Friday, March 30, 2007

இட ஒதுக்கீடு சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை

இட ஒதுக்கீடு சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை

புது தில்லி, மார்ச் 30: மத்திய அரசின் நிர்வாகத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி.), இந்திய நிர்வாகவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எம்.) போன்ற உயர் கல்விக் கூடங்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இடங்களை ஒதுக்குவது என்ற மத்திய அரசின் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. அதே சமயம் இதர வகுப்பினரின் வாய்ப்புகள் குறையக்கூடாது என்பதற்காக, மொத்த இடங்களை அதிகப்படுத்திவிட்டு இந்த ஒதுக்கீட்டை படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

ஆனால் முற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர் அமைப்புகள் இந்த சட்டத்தை ஆட்சேபித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.

இந்த ஒதுக்கீட்டுக்கு எதிராக அவை பல வாதங்களை எடுத்துவைத்தன. 1931-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, அந்த அடிப்படையில் இட ஒதுக்கீட்டுச் சலுகை அளவு நிர்ணயிக்கப்பட்டது என்பது அதில் முக்கியமானது. அடுத்ததாக, பின்தங்கிய நிலைமை என்பதற்கு உரிய சட்டபூர்வமான விளக்கத்தைத் தருமாறும் எதிர் தரப்பு கோரியிருந்தது.

75 ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் உள்ள அம்சங்களே அரசின் புதிய கொள்கை முடிவுக்கு ஆதார அடிப்படையாக இருந்துவிட முடியாது என்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத், எல்.எஸ். பான்டா அடங்கிய "பெஞ்ச்' கருத்து தெரிவித்தது.

பின் தங்கிய நிலையில் உள்ளவர்களை முன்னேற்ற சில சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கும் உரிமை அரசுக்கு இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட நடவடிக்கைகள், தேவையில்லாமல் சிலரை பாதித்துவிடக்கூடாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கு இப்போது அமலில் உள்ள இட ஒதுக்கீடு அப்படியே தொடரலாம் என்று நீதிபதிகள் அனுமதித்தனர்.

இப்போதுள்ள மக்கள் தொகையில் முற்பட்டவர்கள் எத்தனை பேர், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள் எத்தனை பேர் என்று சரியான கணக்கெடுப்பு இன்றி, இட ஒதுக்கீட்டு அளவை எப்படி நிர்ணயிக்க முடியும் என்று நீதிபதிகள் கேட்டனர்.

மத்திய அரசு பதில்: இந்த இட ஒதுக்கீட்டால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தான் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 27% இடங்களை ஒதுக்குவதால், இப்போதுள்ள இடங்களை அதற்குப் பொருத்தமாக அதிகரித்த பிறகே அமல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இதனால் மற்றவர்களுக்கு பாதிப்பு நேர அவசியமே இல்லை என்று மத்திய அரசின் வழக்கறிஞர் வாதிட்டார்.

 
இத்தீர்ப்பு சமூக நீதி ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எழை மாணவர்கள் மற்றும் பின்தங்கிய மாணவர்களின் எதிர்காலத்தையை கேள்விக்குறியாக்கியுள்ள இத்தீர்ப்பை கண்டித்து தமிழகத்தில் பந்த் நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வந்துள்ளன. பா.மக. டில்லியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தித் தன் எதிர்ப்பை தெரிவிக்கிறது...
--
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்