத்தின் களமாகவும், முதலாளிகளின் வெளிப்படையான சூதாட்ட மாகவும் திகழும் ஐ.பி.எல். போட்டிகளை தெருவில் நின்று தொலைக்காட்சிப் பெட்டி களில் இரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் ‘இரசிகர்கள்’ பலருக்கும் இவ்வுண்மைகள் நன்கு தெரியும். எனினும், ஒருவனை ஒருவன் அழித்தாவது ‘முன்னேற’ வேண்டுமென அறிவு றுத்துகிற இன்றைய உலகமயப் பொதுப்புத்தியின் காரணமாக, அவர்கள் இச்சூதாட்டங்களை யும், ஊழலையும் அங்கீகரிக் கவே விரும்புகின்றனர். இம் மனநிலையை மாற்றுவதே நம் போன்றவர்களின் கடமை.

(இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012   ஜூன் 1-15 இதழில் வெளிவந்தது. கட்டுரையாளர் க.அருணபாரதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர்)

சிங்கள அரசின் கொலைக் கும்பலுக்கு இந்திய அரசின் பாதுகாப்பு


“இந்தியா எந்த நேரத்திலும் நம்பக்கம் சார்பாகவே செயற்படும்” - 4 நாள் சுற்று(லா)ப் பயணமாக இலங்கைக்கு சென்றிருந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்து பேசிய பின், மகிழ்ச்சி பொங்க இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீ.எல்.பெய்ரிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தது இது.
தமிழர்களுக்கு எங்கு இன்னல் ஏற்பட்டாலும், அந்த இன்னலை ஏற்படுத்துபவர்கள் யாராயினும் அவர்களுக்கு உதவி செய்து ஊக்கப்படுத்துவது தான் இந்தியாவின் தலையாய பணி. அதனால் தான் தனது சொந்த நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லும் நாடாக இருந்தாலும், பாதிக்கப்படுவது தமிழர்கள் என்ற காரணத்தால் சிங்கள அரசுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டுகிறது இந்திய அரசு. இலட்சக்கணக்கானத் தமிழர்களை இன அழிப்பு செய்திட சிங்கள இனவெறி அரசுக்கு நிதி, ஆயுதம் எனப் பலவகைகளிலும் உதவி நின்றதோடு மட்டுமின்றி, இன்று வரை அவ்வரசுக்கு ஆபத்து வரும் போதெல்லாம் முட்டுக் கொடுத்தும் வருகின்றது இந்திய அரசு.

இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கை நன்கு உணர்ந்ததால் தான், “இந்தியா எப்போதும் எங்கள் பக்கம்” என இந்திய அமைச்சர் கிருஷ்ணாவை பக்கத்தில் நிறுத்திக் கொண்டே, இறுமாப்புடன் கொக்கரிக்கிறார் சிங்கள அமைச்சர். ‘இலங்கை’த் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க உதவுகிறோம் என்று கூறிக் கொண்டு இந்திய அரசு அரங்கேற்றி வரும் அண்மைய நாடகத்தின் ஒர் காட்சி மட்டும் தான் இது.
முள்ளிவாய்க்கால் போர் முடிந்த பிறகு, சற்றொப்ப கடந்த 31 மாதங்களாக, 15க்கும் மேற்பட்ட சுற்றுகளில் நடத்தப்பட்ட, இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுகளில் இதுவரை எவ்வகை முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சிங்கள இனவெறி அரசின் அரசமைப்புக் கட்டமைவிற்குள் தமிழர்களுக்கு ஓரு தீர்வு என்ற வகையில் நடைபெறுகின்ற இப்பேச்சுவார்த் தைகளால் உண்மையில் தமிழர்களுக்கு எவ்வகை நன்மையும் கிடைக்கப் போவதில்லை என நாம் உறுதியாக நம்பலாம். ஏனெனில், கடந்த அரை நூற்றாண்டுகளாக சிங்கள அரசு நடத்திய ஏராளமான பேச்சுவார்த்தை மோசடி நாடகங் களைக் கண்டு தமிழ் மக்கள் சலித்துவிட்டனர்.
சிங்கள அரசின் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தி, புலம் பெயர்ந்த தமிழர்கள் நடத்திய தொடர் போராட் டங்கள் ஏற்படுத்திய அழுத்தங்கள் காரணமாக அனைத்துலக சமூகத்தின் முன் சிங்கள அரசு சந்தேகக் குற்ற வாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
மேலும், சேனல்-4 தொலைக் காட்சி தொடர்ந்து வெளியிட்ட சிங்கள அரசின் போர்க் குற்றங்கள் குறித்த ஆதாரங்கள், டப்ளின் அனைத்துலக மக்கள் நீதிமன்றத்தில் சிங்கள அரசு போர்க் குற்றவாளி அரசு தான் என வழங்கப்பட்ட தீர்ப்பு, ஐ.நா. பொதுச்  செயலர் நியமித்த மூவர் குழுவின் அறிக்கை என சிங்கள அரசுக்கு அனைத் துலக சமூகம் தொடர் நெருக் கடிகளைத் தந்தது.
உலகின் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் தன் னார்வத் தொண்டு நிறு வனங்களும், ஊடகர்களும் சிங்கள அரசின் தமிழினப் படுகொலையை அம் பலப் படுத்தி குற்றப்பத்திரிக்கை வாசித்து வருகின்றன. அமெ ரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ் போன்ற மேற்குலக நாடுகளில் உள்ள சனநாயக சக்திகளும், மனித உரிமை செயல் பாட்டாளர்களும் சிங்கள அரசைக் கேள்விகளால் துளைத்தெடுக்கின்றனர்.
தற்போது சிங்கள அரசு நடத்தி வரும் பேச்சுவார்த்தை கூட, இலட்சக்கணக்கான தமிழர்களையும், போராளி களையும் கொன்றொழித்த சிங்கள இனவாத அரசின் போர்க் குற்றங்கள் அனைத் துலக சமூகத்தின் முன் ஏற்படுத் தியுள்ள களங்கத்தை துடைத் தெறிய நடத்தப்பட்டு வரும் ஒப்புக்கு சப்பான நாடகம் தான்.
இப்பேச்சுவார்த்தை, உண் மையில் சிங்கள அரசு அனைத் துலக சமூகத்தின் முன் நற்பெயர் வாங்கிக் கொள்ளத் தான் உதவுமே தவிர, தமிழர்களுக்கு எவ்வகையிலும் உதவப் போவ தில்லை என்பதை அப்பேச்சு களின் போது சிங்கள அரசு நடந்து கொள்ளும் விதத்தி லிருந்தே புரிந்து கொள்ளலாம்.
அனைத்துலக சமூகத்தின் குற்றச்சாட்டுப் பார்வையிலி ருந்து தப்புவதற்காக, போர்க் குற்றங்கள் குறித்த இலங்கை அரசு தானே விசாரித்து தாக்கல் செய்த ‘LLRC  ஆணைக்குழு’ அறிக்கையும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கவில்லை. சிங்கள அரசின் போர்க் குற்றங்கள் குறித்து, ஐ.நா. நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல பகுதிகள் சிங்கள அரசின் ஆணைக்குழு அறிக்கையில் ஒரு பேச்சுக்குக் கூட கூறப்பட வேயில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வறிக்கையை முற்றிலும் நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா இவ்வறிக்கை போதுமானதாக இல்லை என கருத்து வெளி யிட்டது. ஆனால், சிங்கள அரசோடு இணைந்து தமிழின அழிப்புப் போரை நடத்திய இந்திய அரசு மட்டும் தான் இவ்வறிக்கையை ‘வரவேற்கத்தக்கது’ என்றும் ‘ஆக்கப்பூர்வமானது’ என்றும் கருத்து கூறியது. ‘இவ்வறிக் கைக்கு மேல் விசாரணையேத்  தேவையில்லை’ என்றும் இந் தியா வாதிட்டது. LLRC அறிக்கையை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், இந்திய வெளி யுறவுத் துறை அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணாவையும் இலங்கைக்கு கடந்த சனவரியில் அனுப்பியது இந்திய அரசு.
கிருஷ்ணா கொழும்பு சென்று இறங்கியதும், பாக்  நீரிணை, மன்னார் வளைகுடா போன்ற பகுதிகளில் பன் னாட்டுக் கடல் எல்லைக் கப்பால் மீன்பிடிப்பதற்கு தமிழக மீனவர்களுக்கு இருக்கும் பாரம் பரிய உரிமையை கைவிட இந்திய அரசு ஒப்புக் கொண்டு விட்டதாகவும், இது இலங் கைக்கு கிடைத்த வெற்றி என்றும் சிங்கள மீன் வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனரத்ன பிபிசிக்கு பேட்டி யளித்தார்.  
இதன் விளைவு பின்னர் தான் தெரியத் தொடங்கியது. இராமேசுவரத்திலிருந்து 23.01.2012 அன்று 680 விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை கற்களால் அடித்து விரட்டியது சிங்களக் கடற்படை. மேலும் 4 மீனவர் களை சிறைபிடித்தது. கடற் படையின் தாக்குதலில் சிக்கி ராமேஸ்வரம் மாந் தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்ற மீனவர் படுகாய மடைந்தார். மறுநாள் (24.01. 2012) காலையில் தமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி நடத்தப்பட்டத் தாக்குதலில் ஒருவரது காலில் காயமடைந்து, 2 படகுகளும் சேதமடைந்தன.
தமிழர்களின் ஒப்புதல் பெறா மல் தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவை, இலங்கைக்கு பரி சாகக் கொடுத்த இந்திய அரசு, அப்போது இயற்றிய கச்சத்தீவு ஒப்பந்தத்தில் கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்க தமிழக மீனவர் களுக்கு உரிமைகள் வழங் கியிருந்தது. ஆனால், அவ்வு ரிமையை மறுத்து இந்திய மக்களவையிலேயே பேசியவர் தான் எஸ்.எம்.கிருஷ்ணா. தற் போது, அவ்வுரிமைகளை இந்திய அரசு அதிகாரப் பூர்வ மாக கைவிட்டு தமிழ் இனத் திற்கு மீண்டுமொரு முறை துரோகமிழைத்திருக்கிறது.
இந்திய அரசின் இத்துரோக நடவடிக்கையால், தமிழக மீனவர் மீதான தாக்குதல் இனி மேன்மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
போர்க்குற்றம் தொடர்பான உலகளாவிய நெருக்கடிகளில் சிக்கித்தவித்த சிங்கள அரசு, கொழும்பு வந்திறங்கிய கிருஷ் ணாவை கண்ட பிறகு தான் நிம்மதிப் பெருமூச்சுடன் “இந்தியா எப்போதும் எங்கள் பக்கம்” என அறிவித்தது.
வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடக்கவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 19ஆவது அமர் வுக் கூட்டத்தில், இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டுமென மேற்குலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஒரு வேளை அவ்வாறு விவாதம் வந்தால், அதில் இந்திய அரசு என்ன கருத்து கூறும், எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதற்கான நடைமுறை ஒத்திகை தான் இது.
கிருஷ்ணாவின் வருகைக்குப் பின் சிங்கள அமைச்சரும் மனித உரிமைகளுக்கான சிறப்புத்  தூதுவருமான மகிந்த சமரசிங்க “ஜெனீவா கூட்டத்தில் எங்க ளால் எந்தவகையான அனைத் துலக அழுத்தங்களையும் எதிர்கொள்ள முடியும்” என்று உறுதிபடத் தெரிவித்ததன் பின்னணியில் இந்திய அரசே ஒளிந்து நிற்கிறது.
தற்போது, எஸ்.எம். கிருஷ்ணா சென்றது மட்டு மல்ல, இனப்படுகொலைக் குற்ற வாளியாக நிற்கும் சிங்கள அரசின் இரத்தக்கறையைத் துடைக்கவும், ‘கவலைப்படாதீர் நாங்கள் இருக்கிறோம்’ என்று ஆறுதல் கூறவும் இந்திய அரசின் அதிகாரிகளும் அமைச் சர்களும் போர் முடிந்த பின்னர் அவ்வப்போது இலங்கைக்கு தொடர்ச்சியாக பயணம் மேற் கொண்டு வருகின்றனர்.
அனைத்துலக சமூகத்தை ஏமாற்றுவதற்காக, சிங்கள அரசு நடத்தும் அரைகுறை பேச்சு வார்த்தை கூட அங்கு வேண்டா வெறுப்பாகத் தான் நடத்தப் படுகின்றது என்பது இந்திய அரசுக்கும் நன்கு தெரியும்.
“பேச்சுவார்த்தைகளின் வழியே தான் தமிழர்களுக்கு ஓர் அரசியல் தீர்வு கிடைக்கும்” என்று எஸ்.எம்.கிருஷ்ணா கொழும்பில் சொல்லிக் கொண் டிருந்த வேளையில் தான், இலங்கை அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சு வார்த்தைக் கூட்டங்களை மூன்று முறை புறக்கணித் திருக்கிறது. “திட்டமிட்டபடி தாம் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்த போதும் இலங்கை அரசுத் தரப்பில் இருந்து யாரும் வரவில்லை” என்று தெரிவித் தார் தமிழ் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன்.
பேச்சுவார்த்தைக் கூட் டத்தை இலங்கை அரசு புறக் கணித்தது குறித்து வாய்த் திறக்காத இந்திய அரசு, “தமிழர் களுக்குத் அரசியல் தீர்வு கிடைக்க நாங்கள் காலக்கெடு விதித்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க மாட்டோம்” என்றும் அறிவித்து அதன் உண்மை முகத்தை பகிரங்கமாகவே அம்பலப்படுத்தியது. சிங்கள அரசின் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவரான அமைச்சர் ஸ்ரீபால டி சில்வாவும்,  இந்தியா விட மிருந்து தமக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கப் பட வில்லை என்று தெரிவித்தார். இது தான் பேச்சு வார்த் தைகளை முன் நகர்த்துவதில் இந்திய அரசுக்கு இருக்கும்  அக்கறையின் இலட்சணம்!
உண்மையில் இந்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்தோ, தொடர்ந்து சிங்களக் கடற்படையால் தாக்கப்பட்டு வரும் தமிழக மீனவர்களின் நிலை குறித்தோ பேசுவதற்காக இலங்கை செல்ல வில்லை. போர்க்குற்றவாளி அரசாக நிற்கும் இலங்கை அரசின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும், பாதா ளத்திற்குச் சென்றுவிட்ட இலங்கையின் பொருளியலை சரிகட்ட திட்டங்கள் தீட்டுவதற் காகவும் தான் அவர் இலங்கை சென்றார்.
உலகமய சந்தைப் பொருளி யலின் காரணமாக உலகளாவிய அளவில் பொருளியல் பெரு மந்தம் ஏற்பட்டுள்ளது. இது இந்தியா, இலங்கை உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடு களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த வாரம் கூட இலங்கை அரசு அத்தியாவசியப் பொருட்களின் மீதான இறக்கு மதி வரியை அதிகரித்து மக்களின் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டது. மேலும், இராசபக்சே குடும்பத் தினரின் ஆதிக்கம், இராணுவத் தினரின் கட்டற்ற அதிகாரம், போர்ப் பொருளாதாரம் ஏற்படுத்தியுள்ள பொருளியல் பாதிப்புகள் என இலங்கை அரசு தனக்குள்ளும் நெருக்கடி களால்முற்றுகையிடப் பட்டிருக் கிறது.
இந்நிலையில் தான், இலங் கையின் பொருளியலில் ஏற் பட்டுள்ள பாதிப்புகளை சரி கட்டவும், அவர்களுடன் வட நாட்டு பெருமுதலாளிய நிறு வனங்களுக்கு உள்ள பொரு ளியல் பிணைப்பை மேலும் உறுதிப்படுத்தி புதிய ஒப் பந்தங்கள் போடும் திட்டங் களுடனும்தான் கிருஷ்ணா இலங்கை பயணமானார். இந்திய - இலங்கை நாடுகளுக் கிடையே சற்றொப்ப 443 மில்லியன் டாலர்கள் மதிப் பிலான பொருளியல் ஒப்பந்தங் கள் கையெழுத்தானது இதற்குச் சான்று.
அதே வேளையில், தமிழர் களுக்கு அதிகாரமோ அரசியல் தீர்வோ கிடைக்கக் கூடாது என்பதில் சிங்கள அரசை விட அதிக உறுதியுடன் இந்தியா உள்ளது என்பதை மறை முகமாக பறைசாற்றவும் கிருஷ் ணாவின் பயணம் பயன்பட்டது.
மூன்று இலட்சம் தமிழர் களை முள்வேலிக்கம்பி முகாம் களுக்குள் முடக்கி வைத் திருக்கும் இராசபக்சே, தமிழர் திருநாளான பொங்கல் விழா வை கிருஷ்ணாவை வைத்துக் கொண்டு, ஒப்புக்காக நடத்தி னார். தான் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விழாவைச் சற்று நேரம் தள்ளி வைத்து இராசபக்சே தன்னை நெகிழ வைத்து விட்டார் என்றும், அவர் நல்ல பண் பாளர் என்றும் இராசபக்சே வுக்கு நற்சான்று வழங்கினார் கிருஷ்ணா.
சிங்கள விமானங்களின் குண்டு வீச்சால் வீடுகள் அழிந்து போன தமிழர்களுக்கு 50,000 புதிய வீடுகள் கட்டித் தருகிறோம் என கடந்த 2 ஆண்டுகளாகக் கூறி வந்த இந்திய அரசு, தற்போது கிருஷ்ணாவை வைத்து வெறும் 50 வீடுகளை மட்டும் கட்டித் தந்தது. அதில் கூட, அனைத்தும் தமிழர்களுக்குக் கிடைத்து விடாது. அவற்றில் பெரும் பாலனவை அங்கு சிங்கள அரசால் வலிந்து குடியேற்றப் படும் சிங்களர்களுக்குத் தான் கிடைக்கும் என்கிறது அங்கி ருந்து வரும் தகவல். (நன்றி: குமுதம் வார இதழ்,  1.2.2012)
பின்னர், செய்தியாளர்களி டம் பேசிய எஸ்.எம். கிருஷ்ணா, “இலங்கையின் ஒருமைப் பாட்டை நாங்கள் மதிக்கிறோம். இலங்கையின் 13 ஆவது அரசி யலமைப்பு சட்டத் திருத்தத்தை நடை முறைப் படுத்தும் வகை யிலான ஓரு தீர்வுத் திட்டத்தை தமிழர் பிரச்சினைக்கு இலங்கை அரசு முன் வைக்க வேண்டும்” என்றும் கூறினார்.
இந்திய அரசு வலியுறுத்து கிற, இலங்கையின் 13ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் ஏற்கெனவே தமிழீழ விடுதலைப்புலிகளாலும், தமிழீழ மக்களாலும் நிராகரிக் கப்பட்ட ஒன்று தான். இது இந்தியாவில் தற்போது மாநிலங்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச அதிகாரங் களைக் கூட கொண்டதல்ல.
எனினும், இந்தக் குறைந்த பட்ச அதிகாரங்கள் கூட தமிழர் கைகளுக்கு சென்றுவிடக் கூடாது என சிங்கள இனவாத அரசு கவனமுடன் நடந்து வருகின்கிறது. 13ஆவது சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள் ளவாறு காவல் துறை, காணி நிர்வாகம் உள்ளிட்டவற்றை மாகாணங்களுக்குக் கையளிக்க இலங்கை அரசு பல்லாண்டு களாகவே தொடர்ந்து மறுத்து வருகின்றது. இது ஒருக்காலும் சாத்தியமற்றது என அதிபர் இராசபக்சே வெளிப் படை யாகவே கூறியிருக்கிறார்.
மேலும், 2010ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட 18ஆவது சட்டத்திருத்தம் இலங்கை அதிபருக்கு மேலும் பல அதிகாரங்களை வழங்கியும், 13ஆவது சட்டத் திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் பலவற்றை விழுங்கியும் இலங்கை அரசின் இனவாதக் கட்டமைப்பை மேலும் இறுக்கியிருக்கிறது.
தமிழின விரோத இந்திய அரசு ஒரு பேச்சுக்காக வலியுறுத் துகிற 13ஆவது சட்டத் திருத் தத்தைக் கூட மறுப்பது தான் சிங்கள இனவாத அரசின் மாறா நிலைப்பாடு. இந்நிலையில், 13+ என்ற பெயரில், 13ஆவது சட்டத் திருத்தத்தையும் தாண்டி தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணு வோம் என எஸ்.எம். கிருஷ்ணா விடம் இராசபக்சே வாக்குறுதி அள்ளி வீசிய போது, குறையை இந்தியா சுட்டிக்காட்ட முற்பட வில்லை. உண்மையில், இருதரப் பினரின் நோக்கமும் தமிழர் களை ஒடுக்குவதுதான் என்ற வகையில், இந்தியா சிங்களத் தோடு எவ்வகையிலும் முரண் பட விரும்பவில்லை.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வைத் தொடர்ந்து, கூடங்குளம் அணுமின் நிலையச் சிக்கலில் இந்திய அரசின் முகவராக செயல்பட்ட முனைவர் அப்துல் கலாமையும் இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பியது. இலங்கை சென்ற கலாம், அங்கு இராசபக்சே அரசால் முன் மொழியப்பட்ட மும்மொழித் திட்டத்தை (சிங்களம்-தமிழ்-ஆங்கிலம்) தொடங்கி வைத்தார். 1958இல் தமிழர்கள் மீது சிங்கள மொழியைக் கட்டாயமாகத் திணித்த தனிச் சிங்கள சட்டத்தின் இன்றைய மறு வடிவம் இது.
அனைவரும் எதிர்பார்த்தது போலவே, கலாம் இராசபக் சேவுக்கு நற்சான்று வழங்கி விட்டு, 1989இல் புலிகளுடனான போரில் இறந்துபோன இந்திய அமைதிப்படையினரின் நினைவுச் சின்னத்தில் வீர வணக்கம் செலுத்தி அவர்களை வாழ்த்திப் போற்றி கையொப்ப மிட்டார். கலாமின் கபடப் புன்னகையில் இந்திய அரசின் நரித்தனம் தான் தெரிந்தது.
மொத்தத்தில் தமிழர்களுக்கு எதிரான தனது நரித்தனமான வேலைகளை இந்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.  வரும் மார்ச் மாதம் மனித உரிமைக்குழு கூடும் போது, இந்தியா சிங்கள அரசை வலுவாக ஆதரிக்கும். தமிழர் களின் போராட்ட முன்னெ டுப்புகளை நாமும் தொடங்கி யாக வேண்டும்.
இதோ, புலம் பெயர்ந்த தமிழர்கள் வரும் மார்ச் மாதத்தில் நடக்கவிருக்கும் ஐ.நா. மன்ற மனித உரிமைகள் ஆணை யக் கூட்டத்தில் சிங்கள அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டுமென வலி யுறுத்தி ஐரோப்பிய நாடாளு மன்றத்திலிருந்து ஐ.நா. மன்றம் வரை “நீதி கேட்டு நடை பயணம்” என்ற பெயரில் ஜெனீவாவில் மாபெரும் மக்கள் திரள் எழுச்சி ஒன்றுகூடலை நிகழ்த்த அறிவிப்பு வெளியிட்டி ருக்கிறார்கள்.
இந்திய அரசு இக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு ஆதர வாக நிற்கக் கூடாது என்றும், உலக நாடுகளின் முன்னிலையில் தமிழீழப் பகுதிகளில் தமிழீழம் குறித்துப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக மக்களாகிய நாம் இந்திய அரசை நெருக்கி முழக்கமிட வேண்டும். இதுவே இன்றைய வரலாற்றுத் தேவையும், கடமையும்.
(இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012 பிப்ரவரி 1-15 இதழில் வெளிவந்தது. கட்டுரையாளர் க.அருணபாரதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர்)

குறிப்பிடத்தக்க பதிவுகள்