Wednesday, March 14, 2007

பசியால் கதறும் குழந்தைகள் வீதியோரத்தில் தவிக்கும் மக்கள்

பசியால் கதறும் குழந்தைகள் வீதியோரத்தில் தவிக்கும் மக்கள்
    Courtesy: தினக்குரல்

  
 

மட்டக்களப்பில் இடம்பெயர்ந்தோரின் துயர நிலை

அரச படையினரின் மிகக் கொடூரமான ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல் காரணமாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ள ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உணவு, இருப்பிட வசதி எதுவுமின்ரபெரும் இடர்களுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கின்றனர்.

நடக்க முடியாத வயோதிபர்கள், நோயாளர்கள் வீதியோர மரநிழல்களில் பெரும் அவலத்துக்கு மத்தியில் அமர்ந்திருப்பதுடன் சிறு குழந்தைகள் பசியால் வாய்விட்டு அழும் பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது.

அரச நிவாரண உதவிகள் எதுவும் இதுவரை வழங்கப்படாத நிலையில் பெருமளவில் இடம்பெயர்ந்துள்ள இந்த மக்களை பராமரிக்க முடியாத நிலையில் மாவட்ட செயலக அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, ஏறாவூர்பற்று, கிரான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் பேரை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் முகாம்களில் தங்க வைக்கும் பணிகளை அரச அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசாங்கம் இம்மக்களின் தற்காலிக குடியமர்விற்கு எந்தவித ஏற்பாடுகளும் செய்யாத நிலையில் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் உதவியுடன் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை ஒரு வாரமாக இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியுள்ள மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுக்காத நிலை காணப்படுகின்றது. மூன்று, நான்கு குடும்பங்களை இணைத்து ஒரு கூடாரம் வழங்கப்பட்டுள்ளது.

சமைத்த உணவுகளை வழங்கும் அதேவேளை, சில அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் குறைந்த அளவிலான உணவுப் பொருட்களையும் சில முகாம்களுக்கு வழங்கியுள்ளன.

பெருமளவில் இடம்பெயர்ந்துள்ள மக்களை அரசாங்கம் கைவிட்டுள்ள நிலையில் அரச அதிகாரிகளின் முயற்சியினாலேயே அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் சில ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, நண்பர், உறவினர் வீடுகளில் தங்கியிருக்கும் மக்கள் தாங்கள் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருவதை தாங்கள் தங்கியிருக்கும் கிராம சேவகர் பிரிவில் பதியச் செல்லும் போது தங்களுடைய கிராம சேவகரிடம் இருந்து கடிதம் பெற்று வரும்படி திருப்பி அனுப்பும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இடம் பெயர்ந்த தங்களது கிராம சேவகரை சந்திக்க முடியாத நிலையில் பலர் பதிவு செய்யாமலும் உள்ளனர்.

முகாம்களில் உள்ள மக்கள், சிறு குழந்தைகள் சுட்டெரிக்கும் வெயிலில் பெரும் அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

முகாங்களில் கூடாரம் கிடைக்காத மக்கள் மர நிழல்களில் சமைத்துச் சாப்பிட்டு தங்களது வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.

இந்த மக்களின் நிலையினைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கச்சேரி ஊடாக இம் மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நன்றி: தினக்குரல், March 12, 2007


Visit ::: www.marumalarchi.tk
--
Posted By மறுமலர்ச்சி-செய்தியாளர் to முக்கிய நிகழ்வுகள் at 3/13/2007 08:59:00 PM


--
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்