Friday, July 20, 2012

சிங்கள இனவெறியன் இராசபக்சேவின் திமிர்ப் பேச்சு


“தமிழ்நாட்டு மீனவர்கள் பாக் நீரிணையில் மீன்பிடித்தால் அவர்களை அனைத்துலக கடற்பரப்பு விதிகளின்படி சிறையிலடைப்பேன்” என சிங்களத் தடியரசுத் தலைவர் இராசபக்சே கொக்கரித்துள்ளார்.
பிரேசிலில் ரியோடிஜெனிரோ நகரில் நடை பெற்ற ரியோ பிளஸ் 20 ஐ.நா மாநாட்டில் உரையாற்றிய இராசபக்சே, “சிறிலங்காவுக்கு அருகில், வடக்கில் உள்ள அயல் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் வேண்டுமென்றே சிறிலங்கா கடற்பரப்புக்குள் வந்து, இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் வளத்தையும், அரிய கடல் செல்வங்களையும் கொள்ளையிடுகின்றனர். பாக் நீரிணையில் உள்ள கடல்வளம் எங்களுக்கு உரியது. எனவே, பிரச்சினைக்குரிய பகுதி என பாக்கு நீரிணை பகுதியைப் பிரகடனப்படுத்த வேண்டும். மீறி வருபவர்கள் மீது அனைத்துலக கடல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனுமதி வேண்டும்” என்று பேசினார்.
தமிழ்நாட்டு மீனவர்களும், ஈழத்தமிழ் மீனவர்களும் ஒற்றுமையுடன் மீன்பிடித்து வந்தகச்சத் தீவை, சிறீலங்காவிற்கு சொந்தமாக்கியது இந்திய அரசு. இதன் காரணமாக இன்றுவரை, கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை சுட்டுக் கொல்வதும், கடுமையாகத் தாக்குவதும், அம்மணமாக்கிக் கொடுமைப்படுத்துவதும், வலைகளை அழித்து நாசம் செய்வதும், சிறைபிடிப்பதும் என நாளுக்கு நாள் கொடுமைகளை அரங்கேற்றி வருகிறது இலங்கை.
கடந்த 19.06.2012 அன்றிரவு கூட, வேதாரணியம் - கோடியக்கரைக்கு தென்கிழக்குப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 9 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். 4 நாட்களுக்குப் பின்னர், தமிழக அரசின் தலையீட்டின் பேரில், அவர்கள் விடுதலையாயினர்.
அனைத்துலக கடற்சட்டத்தின்படி கைது செய்யப்படும் அயல்நாட்டு மீனவர்களை 20 ஆண்டுகள் வரை சிறையிலடைக்க முடியும். இதை மனதில் வைத்துக் கொண்டுதான், ஐ.நா. மாநாட்டில் சிங்கள இன வெறியன் இராசபக்சே தமிழகத் தமிழர்களின் மீது வெறுப்பை உமிழ்ந்து பேசியுள்ளார்.
அம்மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கோ, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனோ, இதை கண்டு கொள்ளவே இல்லை. தமிழ்நாட்டு மீனவர்கள் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உள்ளிட்ட பல அமைச்சர்கள் இராசபக்சே போலவே பேசியதை நாம் மறக்கவில்லை.
தமிழக மீனவர்களை 20 ஆண்டுகள் கொடுஞ் சிறையிலடைக்க இந்திய அரசும், சிங்கள அரசும் இணைந்து முடிவெடுத்து செயல்படுகின்றனவோ என்ற ஐயத்தையே ஐ.நா. மாநாட்டில் இராசபக்சேவின் பேச்சு வலுப்படுத்துகிறது.
தமிழக மீனவர்களை 20 ஆண்டுகளென்ன அங்கேயே கொத்துக் கொத்தாக சிங்களக் கடற்படையினர் சுட்டுக் கொன்றால் கூட இந்தியஅரசு கண்டு கொள்ளாது என்பது தெளிவு. தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளை மீட்க, கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி நாம் தான் களத்தில் இறங்க வேண்டும். அதுவே மீனவர் துயரத்திற்கு விடையளிக்கும்.

(இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012 ஜூலை 1-15 இதழில் வெளிவந்தது. கட்டுரையாளர் க.அருணபாரதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர்)

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்