Monday, March 26, 2007

அகதிகள் நகராகும் மட்டுநகர்!

அகதிகள் நகராகும் மட்டு நகர்!
* அகதிகளாக ஒன்றரை இலட்சம் பேர் 88 தற்காலிக முகாம்களில் தஞ்சம்

மக்களை காப்பாற்றுவதற்கான போர் என்று உலக நாடுகளுக்கு கங்கணம் கட்டிக் கொண்டு வடக்கு-கிழக்கு தமிழர் குடியிருப்புகளில் எறிகணை மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்களை நடாத்தி தமிழ் மக்களையும், தமிழ் மக்களது பொருளாதாரத்தையும் அழித்து நாடகம் நடாத்துவதையே பேரினவாத அரசாங்கம் காலம் காலமாக மேற்கொண்டு வருகிறது.

இதில் ஒரு கட்டமே மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் இப்போது நடைபெறும் நிகழ்வுகள். படுவான்கரைப் பகுதியில் இராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் புலிகளை இலக்கு வைத்து என வெளிப்படையாகக் கூறினாலும் மறைமுகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரத்தையும் கல்வியையும் இலக்கு வைத்துத்தான் இத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

அரசு மேற்கொண்டு வரும் தாக்குதல்களினால் ஒரு சில தினங்களில் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் உடுத்த உடைகளுடன் வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தஞ்சமடைந்தனர்.

இந்த மக்கள் வாழைச்சேனை முதல் மட்டக்களப்பு கல்லாறுவரை 88 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்காலிக கூடாரங்களிலும் திறந்த பாடசாலைக்கட்டடங்களிலும்,மர நிழல்களிலும், உறவினர் வீடுகளிலும் சொல்லொணாத் துன்பத்தின் மத்தியில் பொழுதைக் கழித்து வருகின்றனர்.

சுட்டெரிக்கும் வெயிலிலும், இரவில் கடும் பனிக்குளிரிலும் உண்பதற்கு உணவின்றி, குழப்பதற்கு நீரின்றி, கழிப்பதற்கு கழிவறை இன்றி தொற்றுநோய் பரவிவரும் நிலையில் சாப்பாடின்றி தவிக்கும் குழந்தைகளைத் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் அழுது புலம்புவது பலரையும் கண்ணீர் வடிக்கச் செய்கின்றது.

தமிழர் கேட்டுவந்த வரமோ அகதி வாழ்க்கை தெரியாது. இந்த அகதி வாழ்க்கைக்கு எப்போது முற்றுப் புள்ளி வைக்கப்படும். ஏனைய சமூகத்தவரைப்போன்று எப்போது நிம்மதியாக வாழக்கிடைக்கும் எனும் ஏக்கத்துடன் முகாம்களில் கஷ்டப்படும் மக்கள், வேதனையுடன் புலம்புவது வேதனையை ஊட்டுகிறது.

காலம் காலமாக மாறி மாறி ஆட்சிக்கு வரும் பேரினவாத அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட தாக்குதல்களை நடாத்தி அகதிகளாக்கி, திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்ளவே முயற்சித்து வருகின்றது. அதன் தொடர்ச்சியே மகிந்த சிந்தனையிலும் எல்லைக் கிராம அபிவிருத்தி என்ற திட்டத்தின் கீழ் தமிழ் மக்களை இடம்பெயரச் செய்து திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை மேற்கொள்கின்றது. இதனை அண்மையில் போருக்கு எதிரான முன்னணி நடாத்திய செய்தியாளர் மகாநாட்டில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணா தெளிவுபடுத்தி குற்றம் சாட்டினார். கிழக்கில் தமிழ் மக்களை இடம்பெயரச் செய்வது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்துக்கே எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த வரும் அக்டோபர் முதல் படுவான்கரைப் பகுதி குடியிருப்புகள் மீது கண்மூடித்தனமாக மோட்டார் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது ஜனவரி முதல் உக்கிரமடைந்தது. இதனால் நூற்றுக் கணக்கான மக்கள் காயப்பட்டும் 10 பேர் வரை இறந்தும் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமாகிய நிலையிலேயே மக்கள் தங்களது உயிரை காப்பாற்ற அரசகட்டுப்பாட்டுப் பகுதியை நாடினர்.

பல்லாயிரக் கணக்கான ஏக்கர் வேளாண்மை அறுவடை செய்யப்படாமலும் அறுவடை செய்தது கட்டப்படாமலும் சூடு வைக்கப்பட்ட நிலையிலும் விட்டு விட்டு வெளியேறினர். ஷெல் வீழ்ந்து எரியுண்டதுடன் கால் நடைகளை அநாதரவாக விட்டு வெளியேறியதனால் ஆடு,மாடு அழிப்பதுடன் காட்டு யானைகளும் அழித்து விட்டன. பல நூற்றுக்கணக்கான ஆடுமாடுகளும் சேதமாகியுள்ளன.

கையில் உள்ள பணத்தினையும் கழுத்து , காதில் கிடந்த நகைகளையும் அடமானம் வைத்து விவசாயத்தை மேற்கொண்ட மக்கள் அனைத்தையும் இழந்து நிற்கதியாகியுள்ளனர். இவர்களுக்கு அரசு என்ன செய்யப் போகின்றது. மாவிலாறு நீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையினருக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இது விடயத்தில் மௌனம் சாதிக்கும் அரசாங்கம் அனைத்தையும் இழந்து வந்த மக்களை பட்டினியில் போட்டுள்ளது.

மகிந்த சிந்தனையின் மறைமுக சிந்தனையாகத் தெற்கு அபிவிருத்தியும் வடக்கு, கிழக்கு பொருளாதார அழிப்புமாகவே செயற்படுத்தப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் எனவும் ஜனவரி, பெப்ரவரி காலப்பகுதியிலேயே அறுவடை செய்யப்படும் எனவும் சிறு போகத்துக்கான ஆயத்தங்கள் மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்படும் என்பதும் அரசாங்கத்துக்கு நன்கு தெரியும் இக் காலப்பகுதியில் தாக்குதல் நடத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரத்தை பூண்டோடு அழிக்க முடியும் எனும் நோக்கிலேயே திட்டமிட்டு அரசு இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலினால் விவசாயிகள் தங்களது வேளாண்மையினை அறுவடை செய்ய முடியாது உள்ளது எனவும் அதனை அறுவடை செய்ய சிறிது காலம் தாக்குதலை நிறுத்துமாறும் அரச அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்களினூடாகவும் நேரடியாக விவசாயிகள் குழுவும் மட்டக்களப்பு மாவட்ட இராணுவ சிவில் இணைப்பதிகாரி பேட்டி பெரேராவிடம் பல தடவை கேட்ட நிலையிலேயே அனைத்து மக்களும் வெளியேறும் அளவிற்கு தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இதனூடாக தெட்டத் தெளிவாக தெரிவது பொருளாதார அழிப்பு என்பதாகும். புலிகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்த முடியாத நிலையில் திட்டமிட்டபடி பொருளாதார அழிப்பில் வெற்றி கண்டுள்ளது. கல்வியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 110 பாடசாலைகள் இன்று மூடப்பட்டு மாணவர்கள் அகதி முகாம்களில் வாழ்கின்றனர்.

தற்காலிக கூடாரங்களில் மூன்று அல்லது நான்கு குடும்பங்கள் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கூடாரங்களில் வாழும் மக்கள் மர நிழல் தேடி ஓடுகின்றனர்.

அரசு வெளியேறும் மக்களினை குடியேற்ற எந்த திட்டத்தினையும் மேற்கொள்ளாத நிலையில் அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடனேயே அரச அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இன்று அரச சார்பற்ற நிறுவனங்களும் செய்வதறியாமல் நிதி இன்றி கைவிரிக்கும் நிலையில் உள்ளது.

தொற்று நோயின் தாக்கம் அதிகரித்து வருவது பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிலையில் குழந்தைகளுக்கு பால்மா இன்றியும் கர்ப்பிணித் தாய்மாருக்கு நிறை உணவின்றியும் கஷ்டப்படுகின்றனர். சில அரச சார்பற்ற நிறுவனங்கள் சில முகாம்களுக்கு உலர் உணவுப் பொருட்களையும் மண்ணெண்ணெய் லாம்பையும் வழங்கியுள்ளது. கையில் எதுவும் இல்லாத மக்கள் விறகு வாங்கவோ மண்ணெண்ணெய் வாங்கவோ பணத்திற்கு எங்கு செல்வது. இதனால் இருளிலும் சமைத்து வருகின்றனர். சில முகாம்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுகின்றது. இந்த அவியாத அரிசிச் சோற்றையே குழந்தைகளுக்கும் வழங்கும் பரிதாபம் முகாம்களில் நிலவுகின்றது.

அகதிகளின் நகரமாகிவிட்ட மட்டக்களப்பு நகர் ஒரு சோமாலியாவாகவும் மாறி வருகின்றது. இன்னும் சில தினங்களிலோ, வாரங்களிலோ சோமாலியாவில் பட்டினியால் வாடி இறந்த சம்பவம் நடைபெறும் . குழந்தைகள் சோமாலியா குழந்தைகள் போல் மாறி வருகின்றனர்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் இது வரை கிடைக்காவிட்டால் பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து இருப்பார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. சத்துருக் கொண்டான் முகாமில் சாப்பாடு இன்றியும் கவலையிலும் இருந்த ஒரு முதியவர் திடீரென இறந்த சம்பவமும் சில தினங்களுக்கு முன் நிகழ்ந்தது.

அனர்த்த நிவாரண அமைச்சு ஏனைய அமைச்சர்களோ வேறு சமூகத்திற்கு இவ்வாறான நிலை ஏற்பட்டு இருந்தால் அவர்களது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து இருக்கும். இவர்களது மனச்சாட்சி எங்கு உள்ளது. என மக்கள் வினவுகின்றனர்.

அனர்த்த நிவாரண அமைச்சு ஏனைய சமூகத்தவருக்கு மாத்திரமா நிறுவப்பட்டது எனும் கேள்வியும் எழுகிறது.

தமிழ் மக்களை அழிக்க அரசு மேற்கொண்டுள்ள திட்டத்தில் ஒன்றே பட்டினியால் கொன்றொழிப்பது. இதனை ஏன் சர்வதேச சமூகம் பாராமுகமாக உள்ளது என்பது தமிழர்களை அவர்களும் ஓரம் கட்டுவதாகவேயுள்ளது.

இன்று தாங்கள் விட்டு வந்த ஆவணங்களை எடுத்துவர மக்கள் தவிக்கின்றனர். அதிலே பிள்ளைகளின் எதிர்காலம் இருப்பதாகவும் கூறிப் புலம்புகின்றனர். 1990 இல் அழிந்த ஆவணங்களை பெற முடியாமல் இன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மக்கள் பற்றி பேரினவாத அரசு எதுவும் செய்யப் போவதுமில்லை. அமைச்சுப் பதவிக்காக அரசுக்கு முண்டு கொடுத்து அடிவருடிகளாக இருக்கும் எம்மவர்களும் பேசப்போவதும் இல்லை .

அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று அமைச்சர்கள், இவர்கள் மனிதாபிமான அடிப்படையில் சிந்தித்தார்களா? சிந்திப்பார்களா? இவர்களது சமூகத்தவருக்கு இவ்வாறு ஒன்று நிகழ்ந்திருந்தால் என்ன செய்து இருப்பார்கள். அனைவரும் மனிதர்கள் என்ற மனித நேயத்துடன் சிந்திக்கத் தவறுவது ஏன்?

இந்த மக்கள் விரைவில் பட்டினியால் சோமாலியாவில் இறந்தது போன்று இறக்க நேரிடும். மரணச் செலவுக்கு மணல் கொடுக்கச் செய்யாது அவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை இப்போதே எடுங்கள்.

உடனடியாக இந்த மக்களுக்கு தேவைப்படுவது பால் மா, குழந்தைகளுக்கான உணவு, கர்ப்பிணித் தாய்மாருக்கான உணவு, மருந்துப் பொருட்கள், வயோதிபர்களுக்கான குளிருக்கான போர்வை, பட்டினியால் வாடும் மக்களுக்கான உலர் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக அனுப்பி வையுங்கள். வழங்க முன் வாருங்கள், இல்லையேல் இந்த மக்கள் தங்களது சொந்தக் காலில் நிற்கக் கூடியவாறு வீடுகளுக்குச் செல்ல தாக்குதலை நிறுத்துங்கள்.

பட்டினியால் தவிக்கும் போது கொழும்பில் ஆடம்பரமாக வாழும் அமைச்சர்கள் வாகரை மக்களை வலுக்கட்டாயமாக குடியமர்த்த நடவடிக்கை எடுப்பது ஏன்? தற்போது படுவான்கரை மக்களுக்கு உதவாத எந்தவொரு அமைச்சரும் அதிகாரிகளும் இந்த மக்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க முன்வரும் சந்தர்ப்பத்தில் பட்டினியில் இறந்து மிஞ்சி இருப்பவர்களிடம் போட்ட செருப்பு இல்லாவிட்டாலும் கையில் கிடைப்பதால் அடி வாங்கி திரும்ப வேண்டி ஏற்படும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் இந்த மக்களுக்காக எதனையும் செய்யப்போவது இல்லை ஏனைய சமூகமாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேயத்துடன் உதவ வேண்டிய தார்மீகக் கடமை உள்ளது.

நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள், இந்த மக்களின் அவலத்தை தீர்க்க முன்வாருங்கள். இந்த மக்களுக்காக வீதியில் இறங்குங்கள் பட்டினியால் தவிக்கும் மக்களை காப்பாற்றுங்கள்.



-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்