சூதாட்டமும் விபச்சாரமும் இணைந்ததே ஐ.பி.எல். மட்டைப்பந்துப் போட்டிகள் என நாம் ஏற்கெனவே தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மே 2010 இதழில் எழுதியிருந் தோம். தற்போது, மீண்டும் ஒருமுறை இது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
பாரம்பர்யமான விதிகளுடன் நடத்தப்பட்டு வந்த மட்டைப்பந்து விளையாட்டுப் போட்டி களை, ‘விறுவிறுப்பாக்குகிறோம்’ என்ற பெயரில் சூதாட்டத்திற்கு ஏற்றதாக மாற்றியமைத்ததே ஐ.பி.எல். செய்த மாபெரும் ‘புரட்சி’யாகும்.
இது சூதாட்டம் என உறுதியானதும்தான், தமது கணக்கற்ற கருப்புப் பணத்தை வெள்ளை யாக்க விரும்பிய அம்பானி, விஜய் மல்லையா, இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் போன்ற பெரும் முதலாளிகள் இதில் தீவிரமாகக் குதித்தனர். மேலும், இம்முதலாளிகளின் உலகமயச் சீரழிவுப் பண்பாட்டை மக்களிடம் திணிப்பதற்கு இதனை ஒரு வாய்ப்பாகக் கருதும் டெக்கான் க்ரானிக்கல் போன்ற மேட்டுக்குடி ஊடகங்களும், சாருக்கான், பிரீத்தி ஜிந்தா போன்ற பாலிவுட் நடிகர்களும் இதில் தீவிரம் காட்டினர்.
கொச்சி அணியின் உரிமையாளர்களில் ஒருவரும் வைர இறக்குமதி முதலாளிகளுமான மேத்தா சகோதரர்கள், ஜெர்மன் நாட்டு வங்கி களில் கருப்புப் பணத்தைச் சேகரித்து வைத்திருந் தவர்கள் என முன்பே ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. எனினும், அது முறையாக விசாரிக்கப்படவும் இல்லை. யாரும் தண்டிக்கப்படவும் இல்லை.
ஐ.பி.எல். சூதாட்டத்தில் கோடிகளை வாரி இறைக்கும் விஜய் மல்லையா, தனது கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப் போதிய பணமில்லை என ஒப்பாரி வைத்தார். இவரது நிறுவனத்தை நட்டத்திலிருந்து காப்பாற்றுவதற்காக, நாட்டின் ஒட்டுமொத்த விமான சேவையையும் பன்னாட்டு நிறுவனங் களிடம் அடகு வைக்கத் துடித்துக் கொண்டி ருப்பவர்கள்தான் காங்கிரசு ஆட்சியாளர்கள். அந்தளவிற்குத் தனது பணபலத்தால் இந்திய அரசின் மீது செல்வாக்குச் செலுத்தும் விஜய் மல்லையா போன்றவர்கள்தான் இந்த விளை யாட்டின் உண்மையான பயனாளிகள்.
மட்டையடி வீரர்களையும், அணிகளையும் ஏலத்தில் எடுப்பதன் மூலமும், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம், வீரர்களின் விளம்பர வருமானம், மைதானங்களின் நுழைவுச்சீட்டு ஆகியவற்றின் வருமானம் மூலமும் சூதாட்டம் மற்றும் விபச்சார விருந்துகளின் மூலமும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நூறு கோடிகள் புரளும் ஐ.பி.எல். போட்டிகள், அரசியல்வாதிகளின் கண்களை அவ்வப்போது உறுத்துபவை. அதனாலேயே, ஐ.பி.எல். மீதான குற்றச்சாட்டுகள் காற்றிலேயே கரைந்து விடுகின்றன. மேலும், கட்சி வளர்ச்சிக்காகக் கோடிகளை வாரியிறைக்கும் முதலாளிகளின் சூதாட்டங்களுக்குத் தடை போடுவதற்கு முதலாளிய அரசுகளும், தேர்தல் கட்சிகளும் முனைப்புக் காட்டுவார்களா என்ன?
ஐ.பி.எல். போட்டிக்கான அறிவிப்புகள் தொடங்கிய போது ரோமானிய அடிமைகள் போல், அனைத்துலக மட்டைப் பந்து வீரர்களும், அணிகளும் முதலாளிகளாலும், கருப்புப் பண நடிகர்களாலும் ஏலம் எடுக்கப்பட்டனர். போட்டிக் கான அணிகளில் முதலீடுகள் குவிய விறுவிறுப்பான சூதாட் டம் தொடங்கியது. உண்மை யான போட்டி மைதானத்தில் நடைபெறவில்லை,பண முதலைகளின் மேசைகளில்தான் அவை நடை பெற்றனஎன்பதை போட்டிகள் தொடங்கிய பின் அம்பலமான பல்வேறு சூதாட் டங்களும், மோசடிகளுமே பறைசாற்றின.
2010ஆம் ஆண்டு, இந்திய மட்டைப்பந்து வாரிய (பி.சி.சி.ஐ.) அமைப்பின் துணைத் தலைவ ராகவிருந்த லலித் மோடி, தனக்குத் தெரிந்தவர்களை வைத்தே பல்வேறு ஐ.பி.எல். அணிகளில் முதலீடுகள் செய்தி ருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அணிகளின் உரிமையாளர்கள் யார் என வெளியிட்டதற்காக லலித் மோடியைக் கண்டித்த, அப்போதைய நடுவண் அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் சசி தரூர், தமது எதிர்கால மனைவிக்கு ஓர் அணியை வாங்கித் தந்திருந்ததும் அம்பல மானது.
தமிழகத்தின் ஊட்டியைச் சேர்ந்த மகேஷ் என்ற இளைஞர் கடந்த 2010 ஏப்ரலில், ஐ.பி.எல். போட்டிகளின் மீதான சூதாட் டத்தில், தனது பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதும், இச்சூதாட்டத் திற்கு தடை விதிக்கக் கோரி அவரது உறவினர்கள் மறியல் செய்ததும் வெறும் செய்திகளாக மட்டுமே அப்போது வெளி வந்தன.இவ்வாண்டும் அதே போல் 02.05.2012 அன்று மகாராட்டிர மாநிலத்தின் கோகல்பூரைச் சேர்ந்த அஷோக் நாக்தேவ் என்ற இளைஞர், ஐ.பி.எல். போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கடனாளியாகி தற் கொலை செய்து கொண்டார்.
இவ்வகை மோசடிகள் மட்டு மின்றி, ஐ.பி.எல். போட்டிகளின் முடிவுக்குப்பின்நடக்கும் போதை மற்றும் டிஸ்கொதே விருந்துகளும், அதில் கலந்து கொள்ளும்முதலாளிகள் மற்றும் மேட்டுக்குடியினரின் வாரிசு களும் அவ்வப்போது சர்ச்சை களில் சிக்கி, விபச்சார விருந்து களை வெளியுலகிற்கு அம்பலப் படுத்தினர்.
இது தொடர்பாக யார் மீதும் எவ்வித நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கப் பட வில்லை. மாறாக அவ்வப்போது கண்துடைப்பு சோதனைகள் மட்டுமே நடைபெறுகிறது.
இந்தியாவில் மட்டைப் பந்துப் போட்டிகள் விளை யாட்டு என்ற நிலையைக் கடந்து வணிகத் தன்மையை என்றைக்கோ அடைந்து விட்டாலும், அதன் உள்ளார்ந்த வடிவமாக இந்தியத் தேசிய வெறி திணிக்கப் பட்டுள்ளது. இந்தியத் தேசிய வெறியை வளர்க்கும் முக்கிய மதமாக மட்டைப்பந்து விளை யாட் டுகளை, பார்ப்பனிய ஊட கங்கள்ஊற்றி வளர்த்ததன் விளைவு இது.
இயல்பிலேயே சோம்பேறி விளையாட்டு என வர்ணிக்கப் படும் மட்டைப் பந்துப் போட்டிகள், சோம்பேறித் தனத்தையே ‘தேசியத் தொழி லாக’க் கருதும் ஆரியப் பார்ப் பனர்களுக்கு உகந்த விளையாட் டாகப் போற்றப்படுவதில் வியப் பில்லை. இதன் காரணமாகத் தான், ஆரிய இனவெறி நாடான இந்தியாவின் ‘தேசிய’த் தன்மை யைப் பறைசாற்ற மட்டைப் பந்து விளையாட்டுகள், பார்ப் பனிய ஊடகங்களால் பயன் படுத்தப்படுகின்றன. மக்களிட மும் பரப்புரை செய்யப்படு கின்றன.
ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின், ஆஸ்தி ரேலிய வீரர் லூக் போமர்ஸ் பேக் மீது, அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ரசிகர் ஜொஹெல் ஹமீது, தன் காதலரை மிகக் கடுமையாகத் தாக்கியதாகவும், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாகவும் தில்லி காவல்துறையிடம் புகார் அளித்தார். லூக் போமர்ஸ்பேக் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் உடனடி யாகப் பிணையும் வழங்கப் பட்டது.
இவர் மீது இது போன்ற புகார்கள் வருவது புதிதல்ல. கடந்த 2007ஆம் ஆண்டு மதுவிருந்தில் ஒரு புகாரில் சிக்கி தண்டிக்கப்பட்டார். இவருடன் தண்டிக்கப்பட்ட இன்னொரு வரான ஷான் மார்ஷ் தற்போது பஞ்சாப் அணிக்காக ‘விளை யாடிக்’ கொண்டிருக்கிறார். 2009ஆம் ஆண்டு போதையில் மகிழுந்து ஓட்டி, அதற்காக தனது ஓட்டுநர் உரிமத்தையும் இழந்தவர் லூக் போமர்ஸ்பேக்.
இப்பேர்ப்பட்ட ஒழுக்க சீலரை அப்பாவி என்பதாகக் காட்ட, கிங்பிஷர் மதுபான நிறுவனத்தின் முதலாளி விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் வக்காலத்து வாங்கினார். மேலும், முதலாளிய மேட்டுக் குடியின் பிள்ளைகளுக்கே உரியத் திமிருடன், பாதிக்கப் பட்ட பெண்ணை ஒழுக்க மற்றவர் என தனது இணையப் பக்கத்திலும் எழுதினார்.
கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவியில் இந்நிகழ்வு முழுவது மாகப் படம் பிடிக்கப்பட்டு விட்டது எனத் தெரிந்ததும், தான் அப்பெண்ணிடம் தவ றான முறையில் நடந்து கொள்ள முயன்றது உண்மை தான் என்றும், அப்போது மது போதையில் இருந்ததாகவும் லூக் போமர்ஸ்பேக் தெரிவித்து விட்டார். மேலும், அவருடன் கூட்டு சேர்ந்ததற்காக பெங்க ளூர் அணியின் கர்நாடக வீரர் அப்பண்ணாவை கைது செய்ய வும் காவல்துறை முயற்சித்தது. எனினும், அது நடைபெற வில்லை. குட்டு அம்பலப்பட்ட பிறகும், ‘இதெல்லாம் சகஜம் தானே’ எனும் விதமாக சித் தார்த் மல்லையா பதில் எதுவும் கூறாமல் கள்ளமவுனம் சாதித்தார்.
புகார் அளித்த அமெரிக்கப் பெண், திடீரெனத் தனது புகார் களை திரும்பப் பெற்றுக் கொள்ள விரும்புவதாக அறிவித் தார். சித்தார்த் மல் லையா ‘இத்தோடு எல்லாம் முடிந்து விட்டது’ என இணையத்தில் எழுதினார். ‘முடித்து விட்டார் கள்’ என்றே நாம் அதை மாற்றிப் படிக்கலாம்.
இதனிடையே, மும்பை ஜுஹு கடற்கரை அருகே உள்ள ஓக்வுட் பிரீமியர் என்ற நட்சத்திரக் கேளிக்கை விடுதி யின் மொட்டை மாடியில் ஐ.பி.எல். போட்டிகளை யொட்டி மது, போதை விருந்து நடைபெற்றது. அதில் வெளி நாட்டவர்கள்,ஐ.பி.எல். வீரர்கள், முதலாளிகள் மற்றும் தனியார் நிறுவன மேட்டுக் குடிகளின் வாரிசுகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மது அருந்தி கும்மாளம் போட்டனர். காவல் துறையினர் அங்கு செய்த சோதனையில், 58 ஆண்கள் மற்றும் 38 பெண்கள் உள்ளிட்ட 96 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் புனே வாரியர்ஸ் வீரர்கள் ராகுல் சர்மா, தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வெய்ன் பார்னல் ஆகியோரும் கைதாகினர். கைதானவர்களின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, சோதனைக்காக அனுப்பப்பட்டது. விருந்து நடைபெற்ற இடத்தில, சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த கொக்கைன், எக்ஸ்டசி மற்றும் சாராஸ் எனப்படும் பல்வேறு வகை போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உலகமயப் பொருளியல் சூதாட்டத்தின் ஒரு பகுதியான ஐ.பி.எல். போட்டிகளின் ஒரு பகுதியாக, உலகமயச் சீரழிவுப் பண்பாடு பரப்புரை செய்யப் படுவதையே இது காட்டியது.
இவற்றுக்கெல்லாம் மேலாக, ஐ.பி.எல். வீரர்கள் ‘ஸ்பாட் பிக்சிங்’ எனப்படும், சூதாட் டத்தில் ஈடுபட்டதும் அம்பல மானது. வடநாட்டில் இயங்கும் இந்தியா டி.வி. (மிழிஞிமிகி ஜிக்ஷி) என்ற தொலைக்காட்சி ஐ.பி.எல். வீரர்கள் விளையாடமல் இருப்ப தற்காகவும், வேண்டுமென்றே விளையாட்டின் போது தவறு கள் செய்வதற்கும் தரகர் மூலம் பணம் பெற்றதை புலனாய்வு செய்து வெளி யிட்டது. இதில் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுடன் ரகசியமாக உரை யாடி உண்மைகளையும் அத் தொலைக்காட்சி காணொளி களில் வெளியிட்டு அதிர வைத்தது.
டெக்கான் சார்ஜர்ஸ் அணிக் காக பங்கேற்கும் சுதிந்திரா என்ற வீரர், கடந்த ஆண்டு நடந்த முதல் தர போட்டி ஒன்றில், தொலைக்காட்சி நிருபரின் விருப்பத்திற்கு ஏற்ப வேண்டுமென்றே நோ-பால் வீசியுள்ளார். இவர் ரூ. 60 இலட்சம் கொடுத்தால் ஐ.பி.எல் தொடரில் அணிமாற தயார் என கூறியுள்ளார். இதே போல கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் ஸ்ரீவாஸ்தவ் நோ-பால் வீச ரூ. 10 லட்சம் கேட்டுள்ளார்.
இதனையடுத்து, 5 ஐ.பி.எல். வீரர்களை பி.சி.சி.ஐ. தற்காலிக பணிநீக்கம் செய்தது. ‘ஏன் இது வெளியில் தெரிந்தது?’ என்பது தான், பி.சி.சி.ஐ.-இன் கோபமே தவிர, ‘ஏன் விளையாட்டிற்காக காசு வாங்கினீர்கள்’ என்பதல்ல. உண்மையிலேயே, பி.சி.சி.ஐ.-க்கு விளையாட்டின் மீது அக்கறை இருக்குமானால், இவர்கள் ஐவரையும் நிரந்தரமாகத் தடை செய்திருக்க வேண்டும். அவர்கள் சம்பாதித்த பணத்தை திரும்பப் பெற்றிருக்க வேண்டும். இது மற்ற வீரர்களுக்கும் பயத்தை அளித்திருக்கும்.
ஆனால், இவ்வகை சூதாட் டத்தை சட்டப்பூர்வமாக நடத்த வேண்டுமென்ற கருத்தில் உள்ள முதலாளிகளின் கூடாரமான பி.சி.சி.ஐ. இதைச் செய்யுமா? பி.சி.சி.ஐ. முதலாளிகளிடம் பணம் வாங்கி பயன்பெறும் தேர்தல்கட்சிகள்தான் இதனைச் செய்யுமா? இவர்கள் அனை வரையும் வெறுத்து ஒதுக்கும், போர்க்குணமுள்ள மக்கள் திரளே இதைச் செய்ய முடியும். செய்ய வேண்டும்.
இவ்வாறு, ஊழல் பணத்தின் களமாகவும், முதலாளிகளின் வெளிப்படையான சூதாட்ட மாகவும் திகழும் ஐ.பி.எல். போட்டிகளை தெருவில் நின்று தொலைக்காட்சிப் பெட்டி களில் இரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் ‘இரசிகர்கள்’ பலருக்கும் இவ்வுண்மைகள் நன்கு தெரியும். எனினும், ஒருவனை ஒருவன் அழித்தாவது ‘முன்னேற’ வேண்டுமென அறிவு றுத்துகிற இன்றைய உலகமயப் பொதுப்புத்தியின் காரணமாக, அவர்கள் இச்சூதாட்டங்களை யும், ஊழலையும் அங்கீகரிக் கவே விரும்புகின்றனர். இம் மனநிலையை மாற்றுவதே நம் போன்றவர்களின் கடமை.
(இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012
ஜூன் 1-15 இதழில் வெளிவந்தது. கட்டுரையாளர் க.அருணபாரதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர்)
0 கருத்துகள்:
Post a Comment