ஆனந்த விகடன் இதழுடன் வெளிவரும் “என் விகடன்” துணை இதழின் புதுச்சேரிப் பதிப்பில், “எங்கள் ஊர்” பகுதியில், இவ்வாரம் (சூலை1-26) எனது செவ்வி வெளியானது. அதனை இங்கு பதிகின்றேன்.
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிகள் தமிழகத்தையும், ஏனைய இந்தியத் துணைக் கண்டத்து சமஸ்தானங்களையும் கைப்பற்றியதைப் போலவே, பிரஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனிகள் புதுச்சேரி, காரைக்கால், மாஹி, யானம் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றி வைத்திருந்தன.
1917 களில் இரசியப் புரட்சி தோற்றுவித்த எழுச்சி, புதுச்சேரியிலும் படர்ந்தது. அப்போது கம்யூனிஸ்ட்டுக் கட்சித் தலைவராக இருந்த வ.சுப்பையா தலைமையில், விடுதலை வேண்டி பல போராட்டங்கள் நடைபெற்றன. அந்தளவிற்கு கம்யூனிசப் பிடிப்புடன் இருந்த புதுச்சேரி, பிற்காலத்தில் காங்கிரசின் கோட்டையாக மாறிப் போனது வியப்பானது" என்ற வரலாற்றுத் தகவல்களோடு தன் ஊர் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார் 'தமிழர் கண்ணோட்டம்' ஆசிரியர் குழுவினைச் சேர்ந்த க.அருணபாரதி.
“தமிழகத்தில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் இங்கும் எதிரொலித்தன. இந்தி எதிர்ப்புப் போரின் போது கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு 22 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்ட இராணுவத்தினர், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 15 பேரை சுட்டுக் கொன்றது. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய போது, புதுச்சேரியிலும் சோ்த்தெ வெற்றி கண்டார். ஆனால், புதுச்சேரியை தமிழகத்துடன் இணைப்பது குறித்து அ.தி.மு.க. அரசு பேசியது, அவர்களுக்கே ஆபத்தாக முடிந்தது.
தமிழகத்துடன் இணைக்கப்பட்டால் புதுச்சேரிக்கு இந்திய அரசால் வழங்கப்படும் சலுகைகள் நிறுத்தப்பட்டு விடும் என்ற அச்சத்தின் காரணமாக மக்கள் அம்முடிவை கடுமையாக எதிர்த்தனர். அம்முடிவை மேற்கொண்ட அ.தி.மு.க. அரசு விரைவிலேயே டிஸ்மிஸ் ஆகும் அளவிற்கு மக்கள் போராட்டம் வீரியத்துடன் நடைபெற்றது. அதன் பின், இன்றுவரை புதுச்சேரியில் அ.தி.மு.க. செல்வாக்குப் பெற்றக் கட்சியாக வளர முடியவில்லை.
காலனிய ஆட்சியின் போது, புதுச்சேரி நகர்ப்பகுதி, பிரஞ்சு அரசால் நன்கு திட்டமிட்ட முறையில் வடிவமைக்கப்பட்டது. பிரஞ்சு வெள்ளையின மக்கள் தனியாகவும், மண்ணின் மக்களான தமிழர்கள் “கருப்பின” மக்களாகவும் கருதி அவர்களைத் தனியாகவும் பிரித்து வைக்கும் வகையில் புதுச்சேரி நகரத்தை பிரெஞ்சு அரசு வடிவமைத்தது. காலனிய ஆட்சிமுறை முடிந்து விட்ட நிலையிலும், இந்நகர வடிவமைப்பு இன்று வரை அப்படியே தொடர்கின்றது.
இன்றைக்கு நாங்கள் சிறுபிராயத்தில் விளையாடி மகிழ்ந்த ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் மகிழுந்தும், இதர மோட்டார் வாகனங்களும், நாங்கள் விளையாடிய இடங்களை அடைத்துக் கொண்டு நிற்கின்றன. பல காலமாக பூட்டியவாறே கிடந்த பழைய வீடுகளின் திண்ணைகளில் புதிய வண்ணங்களில் கடைகளின் பெயர் பலகைகள் தொங்குகின்றன. கேரம் போர்டும், செஸ்ஸும் விளையாடிய திண்ணைகள் இடிக்கப்பட்டு, அவை கார் நிறுத்துமிடமாகவும், புதிய கடைகள் வைக்கவும் உருமாற்றப்பட்டு விட்டன.
கிரிக்கெட் விளையாடி தெருவிளக்கை உடைத்து காவல்துறை வரை சென்ற அத்தெருவின் பத்தாண்டுகளுக்கு முன்னான “வரலாற்று” நிகழ்வுகள் எல்லாம், இத்தெருவில் இப்போது வசிக்கும் சிறுவர் - சிறுமியர்க்குத் தெரியாது. இப்போது, அவர்களில் பெரும்பாலோர், பெற்றோர்களின் எதிர்காலம் குறித்த அறிவுரையின் காரணமாக, ட்யூசன்களிலும், பயிற்சி வகுப்புகளிலும் மூழ்கிவிட்டனர்.
படங்கள்: முத்துக்குமார், ஆ.நந்தக்குமார், நன்றி: ஆனந்த விகடன்
2 கருத்துகள்:
வாழ்த்துக்கள்...
நன்றி...
திண்டுக்கல் தனபாலன்
மரியாதைக்குரிய அம்மையீர் வணக்கம்.தங்களது வலைப்பூவினை கண்டுபிடித்ததில் மிக்க மகிழ்ச்சிங்க! paramesdriver // konguthendral.blogspot.com,
tnsfthalavady.blogspot.com,
tnsfsathy.blogspot.com,
paramesdriver.blogspot.com.
Post a Comment