தமிழர்களின் வீரமிகு எதிர்ப்புப் போராட்டங்களின் காரணமாக, இலண்டன் மாநகரில் நடைபெற்ற பொதுநல ஆய நாடுகளின் வர்த்தக மாநாட்டில் உரை நிகழ்த்த முடியாமல் சிங்களத் தடியரசுத் தலைவர் இராசபக்சே விரட்டியடிக்கப் பட்டார்.
இலண்டன் மாநகரில் 06.06.2012 அன்று நடை பெறவிருந்த பொதுநல ஆய நாடுகளின் வர்த்தக மாநாட்டில் உரை நிகழ்த்துவதற்காகவும், இங்கிலாந்து மகாராணி எலிசபத்தின் வைர விழாவில் பங்கேற்பதற்காகவும் இலண்டன் மாநகருக்கு, சிங்களத் தடியரசுத் தலைவரும், போர்க் குற்றவாளியுமான இராசபக்சே வருகை தரவிருப்பதாக செய்திகள் வெளியாயின.
அதைத் தொடர்ந்து, இனவெறியன் இராச பக்சேவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 01.06.2012 அன்று பிரித்தானியாவில் வாழும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள், பொதுநல ஆய நாடுகளின் செயலகத்திற்கு முன்பு ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். “இராசபக்சே பேசு வதாக இருந்தால், மேன்சன் இல்லத்தில் அல்ல, அனைத்துலக நீதிமன்றத்தில் நின்று பேசட்டும்” என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கி நின்றனர் ஈழத்தமிழ் மக்கள். தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலைகளை நடத்திய இராசபக்சேவை மாநாட்டிற்கு அழைக்காதீர்கள் என வலியுறுத்தி பொதுநல ஆய நாடுகளின் செயலகத்தில் விரிவான கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
ஐ.நா.வின் மனித உரிமைகள் சட்டங்களுக்கு மாறாக தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி இராசபக்சே பிரிட்டன் வரும் போது அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இனக்கொலைக்கு எதிரான தமிழர்கள்(TAG) என்ற அமைப்பு, இலண்டன் மாநகரக் காவல்துறையினரிடம் புகார் மனுவை அளித்தது.
இராசபக்சேவின் பிரிட்டன் வருகையைக் கண்டித்தும், இராசபக்சேவை இலண்டனை விட்டு விரட்டியடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழகத் தலைவர்கள் அறிக்கைகள் மற்றும் காணொளிகள் வழியாக புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இணையவழி வேண்டுகோள்கள் விடுத்தனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், “கடந்த 2010ஆம் ஆண்டு ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்த இனவெறியன் இராசபக்சேவை, ஹீத்துரு விமான நிலையத்தை விட்டு இறங்கவிடாத அளவிற்கு வீரத்துடன் போராடித் திருப்பி அனுப்பிய பிரித்தானிய தமிழ் மக்கள், தற்போது அதே போன்று மீண்டும் இராசபக்சேவை விரட்டியடிக்க வேண்டும். அவர் விரட்டியடிக்கப்படும் போது, ஈழத்தமிழினப் படுகொலையை உலகம் மேலும் கூர்ந்து கவனிக்கும்” எனக் குறிப்பிட்டார்.
இராசபக்சே தங்கவிருந்த பார்க்லேன் நட்சத்திர விடுதிக்கு எதிரில் 04.06.2012 அன்று பிரித்தானியத் தமிழர் பேரவை சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராசபக்சேவின் பாதுகாப்புக்காக அவர் தங்கியிருந்த பார்க்லேன் நட்சத்திர விடுதிக்கு அழைக்கப்பட்டு வந்த 200 சிங்களவர்கள், சக்தி என்ற தமிழ் இளைஞர் ஒருவரைத் தாக்கிக் காயப் படுத்தியது தமிழ் மக்களை மேலும் கொதிப்பாக்கியது. எனினும், தாக்கிய சிங்களவரை இலண்டன் மாநகரக் காவல் துறை கைது செய்தது. இராசபக்சே உரை நிகழ்த்தவிருந்த மன்சன் ஹவுசிற்கு வெளியே ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும் பேருந்துகளில் இலண்டன் வந்தடைந்த பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள், தமிழீழ தேசியக் கொடியான புலிக் கொடியைத் தாங்கியும், தமிழீழ மக்களை இனப்படு கொலை செய்த போர்க்குற்றவாளி இராசபக்சேவை அம்பலப்படுத்தும் பதாகைகளைத் தாங்கியும் நின்றபடி எழுச்சி மிகுப் போராட்டங்களை நடத்தினர். ஈழத்தமிழர்களோடு, பிரிட்டன் வாழ் மனித உரிமை ஆர்வலர்களும், சனநாயக சக்திகளும் கரம் கோத்து நின்றனர்.
மாநாட்டில் கலந்து கொள்ள விருந்த 70க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், மாநாடு நடைபெறும் இடத்தின் வாயிலில் நடைபெற்றுவந்த தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டங்களை ஆர்வத்துடன் கண்ணுற்றனர்.
மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்த இராசபக்சேவின் மகிழுந்து ஊர்தியை அடையாளம் கண்ட தமிழர்கள், ஊர்தியை நோக்கி அழுகிய முட்டைகளையும், தண்ணீர் பாட்டில்களையும் வீசினர். புலத்துப் புலிகளின் ஆர்ப்பாட்டங்களைக் கண்டு, திடுக்கிட்டபடியே வேகமாக சென்றது இராசபக்சேவின் மகிழுந்து.
பொதுநலவாய அமைப்பின் செயலகத்திற்கு முன்பாக நடை பெற்ற ஈழத்தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டத்தின் போது, இலங்கையின் அரசியல் சாசனம் வாசித்துக் காண்பிக்கப்பட்டு, தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. தூக்கிலிடப்பட்டு இழுத்து வரப்பட்ட மகிந்த இராசபக் சேவின் உருவப் பொம்மையை ஆவேசத்துடன் இளைஞர்கள் கொளுத்தினர்.
புலம் பெயர்ந்த தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் இலண்டன் மாநகரை நிலைகுலைய வைத்தது. சேனல்-4, ஐ.பி.என். தொலைக்காட்சி, பி.பி.சி உலகச் சேவை, பி.பி.சி பண்பலை, தி இன்டிபென்டன்ட் பத்திரிகை, கார்டியன், லண்டன் ஈவினிங் ஸ்டான்ட்டட் உள்ளிட்ட இலண்டன் நகரின் ஊடகங்கள் அனைத்தும் தமிழ் மக்களின் போராட்டத்தை விரிவாகப் பதிவு செய்தன.
ஆவேசமிகு தமிழ் மக்களின் போராட்டங்களைக் கணக்கில் கொண்ட பொதுநல ஆய நாடுகளின் பொருளியல் மன்றக் குழுவினர் (Commonwealth Business Council - CBC), 06.06.2012 புதனன்று காலையில் நடைபெறவிருந்த இராசபக்சேவின் உரையை 'ஆழ்ந்த சிந்தனைகளுக்குப் பின்'இரத்து செய்வதாக அறிவித்தது. வெட்கித் தலைகுனிந்த இராசபக்சே தன் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதாக காண்பிப்பதற்காக, மத்திய இலண்டன் மார்ல் போரோ இல்லத்தில் எலிசபத் இராணியுடன் நடைபெற்ற மாநாட்டு விருந்தில் மட்டும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வுக்குச் செல்லும் போது கூட, சிங்களக்கொடி தாங்கி செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதன் காரணமாக, சிங்களக் கொடியைத் துறந்துவிட்டு சென்றார் மகிந்த இராசபக்சே.
உள்ளே விருந்து நடை பெற்றுக் கொண்டிருந்த போது, மார்ல்பாரோ மாளிகைக்கு வெளியே ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்கள் ஒன்றுகூடி இராசபக்சேவின் கொடும் பாவியைத் தூக்குக் கம்பத்தில் தொங்கவிட்டு தங்கள் கோபத்தை வெளிக்காட்டிக் கொண்டிருந்தனர்.
சென்னையிலுள்ள பிரிட்டன் துணைத் தூதரகம் முன்பு 06.06.2012 அன்று காலை, தமிழீழ மக்கள் மீது இனப் படுகொலை செய்த இராச பக்சேவை பிரிட்டனிலேயே கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், பொதுநல ஆய நாடுகள் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்றக் கோரியும், மே பதினேழு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒழுங்கமைக்கப்பட்டது. மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழக ஒடுக்கப் பட்டோர் விடுதலை இயக்கப் பொறுப்பாளர் வழக்கறிஞர் பாவேந்தன், த.மு.மு.க. பொறுப்பாளர் ஆருண் ரஷீத், நாம் தமிழர் கட்சி இணையதளப் பாசறைப் பொறுப்பாளர் தோழர் பாக்கியராசன், பெ.தி.க. தென் சென்னை மாவட்டச் செயலாளர் தபசிக்குமரன், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும் நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அருணபாரதி உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர். "கைது செய்! கைது செய்! இனப் படுகொலை போர்க்குற்றவாளி இராசபக்சேவை கைது செய்" என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர், பிரிட்டன் துணைத் தூதரக அலுவலகத்தில், இராசபக்சேவை இங்கிலாந்திலேயே கைது செய்யக் கோரும் விரிவான கோரிக்கை மடல் வழங்கப் பட்டது.
இங்கிலாந்து இராணி எலிச பெத், போர்க்குற்றவாளி இராசபக்சேவுடன் விருந்தின் போது கைக்குலுக்கி நின்றதைக் கண்டித்தும், பிரிட்டன் வாழ் தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் கனடா நாட்டின் தலைநகர் டெரொன்டோவிலுள்ள பிரிட்டன் தூதரகத்தின் முன், கனேடிய தமிழர்களின் தேசிய சபையின் சார்பில் நூற்றுக் கணக்கான புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ் மக்களின் போராட்டங்கள் காரணமாக, இனப் படுகொலை- போர்க் குற்றவாளி இராசபக்சேவின் உரை 2010ஆம் ஆண்டை போல இலண்டனில் மீண்டும் நிறுத்தப்பட்ட நிகழ்வு, அனைத்துலகின் முன் சிறீலங்கா அரசை தலைகுனியச் செய்தது. இராசபக்சேவின் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டமைக்கு இலங்கையின் வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்தது. இராசபக்சேவை விரட்டியடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க, பிரிட்டன் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய வாழ் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள், ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்த பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) உள்ளிட்ட புலம் பெயர் தமிழர் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் தமிழ் மக்களின் போற்றுதலுக்குரிய வர்கள்.
2008-2009இல் தமிழீழ மண்ணில் 1 இலட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த குற்றவாளியான இராசபக்சேவுக்கு, பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றத்தில் தண்டனை வாங்கித் தரும் வரை உலகத் தமிழர்கள் ஓயக்கூடாது.
***
இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சியளிக்கும் இந்தியா
இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சியளிக்கும் இந்தியா
தமிழீழ மக்களை இலசட்கணக்கில் கொன்று குவித்த இனவெறியன் இராசபக்சேவின் தம்பியும், இலங்கை பாதுகாப்பு செயலாளருமான கோத்தபயா இராசபக்சே விடுத்த வேண்டுகோளை ஏற்று அந்நாட்டு கடற்படைக்கு இந்தியா அதிநவீன பயிற்சிகளை அளிக்கவிருக்கிறது.
சிங்கப்பூரில் சூன் முதல் வாரத்தில் ஆசிய நாடுகளின் பாதுகாப்பு குறித்த மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிங்களப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா இராசபக்சே மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் தலைமையிலான அந்நாட்டுக் குழுவினர், இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மற்றும் அமெரிக்கப் பிரதிநிதி மார்ட்டின் டெம்ப்சி ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினர்.
சந்திப்பின் போது இலங்கை கடற்படைக்கு அதிநவீன பயிற்சி அளிக்க இந்தியாவும், அமெரிக்காவும் முன்வர வேண்டும் என்று கோத்தபயா வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இந்தியாவும், அமெரிக்காவும் அதிநவீன பயிற்சி அளிக்கவிருக்கின்றன.
தமிழீழ மக்களைக் கொன்று குவித்ததோடு மட்டுமின்றி, 600க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொன்ற சிங்களரின் கடற்படைக்கு, இந்திய அரசு பயிற்சிகள் வழங்குவது ஒன்றும் புதிதல்ல. இதே போன்ற பயிற்சிகள் பலமுறை இந்திய அரசால் வழங்கப் பட்டுள்ளன. 2009ஆம் ஆண்டு தமிழீழ மக்கள் மீதான போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்தியாவின் பல இடங்களில் இந்திய அரசு இவ்வாறு பயிற்சிகள் அளித்துள்ளது.
இப்பயிற்சிகள் தான், தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லவும், நடுக்கடலில் அவமானப் படுத்திதாக்கவும் பயன்படும் என இந்திய அரசுக்கு நன்கு தெரிந்திருப்பதால்தான், சிங்கள அரசு வேண்டுகோள் விடுத்தவுடனேயே அதை நிறைவேற்ற முற்படுகிறது இந்திய அரசு.
சிங்கள ஆரியமும், இந்திய ஆரியமும் தமிழர்க்கு என்றும் பகையே என்பது நாளுக்கு நாள் உறுதிப் பட்டுக் கொண்டே வருகிறது.
(இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012 ஜூன் 16 -30 இதழில் வெளிவந்தது. கட்டுரையாளர் க.அருணபாரதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர்)
0 கருத்துகள்:
Post a Comment